Saturday, May 14, 2016

நினைவுகள்

பேருந்தினின்று இறங்கியவுடன்
அந்த ஊர் தன்
சொந்த ஊரா எனும் கேள்வி

மண் வீதியில் ஓடி விளையாடிய கால்கள்
சிமெண்ட் சாலையில் மெல்ல நடந்தன
கால வேகத்தில் ஏற்பட்ட மாற்றங்களினூடே
தொலைத்த அடையாளம் தேடி

சட்டென எங்கிருந்தோ வெளிப்பட்ட
குழந்தையொன்று
சிரித்தபடியே வழிகாட்டியது;
வீட்டில் அம்மா அப்பாவைத் தவிர
அனைத்தும் புதிதாய்த் தெரிந்தன;
தோட்டத்தில் சுள்ளெனக் கொளுத்திய வெயில்
வெட்டப்பட்ட தென்னை மரத்தினை – இவன்
சிறுநீரூற்றி வளர்த்த மரத்தினை – நினைவூட்டியது.

பள்ளிக்குச் சென்றபோது மனத்தில்
இனம்புரியா உற்சாகம்
துள்ளிக்குதித்த இதயத்துடிப்பைச் சுமந்தபடி
உள்சென்றவனுக்குப் பேரிடி

சிரிக்கும் ஆசிரியப் பெருமக்கள்
கூக்குரலிடும் மாணவர்கள்
”அவர்கள் இப்போது இல்லை;
காலம் மாறிவிட்டது” சொன்னது குழந்தை
கணினி கற்பித்துக் கொண்டிருந்தது,
52 எந்திரங்கள் கவனித்துக் கொண்டிருந்தன
வகுப்பறையெனும் மயானத்தில்

உளம் சிறுத்து – வெயிலில்
முகம் கறுத்து, முற்றும் வெறுத்துச்
சோர்வாய் நின்றவன்
“நல்லா இருக்கியாய்யா?” எனும்
குரல் கேட்டுத் திரும்பினான்

வழிந்த எண்ணெய்யும் கிழிந்த சேலையுமாக
காரைப்பல் தெரியச் சிரித்தாள் பள்ளி ஆயா,
“கொழந்ததான் கூட்டி வந்தானா?”
சிரித்தது குழந்தை ஆயா கேட்டவுடன்;
அன்னியமாய்த் தெரிந்த சுற்றுப்புறம்
அன்னியோன்யமானது அப்புன்னகையால்!

உடன் வந்த குழந்தைக்குப்
பாதையனைத்தும் அத்துப்படியாய்த் தெரிந்தது
ஆச்சரியத்துடன் அதனிடமே கேட்டான்
“உன் பெயர் என்ன?” என்று

“நினைவுகள்” என்றது.