Friday, November 27, 2015

பி.கே.வின் தமிழ்நாடு...

   துவங்குவதற்கு முன் சில விஷயங்களைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். பி.கே என்பது இப்பதிவு முழுக்க அக்கதாபாத்திரத்தை மட்டுமே குறிப்பிடுகின்றது; எக்காரணம் கொண்டும் சகிப்புத்தன்மையையோ, அந்நடிகரையோ அல்ல. மேலும் எந்த அரசியல் கட்சியையும், குறிப்பிட்ட நபர்களையும் தாக்குவதற்காக எழுதப்படுவதுமல்ல. மழைநீர் எல்லா பக்கங்களிலும் சூழ்ந்த ஊரில் வாழும் ஒரு வெட்டிப் பயலின் பொழுதுபோக்கிற்காக மட்டுமே இது தட்டச்சு செய்யப்படுகிறது.

     ராஜ்குமார் ஹிரானி, பி.கே என்னும் வேற்றுலகவாசி, வட இந்தியாவில் சந்திக்கும் நிகழ்வுகளை மட்டுமே தத்ரூபமாகப் படம் பிடித்திருந்தார். அதன் பிறகு பி.கே தமிழகத்துக்கும் வந்தார்/வந்தது/வந்தான் (வந்திருந்தால் என்று வைத்துக் கொள்ளுங்களேன்).

     பி.கே தமிழ்நாட்டில் நுழைந்தவுடன் அவனை ஆச்சரியப்படுத்திய விஷயம் எங்கும் பரந்துவிரிந்திருந்த பசுமைதான்; ‘அக்கரைக்கும் இக்கரைக்கும் பச்சைஎன்னும் பழமொழிக்கு ஏற்றவாறு மாநிலத்தில் இருந்த அனைத்து மரங்களின் வேர், கிளைகள், காய்கள் என அனைத்துமே ‘பச்சை வண்ணத்திலேயே காட்சியளித்தன. அங்கிருந்த மனிதர்கள்கூடப் ‘பச்சைப் பச்சையாகத்தான் பேசினார்கள். தாய் நடந்துவரும்போது கைகட்டி, வாய்பொத்தி நிற்க வேண்டும்; முடிந்தால் காலில் விழவேண்டும் என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கும் மக்களைக் கண்டு வியந்தான் அவன்.

     அந்தந்த மொழிகளைக் கற்பது அவனுக்கு இலகுவான காரியமாதலால், ஆங்காங்கே மக்கள் பேசியதை வைத்தே தமிழைக் கற்றிருந்தான். சாலையில் நடந்து கொண்டிருந்தபோது, ஒருவர் மேடையில் தொண்டை கிழியக் கத்திக்கொண்டிருந்தார், “தமிழமே எனது மதம்; வள்ளுவனே எம் கடவுள்; குறளே எம் மறை”. இப்பொழுது பி.கேவிற்கு ஒரு சந்தேகம் வந்தது. ‘தமிழ் வேறு, தமிழம் வேறா? இல்லையே! தமிழம் என்ற வார்த்தையே எனது நினைவுப் பெட்டகத்தில் இல்லையே! ஒருவேளை தமிழ் என்பது மொழியே இல்லை போலும்; தமிழம் என்னும் மதத்தின் கருத்துகளின் மூலம்தான் தமிழெனும் மொழியேகூடத் தோன்றியிருக்கலாமல்லவா?என்று எண்ண ஓட்டங்கள் அலையடித்தன. அப்போது அவனைக் கடந்து சென்ற ஒருவர், ‘ஏண்டா இப்படி உங்க அரசியல் லாபத்துக்காக ஒரு பழமையான மொழியை மதம் என்னும் குறுகிய கண்ணோட்டத்துக்குள் கொண்டுவர்றீங்கஎன்று புலம்பியபடியே சென்றார். இப்போது பி.கேவுக்கு ஒரு ஞானோதயம் பிறந்த்து. “இருப்பதைத் திரித்துக் கூறி கூட்டத்தைக் கூட்டி, மனிதர்களின் உணர்வுகளைக் கோபப்படுத்தி, மனதை மாற்றுவதுதான் அரசியல்”.

     இதற்குப் பின்பும் பலவாறாகக் குழம்பியிருந்த பி.கே, “என் பெட்டகத்திலுள்ள தமிழானது சரியானதா? அல்லது ஏதேனும் தவறு நிகழ்ந்துவிட்டதா?எனும் கேள்விகளுக்கு விடை கண்டுபிடிப்பதற்காகப் பள்ளி ஒன்றிற்குள் நுழைந்தான். எல்லா வகுப்பறைகளிலும் தேடினான் எங்கேனும் தமிழோசை கேட்கின்றதா என்று. ஒரு வகுப்பறையில் கூட தமிழ்ப்பாடம் நடத்தப்படாததால் சலிப்புடன் பள்ளியை விட்டு வெளியேறலாம் என்று நினைத்தபோதுதான் அக்குரல் அவனது செவிகளில் விழுந்தது. “ஸ்டூடண்ட்ஸ்... ஃபிஸிக்ஸ் போர்ஷன் நெறய இருக்கறதுனால இனிமே தமிழ் பீரியட் எல்லாத்தயும் நானே எடுத்துக்கறதா உங்க தமிழ் மேடம் கிட்ட சொல்லிட்டேன்என்று ஒரு ஆசிரியை கூறிக்கொண்டிருந்தார். என்ன இங்குள்ளவர்களே இவர்களது மொழியைப் படிக்க ஆர்வம் காட்டவில்லையே!எனும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பள்ளியை விட்டு வெளியே வந்தான்.

     தமிழ் ஓசைகள் ஓரளவிற்குப் புரிந்தபடியால், திரையரங்கு ஒன்றினுள் புகுந்தான் பி.கே. உள்ளே சென்று பார்த்தால், திரையில் சில பெண்கள் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களது வாயசைவிற்கும், ஒலிப்பானில் ஒலித்த வார்த்தைகளுக்கும் தொடர்பே இல்லையென்று தோன்றியது அவனுக்கு. உடனே எழுந்து வந்துவிட்டான். பாவம் அவனுக்குத் தெரியவில்லை இங்கிருக்கும் முக்கால்வாசிக்கும் மேற்பட்ட கதாநாயகிகள் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், ‘டப்பிங்என்ற ஒரு விஷயம் இருக்கிறதென்றும்.


     தான் தெரிந்துகொண்ட தமிழ்மொழி இதுதானா?என்னும் சந்தேகம் அதிகமாகிக்கொண்டே போனது அவனுக்கு. ஒரு வீட்டைக் கடந்து சென்றபோது, தந்தை தன் கையில் ஏதோ ஒரு அட்டையை வைத்துக்கொண்டு தன் மகனுடன் பேசுவது தெரிந்தது. “மேத்ஸ்ல 200, கெமிஸ்ட்ரில 199, ஃபிஸிக்ஸ்ல 197... சூப்பர்டா கண்ணா! தமிழ்ல மட்டும் 174 மார்க்தான், ஆனா பரவாயில்ல. லேங்குவேஜ்தானே? போயிட்டுப் போகுது.இப்போது பி.கேவிற்குத் தலை சுற்றுவது போலிருந்தது. “இனிமே தாங்க முடியாது... என்னைச் சீக்கிரம் கூட்டிட்டுப் போயிடுங்கப்பா!என்று தனது மொழியில் தன் கிரகத்திற்குத் தகவலனுப்பிவிட்டு மயங்கி விழுந்தான்.