Monday, December 25, 2017

கடலோடி

காகமும் கரையாக் காலைப் பொழுதில்
அரைத்தூக்கமும், அரை நிர்வாணமுமாய்
கண் திறக்கிறான் கடமையாளன்
கதிரவன்

நேற்றே
கட்டுமரத்தின் கட்டவிழ்த்துக்
கடலுக்குச் சென்ற தந்தைக்குக்
கையசைத்துக் கண்கலங்கி
விடைகொடுத்த நினைவுடன் துயிலெழுகிறான்
தாயில்லாப் பிள்ளை

குளியலறைக் கதவருகே ஊர்கிறது
விஷப் பூரான்
இவனைப் பார்த்த பயமோ?
தண்ணீர் கண்டு ஆனந்தமோ?
ஊர்ந்து
தண்ணீர் வடியும் குழியருகே
தஞ்சமடைகிறது

பூரானுக்கு இவனைக் கண்டால் பயம்
இவனுக்கோ அதைப் பார்த்த நொடியில் இனம்புரியாக் கோபம்
குவளைத் தண்ணீரை வாரி இறைக்க
சற்றே திணறி
குழியில் விழாது
பிழைத்தெழ முயல
மேலும் மேலும் தண்ணீர்
தன்மேல் விழ
சுவாசக் குழாய் அடைத்து
உடல் இறுகி
இனி பிழைக்க முடியாது என்றெண்ணி
உயிர் விடுகிறது பூரான்

அங்கே
எல்லையற்ற கடலுக்குத் தன்னை
ஒப்படைத்த கடலோடியைக்
கடல்தாண்டி எல்லை மீறியதாகச்
சுற்றி வளைத்துப் பிடிக்கிறது
மிருகக் கூட்டம்

கடலோடித் தந்தைக்கு உயிர்ப்பயம்
மிருகக் கூட்டத்திற்கு இரை கிடைத்த உன்மத்தம்
துப்பாக்கி தனக்கு இடப்பட்ட கட்டளையைப்
பிழையின்றி பிசகின்றி
சரிவரச் செய்கிறது

முதல் குண்டு கையைப் பிளக்கிறது
பீறிட்ட ரத்தமும், அழுகையும், ஓலமுமாய்
மரணம் நெருங்குகிறது
தலை சுற்றி மயங்கும் நொடி
தான் பெற்ற பச்சிளம் பாலகனின்
குழிக் கன்னமும், குழவிப் பேச்சும்
ரீங்கரிக்கிறது

இரண்டாம் குண்டு
பிள்ளையின் நினைவு தந்த மூளையின்
நரம்பு மண்டலத்தில் தஞ்சமடைகிறது

உடலின் உறுதி குறைய
நொடிப்பொழுது கரைய
நிலைகுலைந்து நிதானம் சிதற
உணவிட்ட கடலன்னைக்குத்
தன்னையே உணவாக்குகிறான்

பரந்த நீலக்கடல்
சிவந்த ரத்தத்தால் சற்றே மாசானது
நவதுவாரத்திலும் தண்ணீர் அடைக்க
மேலெழ முயன்று
தோற்று
கடலடி சேர்கிறான் கடலோடி

சற்றே சலசலத்துப் பின்
சாந்தமாகிறது

கடலெனும் முடிவிலி