Wednesday, June 15, 2016

இசை

ஆரோகண அவரோகணமாய்
ஓடி வந்து கால் நனைத்து
உள்வாங்கும் கடலலைகள்
சரளி வரிசையும் சரளமாய் அறியாத
சாதாரணனின் பாதத்தையும்
சன்னமாய்த் தீண்டும்

தள்ளுவண்டியில் சுண்டல்காரர்
கரண்டியைச் சட்டியின் ஓரங்களில்
அடித்து எழுப்பும் ஓசை
தாளம் தப்பாத தனியாவர்த்தனமாய்ச்
செவிகளை நிரப்பும்

ஆர்ப்பரிக்கும் அலைகளின்
ஆனந்த தாண்டவம்
அரங்கேற்றமாய் உருவெடுக்கும்

புல்லாங்குழல் விற்கும் வடகிழக்கு ஆசாமி
இந்தியையும் தமிழையும் இணைத்து
எழுப்பும் மெட்டு
பத்து ரூபாய்க்கும் பசிக்குமான போராட்டமென்று
அவரது
கண்கள் பிரதிபலிக்கும்

இவையனைத்தும் கேட்காமல்
கருவிகளைக் காதில் பொருத்தி
செவிப்பறை கிழிக்கும் செவ்வியல் இசை
கேட்டுச் செல்கிறான்
இசையின் மகத்துவம் அறிந்தவனாய்க்
காட்டிக்கொள்வதற்கு!