“நார்த் சென்னை மச்சான்.”
“அட ஆமா மாப்ள, அந்த
வியாசர்பாடி எல்லாம் இருக்கும்ல்ல, அந்த ஏரியா!”
காசிமேடும், வியாசர்பாடியும் இடம்பெறும் வடசென்னை குறித்தான உரையாடல்களைக் கேட்டே வளர்ந்தவர் நாம். பொதுமைப்படுத்தும்
கலை நமக்கு
இயல்பிலேயே வாய்த்த ஒன்று; பிறப்பிலேயே
ஊட்டி வளர்க்கப்படும் ஒன்று. தென்னிந்தியர்களை ‘சாலா மதராஸி’ என்றும், வட இந்தியர்களை ‘சர்தார்’ என்றும், ‘வடக்கூஸ்’ என்றும், தெலுங்கு மக்களை ‘கொல்ட்டீஸ்’ என்றும் அழைப்பது இயல்பாகக் குருதியில் ஊறிய செயலாகிவிட்டது எனும்
முன்னறிவிப்புடனேயே இந்த வடசென்னை-வியாசர்பாடி
பொதுமையை அணுக வேண்டியுள்ளது.
ஒரு
காலத்தில் ஆவடியும், அம்பத்தூரும், கொளத்தூரும், பெரம்பூரும் வடசென்னைப் பகுதிகள் என்றும், அவை
தவிர்த்து வேறு பகுதிகள் வடசென்னையில் கிடையாது என்றும் திடமாக நம்பியவன் நான். எனக்கு
வாய்த்த இடங்கள் – கல்லூரி
கிண்டிக்கும், அடையாருக்கும் இடையிலும், அதற்குப்
பின்னர் தங்கியிருந்த வீடு திருவான்மியூரிலும் விதியா,
சதியா, இயல்பா எனத் தெரியவில்லை – அனைத்தும்
கோயம்பேடுக்குச் செல்லவே பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டிய இடங்களாதலால், எனது சிற்றறிவிற்கெட்டிய வடசென்னை குறித்தான புரிதல் மிகவும் குறுகிய கண்ணோட்டங்கள்
கொண்டது.
பா. ரஞ்சித் திரைப்படங்களும், ‘கருத்தவன்லாம் கலீஜாம்’ போன்ற பாடல்களும் திரையில் தெளிவான பார்வையைத் தந்தாலும், சுயமாக
வடசென்னைக்குச் சென்று அங்குள்ள இடங்களைச் சுற்றிப்பார்த்ததேயில்லை. புதிய வேலையின்பொருட்டு புதிய வண்ணாரப்பேட்டையிலுள்ள பள்ளி ஒன்றிற்கு வரவேண்டும் என்ற கட்டாயம் வந்தபோதுதான் வடசென்னையின் முகமறிந்தேன்.
முதல்
பார்வையிலேயே ‘டவுன்’, ‘கிராமம்’ போன்ற சொற்களுக்குக்
கட்டியம் கூறியது வடசென்னை. கோடம்பாக்கத்தில்
ரயிலேறி, கடற்கரைப் புகைவண்டி நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து
ஒரு பேருந்தோ, ஷேர்
ஆட்டோவோ ஏறி வண்ணாடப்பேட்டைக்குச் செல்லும் படலம் பள்ளிக்கருகில் வீடு கிடைக்கும் வரையில் நடந்து வந்தது. கோடம்பாக்கம்-நுங்கம்பாக்கம்-சேத்துப்பட்டு-எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு வெளியே தெரிந்த காட்சிகள், பூங்கா-கோட்டை-கடற்கரை
ஆகிய ரயில் நிலையங்களில் மாறியதைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. ஏனைய
சென்னையிலிருந்து வடசென்னை விடுபட்டுப் பின்தங்கிப் போனதற்கான கட்டியங்களாக மாசுபட்ட கடற்கரையும், குட்டைகளும், குடிசைகளும் கடந்து சென்றன. வெளுத்த
மானிடர்கள் வசிக்கும் தென்சென்னை, மத்திய சென்னைப் பகுதிகளைக் கடந்து வரும் ஒவ்வொருவருக்கும் உழைப்பின் வலிமையை எடுத்துரைக்கும் திராவிட நிறம் மிகுந்த பகுதி வடசென்னை.
வந்த
முதல்நாளிலேயே ரத்தத்தை உறையச் செய்தது வடசென்னை. “எங்க
ஏரியா உள்ள வராத” என்று
என்னை நோக்கி வண்ணாரப்பேட்டையும், தண்டையார்பேட்டையும் கத்துவது போலவே இருந்தது. கடற்கரையில்
இறங்கி, ராயபுரம்
தாண்டி, காசிமேடு
பகுதிக்கு வரும் வழியில் பார்த்த காட்சி அது. ஒருவர்
பிரதான சாலையில் நடந்துசென்றுகொண்டிருக்கிறார். திடீரென்று கீழே விழுகிறார். துடிக்கிறார். ரத்தம் பெருக்கெடுக்கிறது. அருகிலிருந்து மூன்று, நான்கு
நபர்கள் வெளிப்படுகின்றனர். ஒருவரின் கையில் கத்தி இருக்கிறது. ரத்தம் தோய்ந்த மினுமினுக்கும் கத்தி. நால்வரும்
நிதானமாக நடந்து சென்றனர். சாலையின்
ஒரு மருங்கில் மக்கள் கூட்டம் ஸ்தம்பித்து நின்றது. அவர்கள்
அக்காட்சியை விட்டகன்றவுடன், ஒரு சிலர் குத்தப்பட்டவரைத் தூக்கி ஆட்டோவில் ஏற்றினர். மருத்துவமனைக்கு
போவார்கள் போலும். யாராயிருப்பினும்
பிழைக்கட்டும் என்ற எண்ணத்துடன் பள்ளிக்குச் சென்றேன்.
அன்று
முழுவதும் மனத்தைப் பிசைந்துகொண்டிருந்த நிகழ்வானது, மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது குறைந்தது. தெருமுனையில்
பானிபூரி விற்கும் அக்காதான் காரணம். புற்றுநோய்க்
காரணியாயிருப்பினும் கவர்ந்திழுக்கும் பானிபூரியை ஆசைதீர அதக்கியபோது, “ஏரியாவுக்குப் புதுசா சார்?” என்று
தொடங்கினார். கேட்கும் தொனியிலேயே கரிசனம் வழிந்தோடியது. கடந்து சென்ற வண்டிகளும், ஆட்டோக்களும் எழுப்பிய புகை கண்ணை மறைத்து, உண்மையிலேயே
வழிந்த கண்ணீருக்குப் புதிய அர்த்தங்களை உருவாக்கியது. அவரிடம் நடந்ததை விவரித்தபோது, பரிதாபப்படத்தான் செய்தார். எனினும்
அக்கரிசனத்தையும் மீறி, “போகப்
போக பழகிடும்” என்பதான
அவரது
பார்வை ஒரு தெளிவைத் தந்தது.
*****
சற்றே
இளைப்பாறிய பின்னர் இரவுணவிற்காக ‘விக்கி மெஸ்’ஸிற்குச்
சென்றேன். அன்று
காலையில் திறந்திருந்த ‘அக்ஷய்
சாய் டிபன் சென்டர்’ மூடியிருந்ததால்
மட்டுமே அருகிலிருந்த ‘விக்கி’க்குச்
சென்றேன். அங்கு
உண்ணப்போகும் தோசைகளும், இட்லிகளும்
அமிர்தமென அப்போது நான் உணர்ந்திருக்கவில்லை. நான்கு ஸ்டூல்களும், சாம்பார், சட்னி
வாளிகளை வைப்பதற்குத் தோதாக ஒரு மேசையும், சிறிய
நான்குக்கு நான்கு அளவில் ஒரு தோசைக்கல் வைத்துச் சுடுவதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்புதான் விக்கி மெஸ். கையில்
கட்டியிருந்த கைக்கடிகாரத்தையும், அணிந்திருந்த ஆடையையும் பார்த்த மாத்திரத்திலேயே அந்த அக்காவும் கணித்துவிட்டார். “என்னப்பா பேச்சிலரா?” என்று
தொடங்கி, “எங்க
தங்கியிருக்கீங்க?”வில் தொடர்ந்து, “ஜாதகம்
என்ன, ராசி, நட்சத்திரம் என்ன?” எனும்
ரீதியில் உரையாடல் சென்றது. மாநகராட்சிப்
பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறேன் என்பதை அறிந்தவுடன், உபசரிப்பு இன்னும் கூடியது. ‘மெத்’தென பரிமாறப்பட்ட கல்தோசை, முறுகலான, எண்ணெய்
தூக்கலான தோசையாக உருமாறியது. பேச்சினூடே “கவிச்சி சாப்புட மாட்டீங்களா?” என்று என் தினசரிப் பத்தியத்தையும் கூட ஓரளவிற்கு யூகித்து விட்டார் அக்கா. கடலைச்
சட்னியும், காரச்
சட்னியும் அறுசுவை நரம்புகளையும் சுண்டியிழுக்கச் சிலபல தோசைகளைக் கணக்கு, வழக்கின்றி
கபளீகரம் செய்தேன்.
மறுநாளிலிருந்து ‘விக்கி மெஸ்’ எனது
ஆஸ்தான நாஷ்டா கடையாக மாறியது. தினமலர்
நாளேட்டில், “விக்கியில் தின்னும் பக்கி; அக்ஷய் சாய்க்குக் கல்தா” என்ற
தலைப்புச் செய்தி மட்டும்தான் வரவில்லை. மற்றபடி, நான் கடைமாறிச் சாப்பிட ஆரம்பித்தது ஒரு வம்புச்செய்தியாக மாறியது. கிட்டத்தட்ட
இராஜாஜியின் ‘சபேசன் காபி’ கதையைப்
போல, “மாவுல
சீயக்காயைக் கலந்துடுறாங்களாமே! அதுனாலதான் நெறைய பேரு இப்பொல்லாம் அங்க சாப்பிடுறதில்ல” என்ற கிளைக்கதை வலம் வரத்தொடங்கியபோது, “நீதாண்டா
இதுக்கெல்லாம் காரணம்” என்று கடை உரிமையாளர் என்னை நொங்கெடுத்துவிடுவாரோ என நான் சற்றே பீதியடைந்தேன் என்பதுதான் உண்மை.
இரவுச்
சாப்பாட்டிற்கு நாவில் நீரூற, மனக்கண்ணில்
கடலைச் சட்னியையும், முறுகல் தோசையையும் கற்பனை செய்துகொண்டே சென்றபோது காத்திருந்தது இன்ப அதிர்ச்சி. ஒரு
ஞெகிழிப் பையில் வேர்க்கடலைகளை நிரப்பித் தந்தார் அக்கா. “கவிச்சி
வேற சாப்புட மாட்டீங்கோ. எளைச்சிப் போயிருக்கிங்களே. இத ஊட்டுக்கு எத்துக்கினு போய்ச் சாப்புடுங்கோ. நம்ம புள்ளைங்களுக்குப் பாடம் எடுக்குறீங்கோ. நல்லாச் சாப்புட்டுட்டுத் தெம்பாப் போங்க சார்” என்றபோது, நெடுஞ்சாண்கிடையாகக்
காலில் விழுந்து வணங்கிவிடலாம் என்றே தோன்றியது.
*****
வீட்டிற்கும்,
பள்ளிக்குமிடைப்பட்ட பகுதி ஊரறிந்த, நாடறிந்த, உலகறிந்த, அண்டசராசரமே அறிந்த ஆர்.கே.நகர்
தொகுதிக்குட்பட்டது என்பது கூடுதல் கொசுறு. தேர்தல் காலங்களில் வீட்டுக்கு வீடு இருபதாயிரம்
ரூபாய் வரை பட்டுவாடா செய்யப்படும் பசையான பகுதி. ஒரு கையால் கொடுத்த பணத்தையும், இன்ன
பிற இதர ‘வெகுமதி’களையும் மறுகையால் ‘டாஸ்மாக்’கின் மூலம் பிடுங்கிவிடுவது அரசியல்வாதிகளின்
வழக்கம் என்பது வாய்வார்த்தையாகச் சொல்லப்படும் உலுலுளாய் அல்ல என்பது இங்கு வாழும்
மக்களைப் பார்த்தால் தெரிகிறது. அங்கப்பிரதட்சணம் செய்யும் கோவில் பக்தர்களைப் போல்
இரவானால் செவ்வாய்க் கிரகத்திற்குச் செல்வதான அரைபோதையில் நட்டநடுசாலையில் வேகத்தடை
மேடுகளாக மனிதர்கள் படுத்துவிடுகின்றனர். வேகத்தடை அமைக்கும் நலத்திட்டத்திற்கான
நிதியையும் இதைக் காரணமாகச் சொல்லி அரசியல்வியாதிகள் கொள்ளையடித்துவிடுவதற்கான பிரகாசமான
வாய்ப்புகளை இம்மனித வேகத்தடைகள் ஏற்படுத்திவிடுகின்றன. இரவு பத்து மணிக்கு மேல் சாலைகளில்
நடப்போர் அனைவரும் ஓரிரு முறையாவது தடுக்கித் தட்டுத்தடுமாறி, நிலைகுலையும் காட்சியைப்
பார்க்க நேர்வதற்கான காரணிகள் நம் குடிமகன்களே.
*****