Saturday, January 14, 2017

தங்கல் விமர்சனம்

(’காப்பீட்டு ஊழியர்’ எனும் இதழிற்காக எழுதியது; வெட்டித் தொகுக்கப்பட்டு, வெளியான விமர்சனம் இறுதியில் காண்பிக்கப் பட்டுள்ளது.)

திரையரங்கில் திரைப்படத்திற்கு முன்பாக இசைக்கப்படும் தேசியகீதம் ஒலித்தது; சுணங்கி, முனகி, எழுந்து நின்று அனைவரும்தேசிய ஒருமைப்பாட்டைவெளிப்படுத்தியாயிற்று. இதை இங்கு சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. ‘தங்கல்திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் இந்தியாவிற்காக மல்யுத்தத்தில் தங்கப்பதக்கம் வெல்கிறார் கீதாகுமாரி ஃபோகாத். காமன்வெல்த் பதக்க மேடையில் இந்திய தேசியகீதம் ஒலிக்கிறது. ‘எழுந்துநில்’, ‘அமைதியாய் இருஎன்று யாரும் அறிவிக்கவில்லை; ஆனால், மொத்தத் திரையரங்கும் அமைதியாகச் சலனமின்றி நிற்கிறது. இவ்வெளிப்பாடே தேசிய உணர்வு, அதுவே தங்கலின் வெற்றியும்கூட.

மேரிகோம்’, ‘இறுதிச்சுற்று’, ‘சுல்தான்என்று குத்துச்சண்டையும், மல்யுத்தமும் இந்தியத் திரையுலகிற்குப் புதிதல்ல. எனினும் இவையனைத்தையும் தாண்டி, ‘தங்கல்ஒருபடி மேலே நிற்கிறது என்றால், அதற்கு முக்கியமான காரணம் இத்திரைப்படத்தில் மிகக்குறைந்த அளவில் வெளிப்பட்டிருக்கும் சினிமாத்தனமேயாகும்.

வெறும் வசனங்களால் மட்டுமே படத்தை நிரப்பாமல், நிசப்தத்திற்கும், இசைக்கும், மௌனத்திற்கும், உணர்வுகளுக்கும் தகுந்த இடத்தையும், மதிப்பையும் அளித்து, இக்கதையைத் திரைக்கதை ஆக்கிய இயக்குநர் நிதேஷ் திவாரி பாராட்டுக்குரியவர். உண்மைக்கதையையோ, அச்சம்பவங்களை மையமாகவோ வைத்துத் திரைப்படத்தை எடுக்க நினைக்கும்போது, தொடக்கத்தில் பிரகாசமாகத் தோன்றினாலும், முழுநீளத் திரைக்கதையாக எழுதும்போதுதான் அதிலுள்ள சிக்கல்கள் பிடிபடத் தொடங்கும். ஆனால், தொய்வின்றி இரண்டரை மணிநேரப் படமாகக் கொடுத்த விதத்தில் மிளிர்கிறார் இயக்குநர்.

சில காட்சியமைப்புகளைக் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். தன் மல்யுத்தக் கனவுகளை நிறைவேற்ற ஆண்வாரிசு வேண்டும் என்ற நினைப்பில் இருக்கும் மஹாவீர்சிங் ஃபோகாத் (ஆமீர்கான்) நான்கு பெண் குழந்தைகள் பிறந்தவுடன், விரக்தியில் தன் பதக்கங்கள் அனைத்தையும் ஒரு பெட்டியில் போட்டு மூடுகிறார்; கனவுகள் மூடப்படும் அத்தருணத்தின் படிமம் அருமையாகக் கையாளப்பட்டிருக்கிறது.

அதேபோல், தந்தையிடம் பயிற்சிபெற்ற கீதாகுமாரி, ‘தேசிய விளையாட்டு முகாமில்பயிற்சிபெறும்போது, பயிற்சி முறைகள் மாறுகின்றன. ஒருமுறை ஊருக்கு வரும்போது தந்தைக்கும், மகளுக்கும் அது தொடர்பாக ஒரு மல்யுத்தப்போட்டி நடைபெறுகிறது. திரையில் இரு பயிற்சிமுறைகளுக்கு இடையிலான போட்டியாகத் தோன்றும் அக்காட்சி, முதுமையை இளமை வெல்வது தவிர்க்க இயலாத நியதி எனும் செய்தியைச் சொல்கிறது; தாய்மகள் உணர்வுப்போராட்டங்களும் சொல்லப்படுகின்றன. அவ்விடத்தில் கையறுநிலையில், உடலில் தெம்புமின்றி, தான் தோற்றுக்கொண்டிருப்பதை நொடிநொடியாய் வெளிப்படுத்தும் ஆமீர்கானின் நடிப்பு, படத்தின் மிகப்பெரிய வரப்பிரசாதம்.

பின்பு, புதிய பயிற்சி முறைகளால் உலகளவுப்போட்டிகளில் தொடர்தோல்விகளைச் சந்திக்கும் கீதா, பட்டியாலாவிலிருந்து தந்தைக்குத் தொலைபேசும் காட்சி உருக்கத்தின் உச்சம். தொலைபேசியின் இரு முனைகளிலும் தந்தையும், மகளும் விசும்புகின்றனர்; ஒருவர் சொல்ல வரும் விஷயம் என்னவென்று மற்றவருக்கு நன்றாகத் தெரியும். இவையனைத்தும் கண்ணீரினூடே புரியவைக்கப்படுகிறது. ஒரு சோகத்தருணத்தின்போது மனிதமனம் அழத்தான் செய்யுமே தவிர, புலம்பாது. அதை அருமையாகப் படமாக்கியிருக்கும் விதத்தில் பேசுகிறது படக்குழுவின் தெளிவு.

ஒரு இரக்கமற்ற பயிற்சியாளராக, பாசமிகு தந்தையாக, கொள்கைப்பிடிப்பு கொண்ட விளையாட்டு உணர்வுள்ளவராக என அனைத்து அவதாரங்களிலும் ஆமீர்கான் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கீதா மற்றும் பபிதாவின் குழந்தைப்பருவ பாத்திரங்களாக நடித்த இரு சிறுமிகளும்நடிப்புஎன்று சொல்ல முடியாத அளவிற்கு அசத்துகின்றனர்; ‘காக்காமுட்டையில் வரும் இரு சிறுவர்களின் இயல்பான நடிப்பை இத்துடன் ஒப்பிட முடியும்.

இரு பெண்களின் வாழ்க்கைதான் மையக்கரு என்றாலும், இரண்டாம் பாதியில் கீதாவின் முன்னேற்றமே திரையில் காண்பிக்கப்படுகின்றன. அதனால், வளர்ந்த பபிதாவாக வரும் பாத்திரத்திற்குப் பெரியளவில் படத்தில் நடிக்க இடமில்லை; எனினும், பாசமிகு தங்கையாகத் தன் சகோதரியின் வெற்றிக்குப் பின் இருக்கிறார். அவரது பாத்திரத்திற்கும் கடைசிவரை சமமான முக்கியத்துவம் தந்திருக்கலாம் என்று எண்ண வைக்கிறது. படத்தொகுப்பாளரின் மேதைமை இக்காட்சிகளில் வெளிப்படுகிறது; கச்சிதமாக, சுமார் 155 நிமிடங்களில் தரமான படைப்பைத் தருவதில் இவரது பங்கு அலாதியானது.

ப்ரீதமின் இசையில் பாடல்கள் அனைத்தும் உணர்வுகளைப்பார்வையாளர்களிடம் எளிதாகக்கடத்துகிறன. ‘யுத்தம் யுத்தம்’(‘தங்கல் தங்கல்’) பாடல் தனித்துத் தெரிகிறது. பின்னணி இசை, தனியாக ஒரு கதாபாத்திரம்போல் இழைகிறது. பஞ்சாபி நாட்டுப்புற இசையும், தேசிய உணர்வைத் தூண்டும் ரசமுமாகப் படத்தின் பக்கபலமாய் நிற்பது இசை. போட்டியின் முக்கியமான நொடிகளின்போது பிற ஒலிகள் எதுவும் இன்றி, வீராங்கனைகளின் மூச்சுச்சத்தம் மட்டுமேகேட்கும் அளவிற்குச் செதுக்கியிருக்கிறார் ப்ரீதம். சப்த(ஸ்வர)த்திற்கும், நிசப்தத்திற்குமான மெல்லிய இடைவெளியை லாவகமாகக் கடந்துசெல்கிறார்.

வசனங்கள் கூர்வாளைப்போல் அளவாக ஆனால் அருமையாக இருக்கின்றன. “நாளைக்கு நீ கனவுகளைத் தொலைத்த அனைத்துப் பெண்களுக்கான அடையாளமாய் விளையாட வேண்டும்”, “கீதாபபிதா ரெண்டு பேரும் என் செல்லங்கள்தான், ஆனால் என் கனவை அவங்களால நிறைவேத்த முடியாதுபோன்ற வசனங்கள் சிலிர்க்க வைக்கின்றன.

மஹாவீரின் தம்பி மகனான ஓம்கரின் பார்வையில் படத்தை நகர்த்தியிருப்பது புதுமையான கண்ணோட்டம். தேசியப்பயிற்சியாளராக வரும் ஒருவர் கடைசிவரை பயிற்சியளிப்பதை வாய்ப்பாடமாகவே நடத்துவதும், அவர் சொல்வது அனைத்துமே தவறு என்பதுபோலும் இருக்கும் சில காட்சிகள் சினிமாத்தனமானவையாகஎம். குமரன்திரைப்படத்தை நினைவுபடுத்துகின்றன. இறுதிப்போட்டியின் உண்மையான நிகழ்வுகள் மாற்றப்பட்டிருக்கின்றன என்ற ஒரு குற்றச்சாட்டு படம் வெளியானதிலிருந்தே தொடர்ந்துவருகிறது. எனினும் இத்தகைய சிறிய குறைகளை மறந்து, பெண் முன்னேற்றத்தைப் பாசாங்கில்லாமல், பிரச்சாரமில்லாமல் சொன்ன இப்படத்தைப் பார்த்து ரசிக்கலாம்.

ஆண், பெண் வேறுபாடின்றிநம் சமூகம் பெண்களை எந்த இடத்தில் வைக்கிறது?’ எனும் அகக்கேள்வியை அனைவரது மனத்திலும் எழுப்பும் வகையில் தங்கல் ஒரு வெற்றிப்படைப்பு என்றே அறுதியிட்டுச் சொல்லலாம்.