1
பாலும் பழமும்
காலையுணவென்றேன்
விசித்திரமாய்ப் பார்த்தனர்
ட்ரை ஃப்ரூட்ஸ்
வித் டைல்யூட்டட் யோகர்ட்
என்றேன்
பெருமிதத்தில் பூரித்தனர்
2
மொழியும் செரிமானமும்
ஒன்று
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு
விதம்
திணிப்பு – உவமையாய்
உண்மையாய் நடக்கிறது
உணவுப் பத்தியத்தில்!
மறுத்தால்
அப்பாவுக்கு வருத்தம்
– முகம் வாடுகிறார்
அம்மாவுக்குப் பதற்றம்
– ஆசை காட்டுகிறார்
பையனுக்கு வியாதியா?
ரொம்ப மெலிஞ்சிட்டியேப்பா!
கொஞ்சம் இட்லி
சாப்பிடு
பக்கத்து வீட்டு
மாமியின் விருந்தோம்பல்
தோசை சட்னி
வடை சாம்பார்
சாதம் குழம்பு
சகிதம்
தொண்டைக்குழியில் தோட்டாவாய்
இறங்குகின்றன
உணவு வன்முறையின்
அப்பட்டம்
3
ஆசை ஆசையாய்
இலை நோக்கும் பந்தி
வீரர்
அங்குமிங்கும் அலையும்
பந்தி பரிமாறுபவர்
மாப்பிள்ளை பெண்
முகம் பார்க்காது
கண் துஞ்சாது
பசி மட்டும்
நோக்கி
நேராகப் பந்திக்கு
விரையும் சாப்பாட்டுப்
பிரியர்கள்
செல்ஃபியை ஸ்டார்ட்டராக
உருமாற்றும் இளைஞர்
குழாம்
திருமணப் பந்தியில்
அரங்கேறுகிறது ஒரு
கேயாஸ் தியரி
பட்டாம்பூச்சி விளைவாய்
சங்கிலித் தொடராய்
ஒரு இலையில்
தொடங்கிப் பரவுகிறது
பனீர் பட்டர்
மசாலா
கலத்திற்கு மேல்
கரம் பாலமாய் நிற்கிறது
வேண்டாம் என்கிறேன்
முறைக்கிறார் பெண்
வீட்டுக்காரர்
விலகுகிறது கை
கொட்டப்படுகிறது பனீர்
– பின்
பெரியப்பாவின் கிண்டலுக்கும்
மாமாவின் திட்டுக்கும்
அம்மாவின் அறிவுரைக்கும்
அப்பாவின் நினைவூட்டலுக்குமென
முறையே நிறைகின்றன
வெவ்வேறு பதார்த்தங்கள்
வீணாக்க மனதில்லை
வயிற்றுக்குள்ளும் அது
வீணாய்த்தான் போகும்
கையைப் பிசைந்து
இலையில் கோலமிடுகிறேன்
விளையாட்டு வினையாகிறது
பந்தி கலையும்போது
இலை எடுக்கும்
அக்காக்கள் நோக்குகின்றனர் பரிதாபமாய்
குறிப்பறிந்து எறிகிறேன்
வயிற்றுக்குள்
உணவுக் கவளம் எனும் குப்பையை