Wednesday, July 29, 2015

அப்துல் கலாமிற்கு அஞ்சலி!!!


கண்டதில்லை உன்னை நேரில் இதுவரை இறைவா…
உனது வடிவில் வந்தவரை அணைத்தது மறைவா?
நல்லவரைக் கொண்டுசெல்ல இத்துணை விரைவா?
புவியைத் துயரில் தள்ளினாயே இப்போது நிறைவா?

இளைஞராக வாழ்ந்தவர்தாம் அவரோ நேற்று – இன்று
அவர்தம் ஆன்மா கலந்து வீசுது வாடைக் காற்று;
அப்துல் கலாமின் உயிருக்கில்லை இன்னொரு மாற்று
அவரை எமக்குத் திருப்பிக்கொடுத்து நல்வினையாற்று

ஏவுகணைப் பொறியியலில் அவதாரம் எடுத்தார் – பின்பு
கனவு எனும் வார்த்தைக்கொரு அர்த்தம் கொடுத்தார்;
மாணவரின் எண்ணங்களை மாற்றியமைத்தார் – கண்களில்
அறிவியலையும் ஆசிரியத்தையும் சேர்த்தே இமைத்தார்

கூற்றுவனின் ஆற்றலின்முன் நாம் வெறும் ஏழை – அவன்
பின்னிருந்து தாக்கியழிக்கும் மற்றொரு கோழை;
உடலை பிரிந்து சென்றபின்பும் வாழ்பவன் மேதை – அந்த
உயிரைப் பிரித்து எடுத்துச்சென்ற இறைவனோ பேதை

அன்பு நிறைந்த கலாமின் உள்ளத்தில் இருந்தது மாட்சி – நெஞ்சை
உலுக்கிக் கரைத்து, உருக்கியது அக்கடைசி காட்சி;
அவர் பயணம் செய்து விட்டுச்சென்ற பாதையின் நீட்சி – அங்கு
தொடங்குகிறது இந்தியாவின் புதிதொரு மீட்சி!
                    ***********************
அழ மாட்டோம் – கண்ணீரில்
அவரேற்றிய அறிவுச் சுடர்
அணையக் கூடாது என்பதற்காக

உறங்காமல் இருக்கச் செய்வதே
கனவென்றார்;
மரணச்செய்தி கேட்டபின்
வரவில்லை உறக்கம்
இதுவும் கனவுதானோ?