மடிக்கணினியில் மின்னஞ்சல்களைப் பார்த்துக்கொண்டிருந்த அவனுக்கு அம்மின்னஞ்சலைப் பார்த்தவுடன் கண்கள் குத்திட்டு நின்றன. அவனையறியாமல் முன்நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பின; திடிரென பின்மண்டையைக் கொதிக்கும் நெருப்பில் கவிழ்த்ததைப் போன்ற சூடு பரவியது. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன; விழிமூடித் திறந்தபின் கண்களை நிரப்பிய கண்ணீர் விழிகளைத் திரையாய் மறைத்தன. இனம்புரியாத கோபமும், பயமும், விரக்தியுமாகச் சேர்ந்து முதுகெலும்பை உறைய வைத்துக்கொண்டிருந்தன.
அமர்ந்திருந்த அறையில் இருந்த அனைத்துப் பொருட்களும் ஓரிடத்தில் நில்லாமல் அலைவது போல் தோன்றியது. கண்ணை அழுத்தி மூடித் திறந்த பின், அறையே திடீரென வெறிச்சோடியது போலிருந்தது. நடப்பவை அனைத்தும் கனவா, நனவா என்று புரியவில்லை. வியர்வைத் துளிகள் கன்னத்தின் வழியே வழிந்தோடிக் கழுத்தையும், சட்டையையும் நனைத்திருந்தன. உச்சந்தலையில் இன்னொரு ஆள் ஏறி நிற்பதைப் போன்ற பாரம் உடலையே அழுத்திக் கூனிக் குறுகச் செய்துகொண்டிருந்தது.
சட்டெனப் பிரமை பிடித்தவனாகக் கையில் கிடைத்ததையெல்லாம் எடுத்து வீசினான்; ‘சிலிங்’, ‘டமார்’, ‘பொளேர்’ என்ற இசையுடன் அவை அங்குமிங்குமாய்ச் சிதறி விழுந்தன. ஆசையாய் அப்பா வாங்கிக்கொடுத்திருந்த அலங்காரக் கடிகாரத்தை உடைத்துவிட்டிருந்ததை உணர அவனுக்கு சில நொடிகள் ஆயின. ஓவெனக் கதறியழத் தொடங்கினான். காலம் பின்னோக்கிச் சுழலத் தொடங்கியது.
—————
“மச்சான், ஆப்டிட்யூட் எல்லா கான்செப்ட்டும் பாத்துட்டல்ல? இன்னிக்கு வர்ற கம்பெனில டெக்னிக்கல் கொஸின விட ஆப்டி தான் அதிகமாக் கேப்பாங்களாம்டா. போன வருஷம் ப்ளேஸ் ஆன சீனியர் அண்ணா சொன்னாரு” என்று நண்பன் சொல்லிக்கொண்டிருந்தான். அவன் ஏற்கனவே ஒரு நிறுவனத்தில் வேலைவாய்ப்பை உறுதிசெய்திருந்தமையால், அடுத்து கல்லூரிக்கு வந்த அனைத்து நிறுவனங்களின் பெருமக்களையும் கவனிக்கும் பொறுப்பை ஏற்றிருந்தான். முடிந்தவரை கையில், காலில் விழுந்து தன்னுடன் படிக்கும் நண்பர்களை ஏதேனும் ஒரு வேலையில் தள்ளிவிடுவதற்கான அனைத்து ஆயத்தங்களையும் செய்துகொண்டிருந்தான்.
இவனுக்கோ பதற்றத்தில் அரைமணிக்குள்ளாக நான்கு முறை உபாதைகள் சீண்டியிருந்தன. தனக்குள்ளாகவே எண்ணிப்பார்த்துக்கொண்டான். “எட்டு. ஒரு பன்னெண்டு. இது இருவத்தி நாலாவது கம்பெனி” என்று சொல்லிக்கொண்டான். நேர்காணலுக்கும், எழுத்துத் தேர்வுக்கும் வருவது பல் விளக்குவது, குளிப்பது ஆகியவற்றுடன் சேர்ந்த வாடிக்கையாகவே மாறியிருந்தன கடந்த ஐந்தாறு மாதங்களாய். பெரும்பாலும் இரண்டு, மூன்று நாட்களுக்கொருமுறை சட்டையைத் துவைத்து இஸ்திரி போட வேண்டியிருந்தது. ஏற்கனவே வேலையை உறுதிசெய்தவர்கள் அனைவரும் விடுதியில் நள்ளிரவு வரைச் சீட்டுக்கட்டும், திரைப்படங்களுமாய் இறுதியாண்டுக் களிப்பில் மூழ்கிக்கொண்டிருக்க, இவன் கணக்குக் கேள்விகளிலும், இயந்திரவியல் பாடங்களின் நுணுக்கங்களிலும் ஆழ்ந்திருப்பான்.
“ஒன் டூ செவன்”. நிசப்தம்.
“ஒன். டூ. செவன்”. பதில்குரல் இல்லை.
“டேய் மச்சான், உன்னையத்தாண்டா கூப்பிடுறாங்க. ஆல் த பெஸ்ட், மாப்ள. தைரியமா எழுதிட்டு வா” - நண்பன் தோளைக் குலுக்கிய பின்னரே சுயநினைவுக்கு வந்தவன் போல உள்ளே சென்றான். “ச்ச, நாமளும்தான் ஒவ்வொரு கம்பெனிக்கும் அவனுக்கு இதே மாதிரிச் சொல்லி அனுப்புறோம். ஒருவேளை அதுனாலதான் செலக்ட் ஆக மாட்டேன்றானோ?” என்று நண்பனின் மனம் இந்நேரத்தில் குழம்பத் தொடங்கியிருந்தது.
—————
“டேய், என்ன? ஒரு மணிநேரம் வரைக்கும் ஒட்ட ஒட்ட எழுதிட்டு வர்ற? எப்புடிடா பண்ண?” - சிரித்த முகத்துடன் தேர்வறைக்கு வெளியே காத்திருந்த நண்பன் கேட்டான். “**தா, ஏண்டா நீ வேற! மயிரு மாதிரி இருந்துச்சு பேப்பர். ஒண்ணுமே புரியல. பாக்கலாம். ரிசல்ட் வந்தா வாட்ஸப் குரூப்ல போடுடா யாரு யாரு ஷார்ட்லிஸ்டட்னு” என்று விரக்தியாகச் சென்றான் அவன்.
விடுதிக்குச் செல்லும் வழியெல்லாம் குழப்பமாகவே இருந்தது. “உண்மையிலேயே நான் ஒழுங்காப் படிக்கிறேனா?”, “ஒருவேளை எந்தக் கம்பெனிக்கும் நான் லாயக்கே இல்லையோ?”, “ப்ளேஸ் ஆனவங்க எல்லாத்துகிட்டயும் பேசிட்டுதான் இருக்கேன்; ஒருவேளை அவனுங்க எதையோ மறைக்குறாங்களோ?” என்று யோசிக்க யோசிக்கத் தொண்டையை அடைத்தது. கேவிக்கேவி அழ வேண்டுமெனத் தோன்றியது. வழியெங்கும் குனிந்த தலை நிமிராமல் விரைந்து சென்று தன் விடுதியறைக் கதவை மூடினான்.
—————
“டேய், கதவத் தொறடா. மச்சான் டேய்” - ஏழு நிமிடங்கள் கடந்திருந்தன. அக்கம்பக்கத்து அறைவாசிகள் அனைவரும் அவனது அறை முன்பாகக் குழுமியிருந்தனர். “என்னவாம்டா?” “ப்ளேஸ் ஆகலையாம் மாப்ள, அதான் கதவைச் சாத்திக்கிட்டானாம்” என்று முணுமுணுப்புகள் கூட்டத்தினிடையே பரவியிருந்தன. “மச்சான், இதோ பார்றா காமெடிய. அதெல்லாம் ஒரு மயிரும் இருக்காது. எதாச்சும் பொண்ணு கிட்ட வாங்கிக்கட்டினு வந்திருப்பான்” என்று எவனோ ஒருவன் வம்பிழுக்க, வாய்வார்த்தை கைகலப்பாக மாறியது. அபாண்டம் பேசியவன் குடித்திருக்க வேண்டும்; தள்ளாடினான்.
“**மாள டேய், உனக்காக இங்க சண்ட நடக்குது. அவ்ளோ ** கொழுப்பாயிடுச்சா உனக்கு?” - விரக்தியில் நண்பன் கத்தினான். பத்தாவது வினாடியில் கதவு திறந்தது. அழுது வீங்கிய முகம், அதன் விளைவாய் வந்த சளி என பார்த்தவுடன் பரிதாபப்படும் நிலையில் இருந்தான். “டேய், என்ன மச்சான் இப்புடிப் பண்ணிட்ட!”, “பயமுறுத்திட்டியேடா”, “மச்சான், அந்த ஹெச்.ஆர். எவன்னு சொல்லு, **** பையனத் தூக்கிடுவோம்” என பல்வேறு குரல்கள் ஆறுதல்களும், அலறல்களுமாய்ச் செவிப்பறையைக் கிழித்தன.
“டேய் மச்சான், கோச்சுக்காதீங்க. நான் கொஞ்சம் தனியாப் பேசுறேன் அவனோட; நீங்க எல்லாம் கெளம்புங்க. தேங்க்ஸ்டா” என்று சொல்லி அனைவரையும் அனுப்பிவிட்டு, அவனுடன் சென்றமர்ந்தான் நண்பன்.
அமைதியாயிருப்பது உசிதம் எனப்பட்டது. முதுகில் தட்டிக்கொடுத்தபடியே இருந்தான். “மாசத்துக்கு ஏன் மச்சான் நம்ம டிப்பார்ட்மெண்டுக்கு மட்டும் ரெண்டு கம்பெனிதான் வருது? கம்ப்யூட்டர் சயின்ஸ் *** மவனுங்களுக்கு மட்டும் நெறைய கம்பெனிங்க வர்றாங்க?” - எதிர்பார்த்தபடியே மடை திறந்தது. உணர்ச்சிப்பெருக்கில் எழுந்த வினாவெனினும், அக்கேள்வியில் நியாயமில்லாமல் இல்லை. ‘இது கணினிக்காலம்’ என்று சப்பைக்கட்டு கட்டும் அதிகாரிகள் அக்கல்லூரியின் வேலைவாய்ப்பு முகமையை ஆக்கிரமித்திருந்தனர்.
“செரி, வர்ற ரெண்டு கம்பெனியாச்சும் நம்பள மட்டும் கூப்பிட்டாப் பரவாயில்ல. ங்**தா ஊருல இருக்குற அத்தனை டிப்பார்ட்மெண்டையும் கூப்பிடுறாங்க. கேட்டா கிராஸ் டொமெயின் நாலேஜ் வேணுமாம். அப்போ சீ.எஸ். கம்பெனி எல்லாம் நம்பள எடுக்க வேண்டிதானே? நான் உக்காந்ததுல பதினெட்டு கம்பெனி ‘கோர்’ இல்ல; கேட்டா ‘மேனேஜ்மெண்ட்’ கம்பெனிப்பான்றானுங்க” - ஒவ்வொரு நிறுவனத் தேர்விலும் தோல்வியுறும் பலரும் இவனிடம் புலம்பும் அதே வார்த்தைகள்.
கணினிமயம் என்பதை மறுக்க முடியாத நிலையிலும், தனியார் கல்லூரிகளிலும், வேறு சில அரசுக் கல்லூரிகளிலும் கூட இவர்கள் துறைக்கான வேலைவாய்ப்பு அதிகமாகவே இருந்தது. “ப்ளேஸ்மெண்ட் செல்லுல இருக்குற ஒருத்தனக் கூட விடக்கூடாது மாப்ள” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்க, “இந்த நிலைமையை இப்படியே விட்டுவிடக் கூடாது” என்று நண்பனுக்கு தோன்றியது.
—————
“மச்சான், லக்கேஜ் எல்லாம் சித்தி வீட்டுல ஏற்கனவே வெச்சுட்டேன். யாருகிட்டயும் சொல்லிக்க மனசு வரல. ப்ளேஸ் ஆனவங்க மூஞ்சிய எல்லாம் பாத்தா எனக்கு அசிங்கமா இருக்குடா. உன்கிட்ட மட்டும்தான் கெளம்புறது பத்தியே சொல்றேன். ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துடு” - கல்லூரியி வாழ்வின் கடைசித் தேர்வை முடித்து வெளியே வந்து வாட்ஸப்பைத் திறந்தபோது, குரல்பதிவுச் செய்தியனுப்பியிருந்தான்.
மதிய நெரிசலில் தொடர்வண்டி நிலையம் செல்வது பெரும்பாடாகிப் போனது. நிலையத்தை அடைந்தபோது, புகைவண்டி புறப்பட ஐந்தே நிமிடங்கள்தாம் இருந்தன. தூரத்தில் இருந்து அவன் கையசைத்துத் தனது இருப்பைத் தெரிவித்தான். ஓடிச்சென்று கட்டித்தழுவினான் நண்பன். “மச்சான், ப்ளேஸ் ஆகலையேன்னுதான் கஷ்டமா இருக்கு. தேங்க்ஸ் ஃபார் ஆல் த ஹெல்ப்டா. ஐ விஷ் ஐ வேர் வொர்த்தி ஆஃப் வாட்டெவர் யூ டிட் ஃபார் மீ” என்று அவன் சொன்னபோது இருவரும் கண் கலங்கினர். உடைந்த குரலினூடே, “ச்சீ, *** மூடு. நீ ஆஃப் கேம்பஸ்ல சீக்கிரம் ப்ளேஸ் ஆயிடுவ. சத்தியமாச் சொல்றேன்” என்று நண்பன் கூறியபோது, புகைவண்டி அலறியது. அறுபது வினாடிக் கையசைப்பில் கண்பார்வையின் எல்லை கடந்து சென்றுவிட்டிருந்தது.
—————
“டேய், கல்ஃப் கண்ட்ரீஸ் பத்தி வர்ற ஆஃபர் எல்லாம் தயவு செஞ்சு நம்பாத. அதுல மோஸ்ட்லி எல்லாமே ஸ்கேம் தாண்டா” - துபாயில் வேலைவாய்ப்பு இருப்பதாக வந்த மின்னஞ்சல் பற்றி நண்பனிடம் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தான். “டேய், ஐ அண்டர்ஸ்டேண்ட் டா. ஐ நோ இட் இஸ் ஸ்கேம். பட் ஹவ் லாங் கேன் ஐ ஸ்டே ஐடில் ஆட் ஹோம்?” என்று கத்தினான். போட்டித் தேர்வுகள், நேர்காணல்கள் என்று வெற்றிகளற்ற ஆறுமாதங்கள் கடந்திருந்தன. வீட்டினருகே அப்பாவின் பரிந்துரையில் ஒரு சிறிய வேலை கிடைத்திருந்தபோதிலும், ஒவ்வொரு முறையும் வேலையைப் பற்றிய பேச்செழுந்தபோதெல்லாம் விருந்தினரின் முன்பும், உறவினரின் முன்பும் தன் பெற்றோர் சற்றே அடங்குவது உறுத்திக்கொண்டேயிருந்தது.
“டேய் இருக்கியா? பதில் சொல்லுடா. மச்சான், ப்ளீஸ் உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்குறேன். டோண்ட் அப்ளைடா” என்று நண்பன் மறுமுனையில் கதறிய தருவாயில், இணைப்பைத் துண்டித்தான்.
“சட்னி அரைக்கவா?” எனும் அம்மாவின் குரலும், “உனக்கும் அப்பா செய்யுற சப்பாத்தி தானே பிடிக்கும்?” என்ற அப்பாவின் வாஞ்சையும் மனதைப் பிசைந்தன. இதுவரை ஒருமுறையேனும் இவனுக்கு வேலை இல்லாதது தொடர்பாக முகம் சுளித்ததில்லை; ஒரு வார்த்தை கடிந்து பேசியதில்லை. புன்னகை மாறாமல் தொடர்ந்து கவனித்து வந்தனர்.
வீட்டில் தான் தனியாயிருப்பதை மறந்து, “நான் ஒண்ணும் உங்க தயவுல இல்ல, புரிஞ்சுச்சா? என்னைக் கொழந்த மாதிரி நடத்தாதீங்க” என்று கர்ஜித்தான். அறையின் அமைப்பு காரணமாக எதிர்க்குரல் ரீங்கரித்தது. அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருந்த இணைப்பைச் சொடுக்கத் தயாராகச் ‘சுட்டி’யை நகர்த்தினான். “வேணாம் மச்சான்”, “அம்மா உன் கூடவேதான் இருக்கேன்”, “தம்பி, நீ ஒண்ணும் கவலைப்படாத. அப்பா நான் இருக்கேன்” என்ற குரல்கள் இடக்காதின் வழியே மூளையின் பின்புறம் சென்று வலக்காது வழியே வெளிப்பட்டது.
இறுகக் கண் மூடினான். தெம்பும் உற்சாகமும் தரும் வார்த்தைகளும், அதலபாதாளத்தில் தள்ளும் வசவுகளும் மாறிமாறி உட்புகுந்து வெளியே சென்றன. கடிகார முட்களின் ஓசை இதயத்துடிப்பைவிடப் பலமடங்கு குறைவானதாகத் தெரிந்தது.
ஒரு முடிவுக்கு வந்தவனாகக் கண் திறந்தான்.
**********
(ஓவியம் - ஆக்கம் & வடிவமைப்பு: கோமதி வர்ஷினி)
(ஓவியம் - ஆக்கம் & வடிவமைப்பு: கோமதி வர்ஷினி)