Saturday, June 27, 2015

குணம் நாடிக் குற்றமும் நாடி.....

மதிப்பிற்குரிய தனுஷ் அவர்களுக்கு,

           வணக்கம். ‘மாரிதிரைப்படத்தின் டிரெய்லரைப் பார்த்ததும் தோன்றிய எண்ணங்களின் தொகுப்பே இக்கடிதம். சமூக வலைத்தளங்களில் பரவி உங்களைச் சென்றடையும் என்று நம்புகிறேன்.

           விசிறி, ஆதர்சம் ஆகிய சொற்களுக்கிடையே இருக்கும் மாறுபட்ட பொருட்கள் உணர்த்தும் செய்தி ஆழமானது. விசிறி (fanatic) என்பவன் உங்களைப் பற்றிய அபகருத்துகளைக் கூறுபவர்களிடம் காட்டுமிராண்டித்தனமாகச் சண்டையிடுவான். உங்கள் திரைப்படங்களைப் பார்ப்பதையும், அதைப் பற்றி நிலைத்தகவல் எழுதுவதிலுமே குறியாயிருப்பான்; ஆனால், உங்களை ஆதர்சமாக (role model, inspiration) நினைப்பவன், உங்களின் வழித்தடங்களைப் பின்பற்றுவான்; உங்களது அனைத்து நடவடிக்கைகளையும் ‘சரிஎன்ற மனோபாவத்துடன் மட்டுமே பார்ப்பான். இந்த இரண்டாம் மனநிலையில் இருந்த நான், உங்களால் தற்போது தள்ளப்பட்டிருக்கும் இரண்டுங்கெட்டான் நிலையின் வெளிப்பாடுதான் இக்கடிதம்.

           நீங்கள் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய காலத்தில், உங்களது பல திரைப்படங்கள் தோல்வியைத் தழுவின. “இவ்ளோ ஒல்லியா இருக்கான்? இவன் பத்து, இருபது பேர அடிப்பானாம்என்ற விமர்சனங்கள் ஒருபக்கம் ஒலிக்கத் தொடங்கியிருந்தாலும், என்னைப் போன்ற சதைப்பிடிப்பில்லாத, ஒல்லியான ஆட்களுக்கு நீங்கள் ஒரு ஆளுமையாகவே தோன்றினீர்கள். உடல்ரீதியாக ஒரு பெரிய கூட்டத்தை என்னால் அடிக்க முடியாவிட்டாலும், அனைவருக்கும் சவால் விட வேண்டும், உருவில் பெரியவர்களைக் கண்டு அஞ்ச வேண்டாம்போன்ற கருத்துகள் உளவியல்ரீதியாக என் மனத்தில் பதிவதற்கு நீங்களும் ஒரு காரணி.

     மெல்ல மெல்ல வளர்ந்த நீங்கள், இன்று கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாகவும், பாலிவுட்டில் கால்பதித்த வெகுசில தமிழ் நடிகர்களுள் ஒருவராகவும் இருப்பது பிரமிப்பாக இருந்தாலும், இதில் ஆச்சரியம் ஏதும் இருப்பதாகத் தோன்றவில்லை; அனைத்தும் உங்கள் உயிர்நாடியில் ஓடிக் கொண்டிருக்கும் நடிப்பு என்னும் ஆற்றலுக்குக் கிடைத்த பரிசு. தற்கால இந்திய சினிமாவின் முக்கியத் தகுதியானசிக்ஸ் – பேக் வைத்து உடல்தசைகளை இறுக்கி, முறுக்கி வைத்தால் மட்டும் போதுமானது; நடிப்பு இரண்டாம்பட்சம்தான்என்னும் கட்டமைப்பை உடைத்தெறிந்தவர்களில் நீங்களும் ஒருவர்.

     சுள்ளான்’, ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்போன்ற படங்களைப் பார்த்த பின், ‘இவனும் மத்த ஹீரோ மாதிரிதான்என்று அலையடித்த எண்ணங்கள், ‘ஆடுகளம்’, ‘மயக்கம் என்ன’, ‘மரியான்’, ‘அம்பிகாபதி’ (Raanjhanaa), ‘வேலையில்லா பட்டதாரி’, ‘ஷமிதாப்போன்ற படங்களுக்குப் பின் மறைந்தன. விஜய், அஜீத்தை எல்லாம் தாண்டி, விக்ரம், கமல்ஹாசன் என்னும் மாபெரும் நடிகர்களின் திறமையுடன் போட்டிபோடும் அளவுக்கு இருந்தன/ இருக்கின்றன உங்கள் நடிப்பு. நன்கு கவனித்தால் ஒரு உண்மை புரியும். தல – தளபதி படங்கள் வசூலை அள்ளிக்குவித்தாலும், அந்நடிகர்களைப் பிடிக்காத கூட்டம் ஒருபக்கம் சேர்ந்துகொண்டே போகும். ஆனால், விக்ரமைப் பிடிக்காது என்று எவரும் சொல்லி நான் கேட்டதில்லை.

     சூர்யா கூட இப்போ ‘சிங்கம்’, ‘அஞ்சான்னு வயலன்ஸ் இருக்குற படமா நடிக்க ஆரம்பிச்சுட்டான்என்று புலம்பிக்கொண்டிருந்த என் தாய், ‘வேலையில்லாப் பட்டதாரிபடத்தை ரசித்துப் பார்த்தார். “எவ்ளோ மெச்யூர்டா நடிக்கறான்? ஸ்மோக்கிங் மட்டும் அவாய்ட் பண்ணா நல்லாயிருக்கும்என்று அவர் சொன்னது ‘மாரிடிரெய்லர் பார்த்தபோது நினைவுக்கு வந்தது.

     த்தா.. செஞ்சுடுவேன்போன்ற வசனங்களால் திரையரங்குகளில் விசில் சத்தம் காதைக் கிழிக்கலாம்; நீங்கள் சிகரெட்டைப் பற்ற வைத்து டிரெய்லரில் மட்டுமே 3,4 முறை ஊதுவதால் ‘ஹே.. தலைவாஎன்ற கோஷம் தியேட்டர்களில் எதிரொலிக்கலாம். ஆனால் இதன்மூலம் ஒரு தவறான முன்னுதாரணத்தை நீங்கள் உருவாக்குகிறீர்கள்; இப்படியெல்லாம் செய்தால்தான் ‘கெத்துஎன்னும் பிம்பத்தைத் தெரிந்தோ, தெரியாமலோ தோற்றுவிக்கிறீர்கள். ‘எல்லாப் படத்துலயும்தான் புகைப்பிடிக்குறாங்க; குடிக்குறாங்கஎன்று நீங்கள் வாதிடலாம். ஆனால், அவர்களோடு ஒப்பிடுவதென்பது உங்கள் திறமையை நீங்களே தாழ்த்திக்கொள்வது போலாகும். அப்படி நடித்துக் கூட்டம் கூட்டுபவர்கள் பெரிய நடிகர்களும் அல்ல; அவ்வகைத் திரைப்படத்தை இயக்குபவர்கள் தேர்ந்த இயக்குநர்களும் அல்ல. திரைப்படம் என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சம் என்பதைத் தாண்டி, நற்கருத்துகளை வெளிப்படுத்தும், கலாச்சார நோக்கம் கொண்ட ஒரு ஊடகம் என்பது ‘காக்கா முட்டைஎன்னும் உலக சினிமாவைத் தயாரித்த உங்களுக்குத் தெரியாமலிருக்காது.

     இப்படிக் கூறுவதால் ‘மாரிபடத்தைப் பார்க்கக் கூடாது என்னும் கருத்தை நான் முன்வைக்கவில்லை. அது தனுஷ் என்னும் கலைஞனின் அசாத்திய நடிப்புத் திறமைக்குச் சோறுபோடாது. மாரி படம் வசூலைக் கொட்டிக்குவிக்கலாம். ஆனால், என்னைப் போன்ற மனிதர்களுக்கு ரோல் மாடலாக இருக்கும் தகுதியை நீங்கள் அதன்மூலம் இழக்கிறீர்கள்; ‘மறுபடியும் இப்டியே படம் நடிக்க ஆரம்பிச்சுட்டானா?என்ற என் தாயின் வசவுக்கு ஆளாகிறீர்கள்.

     மக்கள் விசிலடிப்பதற்கென்றே உருவாக்கப்படும் திரைப்படங்களில் நடிப்பதற்குப் பலர் இருக்கின்றனர். ஆனால், நல்ல கதையம்சம் கொண்ட, சிக்கலான கதாபாத்திரத்தில் நடிக்கக் கூடிய ஆற்றல் பெற்றவர் வெகு சிலர்; அச்சிலரில் நீங்களும் ஒருவர் என்பதை மறந்துவிடாதீர்கள். இது எச்சரிக்கையோ, கோபமோ அல்ல. தமிழ்த்திரையுலகின் ஒரு பெரும் கலைஞன் தன்னைத்தானே சராசரிப்படுத்திக் கொள்கிறானே என்ற அனுதாபத்தின் வெளிப்பாடு. ஏதேனும் தவறாக இருந்தால் மன்னித்துக்கொள்ளவும். ஒரு திரை ரசிகனாக என் அறிவுக்கெட்டியது அவ்வளவே.

எதிர்பார்ப்புடன்,

தமிழ்த்திரை ரசிகன்.