நாவலுக்கும், சிறுகதைக்குமான வித்தியாசங்களை ஆராய வைத்தது என்னிடம் நண்பன் ஒருவன் கேட்ட கேள்வி. “ஒரு
நாவலைப் படிக்கும்போது அதிலுள்ள மையக்கருத்து, கிளைகளாய்ப் பிரிந்து நினைவலைகளை ஏற்படுத்தும்.
ஆனால், சிறுகதைத் தொகுப்புகளைப் பொறுத்தவரையில் அப்படியான மைய நீரோட்டம் என்பது கதைக்குக் கதை மாறுபடும். எனவே, பல்வேறு விதமான எண்ணவோட்டங்களைப் பல திசைகளில்
பயணிக்க வைக்கும்” என்பதைப் பதிலாக அளித்தேன். அவன் கேட்ட அவ்வினாவும், அதன் தொடர்ச்சியாக நான் படிக்க
நேர்ந்த ‘கவர்னர் பெத்தா’ என்ற மீரான் மைதீனின்
சிறுகதைத் தொகுப்பும் என்னுள் ஏற்பட்டிருந்த தவறான ஒரு தீர்மானம் – நாவல்கள் சிறுகதைகளைக் காட்டிலும் மேலானவை – முற்றிலுமாக
உடைந்து சிதறியது.
பத்து சிறுகதைகள், 93 பக்கங்கள் என்று முத்தாக வந்திருக்கிறது
இந்நூல். அனைத்துக் கதைகளுமே தமிழ் இசுலாமியச்
சமூக வாழ்வியலை எடுத்துரைப்பதாக இருப்பினும், மற்ற சமூகத்தினரும்
தொடர்புபடுத்திப் பார்க்கும் வகையிலேயே அமைந்துள்ளது வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும்.
இதன் காரணமாக நான் கருதுவது, நம் நாட்டில் இருக்கும்
எல்லாச் சமூகத்தினரும் வெவ்வேறு பெயர்களில் அனுசரிக்கும் பல வழக்கங்களும் ஏதேனும் ஒரு
மையப்புள்ளியில் சங்கமிக்கின்றன எனும் நிதர்சனம்.
’அசன் கண்ணப்பா’வில் தொடங்கி, ‘ரோஜாப்பூ கைத்துண்டு’ வரையிலான பத்துக் கதைகளும் அன்றாட வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டவை.
கதைமாந்தர்களாய் வரும் காதர் சாகிபையோ, யூசுப்பையோ
வேறு பெயர்களில் வாசகனும் சந்தித்திருப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் எனுமளவிற்குக்
கதைச் சம்பவங்கள் வலுவானவையக உள்ளன.
கதைகளில் கையாளப்படும் நையாண்டி, இளக்காரம், சோகம் அனைத்தையும்
தாண்டி, கதை முடிவுகள் சொல்லும் சில செய்திகள் மிக முக்கியமானவை.
சொல்லப்போனால், கதைகளே கடைசி வரியில்தான் சொல்லப்பட்டிருக்கின்றன
எனும் தோற்றத்தை ஏற்படுத்தும் சாட்டையடிச் செய்திகள் நிறைந்து வழிகின்றன. நூலின் தலைப்பான ‘கவர்னர் பெத்தா’ எனும் சிறுகதை, இதற்கான சிறந்த உதாரணம். ஆளுனர் ஃபாத்திமா பீவி ஒரு கிராமத்திலுள்ள பள்ளிவாசலுக்கு வருகை தரும் அதன்
களம், இறுதியில் அதன் பாத்திரமான பீர்மா எனும் பெண்மணியின் யதார்த்தமான
தொனியில் கேட்கப்படும், “’பொட்டப்புள்ள படிச்சு என்ன கவர்னரா
ஆகப்போற?’ன்னு எங்க உம்மாவும், வாப்பாவும்
சொல்லாம இருந்திருந்தா நானும்தான் பெரிய ஆளா ஆயிருப்பேன்” என்ற
கேள்வி நமக்குள் விளைவிக்கும் அதிர்வுகள் ஏராளம். கொஞ்சம் பிசகியிருந்தாலும்
பிரச்சாரத் தோற்றம் கொள்ளக்கூடிய பெண்கல்வி தொடர்பான செய்தியை
அழகாகக் கோடுகாட்டிச் செல்கிறது கதை.
மற்றொரு உதாரணமாகக் குறிப்பிட
வேண்டிய சிறுகதை, நூலின் கடைசியில்
இடம்பெற்றிருக்கும் ‘ரோஜாப்பூ கைத்துண்டு’. மேலோட்டமாகப் பார்க்கும்போது விடலைப்பருவக் காதலாகத் தோன்றும் இது
(காதல் கதைதான் என்பதை மறுப்பதற்கில்லை) இறுதியில்
நாயகியின் வார்த்தைகளின் மூலம் சொல்ல வரும் செய்தியும் சக்திவாய்ந்தது. ’பெந்தகொஸ்து’ எனும் கிறித்துவ சமூகத்தைச் சார்ந்த பெண்மணியான
அவளுக்கும், இசுலாமிய இளைஞனுக்கும் ஏற்படும் உரையாடல்,
அது கொடுக்கும் ஊடல் என்று வளரும் சிறுகதையில், அவள் நகைகளும், பூவும் அணிந்துகொள்ளாதது அவனுக்கு வியப்பை
ஏற்படுத்துகிறது; ஏற்றுக்கொள்ளவே முடியாததாக இருக்கிறது.
“உங்க வீட்டுல பொட்டு வெச்சுப்பாங்களா? மாட்டாங்கல்ல.
அதே மாதிரிதான் இதுவும்” என்று அவள் சொல்லும் இடம், இந்நாட்டின் மதக்காவலர்களும்,
‘புனிதர்’களும் அவசியம் உணர வேண்டிய ’மதமும், அது சார்ந்த நம்பிக்கைகளும், கலாச்சாரங்களும்
வலுக்கட்டாயமாக நிறுத்தவோ, திணிக்கவோ, மாற்றவோ படக்கூடாது’ எனும் செய்தியைப் பறையடித்துச்
சொல்வதுபோல் உள்ளது.
தொழில்சார்ந்து குடும்ப உறுப்பினர்கள் ஒருவரோ,
பலரோ இடம்பெயர்ந்து குடும்பத்தின் பிற அங்கத்தினரைச் சொந்த இடத்தில் விட்டுவரும் அவலம்,
‘சம்மந்தக்குடி’யின் ஒரு பகுதி என்றால், எவ்விதப் பிரதிபலனும் எதிர்பார்க்காது உழைத்து,
ஓடாகத் தேயும் மூத்த உறுப்பினர்களின் தியாகத்தின் உருவமாகத் திகழும் மொய்து சாயிபு
மறுபக்கமாக மனக்கண் முன் வந்து செல்கிறார்.
’அசன் கண்ணப்பா’ என்ற தொடக்கக்கதை, சற்றும்
பிசகாமல் சுந்தர ராமசாமியின் ‘விகாசம்’ எனும் சிறுகதையை நினைவுபடுத்துகிறது. முன்னது,
தொலைக்காட்சியின் வரவால் தனித்துவிடப்படும் கதைசொல்லி முதியவரைப் பற்றிய பதிவு; பின்னது,
‘கால்குலேட்ட’ரின் வரவால் மனிதக் கணினியாக இயங்கிய ராவுத்தர் எனும் முதியவரைப் பற்றியது.
ஆனால், ‘விகாச’த்தில் மனிதர்கள் இயந்திரங்களைக் காட்டிலும் மேன்மையானவர்கள் எனும் கருத்து
கடைசியில் சொல்லப்பட்டிருக்கும்; ‘அசன் கண்ணப்பா’வில் அத்தகைய முடிவுகள் வலிந்து திணிக்கப்படுவதில்லை,
அசன் கண்ணப்பாவின் எரிச்சலான புலம்பலும், தன்னிடம் இனி எவரும் கதை கேட்க வரப்போவதில்லை
எனும் நினைப்புடனும் கதை முடிகிறது. இது வாசகர்களுக்கான மனத்திறப்பை அதிகப்படுத்துகிறது.
நம் வசதிப்படி, நாமே கதையை அதற்குப் பின்பு தொடர்ந்து நமக்கு ஏற்றார்போல் ஒரு முடிவைத்
தேர்ந்தெடுத்துக்கொள்ளும் சுதந்திரத்தை அளிக்கிறது.
கதைகளின் முக்கியமான நோக்கங்களாக நான் பார்ப்பது,
வாசகரின் வாழ்வினையும், வாழ்வியலையும் அசைபோட்டுப் பார்க்கச்செய்வது. அவ்வகையில், ‘தம்பிக்குட்டி’
எனும் கதையில் வரும் ஆட்டுக்குட்டி, எங்கள் வீட்டில் வளர்ந்த ’பப்பூ’ எனும் பூனைக்குட்டியை
நினைவுபடுத்தத் தவறவில்லை. ஆசையுடன் குழந்தைகள் கண்பட வளரும் ஆட்டுக்குட்டி, பள்ளிவாசலுக்கு
நேர்ந்துவிடப்படுவது ‘தம்பிக்குட்டி’யின் சாரம். என் கண் முன்னால் வளர்ந்த பப்புக்குட்டியும்,
அதன் குழந்தைகளும் நான் கல்லூரி சென்றபிறகு கோயிலில் விடப்பட்டது (பின்னர் அதற்காக
அம்மாவும், அப்பாவும், நானும் அழுதது) வாழ்வில் நடந்த நிஜம்.
‘பெஞ்சி’ எனும் கதையில் வரும் மோதியரும்
முக்கியமான சில சடங்குகளை நினைவுபடுத்துகிறார். மோதியராய் இருக்கும் அவர், இறப்பு நிகழ்வுகளுக்குச்
சென்றுவருவதால், அவர் ஒதுக்கிவைக்கப்படுகிறார்; வயது பேதமின்றி, ஊரின் அனைத்துத் தரப்பு
மக்களின் கேலிகளுக்கும், கிண்டல்களுக்கும் ஆளாகிறார். ஆனால், அவரைத் தூற்றும் அதே மக்கள்
அடுத்தடுத்த இறப்புக்குத் திரும்பத்திரும்ப அவர் சேவையை நாடுகின்றனர். அவரது உளச்சிக்கல்களுக்கும்,
வாழ்வுப் பிரச்சினைகளுக்கும் யாரிடமும் உதவியில்லை. பிராமணர் வழக்கத்திலும் இத்தகைய
சடங்கொன்று உள்ளது. பிராமணர் ஒருவர் இறந்தால் அவரது ஆத்மாவே சாப்பிட வருகிறது எனும்
நம்பிக்கையில் பிராமணர் ஒருவர் உணவுண்ண அந்த இழவு வீட்டிற்கு அழைக்கப்படுவார். அன்று
மட்டுமே அவருக்கு ராஜ மரியாதை. பிற நாட்களில் அவர் ஒரு அபசகுனம். அவரது வீட்டில் பெண்ணெடுக்க
அனைவரும் தயங்குவர்; சாலையில் செல்லும்போது அவரைப் பார்த்துவிடக் கூடாது, பார்த்தாலும்
ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்று பல மூடநம்பிக்கைகள் இருக்கின்றன. அதேபோல் பிற சமூகத்தினரிடமும்
பல்வேறு பைத்தியக்காரத்தனமான வழக்கங்கள் – இப்படிச் சொல்வதில் எனக்கு எவ்விதக் கூச்சமும்
இல்லை – இருக்கக்கூடும். ‘இவையெல்லாம் யார் தொடங்கியது?’, ’எதற்காக இவற்றை எவ்வித எதிர்க்கேள்விகளுமற்றுப்
பின்பற்றுகிறோம்?’ எனும் வலுவான கேள்விகளை எவ்விதத் தூண்டுதலும், பிரச்சாரமுமின்றி
அகத்தே எழுப்புகிறது ‘பெஞ்சி’ கதை.
‘ஓட்டு’ எனும் கதையில், மாந்தர் அனைவரும்
குழந்தைகளாயிருப்பினும், அது குறிப்பால் உணர்த்தும் உண்மை அசாத்தியமானது. ஜார்ஜ் ஆர்வெல்லின்
‘அனிமல் ஃபார்ம்’ எனும் கதையின் சாயலை ஒத்திருக்கும் இது (இக்கதையில் குழந்தைகள் ஓட்டுப்போடுவதாய்
வர்ணிக்கப்படுகின்றது; ‘அனிமல் ஃபார்’மில் விலங்குகள் அரசியல் செய்வதாகப் புனையப்பட்டிருக்கும்),
கள்ளவோட்டு, அழுகுணி ஆட்டம் என்று இன்றைய அரசியல்வாதிகள் செய்யும் சாக்கடைச் சண்டை
அனைத்தையும் தோலுரித்துக்காட்டுகிறது.
தொடக்கத்தில் சொன்னதுபோல், பத்துக் கதைகளும்
பத்து விதமான சிந்தனை ஓட்டங்களை அளிக்கிறது. அவ்வகையிலும், தமிழ் இசுலாமிய (திருநெல்வேலிப்
பகுதியைச் சேர்ந்தவர் மீரான் மைதீன் என்று அம்மா சொன்னார்; எனவே அப்பகுதி சார்ந்த மக்களின்
பதிவாக இருக்கும் என்று தோன்றுகிறது) மக்களின் வட்டார வழக்கங்களைப் பிரதிபலிப்பதிலும்
வெற்றி பெறுகிறது ‘கவர்னர் பெத்தா’. ’பிரதிபலிக்கிறது’ என்று சொல்லுமிடத்தில் நூல்
முழுவதும் கையாளப்பட்டிருக்கும் வட்டார நடையை குறிப்பிட வேண்டிய அவசியம் எழுகிறது.
‘நீக்கம்பத்துல போக’, ‘பாளறுவானுவளே’ போன்ற வசைச்சொற்கள் படிக்கும்போது கதைகளின் சுவையைப்
பன்மடங்கு கூட்டுகின்றன.
ஆசிரியரும், சிறப்பாக வெளியிட்டுள்ள
காலச்சுவடு பதிப்பகத்தாரும் பாராட்டுக்குரியவர்கள்.