Monday, July 10, 2017

தோசை ஒரு வட்டம்டா!

பெருகிவரும் வட இந்திய உணவுப் பெருக்கத்திலும், ’பார்பெக்யூ’, ’க்ரில்களின் வரவாலும் பாதிக்கப்பட்ட சில பாரம்பரிய தென்னிந்திய உணவு வகைகளுக்கு மத்தியில் கம்பீரமாக வெற்றிநடை போடுவது, சுடச்சுடக் கல்லில், வெள்ளைவெளேர் மாவில், ’சொர்என்ற எண்ணெய்ச் சத்தத்துடன் உருவாகி, வெவ்வேறு பெயர்களில், அடைமொழிகளில், கலவைகளில் பரிமாறப்படும் தோசை மட்டுமேயாகும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் சிற்சில வார்த்தைகளைக் கூறும்போது, மெய்சிலிர்த்து, நரம்பு புடைத்து, முறுக்கேறி, மலைகளை உடைத்து முன்னேறும் உத்வேகம் வரும்; அவ்வாறான வார்த்தைகளின் அகராதியில் என்னளவில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு பதார்த்தம் தோசை. உணவு சமைப்பதும், உண்பதும் அன்றாட வாழ்வின் அம்சங்கள் மட்டுமல்ல, அவற்றையும் தாண்டி அனுபவங்கள் என்று உணர்த்துபவை தோசையைச் சார்ந்த நிகழ்வுகளே.

தோசை தொடர்பாகப் பசுமையாய்ப் பதிந்திருக்கும் நினைவுகள் பல. வீடு, விடுதி, உணவகம், சிறிய கடை எனத் தூணிலும், துரும்பிலும் நிறைந்திருக்கும் உணவுப்பண்டம், தோசையே. ‘வாழ்க்கை ஒரு வட்டம்டாஎன்பதே வட்டமாகச் சுடப்படும் தோசையிலிருந்து உருவான ஒரு சொல்லாடல் எனும் திடமான நம்பிக்கையுடைய ஒரு வித்தியாசமான மானுடப்பிறவி நான். அதை மெய்ப்படுத்தும் வகையிலான சில புரிதல்களை மனத்தில் ஏற்படுத்தி வைத்திருக்கிறேன்.
  • முதலாவதாக, தோசை சுடும்போது மாவு வட்ட வடிவில் கல்லில் ஊற்றப்பட வேண்டும் என்பதைத் தாண்டி, உன்னிப்பாகக் கவனிக்கப் படவேண்டிய விஷயங்கள் சில உண்டு. மாவு முதலில் கல்லின் நடுவில் குவியமாக ஊற்றப்பட்டுப் பின்னர் கல் முழுவதும் பரப்பப்படும் என்பது நாம் அனைவரும் அறிந்தது. எச்செயல் தொடங்கும்போதும் அகலக்கால் வைக்காமல் சிறிதாய்த் தொடங்கிப் பின்னர் பெரிதாய்ச் சாதிக்க வேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்லும் இவ்வட்டம் எவ்வளவு மகத்தானது?
  • அடுத்ததாகக் கல்லில் மாவு ஊற்றப்பட்ட பின் ஆங்காங்கே சிற்சில துளைகள் மாவினூடே தென்படும். அவற்றின் மூலம்தான் மாவைச் சுற்றியும், அதன்மீதும் ஊற்றப்படும் எண்ணெய்யை உறிஞ்சி, சுவையான தோசையாக உருமாறுகிறது. அதேபோல, ‘அடிதாங்கி, இடிதாங்கி, வலிதாங்கிபல்வேறு இன்னல்களைக் கடக்கும் மனிதர்களே வெற்றிபெறுகிறார்கள் எனும் ஞானோபதேசத்தை எனக்கு வழங்கியது கூட தோசைதான்.
  • இதனைத் தொடர்ந்து, தலைப்பை விளக்கும் முக்கியமான தருணத்திற்கு இப்போது வந்தடைகிறோம். பொதுவாக நம் வீட்டிலெல்லாம் இட்லியோ, சப்பாத்தியோ செய்தால் மொத்தமாக முதலிலேயெ அனைவருக்குமான தேவைக்கேற்ப தயார் செய்து விடமுடியும்; சப்பாத்தியைஹாட் பேக்கில் வைத்தால் அதே சுவை மற்றும் மணத்துடன் இருக்கும்; இட்லியைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. ஆனால், தோசையை என்னதான் செய்தாலும், சூட்டுடன் கல்லிலிருந்து எடுக்கப்பட்டதைச் சாப்பிடும் சுவையும், சுகானுபவமும் கிடைப்பதில்லை. எனவே, முதலில் ஒருவர் (அல்லது பலர்) சாப்பிடும்போது ஒருவர் (அல்லது, தோசைக்கற்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, பலர்) தோசை சுடுவதாகவும், பின்னர் கதாபாத்திரங்களும், காட்சிகளும் மாறுவதாகவுமே அமைய வேண்டும். அதுவே சிவகாமியின் கட்டளை. அக்கட்டளையே சாசனம். அவ்வாறு இருப்பின் மட்டுமே, அனைவரும் சுவையான தோசையைச் சுவைக்க முடியும். காட்சிகள் மாறி, உண்பவர் பரிமாறுபவராக மாறும் இத்தலைகீழ் விகிதமே, ‘வாழ்க்கை ஒரு வட்டம்டாஎன்பதன் சாராம்சம் (இவ்விடத்தில், ’எப்பூடீ?’ என்ற ரீதியில் பெருமையாகக்காலரைத் தூக்கிவிடும் எழுத்தாளனைக் காறித்துப்புவதோ, கடவுளாய்ப் பார்ப்பதோ வாசகர்களின் எண்ணவோட்டங்களின நிலைகளைப் பொறுத்தது).
அடுத்தபடியாக, தோசை என்று சொன்னாலே நினைவுக்கு வரும் சில சம்பவங்கள் நடந்திருக்கின்றன. தோசையின் உப்புச்சப்பிற்குச் சிறிதும் குறைவில்லாத வகையில் சுவாரசியத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் மேலே தொடர்கிறேன்.

மட்டைப்பந்தும், முறுகல் தோசையும்:

முகநூலில் ‘X அண்ட் Y மேக் பெஸ்ட் பேர்என்று கண்டமேனிக்குக் கோக்குமாக்கானமீம்களைப் பார்க்கும்போது என் மனத்தில் எழும் ஜோடி, தொலைக்காட்சியில் ஓடும் கிரிக்கெட் போட்டியும், அம்மாவின் சூடான தோசைகளும்தான். பகலிரவு ஆட்டங்கள் இருந்தால், அன்றைய இரவு தோசைக்குப் பதிலாக இட்லி செய்துவிடலாம் எனும் நிலைக்கு எனது தாயைத் தள்ளிய பெருமை, தோசையென்றால் மட்டும் கட்டுக்கடங்காத கடோத்கஜனாய் உருமாறும் எனது வயிற்றையே சேரும்.

ஒருமுறை, இந்திய அணியின்சேஸிங்கைப் பார்த்துக்கொண்டே என்னையுமறியாமல் முரட்டுத்தீனி தின்றுவிட்டேன் போலும். அரைத்த மாவு தீர்ந்துபோய், அவசரகோலத்தில் கரைத்த கோதுமை மாவில் ஊற்றிய தோசைகளும் போதாமல், நான் அமர்ந்த இடம் விட்டு அசையாமல் இருந்தபோது, தோசைக்கரண்டியை மேஜைமீது வைத்துவிட்டு அவரும் அமர்ந்துவிட்டார். அப்போதுதான் நிலைமையின் தீவிரம் புரிந்தது. பிறகு, கடையில் மாவு வாங்கி வந்தபின், பரிதாபமாக அர்த்தராத்திரியில் அவருக்காக அவரே தோசை ஊற்றித் தின்றது தனிக்கதை.

பரிமாறுதலும், பழிவாங்குதலும்:

உணவகங்களில் உணவு பரிமாறும் அண்ணன்களையும், துணிக்கடைகளில் சலிக்காமல் வகைவகையான ஆடைகளை எடுத்துக்கொடுக்கும் அக்காக்களையும் பார்த்தால் நெஞ்சில் கழிவிரக்கம் தோன்றுவது என்னளவில் தவிர்க்க முடியாத பழக்கமாகிவிட்டது. எனினும், அரிதான சில சந்தர்ப்பங்களில் அவ்விரக்கத்தைத் தாண்டிய கோபம் வருவதைத் தவிர்க்க முடிவதில்லை.

கல்லூரியினருகே இருக்கும் பிரபமான ஒரு உணவகம் அது. அங்கு அவ்வப்போது சென்று சாப்பிடுவது வாடிக்கையான சம்பவம் (’விடுதிச் சாப்பாட்டை வெறுத்தேன் என்று சொல்லவில்லை; சாப்பிட இன்னும் கொஞ்சம் சுவையாக இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் சொல்கிறேன்என்று கமல்ஹாசனைப் போன்ற குழப்படித் தத்துவங்கள்தாம் இவ்வாறு வெளியே சென்று சாப்பிடுவதற்கான முதற்படி).

அவ்வுணவகத்தின் வாடிக்கையாளர் சேவை மிகவும் தரம்தாழ்ந்து வருவது ஒவ்வொரு முறையும் அங்கு சென்று உண்ணும்போது தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது. ஒருமுறை, தர்மசத்திரத்தில் அன்னதானம் உண்ணும் அடியார்களைப் போல் ஏனோதானோ என்று என்னையும், நண்பர்களையும் நடத்தினார் கல்லாவில் இருந்த ஒரு அம்மணி. அப்போது விசித்திரமான ஒரு நடைமுறையைக் கண்டுபிடித்தோம். விதவிதமான தோசை வகைகளைக் கொண்டுவரப் பணித்தால் அவர்கள் குழம்பிப்போகின்றனர் என்பதே அது.

இக்கருத்தை மனத்தில் கொண்டு, அடுத்த முறை அங்குச் சென்றபோது ரவா தோசை, வெங்காய தோசை, பனீர் தோசை, வெண்ணெய்த் தோசை என்று பலவிதமான (சில வாயில் நுழையாத பெயருடைய தோசைகள் உட்பட) தோசைகளைப் பட்டியலிட்டோம். இவ்வளவுஆர்டர்செய்தால் இவ்வளவு நேரம் ஆகும் எனும் மனக்கணக்குச் சரியாகத் தெரிந்தபடியால், சரியாக அவர்கள் எடுத்துவருவதற்கு இரண்டு, மூன்று நிமிடங்கள் முன்பாக இடத்தைக் காலிசெய்துவிட்டோம். வேறொரு மேஜையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மற்றொரு நண்பர் குழாமிடம், உணவகக்காரர்களின் முகபாவனைகளைக் கண்காணிக்கச் சொல்லியிருந்தோம். அன்றிரவு வேறொரு உணவகத்தில் சாப்பிட்ட பின்பு, விடுதியறைக்குச் சென்று எவ்வளவு சிரித்தோம், அதன் விளைவாக எத்தனை பேருக்கு வயிறு புண்ணானது எனும் ரகசியம்பிக் பாஸ்கமலால் கூடக் கண்டுபிடிக்க முடியாத மர்மப்புதிர்.


இவையும் இவை போல இன்ன பிற பல்வேறு நிகழ்வுகளும் தோசையெனும் வட்டத்தை மையமாக வைத்தே நடந்தேறியிருக்கின்றன. தோசையைச் சுற்றிவந்த இச்சம்பவங்களும்கூட மீண்டும் மீண்டும் கூறும் கருத்து, ‘தோசை ஒரு வட்டம்டா’. எனவே, ’கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசைஎனும் பழமொழியை உடைத்து, ‘சட்னிக்கும் ஆசை, தோசைக்கும் ஆசைஎனும் புதுமொழி பரவ உறுதியெடுப்போம்; ‘அத்தனைக்கும் ஆசைப்படுஎனும் தத்துவத்தை மாற்றி, ‘அத்தனைக்கும் தோசைப்படுஎனும் புரட்சியைத் தோற்றுவிப்போம். தோசை வாழ்க!