Saturday, September 19, 2015

பேச்செனும் இசை…

            இசையெனும் கலை வடிவம் பேச்சிலிருந்துதான் தொடங்கியிருக்கும் என்று படித்திருந்தாலும், தர்க்க குணம் கொண்ட மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தே வந்தது இதுநாள் வரை. இப்பதிவினைத் தட்டச்சு செய்யும் இத்தருணத்தில் அத்தர்க்கம் ஒரு தெளிவான முடிவுக்கு வந்துவிட்டதை உணரமுடிகிறது. இசையும், பேச்சும் ஒன்றோடொன்று கலந்து, பின்னிப் பிணைந்தவையே. இல்லையேல், ராப் (rap) என்று சொல்லக்கூடிய பேச்சு வகைப் பாடல்களை நாம் எப்படி ரசித்துக் கேட்க முடிகிறது? ஆப்பிரிக்கக் கண்டத்தில் உருவான இசையைத் தழுவி உலகப்புகழ் பெற்ற எமினெம் போன்ற கலைஞர்களை நாம் எப்படி முழுமனதுடன் கொண்டாடுகிறோம்?
            திடீரென இஞ்ஞானோதயம் உதிக்கக் காரணியாயிருந்தது நாகர்கோவிலில் நடந்த திருமணம் ஒன்றுதான். திருமணம் என்பது கலாச்சார அம்சங்களின் கலவையான வெளிப்பாடு என்பதை உணர்த்தும் மற்றுமொரு விழாவாகவே அமைந்திருந்தது.  குடும்பத்துடன் சென்று ரசிக்கக் கூடியவை என்று வரையறுக்கப்பட்ட சில தமிழ்த் திரைப்படங்களில் மட்டுமே காணப்படும் ஒரு விதமான எல்லை கடந்த மகிழ்ச்சி, வந்திருந்த அனைவரிடமும் குடிகொண்டிருந்தது.
            ”எலே… இன்னுமொரு அரை மணிக்கூறு பொறு. சாப்புட்டுடலாம்”, “அடுத்த பந்தி வரை பொறு மக்கா. எல்லாம் சேந்தே சாப்பிடலாம்” போன்ற வாக்கியங்கள் வெவ்வேறு குரல்களில் இருந்து உற்பத்தியாகிக் கொண்டிருந்தது. இதில் நான் கவனித்த சில நுணுக்கங்கள் நாகர்கோவில், கன்னியாகுமரி மீது இருந்த மரியாதையைக் கூட்டியது; தமிழ்த்தாயை நினைத்து வியக்க வைத்தது.
            தமிழகத்தின் பல மாவட்டங்களில் ‘சா’ என்னும் எழுத்து பேசப்படும்போது ‘ஸா’ என்றே ஒலிக்கின்றது. ‘ஸாப்பிடலாம்’, ‘ஸாவியை எடு’ என்று தேவையற்ற ஒரு மென்மையைச் செயற்கையாகத் திணிக்கப் பழகிவிட்டோம் நாம். உண்மையில் ‘சா’ என்னும் எழுத்தில் தொனிக்கும் அழுத்தம் தமிழுக்கு அளிக்கும் அர்த்தங்கள் அபாரமானவை. “சாப்பிடலாம்” என்று ‘சா’வை அழுத்தும்போது, அந்த வார்த்தையே புசிக்க வேண்டும் என்ற ஆவலைப் பெருக்குவதாக அமைகிறது. “சாவி” என்ற சொல் ஒலிக்கும்போதே அது இருளை விலக்கக் கூடிய (கதவைத் திறக்கக் கூடிய) திறவுகோல் என்று விளங்குகிறது. “சங்கடம்” என்னும் சொல்லில் உள்ள குழப்பத்தின் அடையாளம், “ஸங்கடம்” என்று கூறும்போது குறைவது நமக்கே புலனாகிறது.
            நாகர்கோவில் மனிதர்கள் ‘ஒன்றாகக் கூடி’ என்று பொருள் தரக்கூடிய சொல்லைப் பேச்சுவழக்கில் பயன்படுத்தும் விதமே அலாதியானது. நாம் ‘சேர்ந்து’ என்று சொல்வோம். அவர்கள் தமிழகராதியிலே இல்லாத ஒரு வகையான ‘சே’க்கும், ‘சா’க்கும் இடையிலான ஒரு சப்தத்தைப் பிரயோகிக்கிறார்கள். இது மொழியை மெருகூட்டுகிறது என்பது ஆச்சரியமான உண்மை. இத்தகைய அழுத்தமான தமிழ்ப் பரிமாணத்தைத் திருநெல்வேலி பாஷையிலும் உணர முடியும் (என் தாய்க்கு இதில் ரொம்பப் பெருமை; அவரது சொந்த மாவட்டமாயிற்றே?).
            ஒரு சொற்றொடருக்குள் இவர்கள் உள்வைக்கும் ஏற்ற, இறக்கங்களானது, கர்நாடக சங்கீதத்தின் சாஸ்திரத்தை ஒட்டியே அமைந்துள்ளதாக எனக்குத் தோன்றுகிறது. கச்சேரி செய்யும் முன்போ, சாதகம் செய்வதற்கு முன்போ பாடகர்கள் ‘ஸா பா ஸா’ என்று அடிவயிற்றிலிருந்து பாடி, ஏற்ற இறக்கங்களுக்குத் தயார்படுத்திக் கொள்வர். இதயத் துடிப்பை உணர்த்தும் கருவியும் இந்த முறையிலேயே செயல்படுகிறது; நிமிடத்திற்கு இவ்வளவு முறை என்ற கணக்கில் செயல்படும் இக்கருவி, இவர்களின் பேச்சைப் பொருத்தமட்டில், ஒரு சொற்றொடருக்கு இத்துணை முறை என்ற ரீதியில் துடித்தால் ஒரு சீரான, மேடுபள்ளங்கள் (crests and troughs) கொண்ட வெளிப்பாடு நமக்குப் புரியும்.
            பேசும்போது அனைத்து வார்த்தைகளும் தெளிவாகக் கேட்கும்வண்ணம், நிதானமாகவே உச்சரிக்கிறார்கள் அனைவரும். Slow Ballad என்றழைக்கப்படும் இசைவகைச் சேர்ந்ததாகவே இருக்க வேண்டும் இவர்களது பேச்சுமொழி. பாரத நாட்டின் தென்கோடியான குமரிமுனைக்கு மிக அருகில் அமைந்துள்ள நாகர்கோவிலின் பேச்சுவழக்கானது, குமரிக் கடலில் ஆர்ப்பரிக்கும் அலைகளைப் போலவே ஆடியசைந்து வரும் தன்மை மிகுந்துள்ளதாகாவே விளங்குகிறது எனக்கு.
            ’மக்கு’ என்னும் சொல், எதற்கும் துப்பற்றவன் என்றொருள் பொருள் இருக்கும்போது, ‘மக்கா’ என்ற வட்டாரச் சொல், ‘மகனே’, ‘கண்ணா’ என்னும் பாச மொழிகளோடு தொடர்புகொண்டிருப்பது வியப்பிலும் வியப்பு. “நல்லா இருக்கியா?” என்ற வழக்கமான நலம் விசாரிக்கும் வாக்கியம், “நல்லா இருக்கியா மக்கா?” என்றாகும்போது தொனிக்கும் கரிசனம் எல்லையில்லாதது.

            அதிகமாகக் குரலுயர்த்திப் பேசுபவரைத் தெரியாமலா ‘சத்தக்காரர்’ என்கிறோம்? உண்மையில் ‘சத்தம்’ என்பதே ‘சப்தம்’ எனும் இசையின் ஏழு ஸ்வரங்களைக் குறிக்கும் வார்த்தையிலிருந்து வந்ததுதானே? நம் மொழியே இசைக்கு நல்ல அடித்தளமாயிருக்கிறது. இதற்கு ஒரு முன்னுதாரணம் நாகர்கோவில் பேச்சு.