Saturday, January 6, 2018

இசைன்னா என்னன்னு தெரியுமா? ஏ.ஆர்.ரஹ்மான்னா என்னன்னு தெரியுமா?

இசையமைப்பாளர் ஆதித்யன் மரணம் குறித்த செய்திகள் பத்திரிக்கைகளிலும், இணையத்திலும் எழுதப்பட்டபோது, “யாரு இந்தாளு? தமிழ் இசையமைப்பாளர்-னு சொல்றாங்களே!” என்று அலசியபோதுதான் ‘ஆதித்யன்ஸ் கிச்சன்’ எனும் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் என்று அறிந்தேன். “அட, இவரைச் சமையல்காரர்னு நெனச்சுட்டோமே” என்ற வருத்தம் மேலோங்கியது. கலைத்துறையில் இருப்பவர்களையும், எழுத்தாளர்களையும் நாம் எந்த இடத்தில் வைத்து மதிக்கிறோம் என்ற கேள்வி மனத்தில் எழுந்த வண்ணம் இருந்தது. திரைப்படத்துறை எனும் மாபெரும் வணிகத்தில் பணியாற்றும் வல்லுநர்களையே அடையாளம் காணாமல் இருக்கும் நாம், அதைத் தவிர்த்த பல்வேறு வழிகளிலும், பலதரப்பட்ட சிறிய, கவனிக்கப்படாத ஊடகங்களிலும் பணியாற்றும் மனிதர்களை எப்போது மதிக்கத் தொடங்கப்போகிறோம் என்று ஏக்கமாயிருந்தது.

ஆனால், சமீபத்திய நிகழ்வொன்று வேறுவிதமான சிந்தனைகளை எழுப்புகிறது. “யப்பா சாமி, யாரும் கவனிக்காம நம்ம பாட்டுக்கு நாம உண்டு, வேலை உண்டுன்னு இருந்துட்டுப் போயிடுறதுதான் சிறப்பு” என்று தோன்ற வைக்கிறது. வரும் 12-ஆம் தேதி நடக்கவிருக்கும் தன் இசை நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், ஏ.ஆர்.ரஹ்மானைப் பந்தாடிய கேள்விகள்தாம் அவை. இசை தொடர்பான கேள்வி மருந்திற்குக் கூடக் கேட்கப்படாத அச்சந்திப்பில், “ரஜினியின் அரசியல் வருகை பற்றிய தங்கள் கருத்து என்ன?”, “ஆன்மீக அரசியல் என்று அவர் கூறுவதற்கான பொருள் என்னவாக இருக்க முடியும்?” போன்ற பைத்தியக்காரத்தனமான வினாக்கள் இசை மேதையைப் பதம்பார்த்தன.

“இசை நிகழ்ச்சி தொடர்பான கேள்விகளை மட்டும் கேளுங்கள்” என்று இசை நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனத்தைச் சேர்ந்த நபரொருவர் வலியுறுத்தியபோதும், செவிட்டு முண்டங்களாக நிருபர்கள் கேட்ட கேள்விகள் அசிங்கத்தின் உச்சம். “25 வருடங்களாக என்னை ஆதரித்த ரசிகர்களுக்கு நன்றி” என்று அப்பேட்டியை இசை தொடர்பான ஒன்றாக மாற்ற முயன்ற ரஹ்மானை, பிஸ்கெட்டிற்கு அலையும் நாய்களைப் போலவே சூடான செய்தியில் மாட்ட வைக்க முயன்றனர் ‘எச்சைப் பொறுக்கி’ நிருபர்கள். ரஜினியின் அரசியல் வருகை குறித்த ரஹ்மானின் நிலைப்பாட்டைப் பற்றிக் கேட்கப்பட்டபோது, “அதைப் பத்தி இப்பொப் பேச வேணாம். யோசிச்சு தான் சொல்லணும்” என்ற ரீதியில் பதிலளித்தார்.

காட்டாங்குளத்தூரில் ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டத் தனியார் கல்லூரியின் முதலாளியும், சொகுசுப் பேருந்துக் கொள்ளைக்காரருமான ஒருவருடைய தொலைக்காட்சியானது, “ரஜினிக்கு ரஹ்மான் ஆதரவு; நிலைப்பாட்டை விரைவில் தெரிவிப்பதாக அறிவிப்பு” என்ற ரீதியில் பரப்பியது. நண்பன் ஒருவனிடம் இது குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது அவன் சொன்ன வார்த்தைகள் மிக முக்கியமானவை. “மீடியாக்காரங்க வழக்கம் போல அவனுங்களோட அவுசாரித்தனத்தைக் காமிச்சுட்டானுங்க. ஆனா, அதை விட என்னை வருத்தப்பட வைக்குற விஷயம், நான் பார்த்து வியக்கும் ஆளுமைகள் இப்படிச் சில வியாபாரிகளின் பேராசைக்கு இரையாவதுதான்” என்று கூறினான். மிக முக்கியமான அம்சமாகத் தோன்றியது அவனது பேச்சு. குளிர்பான நிறுவனமொன்று நடத்தும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்காக அந்நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு அது. ஆனால் பதில்கள் அந்நிறுவனத்துக்கு எவ்விதப் பாதிப்பையும் எற்படுத்தாது. மாறாக, தனிநபராக ரஹ்மான் எனும் மனிதர் வசைபாடப்படுவார்.

ட்விட்டரில் ஏ.ஆர்.ரஹ்மானை நோக்கிச் சில கீச்சர்கள் வைக்கும் சில எரிச்சலூட்டும் கேள்விகள் கடுமையான கோபத்தையும், மனவருத்தத்தையும் ஏற்படுத்துபவையாக இருக்கின்றன. “ஆளப்போறான் தமிழன்னு பாட்டுல மட்டும்தான் தமிழன் பெருமையா?”, “கன்னடனுக்குச் சொம்பு தூக்க வெக்கமா இல்லையா?”, “ஆன்மிக அரசியலை ஆதரிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் ஒழிக” போன்ற பின்னூட்டங்கள் கிட்டத்தட்ட என்னை அழவைத்துவிட்டன.

ரஹ்மான் எனும் உலகப்புகழ் பெற்ற அம்மேதையால் ஒரே வார்த்தையில் “நோ கமெண்ட்ஸ்” என்று சொல்லியிருக்க முடியும். அல்லது அதை விடக் கேவலமாகச் எச்சைக்கலை நிருபர்களைச் சாடியிருக்க முடியும். கடிந்து ஒரு வார்த்தை கூடப் பேச முடியாத, மெ(மே)ன்மையான ஒரு கலைஞனை வைத்து வியாபாரம் செய்வது ‘தமிழ், தமிழ்’ என்று கூவும் நம்மைப் போன்ற அடிமுட்டாள்களால்தான் முடியும். இசை என்பது ஏழு ஸ்வரங்களை அடக்கிய கலை என்பதைத் தாண்டிய ஒரு பரவசப் பிரவாக நிலையில் இருக்கும் ஒரு மனிதரிடம், அவரைப் பற்றிய கேள்விகள் கேட்காமல், கொள்கைகளே இல்லாத ஒரு கிழவனின் சுயநல அரசியல் வருகையைப் பற்றிக் கேட்பதுதான் நாம் அவருக்குத் தரும் மரியாதை இல்லையா?

“போலித் தமிழன் ஏ.ஆர்.ஆர்.” என்று வரிந்துகட்டி வரும் மிலேச்சர்களுக்கு “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று ஆஸ்கார் விருது மேடையில் ரஹ்மான் பேசியது தெரிந்திருக்குமா என்றுகூடத் தெரியவில்லை. கலைமாமணி விருது வாங்கினால் கூட “யூ நோ, ஐ கைண்ட் ஆஃப்” என்று ஆங்கிலத்தில் தம்பட்டம் அடிக்கும் செயற்கையான மனிதர்களுக்கு மத்தியில், தமிழில் பேசியிருக்க வேண்டிய கட்டாயமே இல்லாத ஒரு மேடையில் தன்னிச்சையாக ரஹ்மான் செய்தது எத்துணை பெரிய செயல்? உலகின் மூலைமுடுக்கில் இருக்கும் யாரும் யூட்யூபில் அக்காணொளியைக் காண முடியும்; அப்பேச்சு தமிழின் ஆதி, அந்தம் தெரியாத ஒரு அந்நியனை ’எல்லாப் புகழும் இறைவனுக்கே’விற்கான பொருளை கூகுளில் தேடவைக்குமானால், அதைவிடவா ‘தமிழ், தமிழ்’ என்று பிதற்றிக்கொண்டிருக்கும் நாமெல்லாம் தமிழுக்குச் சேவை செய்துவிட்டோம்?

அதையெல்லாம் விடுங்கள். ‘தமிழா தமிழா’ எனும் ‘ரோஜா’ திரைப்படப் பாடலை நாம் அனைவரும் கேட்டிருக்கிறோம் அல்லவா? நம்மில் எவ்வளவு பேர் அதில் இடம்பெறும் ஹரிஹரனின் குரலில் வழியும் இசை தமிழனின் நற்குணங்களையும், இடையிடையே வரும் இசை தமிழனை ஒரு புரட்சியாளனாகவும், ரௌத்திரம் மிகுந்தவனாகவும்  சித்திரப்படுத்துகிறது என்பதை உணர்ந்திருக்கிறோம்? அப்பாடலின் வரிகள் எனக்கு நினைவிலில்லை. ஆனால், அதைப் பற்றி எழுதும்போது எழும் சிலிர்ப்பை வார்த்தைகளில் எப்படி விவரிப்பது?

‘யெ ஜோ தேஸ் ஹே தேரா’ எனும் ‘ஸ்வதேஸ்’ திரைப்படப் பாடலின் தமிழ் ஆக்கமான ‘உந்தன் தேசத்தின் குரல்’ எனும் பாடலைக் கேளுங்கள். ‘சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா’, ‘அயல்நாடுந்தன் வீடல்ல விடுதியடா தமிழா’, ‘உள்மனத்தின் கூவல் உந்தன் செவியில் விழாதா?’ போன்ற வரிகளை வேறெவரது இசையில் கேட்டிருப்பினும் இவ்வளவு பெருமிதக் கண்ணீர் வருமா என்று தெரியவில்லை. ஏ.ஆர்.ரஹ்மானின் தமிழுணர்வு நம்மிடம் இருப்பதைப் போன்ற வார்த்தைகளால் விவரிக்கக் கூடிய விஷயம் அல்ல. இசை என்பது சொற்களின் குறுகிய வட்டத்திற்குள் அடக்கப்பட வேண்டிய கலையுமன்று.

ஒரு மனிதர் எல்லாவற்றையும் பற்றிக் கருத்துக் கூற வேண்டும் என்று எதிர்பார்ப்பதும், அதற்காக அவரது வாயைக் கிளறி வார்த்தைகளைப் பிடுங்கி, அப்போதும் தேவையானது கிடைக்காவிட்டால் திரித்துக் கூறுவதும்தாம் செய்தி ஊடகங்களின் பணி என்றால், அது பிராத்தல் நடத்திக் கூட்டிக் கொடுப்பதை விடக் கீழ்மையான வேலை. ‘புரமோஷன்’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்தும் குளிர்பான நிறுவனம் ரஹ்மானைச் செய்தியாளர்களிடம் பேச விடுவது கலைத்துறைக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்பதையும் தாண்டி, ஏ.ஆர்.ஆரின் இசை மீதான அந்நிறுவனத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. எவ்விதத் தொலைக்காட்சிப் பேட்டிகளும், பத்திரிக்கையாளர் சந்திப்பும் இல்லாமலேயே பிரம்மாண்டமான வெற்றி பெற்ற அவரது இசை நிகழ்ச்சிகளுக்கு நேரில் சென்றிருக்கும் ரசிகன் என்ற முறையில், வியாபார விபசாரி ‘7-அப்’புக்கும், ஊடகவியல் கோமாளிகளுக்கும் எனது எச்சிலைக் காணிக்கையாக்குகிறேன்.


இவையனைத்தையும் தாண்டி, ஒரு கருத்து மிக முக்கியமானது. ஒரு இனமோ, மொழியோ, சமூகமோ அடையாளப்படுத்தப்படுவது அவை சார்ந்த பெரிய மனிதர்களின் பெருமைகளைக் கொண்டுதாம். எனவே வெற்றுக்கூச்சல்களைத் தாண்டி, மனிதர்களை அவர்தம் துறை சார்ந்த விஷயங்களுக்காகப் பெருமைப்படுத்துவதும், அடையாளப்படுத்துவதும்தாம் நமக்கு நாமே செய்யும் ஒரு நற்செயலாக அமையும். அதைச் செய்ய முடியாத எவரும், ‘தமிழன்டா’, ‘இந்தியன்டா’ என்று கோஷம் போடத் தகுதியற்றவர்கள்.