Saturday, December 3, 2016

ஒரு நாள், ஆனால் திருநாள் #3

(மூன்றாம் (எ) கடைசி பாகத்தை அடைந்துவிட்டோம், ஒருவழியாக. முதல் மற்றும் இரண்டாம் பாகங்களைப் படித்துவிட்டு இங்கே வருதல் நலம்)

வண்டி கேட் பேருந்து நிறுத்தத்தில் பாண்டிச்சேரி செல்லும் பேருந்து வந்தது; ஏறிப் புறப்பட்டோம் ஊரை நோக்கி. திங்கட்கிழமையாதலால் பெரிதாகக் கூட்டமில்லை. சொகுசான இடமாகப் பார்த்து அமர்ந்தோம்.

6:30 மணி தாண்டியிருந்ததால், பனிக்காற்று இதமாக வீசியது. ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி அரைத்தூக்கத்தில் அன்றைய நிகழ்வுகளை அசைபோட்டபடியே இருந்தேன்.

பிச்சாவரத்திற்கென்ற ஏதோ ஒரு தனித்துவம் – ஒருமுறை வந்தால் மீண்டும் மீண்டும் வரவைக்கச் செய்யும் இனம்புரியாத மந்திர சக்தி – வியப்படையச் செய்தது. படகில் ஏறியதிலிருந்து நடந்த அனைத்தும் இதமான ஒரு மகிழ்ச்சியைத் தந்தது.

இரண்டடி, மூன்றடி ஆழமேயுள்ள தாழ்வான பகுதிகளிலிருந்து, சற்றே பயமூட்டும் அளவுக்கு (ஆறடிக்கு மேலான) இடங்களனைத்தையும் பார்த்துவிட்டோம். அமைதியான நீரோட்டத்திற்கிடையே அவ்வப்போது தோசைக்கல்லில் எண்ணெய் விட்டால் வரும் வட்டங்களைப் போல், மீன்களின் துள்ளலால் சுழல்களாகத் தண்ணீர் பரவி ஓடியது நினைவிற்கு வந்தது; வானும், பூமியும் மணமக்களாக இருந்தால் அவர்களுக்கிடையே விரிந்த திரையாக இருப்பது பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள்தாம் என்று தோன்றியது; ஒரு பெரிய மாளிகையின் நுழைவாயிலைப் போல, வானவில்லின் வளைந்த தோற்றம் கொண்டு, அண்ணாந்து பார்த்தால் அனைத்தையும் மறைக்கும் மாபெரும் மரங்கள் நினைவில் அசைந்தாடின.

பெயரே தெரியாத பறவைகளின் அழகும், அவை எழுப்பிய ஓசையும் காதில் ரீங்காரமிட்டன; கச்சேரியில் கீர்த்தனைகளையும், ஆலாபனைகளையும் கடந்து கடைசியாக வரும் ‘ஜுகல்பந்தியைப் போல, அப்பறவைகள் கலவையாக எழுப்பிய ஓசைகள் அனைத்தும் ஒரே ஸ்ருதியில் இயற்றப்பட்ட சங்கீதமாய் ஒலித்துக்கொண்டே இருந்தது. அடர்ந்த மரங்களினூடே செல்லும்போது சீழ்க்கையடிப்பது போன்ற சத்தத்தை எழுப்பிப் பீதியடையச் செய்த பூச்சிகளின் நினைவு கடந்து சென்றது; ‘செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தபோது தலையைக் கடந்து சென்ற மரங்கொத்திப் பறவையின் நீலவண்ணம் கண்முன்னால் புகைப்படமாகப் பதிந்து நின்றது.

இவையனைத்தையும் தாண்டி நீர்ப்பகுதிக்கே உரிய வாசனையுடன், சதுப்பு நில மரங்களின் மூலிகை வாசமும் சேர்ந்து மயக்கிய நேரங்கள் பசுமரத்தாணியாய்ப் பதிந்திருந்தன. இடையில் ஒரு மரத்தின் மிக மெல்லிய கிளை கூட வலிமை கொண்டதாக என்னையும், தீபக்கையும் தாங்கிப் பிடிக்கும் அளாவுக்கு உறுதியானதாக இருந்ததையும், அங்குக் குரங்கு வித்தை காண்பித்துத் தாவிக் குதித்துப் புகைப்படங்கள் எடுத்ததும் மின்னலென வெட்டியது.

கூடவே சேர்ந்து தெளிந்த நீரொடையென ஓடியது அன்று பார்த்த மீன்பிடிக்கும் காட்சிகள். கூடையை வைத்துக்கொண்டு ‘ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி நிற்குமாம் கொக்குஎன்ற ரீதியில் கூடை இறால் மீன்களால் நிறையும் வரை, சலனமற்றுத் தண்ணீரில் உட்கார்ந்து/மிதந்து கொண்டிருந்த பெண்மணிகள் அலைமோதினர்; குடும்பத்துடன் மீன்பிடிக்கப் படகில் சென்று, தந்தை வலைபோட, மகன் துடுப்புப் போட, பிடித்த மீன்களை எல்லாம் தாய்  குவியலாக்கி அடுக்கிய காட்சி, “குடும்பமே இத நம்பித்தான் இருக்குறோம்என்று தொலைக்காட்சிப் பெட்டியில் கதறிய மீனவப் பெண்களின் கூற்றை மெய்ப்பித்தது.

வலை போடுவதற்கென்று ஒரு தனித்திறமை வேண்டியிருக்கும் போல; நான் பார்த்தவரையில் அது ஒரு கலை போலவே தோற்றமளித்தது. முதலில் மீன் பிடிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட சிறிய பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த இடத்திலேயே சுற்றிக்கொண்டிருக்கும் வகையில் படகை நிலைநிறுத்த வேண்டும். பிறகு, வலையைச் சிறிது சிறிதாக இறக்கித் தண்ணீரில் விடவேண்டும். இப்போது படகை முன்நோக்கிச் செலுத்தி வலையின் ஒரு முனையைக் கையில் பிடித்துக்கொண்டால், வலை மெதுவாகத் தண்ணீரில் விரிந்து பரவும். வலையின் பரப்பளவு அதிகமாகும் அந்நேரத்தில் ‘பொளக்என்று நீரினூடே எழும் சலசலப்பு அலாதியானது. முடிவாக வலையில் மீன்கள் மாட்டிய பின்பு மீண்டும் ஒன்றன்பின் ஒன்றாக அந்தத்திலிருந்து ஆதி வரை செல்ல வேண்டும். இப்படித்தான் எல்லா இடங்களிலும் மீன் பிடிப்பார்களா எனத் தெரியவில்லை. சைவமாகப் பிறந்ததால் அதைப் பார்க்கும் பாக்கியம் கூட எனக்குப் பெரிதாகக் கிட்டியதில்லை.

சட்டென்று நினைவு திரும்பியவனாக, “மீன் செம்மயா பிடிக்குறாங்கல்ல?என்று தீபக்கிடம் வினவினேன்.

“அட நீ வேற. சண்டே காலைல தாழங்குடா பக்கம் போய்ப்பாரு. அங்க மீன் பிடிச்சு மொத்தமாக் கரை சேப்பாங்க. நல்லா இருக்கும்என்றான். ‘ஞாயிற்றுக்கிழமை – தாழங்குடாஎன்று மனம் பதிவு செய்தது.

எங்களது பேச்சுவார்த்தையில் குறுக்கிட்டு, “சார், ஷேர் இட்எப்புடி வேலை செய்யுது?என்று கேட்டார் மூன்று இருக்கைகள் கொண்ட எங்களது வரிசையில் மூன்றாவதாக அமர்ந்திருந்த நபர். ஜன்னலோர இருக்கையில் நானும், நடுவில் தீபக்கும், மறுமுனையில் அவருமாக அமர்ந்திருந்தோம்; எனவே அவருக்குப் பதில் சொல்லும் பெரும்பேறு எனக்குக் கிட்டவில்லை. ஏற்கனவே இருமுறை, “சார், டைம் எவ்ளோ?என்று 6:47க்கு ஒருமுறையும், 6:51க்கு ஒரு முறையும் கேட்டிருந்தார். நானாக இருந்திருந்தால், “என்னய்யா, வாட்ச் வேணுமா? இந்தா நீயே வெச்சுக்கோஎன்று கைக்கடிகாரத்தைக் கழற்றித் தந்திருப்பேன் (பின்னர், “பேசிக்கலி ஐ ஆம் ஃப்ரம் கர்ண பரம்பரைஎன்று பீலாவும் விட்டிருப்பேன்). ஆனால் பாவம் பிஞ்சு மனதுடைய தீபக், அவருக்குப் பொறுமையாகப் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.

“அதாவது சார், இப்போ நீங்க உங்க மொபைல்ல ஷேர் இட் ஆன் பண்ணிக்கிட்டிங்கன்னா பக்கத்துல ஷேர் இட் ஆன்ல இருக்குற அத்தன மொபைலோட பேரும் உங்க ஃபோன்ல காமிக்கும். உங்களுக்கு வேண்டிய பாட்டு, படம், ஃபோட்டோன்னு என்ன வேணும்னாலும் அனுப்பிக்கலாம்என்றான் அக்கறையுடன்.

“அதுக்கு அப்போ நெட் வேணுமா?

“நெட் எல்லாம் வேணாம் சார். வைஃபைல கனெக்ட் ஆயிடும்.

“நான் இப்போ வைஃபையே ஆன் பண்ணல. எப்புடிப் பண்ணணும்?

“நீங்க ஆன் பண்ண வேணாம் சார். ஷேர் இட் உள்ள போனா, தானா ஆன் ஆயிடும்.

இக்கட்டத்தில் அவரால் தீபக் சொல்வதை எற்றுக்கொள்ள முடியவில்லை. ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் ஏதோ ஆராய்ச்சிப் பாடம் எடுக்கும் விரிவுரையாளர் போலத் தோன்றியிருக்க வேண்டும் அவருக்கு, தீபக்கைப் பார்த்தவுடன். அவரது முன்நெற்றி சுருங்கி ஐயத்துடன் தீபக்கை நோக்கின.

“நீங்க சொல்றதப் பாத்தா என்னோட ஃபோன் இப்போ உங்களோடத மோப்பம் பிடிக்குதுன்னு சொல்றீங்கஎன்று கூறி, வெடித்துச் சிரிக்கத் தொடங்கினார். பேருந்தின் பின்வரிசைகளில் அரைமயக்கத்திலும், முக்கால் போதையிலும் தூங்கிக்கொண்டிருந்த சிலர் திடுக்கிட்டு முழித்துப்பின் இருக்கையில் மீண்டும் சாய்ந்தனர்.

“இந்த வைஃபை, உலகத்துல இருக்குற எந்த ஷேர் இட் கூட வேணும்னாலும் கனெக்ட் ஆகுமா தம்பி?என்றார்.

இல்ல சார், அப்புடி இல்ல. ஒரு குறிப்பிட்ட தூரம் வரைக்கும்தான் கனெக்ட் ஆகும் தீபக்.

“பாருங்களேன், இவ்ளோ வயசாயிடுச்சு எனக்கு. ஷேர் இட் உள்ள போனா வைஃபை கனெக்ட் ஆகும்ன்ற பேசிக் விஷயம் கூட இப்போத்தான் தெரிஞ்சுக்குறேன்என்று சொல்லிவிட்டுப் பரிதாபமாகப் பார்த்தார்.

இந்நேரத்தில் பக்கத்து வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர், எங்களைப் பார்த்துப் பார்த்துச் சிரித்துக்கொண்டேயிருந்தார். அவ்வப்போது எங்கள் ‘ஷேர் இட்ஆளை நோக்கிக் கைகாட்டி, தலையின் அருகே கைவிரலைச் சுழற்றினார். “நீ சொல்லித்தான் தெரியணுமா இவரு மெண்டல்னு?என்று தோன்றியது. பொதுவாகப் பெரியவர்களைப் பார்த்து அப்படியெதுவும் தோன்றியதில்லை. இப்போதும் அவரைக் கீழ்த்தரமாக வைத்து யோசிக்கத் தோன்றவில்லை. ஆனால், அப்போதைக்கு இருக்கையை விட்டு எழுந்திருக்க முடியாது; அவர் தவறாக நினைக்கக் கூடும். அமைதியாக அமரவும் முடியாது; ஏனென்றால் சிரிப்பு முட்டியது.

எனக்குப் பொழுது போகவில்லை. குத்துமதிப்பாகப் பற்றவைத்தேன். “டேய் தீபக், அந்த மாஸ்டர் ஆப்பத்தி அவருக்குச் சொல்லிக்குடுடா. இண்டர்நெட் ஸ்பீட் எல்லாம் அதிமாகுமே அது யூஸ் பண்ணுனா! நீதானேடா அன்னிக்கு எனக்கு ஏத்திக் குடுத்தஎன்று தூண்டிவிட்டேன்; நினைத்ததைப்போலவே அதைப் பிடித்துக்கொண்டார் மனிதர்.

“அதென்ன தம்பி ‘மாஸ்டர் ஆப்’? எனக்கும் கொஞ்சம் சொல்லிக் குடுங்களேன்என்று குழந்தையாகக் கேட்டார். “அதெல்லாம் ஒண்ணுமில்ல சார். இப்போ அது என்னோட ஃபோன்ல இல்ல. எடமில்லன்னு டெலிட் பண்ணிட்டேன்என்று தன் பங்கிற்கு தீபக் அடித்துவிட்டான்; எப்படியோ அவர் சமாதானமாகிவிட்டார்.

மீண்டும் பிச்சாவர நினைவுகளில் மூழ்க எத்தனித்தபோது, “தம்பி, இங்க நாம மூணு பேரு இருக்கோம். இதே மாதிரி நம்பள மாதிரியே வேற உலகத்துல ஆளுங்க இருக்காங்களா?என்று கிளப்பினார்.

“தெரியல சார். இருக்கலாம், இப்போதைக்கு எதுவும் யாரும் கண்டுபிடிக்கல. அதுனால நாம படத்துல காட்டுறது எல்லாத்தயும் நம்பலாம், நம்பாமயும் இருக்கலாம்என்று எப்படியோ மழுப்பினான் தீபக். ‘கேம்பஸ் இண்டர்வியூவந்தால் இப்படியே வாயில் வடை சுட்டு எப்படியும் ஏதேனும் ஒரு நல்ல நிறுவனத்தில் வேலைக்குச் சென்றுவிடுவான் எனும் திடமான நம்பிக்கை மனதில் நிலைகுத்தி நின்றது.

அவர் விடுவதாக இல்லை; ‘என்னாச்சு, கிரிக்கெட் விளாண்டோம்என்று சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லும் நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் விஜய் சேதுபதியைப் போல, அச்சு மாறாமல் அதே கேள்வியை மீண்டும் கேட்டார். தீபக்கும் ‘நீ விடாக்கண்டன்னா, நான் கொடாக்கண்டன் பாஸுஎன்ற அளவில் முன் சொன்ன அதே பதிலை, அட்சரம் பிசகாமல் அவரிடம் மொழிந்தான்; ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைப்பட்ட கால அவகாசம் கூட ஒன்று போலவே இருக்கும் அளவிற்கு அவனுடைய இரு பதில்களும் ஒரே மாதிரி இருந்தன.

இப்போது மாட்டிக்கொண்டார், சைகை காட்டி எகத்தாளம் செய்துகொண்டிருந்த பக்கத்து இருக்கைப் பயணி. அவரை நோக்கித் திரும்பிய திருவாளார் ஷேர் இட், அதே கேள்வியைக் கேட்டார். இப்போது ஒரு சிறிய கூடுதல் கொசுறுடன் – “இந்தப் பழைய படத்தில எல்லாம் காட்டுவாங்களே – அவள் எங்கே இருக்கிறாள்? இளவரசி எங்கே என்று காட்டு மாயக்கண்ணாடியே!’ -  அதே மாதிரி நம்பளயும் பாக்கலாம்ல?என்று ஈ.டி., யு.எஃப்.ஓ, ஏலியன் என ஆராய்ந்து பதிலளிக்கக்கூடிய அளவிற்குத் தன் கேள்வியின் தரத்தை உயர்த்தியிருந்தார். எகத்தாளப் பேர்வழி, விடைசொல்ல முடியாமல் திக்கித் திணறி நடுங்குவதைப் பார்த்து ரசித்த நாங்களிருவரும், பேருந்து நிலையம் நெருங்கியபடியால் இறங்க ஆயத்தமானோம்.

“என்ன தீபக், இப்போவாச்சும் இந்த நாள் முடிஞ்சுச்சா?என்று கேட்டபோது, சிரித்தான்; நானும் சிரித்தேன். பேருந்தை விட்டு இறங்கி வண்டியை எடுக்கப் புறப்பட்டோம்.

(தொடர் எழுதுவது எனக்கும் புதிதான அனுபவம்தான். இதைத் தொடர் என்றுகூட வரையறுக்க முடியுமா எனத் தெரியவில்லை. ஒரு நாளில் நடந்த மூன்று சம்பவங்கள் ‘இந்த நாள் இனிதே நிறைவடைந்ததுஎன்ற எங்களின் நினைப்பை ஒவ்வொரு முறையும் உடைத்துச் சுக்குநூறாக்கியது.

முதலிரண்டு பாகங்கள் எழுதியபோது, அன்றைய தினம் சந்தித்த மனிதர்களைப் பற்றியே எழுத விரும்பியதால் இயற்கையைப் பற்றியோ, மற்ற விஷயங்கள் குறித்தோ பெரிதாக எழுத முடியவில்லை.

நண்பர்கள் இருவரிடமிருந்து வந்த இரு முக்கியமான வாட்ஸப் பின்னூட்டங்கள் குறிப்பிடத் தகுந்தவை:

1)      பிச்சாவரம் பற்றி எழுதும்போது, இயற்கையழகை வர்ணித்திருக்கலாம்; மொக்கையாகப் பேசிக்கொண்டே இருந்தது போலிருந்தது. இதற்கான பதில் மேலே இருக்கிறது.
2)      சினிமா வசனங்களைத் தவிரப் பெரிதாக எதுவும் இல்லை. தேவையில்லாத விஷயங்கள் நிறைய இருப்பதாகத் தோன்றியது. மிகவும் பெரிய பதிவு, ஊன்றிப் படிக்கும் அளவிற்கு சுவாரசியமாக இல்லாதது துரதிருஷ்டவசமானது. இதற்குச் சாமி சத்தியமாக என்னிடம் விடை இல்லை. மொக்கையாக இருந்திருந்தால் அடியேனை மன்னித்தருளவும்.

பொதுவாக எழுத்து என் சந்தோஷத்திற்கு என்று மட்டுமே நம்புபவன் நான். எனினும், இந்த இரு பின்னூட்டங்களில் குறிப்பிடப்பட்டிருந்த குறைகளை ஓரளவிற்கேனும் களைந்துவிட்டேன் எனும் நம்பிக்கையுடன் நிறைவு செய்கிறேன்.)

Friday, December 2, 2016

ஒரு நாள், ஆனால் திருநாள் #2

(மூன்று பாகங்கள் கொண்ட இத்தொடரின் இரண்டாம் பாகம் இது. நேற்று வெளியிடப்பட்ட முதல் பாகத்தை படித்தபின் இதைத் தொடருமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.)

பிச்சாவரம் படகுத்துறையிலிருந்து வெளியே வந்து டவுன் பஸ்ஸிற்காகக் காத்திருந்த நேரத்தை விரயமாக்க விருப்பமின்றி, எதிரிலிருந்த பூங்காவுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்துத் தீபக்கும், நானும் ஊஞ்சலில் ஆட ஆரம்பித்தோம்; சிறுபிள்ளைத்தனம்தான், நன்றாகத் தெரியும். இருந்தாலும், ஆசை யாரை விட்டது? தீபக் மெதுவாக ஆடினால் போதுமென்று லேசான உந்துதலோடு நிறுத்திவிட்டான். என் நேரம், வேகமாக ஆட வேண்டும் என்று மூளை கட்டளையிட்டது. மிக உற்சாகமாக உந்தி, உந்தி ஆடிக்கொண்டிருந்தபோது, இடையில் ஒருமுறை கால் சரியாக உந்தாததால் தரையில் பட்டு, அந்த அதிர்வு உயிர்நாடி வரை பரவி, சப்தநாடியும் சில்லிட்டு ஒடுங்கியது ஒரு நிமிடம்.

சட்டென்று முகம் மாறியதைத் தீபக் கவனித்ததாகத் தெரியவில்லை. யோசித்துப் பார்த்தபோதுதான் படாத இடத்தில் பட்டிருக்கக் கூடிய அந்த வலிக்கான காரணம் புரிந்தது; அன்று காலையில் எழுந்தவுடன் அழகு பார்ப்பதற்காகக் கண்ணாடியில் முழித்துவிட்டேன் என்று. “யார் மூஞ்சிலதான் முழிச்சேனோ?என்று கெட்ட வார்த்தையில் கூடத் திட்ட முடியாதத் தர்மசங்கடமான நிலை. இது எதுவும் தெரியாமல் ஊஞ்சலின் ‘சுகானுபவத்தைஅனுபவித்துக் கொண்டிருந்தான் நண்பன்.

“மச்சான், அங்க பாத்தியா?என்று அவன் கேட்டபோதுதான் சுற்றியிருந்த மக்களைப் பார்த்தேன். அனைவரும் ஜோடிகள். அது சரி, நமக்கு வாய்த்தது அவ்வளவுதான் என்ற ரீதியில் நாங்களிருவரும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டோம். சுற்றியிருந்த அனைத்துக் காதல் ஜோடிகளும் எங்களை ‘அவர்கள்என்று நினைத்திருக்கக் கூடும். எங்களுக்கு வேறு விதமான சிரிப்பு: ஒருவர் உடன்வந்திருந்த ஜோடியைப் பரோட்டா மாஸ்டரைப் போல் பிசைந்து கொண்டிருந்தார்; இன்னொரு பக்கம் இந்த உலகையே மறந்து ஒருவர் மடியில் அவரது ‘புறாபடுத்திருந்தது. நான் பரவாயில்லை, இயந்திரவியல் படிக்கிறேன். எனக்கு வகுப்பறையில் கூட அந்தப் பாக்கியம் கிடையாது. தீபக்தான் பாவம். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு படிக்கின்றவன், வகுப்பறையில் ஆண்களைவிடப் பெண்கள் அதிகமாக இருக்கும் வாய்ப்புள்ள துறை. மனம் மிகவும் சஞ்சலப்பட்டிருக்க வேண்டும்.

அரை மணிநேரத்திற்கு ஒரு பேருந்துதான் என்பது நன்கு தெரியுமாதலால், கால் மணிநேரம் வரை ஆடிவிட்டுப் ‘போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்துஎன்று எழுந்துவிட்டோம். நாங்கள் பத்தடி நகர்ந்திருக்க மாட்டோம்; இரு குழந்தைகள் வந்து இடத்தை ஆக்கிரமித்து விட்டனர். எங்கிருந்து வந்தார்கள் எனத் தெரியவில்லை, அல்லது எங்கள் கண்கள் ஜோடிப் புறாக்களை மட்டும்தான் நோட்டம் விட்டுக்கொண்டிருந்திருக்க வேண்டும். எப்படியோ, “எருமை மாட்டு ஜன்மங்க! ஏழு கழுத வயசாயிடுச்சுஎன்ற வசவு நிச்சயமாக அக்குழந்தைகளின் பெற்றோர்களிடமிருந்து எங்களைப் பற்றி வெளிப்பட்டிருக்க வேண்டும். எத்தனை தலைமுறைகளைத் தோண்டியெடுத்துத் திட்டினார்கள் என்று தெரியவில்லை; யோசித்துப் பார்க்கவும் விருப்பமில்லை.

பேருந்துச் சத்தம் கேட்டதும், பர்ஸை ஒரு முறை பார்த்தேன்; 16 ரூபாய் இருந்தது. “அப்பாடா, டிக்கெட் 7+7 = 14 தான்; பொழச்சோம்டாஎன்று படகுக்காரர் கொடுத்த 10 ரூபாயுடன், நான் வைத்திருந்த சில்லறையைச் சேர்த்து எடுத்து வைத்துக்கொண்டு, வாடா என் டொமேட்டோஎன்ற நினைப்பில் நின்றிருந்தோம். ஒரு தனியார் பேருந்து வந்தது.

நடத்துனரிடம், “அண்ணே, வண்டி கேட் ரெண்டு டிக்கெட் எவ்ளோண்ணே?என்றதற்கு, “வண்டி கேட் போகாது தம்பி. அதுக்குப் பெரியார் வண்டி வரும். பஸ் ஸ்டேண்ட்ல வேணா எறங்கிக்கோங்க. 9 ரூபா ஒரு டிக்கெட்என்றார்.

மாப்பு, வெச்சுட்டான்யா ஆப்புஎன்று பேயறைந்தாற்போல இருவரும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துக்கொண்டு திடுக்கிட்டு நின்றோம். நடத்துனருக்குப் புரிந்திருக்க வேண்டும். “பெரியார் வண்டி இன்னும் 10 – 15 நிமிஷத்துல வந்துரும். அதுல டிக்கெட் கம்மிதான். வண்டி கேட்ல எறங்கிக்கோங்கஎன்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். அவரது எண்ணவோட்டம் அப்பட்டமாகத் தெரிந்தது; ‘இதுக்கெதுக்குடா வெள்ளையுஞ்சொள்ளையுமா அலையுறீங்கஎன்றுதான் கூறியிருப்பார் என எந்தக் கோயிலில் வேண்டுமானாலும் கற்பூரத்தில் அடித்துச் சத்தியம் செய்வேன்.

போனது போச்சு விட்டு விளையாடு; வானத்தப் பாத்துத் தொட்டு விட போடுஎன்று மீசையில் மண் ஒட்டாத கதையாக அரசுப் பேருந்திற்குக் காத்திருந்தோம். ஆடி, அசைந்து ஒருவழியாக வந்தது ‘பெரியார் வண்டி’. முன்னெச்சரிக்கையாக, “அண்ணே, வண்டி கேட் வரைக்கும் ஏழு ரூபா தானே டிக்கெட்டு?என்று கேட்ட எங்களை வித்தியாசமாகப் பார்த்தார் நடத்துனர். “சிதம்பரம் பஸ் ஸ்டேண்ட் வரைக்கும் ஏழு ரூபாதான் தம்பி. எந்த ஊருக்குப் போகணும்?என்றார்.

“கடலூர்ண்ணே.

“மணி இப்போ 4:50 ஆகுது. உங்களுக்கு நல்ல நேரமா இருந்தா பாசஞ்சர் ட்ரெயின் வரும் கடலூர்ப் பக்கமாப் போறது. பஸ் ஸ்டேண்ட் கிட்டதான் ரயில்வே ஸ்டேஷனும். பஸ் ஸ்டேண்ட்லயே எறங்கிக்கோங்க.

“ஓ அப்புடியா?

“ஆனா பாத்துக்கோங்க. ஓடிப்போயி டிக்கெட் எடுக்கணும். இல்லாட்டி டிக்கெட் இல்லாமக் கூட போங்க. ஒரு பய செக் பண்ணமாட்டான்.”

அவர் சொல்வது லாட்டரிச் சீட்டில் பரிசு விழுந்தது போன்ற சந்தோஷத்தைக் கொடுத்தாலும், கூடவே பயணச்சீட்டு எடுக்க முடியாமல் பயணம் செய்து கடைசியில் எங்கள் முகராசிக்கு மாட்டிக்கொள்வோமோ என்ற பயமும் சேர்ந்துகொண்டது.

தீபக் சிரத்தையாகப் பேசினான். “மச்சான், அழகா வண்டி கேட்ல எறங்கிப் பக்கத்துல இருக்குற ஏ.டி.எம்-ல எங்கயாச்சும் காசு எடுத்துட்டு அப்டியே பஸ் ஏறிடலாம்டா.” எனக்குத்தான் ஏழரை அன்று நாக்கில் புகுந்து விளையாடியது. “டேய், பஸ் ஸ்டேண்ட் வரைக்கும் அதே டிக்கெட்தான்னு சொல்றாரு அண்ணன். ட்ரெயின் புடிக்கவும் சான்ஸ் இருக்கு. சப்போஸ் ட்ரெயின விட்டாலும் பஸ் ஸ்டேண்ட்ல பஸ் ஏறினா உக்கார எடம் கெடைக்கும். வண்டி கேட்ல ஏறுனா ஸ்டேண்டிங்தான். எல்லாத்தையும் தாண்டிப் பஸ் ஸ்டேண்ட் பக்கத்துல இல்லாத ஏ.டி.எம் எங்கயாச்சும் பாத்துருக்கியா?என்று பக்காவாகச் சொல்லிவிட்டு “ரெண்டு பஸ் ஸ்டேண்ட்ண்ணேஎன்று சீட்டெடுத்துவிட்டு, ‘நாங்க இருக்கோம்என்று வாசன் ஐ கேர் மருத்துவரைப் போல் பார்வையைச் செலுத்தினேன்.

போகிற வழியில் கிள்ளை ரயிலடியில் ரயில் வருவதற்காகக் கேட் போட்டிருந்தார்கள். “தம்பி தம்பி, இந்த ட்ரெயின்தான்பா. போச்சு, நம்ப போறதுக்குள்ள தாண்டிடும். நீங்க பஸ் புடிச்சுதான் போகணும்என்றார் ஓட்டுனர்; ஒரு நம்பிக்கை தகர்ந்தது. இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் ‘தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்குஎன்று உள்ளுக்குள் சொல்லிவிட்டு, “மச்சான், பஸ் கண்டிப்பா கெடைச்சுடும்டாஎன்றேன்; நக்கலாகச் சிரித்தான் தீபக்.

வண்டி கேட்டைக் கடந்துதான் பேருந்து நிலையத்திற்குச் செல்ல வேண்டும். வண்டி கேட்டைக் கடந்தபோது ஒரு ஆக்ஸிஸ் வங்கி ஏ.டி.எம் இருப்பதைக் காட்டினான் தீபக். பெருங்கூட்டம் நின்றுகொண்டிருந்தது நீ........ளமான வரிசையில். “டேய், எறங்கிடுவோம்டா. லைன்ல நின்னு எப்புடியும் ஒரு அர மணிநேரத்துல காசு எடுத்துடலாம்என்றான். அவனை முறைத்துவிட்டு, “என்ன மச்சான், நான்தான் சொல்றேன்ல? பஸ் ஸ்டேண்ட் கிட்ட எடுத்துக்கலாம்டா. காசு எடுத்துட்டு நல்லா சாப்புட்டுட்டுத் திருப்தியா ஊருக்குப் போறோம்என்றேன்; அவன் உண்மையிலேயே என்னைப் பார்த்துச் சிரித்தானா, அல்லது எனக்குத்தான் அப்படிப் பிரமையாகத் தோன்றியதா என்று தெரியவில்லை. ஆனால், ஏதோ ஒரு நையாண்டித்தனம் நெஞ்சில் சுருக்கென்று தைத்தது போலிருந்தது.

ஒருவழியாகப் பேருந்து நிலையத்தை அடைந்தோம். அருகில் வாண்டையார் உணவகம் எனக் கொட்டை எழுத்தில் எழுதியிருந்தார்கள். நல்லக் கொழுத்த உணவகமாகத் தெரிந்தது; சைவம்/அசைவம் வேறு. அதையும் பார்த்துத் தீபக்கையும் பார்த்துச் சிரித்துக் கண்ணடித்தேன். “மூடிட்டு வாடா. காசு எடுத்துட்டு ஊருக்குப் போலாம்என்று வாயை அடைத்தான். ‘பயபுள்ள ரொம்ப அசிங்கப்படுத்துறானேஎன்று யோசித்துப் பின்பு, அருகிலிருந்த பெட்ரோல் பங்கிற்குச் சென்றோம்; ஏ.டி.எம் திறந்திருப்பது தூரத்திலிருந்தே தெரிந்தது; வெளியிலும் கூட்டமே இல்லை.

கண்ணா லட்டு தின்ன ஆசையா?என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டு, “நான்தான் சொன்னேன்ல?என்று தீபக்கிடம் கூறினேன். அருகில் சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது, வேலை செய்யாத ஏ.டிஎம் என்று. முதல்முறையாக நான்தான் அருகில் சென்று ஏமாந்தேனா, அல்லது பலர் எனக்கு முன்னரே அப்பெரும் புண்ணியத்தை அனுபவித்தனரா என்று தெரியவில்லை; முகத்தில் ஈயாடவில்லை எனக்கு. தீபக் முகத்தைப் பார்க்கவில்லை அப்போதைக்கு. கண்டிப்பாகக் கிராதகன் அந்த நமட்டுச் சிரிப்புத்தான் சிரித்திருப்பான்.

“அண்ணே, வேற எங்க இங்க ஏ.டி.எம் இருக்கு?என்று பங்கில் வேலை செய்யும் ஒரு நபரிடம் விசாரித்தோம். அந்தப் பக்கத்துல இன்னொரு பெட்ரோல் பங்க் இருக்கு தம்பி. அங்க ஒரு ஏ.டி.எம். உண்டு. அங்க போய்ப் பாருங்கஎன்றார். ஓட்டமும், நடையுமாகச் சென்றால் இங்கு எவ்விதக் கஷ்டமும் இல்லாமல் தூரத்தில் இருந்தே அந்த ஏ.டி.எம். மூடப்பட்டிருப்பது தெரிந்துவிட்டது.

பிறர் சொல்பேச்சைச் சிலநேரம் ஆராயாமல் அப்படியே முழுமையாகக் கேட்டுவிட வேண்டும்எனும் ஞானம் அப்போதுதான் பிறந்தது. பக்கத்தில் இவன் வேறு, வாயைத் திறந்து “நான் சொல்றதக் கேட்டிருந்தா இந்தப் பிரச்சன இல்லல்ல?என்று வாயால் கேட்காமல் கண் ஜாடையிலேயே சம்மட்டியால் அடித்துக்கொண்டிருந்தான். சிறிது தூரம் நடந்த பின்பு ஒரு பெரியவரிடம், “சார், இங்க வேல செய்யுற ஏ.டி.எம். பக்கத்துல எங்க இருக்கு?என்று, ‘வேல செய்யுறஎனும் வார்த்தையை உட்புகுத்திய பெருமை மின்னக் கேட்டோம்.

“அந்தா அந்த முக்குல தெரியுதா ஒரு ஆலமரம்? அங்க ரெண்டு மூணு ஏ.டி.எம் இருக்குஎன்றார். மீண்டும் ஒருமுறை “வேலை செய்யுங்களா?என்று கேட்டிருக்க வேண்டும்போல; தவறு செய்துவிட்டோம். மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க அவர் சொன்ன ‘முக்குவரை வந்து பார்த்தால், இருந்தது ஒரே ஒரு ஏ.டி.எம்; அதுவும் மூடித்தான் இருந்தது. கோபத்தில் நான் கெட்ட வார்த்தைகளில் சாபம் விடத் தொடங்கினேன் (யாருக்கு என்று கேட்க வாசகர்களுக்கு அனுமதியில்லை; அதைச் சொன்னால் என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை).

“சரி விடு மச்சி. பஸ் வந்த வழியிலயே போய்ப் பாப்போம். வேற எந்த ஏ.டி.எம்-மும் சிக்கலன்னா வண்டி கேட் ஆக்ஸிஸ் பாங்க்தான்என்று தீபக் சமாதானம் கூறினான்; மனதிற்குச் சற்று ஆறுதலாயிருந்தது. இதற்கிடையில் பிரச்சனையை அம்மாவிடம் (என்னைப் பெற்ற பெண்மணி; ‘அவர்இல்லை) சொல்லியிருந்தேன். அவர் பங்கிற்கு அவர், “டேய், என்னோட ஆஃபீஸ்ல வொர்க் பண்ற யாருகிட்டயாவது சொல்றேண்டா. இப்போதைக்குக் காச வாங்கிக்கோ. நாளைக்கு ஆஃபீஸ் போகும்போது நானே குடுத்துடறேன்என்று கரிசனமாகப் பேசினார். ஒரு நிமிடம் சரி என்று சொல்லலாம் போலத்தான் இருந்தது. இருந்தாலும் “21 வயசாயிடுச்சு. இந்த அசிங்கமெல்லாம் படணுமா? என்ன ஆனாலும் சரி. பொறுமையா காசு எடுத்துட்டுப் போலாம். எவன் கிட்டயும் கை நீட்டத் தேவயில்லஎன்று மனசாட்சிப் பயல் குரல் கொடுத்தான். ‘நான் பாத்த்தையெல்லாம் திங்குற ஓணான் இல்ல; பசிச்சா மட்டும் வேட்டையாடுற சிங்கம்என்று “அதெல்லாம் நான் பாத்துக்குறேன்மா. நான் வரதுக்கு லேட் ஆகும். அதச் சொல்லத்தான் கால் பண்ணேன்என்று வைத்துவிட்டேன்.

நடக்கத் தொடங்கினோம். போகிற வழியில் ஒரு தபால் அலுவலத்தில் ஏ.டி.எம் திறந்திருந்தது; ஆனால், ‘அவுட் ஆஃப் சர்வீஸ்என்று இரண்டாவது முறையாக மூக்கை உடைத்தது. இடையில் ‘வழி மாறிவிட்டோமோ?என்ற சந்தேகம் வேறு வந்தது. “மச்சான், ரொம்ப நேரமா நடக்குறோம். இன்னும் வண்டி கேட் வரல. நீ சொல்லித்தானேடா இந்த வழியா வந்தோம்? மாத்தி விட்டுட்டன்னு நெனைக்குறேன்” என்று தீபக்கிடம் நான் மல்லுக்கு நிற்க, அவன் நடந்து சென்ற ஒருவரிடம் வழி கேட்டான். சரியான வழியில்தான் சென்று கொண்டிருக்கிறோம் என்று அறிந்தபோதுதான் மற்றொரு உண்மை புரிந்தது - ‘நாம் நினைத்த ஒரு விஷயம் எதிர்பார்த்ததைப் போல் நடக்கவில்லை என்றால், எதன்மீதாவது/யார்மீதாவது காரணமேயில்லாமல் பழியைச் சுமத்திவிட மனம் தயாராகி விடுகிறது’.

மச்சான், அந்த வண்டி கேட் ஏ.டி.எம். நாம வரும்போதே செம்ம கூட்டமா இருந்துச்சு. இப்போ திரும்பப் போகும்போது காசு காலியாகி இருந்தா என்னடா பண்றது?என்று தீபக்கைக் கேட்டபோது, “ஏண்டா, உனக்கெல்லாம் வாயில நல்ல வார்த்தையே வராதா?என்று அசிங்கமாகக் கேட்டான். உடலும், மனமும் சோர்ந்த நிலையில் வண்டி கேட்டின் அருகே சென்றபோது, புத்துணர்ச்சி ஏற்பட்டது. ஏடி.எம். திறந்திருந்தது, கூட்டமும் நின்றிருந்தது. வாழ்க்கையில் முதல்முறையாக வரிசையில் நிற்கப்போவது குறித்து ஆனந்தம் பிறந்தது. “மச்சான், இப்போல்லாம் கூட்டம் இல்லாத ஏ.டி.எம்.தான் நம்ப முடியாது போலஎன்று சிரித்தபடியே வரிசையில் நின்றேன்.

“இங்க அடுத்தது என்னென்ன வில்லங்கம் வெச்சுருக்காங்களோடா?என்று சொல்லிச் சிரித்தபோது, முன்னால் நின்றிருந்தவர், “தம்பி, ரெண்டாயிரம் ரூபா நோட்டு மட்டும்தான் வருது. ஒரு கார்டுக்கு ஒரு நாளைக்கு ரெண்டாயிரம் ரூபாதான், தெரியும்ல?என்றார். அக்கணத்தில்தான் சட்டென்று உறைத்தது, என்னுடைய அக்கவுண்டில் 2,000 ரூபாய் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளாமலேயே வந்துவிட்டேன் என்று. இணைய வழி பேங்கிங்கையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. ‘டோல் ஃப்ரீஎண்ணுக்கு அழைத்து, மீதமுள்ள தொகையை அறிந்து கொள்ளலாம் என்று தோன்றியது; ஆனால் இரண்டு காரணங்களுக்காகக் கேட்கவில்லை.
1)      அவ்வரிசையில் நின்றுகொண்டு அதைக் கேட்பது அவமானமாகப் பட்டது.
2)      காசு இல்லையென்று சொல்லிவிட்டால், அம்மாவுக்குத் தெரிந்த நண்பர்களிடம் பணம் வாங்கும் எண்ணமும் இல்லை.

வரிசையில் நின்றிருந்தவர்களிடம் இருந்து விதவிதமன சம்பாஷணைகள் வெளிப்பட்டன.

“உள்ள போயி அவ்ளோ நேரமா என்னய்யா பண்றான் அந்தாளு? பணம் எடுக்குறானா, பங்களா கட்டுறானா?

அங்க பாருங்க. திருட்டுப் பய. ஒரே ஆளு நாலு கார்டு எடுத்துட்டு வந்து எட்டாயிரம் ரூபா எடுத்துட்டுப் போறான். ரெண்டாயிரம், ரெண்டாயிரமா ஒவ்வொரு நாளா எடுக்கலாம்ல? அப்புடிக்கு என்ன இப்போ தல போற செலவு இருக்கப்போகுது?

“நைட்டு 11:50க்கு வாங்க சார். 10 நிமிஷம் வெயிட் பண்ணுனா அடுத்த நாளுக்கான ரெண்டாயிரத்தையும் எடுத்துட்டுப் போயிடலாம்.”

இன்னும் பற்பல கருத்துக்கள், யோசனைகள், திட்டுக்கள், ஷொட்டுக்கள். இப்படியாக வரிசை நகர்ந்துகொண்டே செல்லச்செல்ல எனக்கு இதயத்துடிப்பு அதிகரித்தது. காசு எப்புடியாச்சும் இருக்கணும் கடவுளேஎன்று வேண்டிக்கொண்டே மனதிற்குள் விஷ்ணு சஹஸ்ரநாமம், ஹனுமான் சாலீஸா, கந்த சஷ்டிக் கவசம் என்று அறைகுறையாகத் தெரிந்த அனைத்து சுலோகங்களையும் ‘மெட்லிசெய்துகொண்டிருந்தேன். கட்டக்கடைசியாக எனக்கு முன் இருவர் இருந்த நிலையில், கைப்பேசியில் எஸ்.எம்.எஸ். வந்தது. எடுத்துப் பார்த்தபோது மனத்தில் இனம்புரியாத சந்தோஷம். இரண்டு நாட்களுக்கு முன்பாக மறுத்திருந்த அமேசான் ஆர்டருக்கான ‘ரீஃபண்ட்தொகை, அக்கவுண்டிற்கு மாற்றப்பட்டிருப்பதாக வந்த தகவல்தான் அது. “யுவர் அமேசான் ஆர்டர்.... 619 ஹேஸ் பீன் ரீஃபண்டட். அவைலபிள் பேலன்ஸ் இன் யுவர் அக்கவுண்ட் இஸ் 2605.39என்று மின்னியது.

யோசித்துப் பார்த்தபோதுதான் திடுக்கிடும் உண்மை பிடிபட்டது. தீபக்கிடம் கைப்பேசியைக் காட்டினேன். “619 ரூபா வந்தே, அக்கவுண்ட்ல 2605 தான் இருக்குன்னா அப்போ முன்னாடி 1986 ரூபா தான் இருந்திருக்கும். நாம இவ்ளோ நேரம் நின்னதுக்கு யூஸே இல்லாமப் போயிருக்கும்என்று சொல்லிச் சிரித்தேன். டேய் யப்பா, உன்ன நம்பி உன் கூடப் பிச்சாவரம் வந்தேனே! என்னச் சொல்லணும்டாஎன்பதுபோலப் பார்த்துச் சிரித்தான்.

பணத்தை எடுத்துக்கொண்டு வந்தபோது பெரிய சாதனை செய்தது போன்ற உணர்வு இருவரிடமும் மேலோங்கியது. அம்மாவிடம் கர்வத்துடன் தகவலைச் சொல்லியாயிற்று. “மச்சான், இப்போதான் எனக்கு இந்த நாள் முடிஞ்ச மாதிரி இருக்கு. அடுத்த பஸ்ஸுல ஊருக்குப் போயி சேர்றோம்என்றான் தீபக். இப்போது அவன் தப்புக்கணக்குப் போட்டிருந்தான். அவனைப் பொறுத்தவரையில் அந்த நாள் அத்துடன் முடியவில்லை என்பது அவனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

                                                                                                                               (தொடரும்)

Thursday, December 1, 2016

ஒரு நாள், ஆனால் திருநாள் #1

(மூன்று பாகங்கள் கொண்ட இத்தொடரின் முதல் பாகம் இது)

விடுமுறை விட்டாலும் விட்டார்கள். கல்லூரியில் இருந்தபோது, “வீட்டுச் சோறு வீட்டுச் சோறு என்று அலைந்த மனது, வீட்டில் இருப்புக் கொள்ளவில்லை. நான் வீட்டில் வெட்டியாக இருந்தது போதாமல் பாட்டியை வேறு நச்சரித்துக் குடைந்துகொண்டே இருந்தேன். முதலில் ஓரிரண்டு முறை, “பேராண்டிதானே?என்ற நினைப்பில் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாலும், போகப்போக அவரது முகபாவங்கள், “எப்போடா காலேஜ்ல இருந்து வருவான்?என்பதிலிருந்து “ஏன்டா இங்க வந்து என் உயிர வாங்குற?என்கிற ரீதியில் மாறுவதை ஒவ்வொரு கணமும் தெள்ளத்தெளிவாகப் பார்க்க முடிந்தது.

வெட்டியாக வீட்டில் இருந்தால், என்னாலும் பாட்டியை வெறுப்பேற்றுவதைத் தவிர்க்க முடியாது என்ற ஞானோதயம் சீக்கிரமே மனதுக்குள் பிறந்துவிட்டமையால், எங்கேனும் வெளியில் செல்லலாம் என்று முடிவெடுத்தேன்.

அன்றைய தினம் ராசிபலனில் யோகம் அல்லது நட்பு எனும் குறிப்பு ரிஷபத்திற்கானதாக இருந்திருக்க வேண்டும். நண்பன் தீபக்கும் வெட்டியாக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களின் மூலம் தகவல் கிட்டியது. எனது அதிர்ஷ்டம், அவனுக்குப் பூர்வ ஜென்ம பாவம்! சிக்கிக்கொண்டான் பலியாட்டைப் போல. ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடந்த பேச்சுவார்த்தையின்படி, அடுத்த நாள் காலை பிச்சாவரம் செல்வது என ஏகபோகமாக, ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது; இருவருக்காகச் சட்டரீதியாகத் தீர்மானம் நிறைவேற்றாத குறைதான்.

அம்மாவிடம் சொல்லி அனுமதியும் வாங்கியாகிவிட்டது. ஆனால், நம் நேரம்தான் எப்போதுமே கொஞ்சம் சறுக்கலாகச் செல்லுமே! அன்றென்று பார்த்து அம்மாவுக்கும், எனக்கும் நல்ல வாக்குவாதம். அதனால் நான் கிளம்பும் முன்பாக அவர் என்னுடைய கஜானாவிலேயே காசை வைத்துவிட்டார். பொதுவாகக் கையில் கொடுப்பதுதான் வழக்கம். ‘ஏனோ ஏனோ விதியின் சதி விளையாடுதேஎன்ற ரீதியில் அன்று வாய்க்கால் தகராறு. காசை அவர் வைத்தபோது எதையுமே கண்டுகொள்ளாமல், போடா... ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்என்கிற அளவிற்குப் பந்தாவாகச் சுற்றிவிட்டு, அவர் அந்தப்பக்கம் திரும்பியவுடன் பர்ஸைத் திறக்காமல் அப்படியே தொட்டுப் பார்த்தேன்; கனமாக இருந்தது. ‘அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டருஎன்று மனம் துள்ளியது.

உள்ளே இருப்பது 20 ரூபாய்க் கட்டு என்றும், “750 ரூபாய் வெக்கறேன்டா. போதுமா?என்றும் அம்மா கேட்டதும் என் மனத்தில் பதியவில்லை. கோபத்தினால் காதிலிருந்து புகைந்து கொண்டிருந்தபோது எப்படிக் காது கேட்கும்?

இப்படியாகத் தொடங்கியது பிச்சாவரம் பிக்னிக். சிதம்பரம் பேருந்தைப் பிடித்து, வண்டி கேட்நிறுத்தத்தில் இறங்கி, டவுன் பஸ் பிடித்துப் பிச்சாவரம் படகுத்துறையில் இறங்கியாயிற்று. இருவருக்கென்று சொல்லித் துடுப்புப் படகுக்குச் சீட்டும் வாங்கியாயிற்று. படகில் ஏறிய பிறகு துடுப்புப் போடுபவரிடம் தனியாக ஒரு ‘அமௌண்டைக் ‘கரெக்ட்செய்தால் காடுகளுக்குள் கூட்டிச் செல்வார் என்பதும் தெரியும். அது சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதா, இல்லையா என்பதெல்லாம் யோசிக்கக்கூடிய விஷயமே இல்லை. அந்தக் கூடுதல் பணம்தான் பிச்சாவரம் படகு அனுபவத்தை முழுமையாக்கும்.

படகுக்காரரிடம் கூடுதல் காசு கொடுக்கலாம் என்று, “ஹெஹ்ஹே... நாங்கல்லாம் யாரு?என்ற தொனியில் பர்ஸைத் துழாவியபோதுதான் தெரிந்தது அவருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தில் 20 ரூபாய் குறைந்தது என்று. மேலும், அவருக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டால், ஊருக்குத் திரும்பிச் செல்லக் காசு இல்லை என்பதும் உறைத்தது. தீபக், “வேண்டாம்டா ராசாஎன்பதாகக் கெஞ்சும் பார்வையைத் தெளித்தான். ஆனால் அவ்வளவு பெரிய பரப்பில் இருக்கும் இயற்கையன்னையின் பரிசை விட்டுவிட்டுப் போக மனமில்லை. பயணம் இனிதே தொடங்கியது, பின்விளைவுகளை அறியாமல்.
சிறிது தூரம் சென்ற பிறகு, படகுக்காரரிடம் பேச்சு துவங்கியது. அவரது பெயர் பாலசுப்பிரமணியன் என்று பேச்சினூடே அறிந்தோம்.

எவ்ளோ நாளாண்ணா இங்க இருக்கீங்க?

“அது இருக்கும் தம்பி ஒரு 25 வருஷம். இதான் ஊரு ஒலகம் எல்லாம் நமக்கு.
“மழையெல்லாம் வந்தப்போ போட்டிங் இருந்துச்சா?

(இந்த வருடம் பெய்த அவ்வப்போதையத் தூறல்களைக் குறிப்பிடுகிறோம் என நினைத்துக்கொண்டு) “அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனையே இல்ல தம்பி. இந்தச் சாரலுக்கெல்லாம் ஒண்ணும் பிரச்சன ஆகாது.

“அட, அதில்லிங்கண்ணா! போன வருஷம் பெஞ்சுச்சே அந்தப் பேய் மழையச் சொல்றோம்.

“ஓ அதுவா? அதுக்கென்ன தம்பி. எங்க ஊடெல்லாம் தண்ணியில தான் மெதந்துச்சு.

“இங்க பிச்சாவரத்துல இருக்குற மரம், செடியெல்லாம் புயல், மழையெல்லாம் கொறைக்கும்னு சொல்லுவாங்க. அதான் கேட்டேன்.

“காத்தோட வேகத்தக் கொறச்சிடும் சார். தண்ணியெல்லாம் ஊருக்குள்ள வந்தா ஒண்ணும் பண்ண முடியாது.

“அப்பல்லாம் வேலைக்கு வருவீங்களா?

“(சிரிக்கிறார்) அதெல்லாம் ஒண்ணும் கெடையாது. தட்டுமுட்டுச் சாமான அடகு வெச்சுட்டு, அங்க இங்கக் கடன வாங்கி அப்டியே ஓட்டிர வேண்டியதுதான். அப்புறம் காசு வந்த பின்னே, திரும்பக் குடுக்குறதுதான்.

இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது சிலர் படகுகளில் பயணிகளே இல்லாமல் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தோம்.

“அண்ணா, அவங்க எல்லாம்....என்று இழுத்தோம்.

“மீன் பிடிக்குறாங்க தம்பி. இங்க நெறய அம்புடும். மீனு, எறா எல்லாம் பிடிச்சுட்டுப் போயி சமைக்குறதுக்கு வெச்சுக்கிட்டு, மீதிய வித்துடுவாங்க

“மீன் பிடிக்கலாங்களா? எதுவும் தடையெல்லாம் இல்லையா?

(அவர் சொன்ன பதிலிலிருந்து தடையைப் பற்றிய உண்மையான நிலைமையை அறிய முடியவில்லை) “அதுக்கென்ன? அதெல்லாம் ஒண்ணுமில்ல சார். நான் போட் ஓட்டுறேன். நான் மீன் பிடிக்குறென். இதுல அவங்களுக்கென்ன? நான் பாட்டுக்கு அப்புடியே போட்ல வெச்சு மறைவா எடுத்துட்டு போயிடுவேன்.

சிறிது தூரம் இன்னும் உள்ளே சென்றபோது, தண்ணீரில் மிதந்தபடி சில பெண்மணிகள் கூடையுடன் ஏதோ செய்துகொண்டிருந்தனர்.

“இவங்க என்னண்ணா பண்றாங்க?

“எறா பிடிக்குறாங்க.

“கூடையிலயா?

“ஆமா ஆமா. சிக்கிடும் சார். நீங்க நெனைக்குற மாதிரி இல்ல. கரெக்டா பிடிச்சுடுவாங்க.

“சரி, அதெல்லாம் இருக்கட்டும். எப்புடி மெதக்குறாங்க?

“நல்லா பாருங்க தம்பி. மெதக்கல, உக்காந்துருக்காங்க. மரத்த ஒட்டுன எடத்துல எல்லாம் ரெண்டடி, மூணடி ஆழம்தான் தண்ணி இருக்கும். உக்காந்த மேனிக்கே பிடிச்சுடலாம்.

“நாள் பூரா இப்புடியே உக்காந்துருப்பாங்களா?

“அர நாள் இருப்பாங்க. சில நேரம், அதையும் தாண்டி. மீனு கூட நெறைய சிக்குச்சுன்னா கெளம்பிடுவாங்க.

“கெளம்பிடுவாங்கன்னா? போட்லயா?

“சில நேரம் கடைசி போட் வரும். சாயங்காலம் அதுல ஏறிப் போயிருவாங்க. இல்லாட்டி, அப்புடியே தண்ணியோடவே நீஞ்சிப் போயிருவாங்க. இங்கப் பக்கத்துலதான் தம்பி எல்லாருக்கும் வூடு இருக்கும்.

இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது கூடுதல் பணம் கொடுத்ததற்கான இடம் வந்தது. இருபக்கமும் அடர்ந்த மரங்கள் சூழ, இடையில் படகில் சுகமாகச் செல்வது அலாதியான இன்பம் தருவதாக இருந்தது. ‘செல்ஃபிஎடுக்கத் தொடங்கினோம். “வேணும்னா அந்தப் பக்கம் போயி உக்காருங்க சார். நான் பிடிக்குறேன் ஃபோட்டாஎன்றார்.

முதலில் சற்றே தயங்கிய நான், பின்பு அவரிடம் கைப்பேசியைக் கொடுத்து, புகைப்படம் எடுக்கும் முறையை விளக்கத் தொடங்கினேன். “தெரியும் தெரியும் தெரியும் தம்பி. என் கூட வர்ற எல்லா ஆளுங்களுக்கும் நான் இந்த மாதிரி ஃபோட்டா எடுத்துக் குடுத்துருக்குறேன்என்றபடி, சரமாரியாக எடுக்கத் தொடங்கினார். தேர்ந்த புகைப்படக் கலைஞர் போல, கைப்பேசியை மேலும், கீழும் தூக்கி, இறக்கியபடி அங்கும், இங்குமாக அலைக்கழித்துச் சுமாராக ஒரு 10 படங்கள் எடுத்தார். “என்னத்த எடுத்தாரோ?என்ற நினைப்புடன் வாங்கிப் பார்த்தபோது நன்றாகவே வந்திருந்தது.

மரத்தின் பெயர்களை எல்லாம் சொல்லிக்கொண்டே வந்தார். படகுத்துறையில் பார்த்த ரைசோஃபோரா என்ற ஒரு பெயரை வைத்துப் பீலா விடலாம் என எத்தனித்தபோது, கண்டன், சுரபுன்னைஎன்று பெயர்களாக அடுக்கிக்கொண்டே சென்றார் (இரண்டு பெர்யர்கள்தாம் எனக்கு நினைவிருக்கிறது). “வாயையும், ##**&யும் மூடலாம்என்று என்னிடம் சொல்லாமல் சொல்லியது போலிருந்தன அவரது பதில்கள். அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்த அந்த ‘மண்ணின் மைந்தன்எனும் பெருமையும், திமிரும் அவரது பேச்சில் வெளிப்பட்டன.

இந்த மரத்த எல்லாம் ஃபாரீன் ஆளுங்க காந்தம் போட்டு வேரோட இழுக்குறாங்க தம்பி. கோடி கோடியா காசு வரும் இதுல.

“அது எப்புடி அண்ணா பண்ண முடியும்? இங்க இருக்குற ஆளுங்க விட்டுடுவாங்களா?

“அதுக்கென்னங்க. நமக்கும்தான் காசு குடுக்குறாங்க. நானே இங்க கெளையெல்லாம் வெட்டிக் குடுத்துருக்குறேன். நெறைய காசு தருவாங்க. இந்தச் சதுப்புல ஒரு சில பகுதிய எடுத்துட்டு போயி வேற ஊருல எல்லாம் வெதச்சா அங்கயும் புயல் எல்லாம் தடுக்கும்ல? மூலிகைங்க வேற எல்லாம். அதான் எடுத்துட்டுப் போறாங்க.”

இப்பதில் அதிர்ச்சியளித்தது; ஆனால், யோசித்துப் பார்த்தபோது அவர் சொன்னதன் உண்மையான முகம் தெரிந்தது. என்னதான் அவ்விடத்தின் மீது பாசமும் பற்றும் இருந்தாலும், மூன்று வேளைச் சோற்றுக்கே வழியில்லை எனும் நிலையில், வேறு வழியின்றியேனும் அவர்கள் அவ்வாறு செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று புரிந்தது.

“சரி அத விடுங்கண்ணா. எவ்ளோ தூரம் ஒரு நாளைக்குத் துடுப்புப் போடுவீங்க?

“அது என்ன அப்புடிக் கேட்டுட்டீங்க? ஒரு நாள்ல மூணு நாலு ட்ரிப் எல்லாம் போயிருக்கேன் தம்பி. வேகமா ஓட்டுவேன். மத்தவங்க எல்லாம் ரெண்டு மணிநேரம், ரெண்டர மணிநேரத்துல கடக்குற தூரத்த நான் ஒண்ணர மணிநேரத்துல கடந்துருவேனே பெருமையும், அகங்காரமும் நிறைந்த புன்னகை வெளிப்பட்டது அவரது திருவாயிலிருந்து.

“ஒடம்பு, கை, காலெல்லாம் வலிக்காதாண்ணா?

“வலிக்கும்தான். அதுக்குத்தான் சரக்கு இருக்கே. சாயங்காலம் போயி குடிச்சிடுவேன். இங்க இருக்கும்போதுதான் குடிக்கக்கூடாதுன்னு ரூல்ஸ் எல்லாம். வெளிய போயிட்டா நான் யாரோ, இவனுங்க யாரோ.

“ஓ அப்புடியா?

“அட, அத விடுங்க. ஒரு டைம் காலையில குடிச்சிட்டு வேலைக்கு வந்துட்டேன். மிஷின்ல ஊதிக்காட்டச் சொன்னாங்க. 70 பக்கம் காமிச்சுச்சு. ‘என்ன, குடிச்சுருக்கியா?னு கேட்டு அனுப்பிட்டாங்க. அதுல இருந்துதான் ஒரு டெக்னிக்கக் கத்துக்கிட்டேன். முட்டக் குடிச்சுட்டாக் கூட, வழக்கமா சாப்புடுறத விட ரெண்டு தட்டு, மூணு தட்டு அதிகமா சாப்புட்டுட்டா, மிஷின்ல காமிக்காது. நமக்கும் கொஞ்சம் இஸ்டெடி ஆயிடும். அப்புறம் பிரெச்சன இருக்காது.

இதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தோம். நாங்கள் அவரது பேச்சை ரசிக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்ட அவர் மேலும் தொடர்ந்தார்.

“சில நாளு காலைல இங்க இருக்குற ஆளுங்களே வைன் ஷாப்ல பாத்துடுவாங்க என்னைய. நான் போயி நல்லா சாப்புட்டுட்டு குளியலப் போட்டுட்டுக் கொஞ்சம் லேட்டா வருவேன். மிஷின்ல ஊதச் சொல்லுவாங்க. ஒண்ணுமே காமிக்காது. சிரிச்சுனே போய்ருவேன். ‘எப்புடிடா தப்பிக்கிறான்?னு யோசிப்பானுங்க. ‘ஏன் லேட்டு?னு கேட்டா, ‘வேல இருந்துச்சு, ஜாமான் வாங்கப் போயிருந்தேன்னு சொல்லிச் சமாளிச்சுடுவேன் இப்போது அவரது கர்வம் தலைக்கேறியிருந்தது. விட்டால் நெஞ்சில் குத்தி, ‘வெற்றி நிச்சயம், இது வீர சத்தியம்என்ற ரீதியில் பெருமைப் பாடல்கள் பாடுவார் போலிருந்தது.

“இது என்னோட போட் இல்ல தம்பி. என்னோடதுல 98ன்னு நெம்பர் போட்டுருக்கும். இது 81, வெற ஆளோடது. இது எனக்குப் பிடிக்கவே இல்ல. என்னோட போட் சும்மா தண்ணியக் கிழிச்சிட்டுப் போகும் பாத்துக்கோங்கஎன்றார்.

கரையை நெருங்கியிருந்தோம். “அங்க பாருங்க. முன்னாடி கூம்பா இருக்குல்ல? அதெல்லாம் மீன் பிடிக்குற போட். அலைய, தண்ணிய எல்லாம் கிழிச்சிக்கிட்டுப் பறக்கும். இது கொஞ்சம் சப்பையா இருக்கும். இதுல மீனெல்லாம் பிடிக்க முடியாது. சும்மாச் சுத்திக் காமிக்க மட்டும்தான். இதுல மீன் பிடிக்கப் போனா, போட்டக் கிழிச்சு ஒடச்சிரும் அலைங்க எல்லாம்என்றார்.

விடைபெறும் நேரம், “இங்கப் பக்கத்துல எங்கண்ணா ஏ.டி.எம் இருக்கும்?என்றோம்.

“நீங்க கடலூர்தானே போகணும்னு சொன்னீங்க! வண்டி கேட் பக்கத்தால இருக்கும் தம்பிஎன்றவர், “இந்தாங்க, டவுன் பஸ்ஸுக்கே இப்போ உங்ககிட்டக் காசு இல்லல்ல?என்றபடி நாங்கள் கொடுத்திருந்ததில் ஒரு பத்து ரூபாய் நோட்டை நீட்டினார்.

காசு இல்லை எனும் நினைவே அப்போதுதான் வந்தது. வாழ்க்கையில் எத்தகைய பிரச்சனைகளும், கஷ்டங்களும் இருந்தாலும், அவையனைத்தையும் மறக்கச் செய்யும் சக்தி இயற்கைக்கு இருக்கிறது என்பதைச் சம்மட்டியால் அடித்து யாரோ என் பின்மண்டையில் இறக்குவது போலிருந்தது. அவருக்கு நன்றி கூறி படகுத்துறையில் இருந்து விடைபெற்றுப் பேருந்துக்காகக் காத்திருக்க வெளியில் வந்தோம்.

“ஹப்பாடா, எப்புடியோ மச்சான். நல்லா ஆளா சிக்குனாரு. டவுன் பஸ்ஸுக்குக் காசு வேற குடுத்துட்டாரேடா. வண்டி கேட்ல எறங்கி ஏ.டி.எம். போறோம். காசு எடுக்குறோம். ஊரப் பாத்துப் போறோம். இன்னிய நாள் எனக்கு அந்த மரம், செடியெல்லாம் பாத்தப்போவே முடிஞ்சு போச்சு மச்சான்என்று தீபக்கிடம் சொன்னேன். அத்தினம் அத்துடன் முடியவில்லை என்பது அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

                                                                                                                               (தொடரும்)