”நான் யாரு என்னன்றதெல்லாம் இப்ப
முக்கியம் இல்ல. நான் பாட்டுக்கு இந்தப் போலிஸ் ஸ்டேஷன் பக்கத்துல சின்னதா ஒரு
வீடு கட்டியிருந்தேன். நான்னா நான் மட்டும் இல்ல. எங்க ஆளுங்க எல்லாமே இந்தச்
சுத்துவட்டாரத்துலதான் வாழ்ந்துட்டிருக்கோம். ஒரு நோட்டீஸ் கூடக் குடுக்கல,
படுபாவிப் பசங்க; அவனுங்க பாட்டுக்கு வந்து இடிச்சுத் தள்ளிட்டுப் போயிட்டானுங்க.
பெரிய புல்டோசரெல்லாம் தேவப்படல, சார். கை, கால் வெச்சு எத்துனா செதறிப் போற
சாதாரண வீடு எங்களோடது. ஏதோ கட்டடத்த விரிவுபடுத்தப் போறாங்களாம்.
எங்க
பாட்டன், முப்பாட்டன் எல்லாரும் வாழ்ந்த எடம் சார் இது. நாங்க பாட்டுக்குக்
கெடச்சதச் சாப்புட்டு, நிம்மதியா இருந்தோம். நிம்மதியான்னா, சோம்பேறியா இல்ல; இங்க
இருக்குற ஒவ்வொருத்தரும் அவ்ளோ சுறுசுறுப்பானவங்க சார். ஏதாச்சும் வேல
செஞ்சுக்கிட்டேதான் இருப்பாங்க. பத்து வயசுலயே கண்ணாடி போட்ற பசங்களப் பாக்கவே
முடியாது; கைத்தடி ஊனிக்கிட்டுத் தள்ளாடற பெரியவங்களும் இங்க இல்ல. சாகுறவரையில
தெம்பா இருந்துட்டுச் சாவுற நல்லவங்க சார் நாங்க. ஏதோ மலைவாழ் கிராமங்கள்ல எல்லாம்
கூட இப்படித்தான் நடக்குதாமே. நமக்கு எங்க சார் இதெல்லாம் தெரியும்? அப்பப்ப டீக்கடையில
பெருசுங்க பேசிக்குங்க. திக்குத்தெரியாத எங்கள மாதிரி அப்பாவிங்கள கட்டடம்
கட்டணும், தொழிற்சாலை கட்டணும், அணு உலை கட்டணும்னு இப்டியே சொந்த எடத்த வுட்டுப்
போக சொன்னா எங்க சார் போவறது?
நேரடியாச்
சொல்லியும் கேக்கலன்னா என்னா பண்ணுவாங்கனு எனக்கு ஒரு தெனாவட்டு இருந்துச்சு சார்.
அதுக்கும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் இருக்கு. அதான் இப்ப விவசாயிங்களுக்கெல்லாம்
ஏதோ நெலத்தோட மதிப்பவிட அதிகமா காசு தந்து, ஆசை காட்டியே புடுங்கிடுறாங்களாமே;
அந்த எடத்த கார் தயாரிக்குறதுக்கு, மின்சாரம் உற்பத்தி பண்றதுக்குனு மாத்திடுறாங்களாம்.
ஏன் சார், நான் தெரியாமதான் கேக்குறேன்; திங்கிற சோத்துக்கு வழியில்லன்னா
எதக்கொண்டு வயித்த நெரப்புறது? காரையும், செல்ஃபோனையும் அரைச்சு மாவாத்
தின்றதுக்கு ஏதாச்சும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கணும் சார். பின்ன என்ன? நாட்டுல
இது ரெண்டும்தான் பெருகிக் கெடக்கு.
இந்த
போலீஸ் ஸ்டேஷன்ல வேல செய்யுற போலீஸ்காரங்களவிட இங்க நிக்குற காருங்களோட
எண்ணிக்கதான் அதிகமா இருக்கு. இதுகூடப் பரவாயில்லங்க; ஒருத்தன் ஒருத்தன் கையிலயும்
கொறஞ்சபட்சம் ரெண்டு ஃபோனாச்சும் இருக்கு.
என்னது,
கம்பிளெயிண்ட் குடுக்கறதா? அங்கதானே சிக்கலே; இங்க இருக்குற எந்த வீட்டுக்கும்
பட்டா, சிட்டா, ரேஷன் கார்டு எதுவும் கெடையாது. இது என்ன மாடமாளிகை, கூடகோபுரமா
சார், பதிவெல்லாம் பண்ணி வைக்க? பரம்பரை, பரம்பரையா இருக்குற இடம்; எங்க மண்ணுக்கு
உரிமை கொண்டாடுறதுக்கு எதுக்கு சார் பத்திரம் எல்லாம்? இது எங்க எடம் மட்டும்
இல்ல; எங்க சந்தோஷ துக்கங்களைப் பகிர்ந்துக்கிட்ட தெய்வீக்க்கோயில் சார். அதிகாரம்
இருக்குங்கறதுக்காக ஏன் சார் எளியவங்களச் சித்திரவதை பண்றாங்க?
நீங்களே
யோசிச்சுப் பாருங்க. நீங்க வேலபாக்குற எடத்துல உங்கள இடமாற்றல் பண்றதாச்
சொன்னாக்கூட கொஞ்சம் அவகாசம் கேக்குறீங்கல்ல? பையனுக்கு நல்ல ஸ்கூல் பாக்கணும்,
பாட்டிக்குக் கோயில் பக்கத்துலயே இருக்கணும்னு இவ்ளோ யோசிச்சுச் சரியா வராதுன்னு
தோணுச்சுன்னா வேணாம்னு சொல்றீங்கல்ல? முடியாதவங்கள மட்டும் ஏன் சார் தொரத்துறாங்க?
அவங்கள எதிர்க்க முடியாதுன்ற திமிரா?
என்ன
சார் கேட்டுட்டே இருக்கேன், பதில் சொல்ல மாட்டேன்றீங்க? என்னது... தேங்க் யூவா?
இங்க நான் பொலம்பிட்டிருக்கேன்... எனக்கு எதுக்கு சார் இதெல்லாம் சொல்லிக்கிட்டு?
ஹ்ம்ம்ம்... என்னதிது? ஆங்... ஃபோனு. அடப்பாவி, அப்போ கம்பிளெயிண்ட் குடுன்னு
சொன்னது, இவ்ளோ நேரம் பேசிக்கிட்டு இருந்தது எல்லாமே அந்தப் பாழாப்போன ஃபோன்லதானா?
அதுசரி.. என் பேச்சக் கேக்க யாரு இருக்கா இந்த உலகத்துல” என்று
புலம்பியபடியே ஊர்ந்து சென்றது எறும்பு.