ஆழ்ந்த
உறக்கத்தில் இருப்பது அவனுக்கே புரிந்தது. நித்திராதேவி, மூடியிருக்கும் இமையைத் திறக்க விடாமல் அலகிலா விளையாட்டில் ஈடுபட்டிருந்தாள். எவ்வளவு முயன்றும் கண்ணைத் திறக்க முடியவில்லை. காரணமேயின்றி இதயத்துடிப்பு
பல மடங்காக அதிகரிப்பதை உணர்ந்தான். வாயைத் திறந்து ‘ஓ’வென்று கத்த வேண்டுமெனத் தோன்றியது. ஆனால், வயிற்றுக்கும் தொண்டைக்குமிடையே உருண்டுகொண்டிருந்த உருவமில்லா உருண்டையோ, இரவில் மிதமிஞ்சி தின்ற கோதுமை தோசையோ அடைத்துக்கொண்டு குரலும் வெளியே வரவில்லை. நெரிசலான
நடுரோட்டில் அகப்பட்ட குட்டி நாயைப் போலப் பரிதாபமாக ‘ம்ம்… ம்ம்…’ என்று
குரல் மட்டும் சங்கீத சாதகமாக வெளியே ஒலியாய் வெளிப்பட்டது.
கட்டிவைக்கப்பட்டதைப்
போன்றதொரு உணர்வு பீடித்திருந்தது. உடல் எடை கூடியிருப்பதைப் போல் உணர்ந்தான். புருவத்தைச் சுருக்கிப் பல்லைக் கடித்து முயன்றபோதும் எழுந்து உட்காருவது என்பது மலையை நகர்த்தும் காரியமாகவே இருந்தது. தன்னை
யாரோ கடத்திக்கொண்டு வந்து கட்டிவைத்திருக்கிறார்கள் என்றும், கண்ணையும்
கட்டிவிட்டிருக்கிறார்கள் என்றும் தோன்றியது. ‘இதெல்லாம்
இல்லாம பின்ன ஏன் கண்ணையும் திறக்க முடியல, வாயையும்
அசைக்க முடியல’ என்று
உட்குரல் புலம்புவது தெள்ளத்தெளிவாகக் கேட்டது.
மிகவும்
பிரயத்தனப்பட்டு ஒரு கையை எடுத்து நெற்றியை ஒற்றினான். வியர்வை
வழிந்து பதற்றத்தில் நெற்றி சூடாக இருப்பது தெரிந்தது. உடலே
அனலாகத் தகித்தது. ‘ஒண்ணுமில்ல, ஒண்ணுமில்ல’ என்று உட்குரல் மீண்டும் பேசியது. பின்மண்டையில்
யாரோ சம்மட்டியால் அடித்தது போன்றதொரு வலி குடைந்தெடுத்தது. உண்மையிலேயே அழுது அது வியர்வையினூடே கலந்து விட்டதா, அல்லது
கண் திறக்க முடியாததால் கண்ணீரே வெளியே வரவில்லையா என்று புரியாத அளவிற்கு முகம் முழுவதும் நனைந்திருந்தது.
அலுவலகத்தில்
பட்ட அவமானங்களும், வாங்கிய வசைகளும் நினைவுக்கு வந்தன. மூடியிருந்த
விழிகளினூடே இனம்புரியாத ஒரு ஊதா நிழல் திரையாகத் தோன்றியது. “நீ
எல்லாம் ஒரு வாரம் கூடத் தாங்க மாட்ட தம்பி என் கிட்ட”, “உன்னையெல்லாம் எப்படி வேலைக்குச் சேர்த்தாங்கன்னே தெரியலையே” எனும்
அபிஷேகங்களுடன் சேர்ந்து,
*த்தா ****
பையா, போன்ற
வார்த்தைகளும் ஆராதனையாய் மூளைக்குள் வந்து சென்றன.
காலால்
எதையாவது எட்டி உதைக்க வேண்டுமெனத் தோன்றியது. ஆனால், காலும் மரத்திருந்தது. எவ்வளவு முயற்சி செய்தும் ஒரு அங்குலமும் நகர்த்த முடியவில்லை. மீண்டும் கண், வாய்
என அனைத்துப் புலனுறுப்புகளையும் செயல்படச் செய்ய முயன்று பார்த்தாயிற்று. விழலுக்கிரைத்த நீராக எதுவுமே பலன் தரவில்லை.
சற்றே
மனதை ஒருமுகப்படுத்தலாம் என்றெண்ணி மூச்சை இழுத்து விட்டான். மும்முறை
செய்தபோது சற்றே தெளிவு பிறந்திருப்பதாகப் பட்டது. இப்போது
எங்கிருந்தோ ஒலிப்பது போல ஒலிச்சத்தம் கேட்டது. நூறடிக்
கிணற்றின் அடியாழத்திலிருந்து யாரோ ஏதோ முனகுவது போலிருந்தது. நொடிநொடியாய் நேரம் கரைய, அவ்வொலியின்
வீச்சு அதிகமாகிக்கொண்டே சென்றது. ஒருகட்டத்தில்
செவிப்பறையைக் கிழிக்கும் அளவிற்கு இரைச்சல் அதிகமாகவே காதைப் பொத்த முயன்றான். ஆனால், கைக்கும், காதுக்குமிடையே
இறுக்கமாக ஏதோ ஒன்று தடுப்பாக நின்றது.
அகழ்வாரைத்
தாங்கும் நிலத்தின் பொறுமையைக் கடந்துவிட்டிருந்த அவன், வேறு
வழியின்றி தன் உடல் வலு அனைத்தையும் திரட்டி ஏதோ செய்ய முயல…
தொம்
”யாருடா
இவன்? தெனமும்
ஒரு தடவ கட்டில்ல இருந்து கீழ விழுந்துடுறான். டேய் மச்சி, எந்திரிடா. அதுக்குத்தான் சொன்னேன், வேலையில
என்ன பிரச்சனை இருந்தாலும் அதை வீட்டுகு வரும்போது மறந்துடுன்னு. இங்க வந்து பொலம்பிட்டு அப்புறம் பாட்டு கேட்டுட்டே தூங்குறேன்ற பேர்ல ஹெட்செட்ட வேற போட்டுக்கிட்டு. ஒழுங்கா நிம்மதியா தூங்குனா இப்புடி மயிரு மாதிரி கீழ விழ மாட்ட” என்று
புலம்பிக்கொண்டே அறைவாசியும், நண்பனுமான அருண் இவனது காதில் மாட்டியிருந்த கருவியைக் கழற்றினான். “ஏண்டா **, அனிருத் பாட்டைச் சத்தமா வெச்சுட்டு படுத்தா எப்புடிடா தூக்கம் வரும்?” என்று
கன்னத்தில் அறைந்தபோது, திடுக்கிட்டு எழுந்தான். திருதிருவென்று
முழித்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை.