கல்லூரிக் காலங்களில் (ஒரு வருடம் முன்னர்தான்) தை, மாசி மாதங்களில் திடீரென்று ஒரு கூட்டம் கோட்டுசூட்டு போட்டுக்கொண்டு அங்குமிங்குமாய்த் திரிந்துகொண்டிருந்தபோது, “இவனுங்க யாருடா கோமாளிங்க!” என்ற ரீதியில் இருந்தது. “அடிக்கிற வெயிலுக்கு நீ ஸ்வெட்டர் போடும்போதே நெனைச்சேன்” என்ற ‘சிவா மனசுல சக்தி’ பட வசனம்தான் நினைவுக்கு வந்தது. தம்மைத்தாமே ‘ஆண்டர்ப்ரென்யூர்ஸ்’ என்று அழைத்துக்கொள்ளும் ஒரு கோஷ்டி (தமிழில் ‘கோஷ்டி’யை ‘கோட்டி’ என்று எழுதலாமா என்று தெரியவில்லை; கோட்டி எனும் சொல்லுக்குப் பைத்தியம் என்றொரு அர்த்தம் இருக்கிறது. இந்தக் கோட்டுசூட்டுக் கும்பலை அப்படி சொல்வதொன்றும் தப்பாகிவிடாது என்பது என் எண்ணம்) இரண்டு, மூன்று நாட்களுக்கு விழா ஒன்றை நடத்தியது. மாணவர்களுக்குள் இருக்கும் சுய தொழில் ஆளுமைகளை வெளிக்கொணர்வதற்கான ஒரு வாய்ப்பு என்றெல்லாம் பீலா விட்டு ‘தமிழகத்தின் மாபெரும் குரல் தேட’லுக்கு இணையான களேபரத்தைக் கூட்டிக் கொண்டிருந்தனர்.
“நல்ல விஷயம்தானே பங்கு!” என்று கேட்கும் முன்பாக “இன்னும் கொஞ்சம் டீப்பாப் பாப்போம்”. அக்குழுமத்தின் நிர்வாகக் குழுவில் இருந்த மாணவர்கள் அனைவரும் பத்துத் தலைமுறைக்குச் சொத்துச் சேர்த்துக் கொழுத்த குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். அவர்களொன்றும் தொழில் தொடங்குவதைப் போன்ற முடிவிலிருந்ததாகவும் தெரியவில்லை; அப்படியே தொடங்கினாலும் திவாலானால் காப்பாற்ற துபாயிலும், சவுதியிலும் எண்ணெய்க் கிணற்று முதலாளிகளுக்குக் காலணி துடைத்த பணத்தை வைத்து வாழ்க்கையை ஓட்டி விடலாம். ஆனால், அவர்களின் மாயையில் மயங்கி உறுப்பினர்களாகச் சேர்ந்தவர்கள் பலர் ஊரின் ஒதுக்குப்புறங்களிலிருந்து வந்த மாணவர்கள். இந்த அப்பாவி ஜீவன்களை வைத்து எடுபிடி வேலைகளைச் செய்து, தாங்கள் மட்டும் கோட்டுசூட்டுடன் புகைப்படத்திற்குக் காட்சி தந்தனர், எம் பெருமைக்குரிய ‘ஆண்ட்ரப்ரென்யூர்ஸ்’. வருகை புரிந்த சிறப்பு விருந்தினரில் ஒருவர் தமிழகத்தின் வருங்கால முதலமைச்சர் அண்ணன் ஹிப் ஹாப் ஆதி என்பது கூடுதல் கொசுறு.
“இதையெல்லாம் எதுக்கு மாப்ள போட்டு உடைச்சிட்டிருக்க!” என்று கேட்கும் பெருமக்களே, நிற்க. நாம் குப்பைகளைக் காசாக்குவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோமல்லவா? அதாங்க இந்த மின்கழிவுகளைக் கொட்டி ஒரு நாட்டையே குப்பைக்கூடமாக்கி அதற்கு விலையாகப் பிச்சைக்காசைத் தூவி எறியும் ஒரு வியாபாரம். அதைப் போலவே, எழுத்தைக் காசாக்கும் ஒரு நிறுவனத்தின் மாண்புமிகு நிறுவனரும் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவரது பெருமுயற்சியில் வெளிவந்த எமது கல்லூரி மாணவர் ஒருவர் எழுதிய கண்டங்களையும், பிரபஞ்சங்களையும் தாண்டிய ஒரு நாவல் குறித்து அம்மாணவர் பெருமையாக உரையாற்றியது தனி வரலாற்று நிகழ்வு (ஆசையாக அப்புத்தகத்தை ஆன்லைனில் வாங்கி 225 ரூபாய் (+ 50 ஷிப்பிங் கட்டணம்) செலுத்திய பாவத்திற்காக அதை வலிந்து படித்துப் பின்னர் ஆங்கிலமே படிக்க வேண்டாம் என்று நான் முடிவெடுத்த கதை ஒரு தனி அத்தியாயமாக எழுதக்கூடிய சுவாரசியம் கொண்டது). 25000 ரூபாயோ, 50000 ரூபாயோ கொடுத்தால் கண்ட கழிசடைக் குப்பையையும், பளபள அட்டையுடன் பதிப்பிக்கும் நிறுவனம் அது.
எப்படியோ சர்க்கஸ் கூடாரம் போல் நடந்து முடிந்தது திருவிழா. உண்மையிலேயே கல்லூரிப் பருவத்தின்போது சுண்டியிழுக்கும் ஒரு கருத்தாக்கம், ஆண்ட்ரப்ரென்யூர்ஷிப் எனப்படும் சுயதொழில் தொடங்கும் ஆவல். இது கல்லூரி அத்தியாயம்.
இப்போது நான் வேலைசெய்யும் நிறுவனத்திற்கு வருவோம். இங்கு இதே போல சுண்டியிழுக்கும் சில சொலவடைகள் உண்டு. ‘க்ரோத் ஹேக்கர்’, ‘தாட் லீடர்’ என்று இது ஒரு தனி அகராதி. அதாவது, “நாம பொருளை விக்கல, பொய்யை விக்குறோம்” என்ற ‘வேலைக்காரன்’ திரைப்பட வசனத்தில் வரும் ‘பொய்யை விற்கும்’ ஆசாமிகள் இவர்கள். “பர்சனலி ஐ திங்க்” என்று ஆரம்பித்து, ஒரு நீண்ட பத்தியைத் தட்டச்சு செய்து முடித்து, பின்னர் வெறுமையாகத் தோற்றமளிக்கும் அப்பத்தியில் எம்.பி.ஏ. வகுப்புகளில் பயன்படுத்தும் சில கவர்ச்சிகரமான வார்த்தைகளை மலைச்சாரல் போல் ஆங்காங்கே தூவிவிட்டால் முடிந்தது கதை.
இப்படிப் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர்களும், வாயில் வடை சுடுபவர்களும், உண்மையான ‘ஆண்ட்ரப்ரென்யூர்’களை விடப் பவிசு காட்டுவார்கள் (கல்லூரியில் இந்த ஆண்டும் இரண்டாவது சீஸனாக அந்த கோட்டுசூட்டு விழா பல்லிளித்ததாகச் செய்தி) என்பது பலர் அறியாத உண்மை.
ஒருவழியாகப் புலம்பல்கள் முடிந்தன. இப்போது நம் கதைக்கு வருவோம் (நாஞ்சில் நாடனின் கதைகள் சில இப்படித்தான் தொடங்கும்; உதாரணத்திற்குக் ‘கிழிசல்’ என்ற சிறுகதையைப் படித்துப் பார்க்கவும்). திருவான்மியூரில் நான் தங்கியிருக்கும் தெருவில் ஒரு பானிபூரி கடை உண்டு. ரொட்டி, கட்லெட் போன்ற சமாச்சாரங்களெல்லாம் அவர்களைப் போல நம்மால் செய்யவே முடியாது. நான்கைந்து பேர் கொண்ட குழு அது. ஒரு 13 வயது மதிக்கத்தக்க பையன், ஒரு 25-30 வயது ஆடவன், ஒரு 35-40 வயது ஆண், ஒரு 18-20 வயது இளைஞன் - இவ்வளவுதான் கடை. திருவான்மியூர் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கருகில் சாலையோரமாக ஒரு கடையும், என் தெருவில் இன்னொரு கடையுமாக அமர்க்களமான வியாபாரம். இன்று அவர்கள் விற்கும் விலைக்குப் பத்து மடங்கு தர வேண்டுமானாலும் நான் அங்கு உண்ணத் தயார்; ஏனெனில், ஒரு நாள் நான் இருமலுடன் சென்றால், “அண்ணா, ஜொரத்தோட ரொட்டி சாப்படாதீங்க; இட்லி கானா” என்று தமிழும், இந்தியுமாகக் கலந்து பேசுவர். தன் கடைக்கு வருமானம் வரும் வாய்ப்பிருந்தும், வேண்டாமென மறுக்கும் எத்தனை உணவகங்கள் இங்கிருக்கின்றன?
விஷயம் என்னவென்றால், சமீபத்தில் அந்த ஆர்.டி.ஓ அலுவலகம் அருகில் சாலையோரம் இருந்த கடைகளையெல்லாம் அப்புறப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டனர். இது நடந்தது கடந்த வாரம். செவ்வாய் அல்லது புதன் இருக்கலாம். அன்று இரவு உணவிற்காகச் சென்றபோது, வழக்கமான உற்சாகம் வடிந்திருந்தது ‘பையா’விடம். “க்யா ஹுவா பையா?” என்று எனக்குத் தெரிந்த ஒரு வாக்கியத்தை அவிழ்த்து விட்டேன். ஆனால், பையாவிற்கு என் வண்டவாளம், தண்டவாளமெல்லாம் தெரியும்; அவனே மழலைத் தமிழில் விளக்கினான். மூடப்பட்ட கடையிலிருக்க வேண்டிய ஆட்கள் இருவரும் பேந்தப் பேந்த முழித்துக்கொண்டிருந்தனர்.
“என்னண்ணே பண்ணுவ இப்ப?” என்று கேட்டதற்கு, “ஒரு ஒன் வீக் பாக்கலாம் பையா. அல்லாம் செரி ஆயிடும். சரி ஆகலைன்னா யோசிக்கணும், ஊருக்குப் போறதான்னு” என்றான். பீஹாரிகள் அவர்கள். அங்கு சரியான வேலை இல்லாததால்தான் இங்கு வந்திருந்தனர். ஆனால், அவன் சொன்னதிலிருந்து எனக்கு ஒன்று புரிந்தது; திரும்ப ஊருக்குப் போவது நல்ல முடிவல்ல என்பது அவனுக்கும் தெரிந்துதான் இருந்தது.
அதன்பிறகு இன்றுதான் கடைக்குச் சென்றேன். சிரித்துக்கொண்டே உபரியாக ஒரு குலாப்ஜாமூனை நீட்டினான். “என்ன இன்னிக்கு நீயே குடுக்குற? காசு நெறைய வேணுமா என்ன?” என்று நக்கலடித்தேன். “புது கடை தொறந்தாச்சு பையா; இஷ்வீட் எடுத்துக்கோங்க” என்று கையில் திணித்தான். விசாரித்தபோதுதான் தெரிந்தது. மருந்தீஸ்வரர் கோவில் அருகில் ஈ.சி.ஆர். பேருந்துகள் நின்று செல்லும் இடத்தை ஒட்டிய ஒரு சந்தில் புதிதாக ஒரு கடையைத் திறந்துவிட்டனர். “வாடகை தோடா ஜாஸ்தி, தோ ரேட்டு ஜாஸ்தி பண்ணியாச்சு” என்று அசால்ட்டாகச் சொன்னான். இந்த வார இறுதிக்குள் அந்தத் ‘தோடா ஜாஸ்தி’ கடைக்கு ஒருமுறை செல்ல வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.
நம் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை உணர்ந்து, விடாமுயற்சியுடன் செயல்பட்டுச் சிறிய அளவிலோ, மாபெரும் அளவிலோ தொழிலில் வெற்றி பெறுபவர்தான் ‘ஆண்ட்ரப்ரென்யூர்’. இந்த பையாவைச் சிறப்பு விருந்தினராகக் கோட்டுசூட்டுக் கோஷ்டிக்குப் பரிந்துரைக்கலாம் என நினைத்திருக்கிறேன். நிச்சயம் நிராகரிக்கப்படுவேன். ஏனெனில், அவர்களைப் பொறுத்தமட்டில் அலங்கார உடைகளும், மேற்கத்திய ஆங்கிலமும், குளிர்சாதன அறையில் ஏற்பாடு செய்யப்படும் ஒரு கேலிக்கூத்துமே சுயதொழில் முனைவுக்கான முன்னெடுப்புகள்.
வாருங்கள், நாமும் பானிபூரிக்குப் போட்டியாகப் பகோடா தொழில் தொடங்குவோம். ‘ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டேண்ட் அப் இந்தியா’; ‘அச்சே தின் ஆயேகா’.