Wednesday, August 22, 2018

டீச்சர்

”டேய் மச்சான், அந்த சார் ஒரு தூங்குமூஞ்சிடா. கண்டுக்கவே மாட்டான். ஒன் மார்க்ஸ் மட்டும் ஃபர்ஸ்ட் பத்து நிமிஷத்துல க்ராஸ்செக் பண்ணிக்கலாம்.”
“ஓகே டா. ஏ ஆப்ஷனுக்கு நெத்தி, பி-க்கு கண்ணு, சி-க்கு மூக்கு, டீ-க்கு வாய். சேம் சிக்னல்ஸ்தான். ரெடியா இரு. ஃபர்ஸ்ட் டென் மினிட்ஸ்ல முடிச்சிட்டு டூ மார்க்ஸ் போயிடலாம்.”

*****

”மாப்ள, இந்த மிஸ்ஸு ரவுண்ட்ஸ் வரும்டா. எல்லாம் மொதல் ஹாஃப் அவருக்குத்தான். அப்புறம் சமோசாவும், டீயும் வந்தாக் குத்துக்கல்லு மாதிரி உக்காந்துடும். அந்த ட்ரிக்னாமெட்ரி ஃபார்முலா எல்லாத்தையும் எழுதி வெச்சுருக்கல்ல? காப்பி பண்ணிட்டு பிட்டப் பாஸ் பண்ணு.”

*****

”செம்ம ஜாலிடா இன்னிக்கு எக்ஸாம் ஹால்ல. மொக்க சூப்பர்வைசரு ஒருத்தன். அவனுக்கு நம்ம டெக்னிக் எல்லாம் தெரியாது போல. அசால்ட்டா எல்லா ஆன்ஸரும் வெரிஃபை பண்ணியாச்சு.”

*****

இவையும், இன்ன பிற உரையாடல்களும் தேர்வறைக்குச் செல்லுமுன்பும், தேர்வு முடிந்தபின்னரும் தவறாமல் இடம்பெறும். பள்ளி, கல்லூரி என்று பெரிய வித்தியாசம் எல்லாம் இருந்ததில்லை. அம்மூன்றில் குறைந்தபட்சம் இரண்டிலேனும் நானும் இடம்பெற்றிருக்கிறேன் என்பதைச் சொல்லவேண்டியது தலையாய கடமையாகிறது.

மாணவப் பருவத்தின் ஹீரோயிஸக் கற்பிதங்களுள் முக்கியமானது, ‘டிப்பி’ அடித்துப் பிடிபடாமல் வெளிவருதல். அங்கப்பிரதட்சணம் செய்பவர்களையும், அஷ்டாவதானிகளையும் விடப் பெரிய சாகசம் செய்துவிட்டதான ஒரு அதுப்பு தலைதூக்கும் பருவம் அது. என்னதான் தேய்ந்துபோன ஹைதர் காலத்து வானொலிப்பெட்டியைப் போல நொடிக்கு நூறு முறை, “டேய், நானும் உன் வயசைத் தாண்டி வந்தவன் தாண்டா” என்று ஆசிரியர்/ஆசிரியை வாய்வலிக்கக் கத்திக் கதறினாலும் அது மாணவரின் கபாலத்தில் குட்டுவைத்து எட்டிப்பார்த்ததாய்ச் சரித்திரம் இல்லை. தலைமையாசிரியரிடம் மாட்டினால் கூட, “தில்லிருந்தா மொத்தமா வாங்கலே” என்ற ரீதியில், அதையே கதாநாயகத்தனமான பிம்பங்களைக் கட்டமைக்கப் பயன்படுத்தும் மாணவ மார்க்கெட்டிங் உபாயங்களுக்கும் குறைவிருந்ததாய் நினைவில்லை.

இப்படிக் காலரைத் தூக்கிவிட்டுச் சுற்றிக்கொண்டே, கோக்குமாக்கு வேலைகளைப் பார்த்த நானும் கூட ஒருநாள் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் ஆவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. கொடிக்கம்பத்தில் நெட்டுக்குத்தாய் நிற்கவைத்த துடைப்பக்குச்சியைப் போன்ற உயரத்தில், ‘ஆறடிக் காத்தே’ என்ற ரீதியில் இருக்கும் எனக்கு, அமர்ந்த இடத்திலிருந்தே மொத்த வகுப்பறையையும் கண்கொத்திப் பாம்பென நோட்டம் விடும் அரிய வாய்ப்பு ஒவ்வொரு தேர்வின்போதும் கிட்டுகிறது.

1990-2000-2010-2020 என்று பல மாமாங்கமாய் மாறாமல் இருப்பது மாற்றம் மட்டுமல்ல; சரியான விடைகளுக்குக் நெற்றி-கண்-மூக்கு-வாய் என வரிசைப்படுத்தி விடை சொல்லும் நுணுக்கமும்தான் போல. கண்ணைச் சொறிந்துகொண்டே சாவதானமாக ஓரக்கண்ணால் இரண்டு மதிப்பெண் விடைகளை நோக்குவதும், ‘தெரியாமல்’ கீழே விழும் பேனாவையோ, பென்சிலையோ, ரப்பரையோ எடுக்கும்பொருட்டு குனிந்து, விழுந்த பொருளுடன் ‘பிட்டு’க் காகிதத்தையும் சேர்த்து எடுப்பதும், எழுதி முடித்த விடைகளைச் சரிபார்க்கும் சந்தடி சாக்கில் அருகில் இருக்கும் தோழனுக்கோ, தோழிக்கோ தாளை விரித்து வைத்து ஒரு பக்க விடைகளைக் காண்பிப்பதும், வாயில் ஒரு கையோ, இரு கைகளோ வைத்து மூடிக்கொண்டு கிசுகிசுப்பதும், சன்னமாய்த் தொடங்கிப் பின்னர் சற்றே சத்தமாகி ஒருவழியாய் நாராசமாய் மாறும் இருமலை ஆயுதமாய்ப் பயன்படுத்தி வகுப்பறையின் மேதாவியைத் திரும்பவைத்து விடைகேட்பதும், இன்ன பிற இதர மிஸ்ஸலேனியஸ் தந்திரங்களும் மாறவேயில்லை. நீலாம்பரியின் “வயசானாலும்…” என்று தொடங்கும் ‘படையப்பா’ வசனத்தை இவ்விடத்தில் பொருத்திப் பார்த்துச் சிரித்தல் நலம்.

’வாத்தியாராகிய நான்’ என்ற கம்பீரத்துடன் நான் உற்று நோக்கினால் நான் பத்தாவதிலும், பன்னிரண்டாவதிலும் செய்த அதே கொணஷ்டைகளை மாணவமணிகள் செய்கின்றனர். அது சரி! அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழியே அன்றோ? ஆசிரியர் கவனிப்பது தெரிந்தால் காற்றில் கணக்குப் போடுவது போலவும், கண்ணை விட்டத்தை நோக்கிச் செலுத்தி ‘ஆழ்ந்த சிந்தனை’யில் வலிந்து ஈடுபட்டு வெண்பா எழுதும் சங்கத்தமிழ்ப் புலவர் பெருமக்களின் சிந்தனைக்கே சவால் விடுவது போலும், மூக்கைச் சொறிவது போலும் பலவிதமான நாடகங்கள் அரங்கேறும். உச்சக்கட்டமாய் நடக்கும் இரு நிகழ்வுகள்தாம் முத்தாய்ப்பே. கவனிப்பது தெரிந்தவுடன், “சார், மே ஐ ட்ரிங்க் வாட்டர்?” என்று என்னையே அசரடிக்கும் திறமைசாலித் திருடர்களையும், “சார், டவுட் சார்” என்று வினாத்தாளுடன் வந்து கேவலமான ஒரு சந்தேகத்தைக் கேட்டுவிட்டு அப்பாவியாய் இடத்திலமரும் லகுடபாண்டியர்களையும் என்ன செய்வதென்றே தெரிவதில்லை. ‘கர்மா இஸ் ய பூமராங்’ என்று நானும் மீசையில் மண் ஒட்டாத கதையாய்க் கண்டுகொள்வதில்லை.

சற்றேறக்குறைய மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், “அந்தாளு சும்மா சீனுதாண்டா, மொறைப்பான்… ஆனா பத்து பைசாக்குப் ப்ரோஜனம் இல்ல”, “அவன் கெடக்காண்டா, உக்காந்தேதான் இருப்பான். எதுவும் கண்டுக்க மாட்டான்” போன்ற ஏச்சுப் பேச்சுக்கள் என்னைப் பற்றி வலம்வந்துகொண்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகள், ‘ஸ்வச் பாரத்’தை விடப் பிரகாசமாய் இருக்கின்றன.

”அடிச்சாலும் பிடிச்சாலும் நீதானே என் ஆம்படையான்?” எனும் விஸ்வரூபம் – 1 வசனம்தான் நினைவுக்கு வருகிறது. எவ்வளவுதான் மாணவர்கள் என்னைக் கலாய்த்தாலும், நான் அவர்களைச் சதாய்த்தாலும் ‘நமக்கு நாமே’ என்று தலைவிதி. சுழி. மாற்ற ஏலாது. “எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்! இவன் ரொம்ப நல்லவன்” என்று மாணவச் செல்வங்கள் என் தலைமேல் ஏறி ஆடாத வரையில் அனைத்தும் சுபமே.

ஆனால், இவ்வளவும் நடந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் தெய்வப் பிறவிகளான என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களை நினைவில் நிறுத்துகிறேன். உண்மையிலேயே நான் செய்த லோலாலயங்களும், அட்டூழியங்களும் அவர்களுக்குத் தெரியாமல்தான் போயிற்றா? (இல்லை. பெற்றோர் – ஆசிரியர் சந்திப்பின்போது வட்டியும், முதலுமாய் வஞ்சம் தீர்த்த ஆசிரியர்கள் பலர்.) வகுப்பறையில் நான் ஒரு கும்பீபாகமாய் இருந்தும், என்னை ஏன் கண்டிக்காமல் விட்டனர்? கருட புராணத்தின் மீது நம்பிக்கைதான் இல்லையோ? (அப்படியும் சொல்ல முடியாது. இரும்பு அளவுகோல்களை வைத்து அடிப்பதை ஓரளவிற்கு வஜ்ரகண்டகத்துடன் ஒப்பிடலாம்.)

தெளிந்த நீரோடையெனப் புலப்படுவது, பொட்டிலடித்தாற்போன்ற ஒற்றை உண்மை மட்டுமே. உலகில் இருக்கும் ஒரு ஆசிரியரும் இளிச்சவாய் அன்று. நாம் செய்யும் அனைத்தையும் பிக் பாஸை விட உன்னிப்பாகக் கவனிக்கும் ஆற்றல் உடையவர்கள் அவர்கள். முதல் பார்வையிலேயே முக்கால்வாசி குணாதிசயங்களை அளந்து எடைபோட்டுவிடும் அற்புத மனிதர்கள் ஆசிரியர்கள். தேர்வறையில் மாட்டாமல் தப்பிவிட்டாலோ, ஒழுக்கச் சீலர்களான தனுஷும், சிவகார்த்திகேயனும் கற்றுத்தரும் ’நற்பண்புக’ளை வெளிப்படுத்திய பின்னரும் கண்டுகொள்ளப்படாமல் தப்பித்தாலோ அது தப்பித்தலே அல்ல. அம்மாணவர் தண்ணீர் தெளித்து விடப்பட்டு விட்டார் என்றே பொருள் கொள்க. ஏனெனில், மேய்ப்பவர் ஆயர், ஆசிரியர் அல்லர்.

ஆசிரியர் தினத்தன்று பதிவிட்டு ’ஹேஷ்டேக்’களால் இப்பதிவை அலங்கரித்திருக்கலாம்தான். ஆனால், ஆசிரியர் தினம் ஒரு நாள்தான் கொண்டாடப்பட வேண்டுமா என்ன? கற்றல் தொடரும் வரை, கற்போர் உள்ள வரை, கல்வி இருக்கும் வரை, ஆசிரியருக்கான நாள், சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்டம்பர் 5 மட்டுமேயல்ல. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும்தான் (’எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ பாடல் ஒலிக்கட்டும்).