Sunday, November 15, 2015

கடலின் கருணையில்… மழையின் மடியில்…

          கல்லூரி விடுதியில் ’தேர்வுகள் ஒத்திவைப்பு’ என்னும் அறிவிப்பு வலம்வரும்போதெல்லாம் சிரிப்பதா, அழுவதா என்று குழம்பவேண்டியிருக்கிறது.  ஒரு பக்கம் இப்போதைக்குத் தொல்லையில்லை என்று தோன்றினாலும், சேர்ந்து கொண்டே போகும் தேர்வுகளின் எண்ணிக்கை வயிற்றில் புளியைக் கரைக்கவே செய்கிறது. இதற்கிடையில் சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் மழையை மையமாக வைத்து பரப்பப்படும் ‘மீம்’களும், நகைச்சுவைகளும் கடலூர்க்காரனான எனக்கு சோகத்தையும், கோபத்தையுமே வரவழைக்கின்றன. செய்திகளிலிருந்து, தினசரிப் பேச்சு வரையிலும் சென்னையே நம்மை ஆக்கிரமிக்கின்றன. வேளச்சேரியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரைப் பெரிய செய்தியாக்கும் அனைவரும், கடலூரை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை.
            கடலூர்! தமிழகத்தின் இந்தோனேசியாவான இச்சிறிய ஊரையே புரட்டிப்போட்ட ‘தானே’ எனும் புயலின் பெயர் கூடத் தெரியாமல், “தானேன்னா என்னது? 1854 ரயில் விட்டாங்கல்ல மஹாராஷ்டிரால? அந்த ஊருதானே?” என்று வெள்ளந்தியாகக் கேட்கும் பலரைப் பார்க்கும்போது, அவர்களின் அறியாமையை நினைத்து வருந்துவதா, என் சொந்த ஊரை நினைத்து அழுவதா என்று புரியாமல் விக்கித்துப் போய் நின்றிருக்கிறேன்.
            இம்மழையின் துளிகளினிடையே மிதந்து செல்லும் நினைவோடைகளில் வரும் ‘தானே’ புயலின் நினைவுகள் ஆறாத வடுவாகத் தேங்கி நிற்கின்றது. கைப்பேசிக் கோபுரங்கள் சாய்ந்து கிடக்கின்றன; மரங்கள் முறிந்து விழுந்து சாலை மறியல் நடத்துகின்றன. ’டிஷ்’ தொலைக்காட்சிகளுக்காக மொட்டைமாடியில் பொருத்தப்பட்டிருந்த இணைப்புகள் பறந்து சென்று பக்கத்துத் தெருவில் விழுந்து கிடக்கின்றன; வண்டி நிறுத்துவதற்காகப் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் மேற்கூரைகள் சின்னாபின்னமாகிக் கிடக்கின்றன.
            நலம் விசாரிக்கக் கூப்பிடும் சொந்த பந்தங்களுக்குப் பதிலளிக்க முடியாத நிலையில் தொலைபேசியும், கைப்பேசியும் மலடாகியிருந்தன. மின்சாரமும் இன்றி அவதிப்பட்ட மக்கள் பலர் வீட்டிற்குத் தண்ணீரின்றித் தத்தளித்து கொண்டிருந்தபோது, எங்கள் தெருவுக்கே தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்தது, எங்கள் வீட்டிலிருந்த அடிகுழாய். 20 நாட்களுக்கு இந்த நிலைமையில் வாழ்ந்த கடலூரை என்னால் மறக்க முடியாது.
            கணினி வசதியின்றியும் தொடர்ந்து நடைபெற்ற வங்கிச்சேவைகள் (தந்தை வங்கியில் பணியாற்றுவதால் இது தெரியும்), முழுக்க முழுக்கப் பேனாவைகொண்டே தொடர்ந்தன. பள்ளி விடுமுறை விடப்பட்டிருந்ததால் குதூகலமாக இருந்த எனக்குப் புயலடித்து ஓய்ந்த இரண்டாம் நாள் வீட்டில் இருப்புக்கொள்ளவில்லை. புதிதாக வாங்கியிருந்த ‘கேனான் இக்ஸஸ் 105 டிஜிட்டல் கேமரா’வை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன், பொழுதுபோக்கிற்காக. வெளியே போனபின்புதான் தெரிந்தது குழந்தைகள் ஆசைப்படும் ஒவ்வொரு நாள் விடுமுறைக்குப் பின்னும் எளிய மக்களின் வாழ்வாதாரமே இருக்கிறதென்று. வீட்டில் வண்டி நிறுத்தும் கூரை உடைந்ததற்கே வருத்தப்பட்ட எனக்கு, அங்கு சிதறியிருந்த நூற்றுக்கணக்கான குடிசைகளைக் காணப்பிடிக்கவில்லை; இதயம் நொறுங்கியது. “இது அப்பப்போ நடக்கும் தம்பி. ஒவ்வொரு வருஷம் மளைக்கும் இதுதான் நெலம. கொஞ்ச நாளைக்குக் கான்வெண்ட்ல தங்க வெப்பாங்க. அப்பறம், மள கொறஞ்சதுக்கப்பால மறுபடியும் வந்து எடத்த சரி செஞ்சு அப்டியே இருக்க வேண்டிதான்”, என்று சொன்ன பெரியவரின் சிரிப்பில் புதைந்திருந்தது மகிழ்ச்சி இல்லை என்று நிச்சயம் தெரிந்தது.
            தேவனாம்பட்டினம் என்ற கடலை ஒட்டிய பகுதியில் வசிக்கும் மீனவர்களின் நிலைமையை நினைத்தாலே ரத்தக்கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டும். பாரிசில் நடந்ததைப் போல், கொலை செய்துவிட்டால் கூடப் பரவாயில்லை; வருடந்தோறும் நடக்கும் வாழ்வாதாரக் கொலையை என்னவென்று சொல்வது? இவர்களுக்குத் தலித் என்றும், தாழ்த்தப் பட்டவர்கள் என்றும் பட்டம் சூட்டி, அதில் அரசியல் செய்யும் எச்சில் சாணக்கியர்கள் அதிகம்.
            ”இவனுங்கள யாரு அங்க வீடு கட்ட சொல்றது? வேற எடத்துக்குப் போக வேண்டியதுதானே?” என்று கேட்கும் அறிவுஜீவிகளுக்கு என் பதில் இதுதான். “பிறந்து, வளர்ந்து, வாழும் இடம் என்பது வாழ்வின் ஒரு அங்கமாகிவிடுகிறது; சொர்க்கமோ, நரகமோ அதுதான் என்ற ஒரு காதல் மலர்கிறது; அந்த மண்ணைச் சுவாசிக்கும்போது வரும் உன்மத்தமும், மோகமும் காமத்துப்பாலிலே அடங்காத உணர்வுகள்; அவ்விடத்தை விட்டுச் செல்வது என்பது உடலின் ஒரு அங்கத்தை வெட்டிப் பலிகொடுத்துவிட்டு நகர்வதற்குச் சமமானது.” ‘கத்தி’யும், ‘சிட்டிச’னும் ஏதோ ஒருவகையில், விடாப்பிடியாகக் கடலை நம்பி வாழும் கடலூர் மக்களையும் நினைவுபடுத்துகிறது என்றால் அது மிகையாகாது.
            காலங்காலமாக நமக்குக் கடற்கரை என்றாலே அது மெரினாதான்; குடிசைப்பகுதி என்றாலே ராயபுரம்தான்; பசுமை என்றாலே கோவளம்தான். சென்னையை மட்டுமே முதன்மைப் படுத்தும் இந்தக் கேடுகெட்ட நுகர்வு கலாச்சாரத்தை என்ன சொல்வதென்று தெரியவில்லை. இதே ’தானே’ புயல் சென்னையை நாசம் செய்திருந்தால் அந்த இழப்புகளைச் சரிசெய்யச் சத்தியமாக மூன்று வாரங்கள் ஆகியிருக்காது.
            முந்திரிக்கும், பலாவுக்கும் பெயர் போன பண்ருட்டி, ‘தானே’வுக்குப் பிறகு களையிழந்துவிட்டது. மீண்டுவந்துகொண்டிருக்கும் விவசாயிகளுக்கு அடுத்த அடியாக இம்மழை வந்திருக்கிறது.
            மழையைக் கிண்டல் செய்து நிகழ்தகவலைப் பதிவு செய்யும் கடலோரக் கிராமங்கள் பற்றிய கவலையற்ற அதே நண்பர்கள்தாம், பாரிசுக்குக் கொடி பிடிக்கிறார்கள். கடலூரிலும் ‘வெள்ளிக் கடற்கரை’ இருக்கிறது; தேவனாம்பட்டினம் என்னும் குடிசைப் பகுதி இருக்கிறது. சென்னையில் இருக்கும் 80 லட்சம் மக்களைத் தவிர்த்துத் தமிழகத்தில் வாழும் ஆறரைக் கோடி பேரும் மனிதர்கள்தாம் (கடைசி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் மக்கள்தொகை சுமார் ஏழேகால் கோடி).

            வெள்ளமும் மழையும், இங்கு அமர்ந்து ‘வாட்ஸ் அப்’பில் கடலை போடும் மக்களுக்கு வேண்டுமானால், பத்தொடு ஒன்றாகி பதினொன்றாவதாக இருக்கலாம். கடலோரப் பகுதிகளில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் அது ஒரு பதைப்பு; அவர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும் நரக வேதனை; இதை புரிந்துகொள்ள முடியாத நடைபிணங்களாகவே நம்மை மாற்றியிருக்கிறது இணைய சமூகம்.