Sunday, June 4, 2017

அறுபட்ட உறவு

இன்று

பள்ளியில் படித்த நண்பன் ஒருவனுடன் எதேச்சையாகப் பேச நேர்ந்தது. அவன் கேட்ட முதல் கேள்வி, “என்ன மச்சான், இப்போ எல்லாம் ஸ்கூல் பக்கம் வர்றதேயில்ல?” என்பதுதான். இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் வண்டியைப் பள்ளி வாசலில் நிறுத்திவிட்டு நுழைவாயிற்கதவருகே நின்றதையும், பின்னர் உள்ளே செல்லாமல் வண்டியைச் சட்டென்று எடுத்துக்கொண்டு வேகமாகத் திரும்பிச் சென்றதையும் கண்டதாகச் சொன்னான். “அதெல்லாம் ஒண்ணும் இல்லடாஎன்று மழுப்பலாகச் சொன்னேன். “அதெல்லாம் இல்ல. என்னமோ இருக்கு, சொல்ல மாட்டேன்றஎன்றவனைப் பார்த்தேன்; உண்மையைச் சொல்வதா, வேண்டாமா என்று தெரியவில்லை.


இரண்டு வாரங்களுக்கு முன்

காலையில் அம்மாவைப் பேருந்து நிலையத்தில் விடுவதற்காக வண்டியை வெளியே எடுத்தபோதே அன்று பள்ளிக்குச் சென்று வரவேண்டும் என்று முடிவெடுத்திருந்தேன். பேருந்து நிலையத்திலிருந்து திரும்பும்போதே, ‘றெக்க கட்டிப் பறக்குதையா அண்ணாமல சைக்கிளுஎன்று பள்ளிக்குச் செல்லப்போகும் ஆர்வம் மிகுந்திருந்தது; வண்டியும் அதன் தெம்புக்கு மீறிய வேகத்தில் கர்ணகொடூரமான சத்தத்துடன் பறந்தது.

வீட்டிற்கு வந்தவுடன் வண்டியை நிறுத்திவிட்டு வெகுவேகமாகக் குளியலறை நோக்கி விரைந்த என்னை மருண்டு பார்த்தார் பாட்டி. “என்னாச்சு பயபுள்ளைக்கு? தெனமும் கெஞ்சுனாக்கூட சாயங்காலம் வரைக்கும் குளிக்க மாட்டான். இன்னிக்குப் பயபக்தியாப் போகுது?” என்ற எண்ணம் ஓடியிருக்க வேண்டும்.

ஆனால் வாயைத் திறந்து கேட்க மாட்டார், பாவம். பயம். வீட்டில் என் அதட்டலுக்குப் பயப்படும் ஜீவன்கள் பூனைக்குட்டியும், பாட்டியும்தான். பூனைக்குட்டி இறந்து பல நாட்களாயிற்று. உயிருடன் இருந்தவைகளைக் கோயிலில் விட்டுவிட்டு, “நாய் கடிச்சிடும்னுதான் விட்டோம்என்று தற்சமாதானமும் செய்துகொண்டாயிற்று.

வழக்கமாகக் கைப்பேசியில் ஊரே அலறும்படியான சத்தத்துடன் பாட்டு கேட்டுக்கொண்டேஅவ்வப்போது பாடுதல் என்ற பெயரில் கூட சேர்ந்து கத்திக்கொண்டே (குளியலறையில் கிடைக்கும் பாடல் சுதந்திரம் வேறு எங்கும் கிடைப்பதில்லை) – இரண்டு நாழிகை குளிக்கும் நான், அன்று காக்காக்குளியலுடன் வந்தது இன்னும் பெரிய ஆச்சரியமாயிருந்திருக்க வேண்டும் பாட்டிக்கு.

அம்மா ஆசையுடன் பிசைந்து வைத்திருந்த பருப்பு சேர்த்து, நெய் மணந்த ரசம் சாதத்தை அரக்கப்பரக்க அள்ளிப்போட்டுக்கொண்டு அரைகுறையாய்க் காய்ந்திருந்த தலையை அவசரகோலத்தில் உதறிவிட்டுக்கொண்டு, எவ்வளவு கோதினாலும் நடுவில் புடைத்து நிற்கும் இரு முடிகளைத் திட்டிக்கொண்டு, அதிரடியாய்க் கிளம்பினேன் நான். காதுக்கருவியில் ஒலித்தஷோக்காளிவண்டியின் வேகத்தை பன்மடங்காய்ப் பெருக்கியது.

முத்துக்குமாரசாமி நகர் வழியாக, சங்கர் நகர், விஜயலக்ஷ்மி நகர், ராஜ ராஜேஸ்வரி நகர் கடந்து தங்கராஜ் நகர் தாண்டிக் கம்மியம்பேட்டைப் பாலத்தையும் பிடித்தாயிற்று. அலுங்கிக் குலுங்கும் மேடுபள்ளங்களையும், புழுதியைக் கிளப்பிச் சென்ற மணல் லாரிகளையும் கடந்து செம்மண்டலம் சாலையை அடைந்து பள்ளி நோக்கிச் சென்றேன். பள்ளிக்கு சென்றுகொண்டிருந்ததால் வந்த ஆர்வம், அவ்வப்போது வந்த வேகத்தடைகளையும், அரைபோதையில் குறுக்கே வந்த ஓமக்குச்சி நரசிம்மனின் ன்று விட்டச் சித்தப்பாவையும் சபிக்க வைத்தது. ஒவ்வொரு முறையும், “*த்தா, ***மாளேஎன்றும், “சரியான கிறுக்குக் **” என்றும் வசைச்சொற்கள் வாயிலிருந்து வெளிவரும்போது இனம்புரியாத ஒரு உற்சாகம் புல்லரிக்கச் செய்தது.

உள்ளே செல்வதற்கான வாயில் பாதி திறந்த நிலையில் ஆள் அரவமற்று இருந்தது. வண்டி செல்வதற்குத் தோதாய் இடம் இருந்தபோதும், வெளியே நிறுத்திவிட்டு உள்ளே செல்ல முயன்றேன். கோடை விடுமுறையாதலால் மனித நடமாட்டம் இல்லை. அதற்காகவே அந்நேரத்தில் வந்திருந்தேன், “ஏன் தம்பி இங்க உக்காந்திருக்கீங்க?” போன்ற லொட்டுலொசுக்குக் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் பாவத்திலிருந்து விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்.

உள்ளே செல்வதற்கான கடைசிக் காலடியை எடுத்து வைக்கும் கணநேரத்தில் தோன்றிய சில பழைய நினைவுகள் கால்களைப் பின்வாங்க வைத்தன. கண்ணில் நீர் நிறைந்தது. ஏக்கத்துடன் பெருமூச்சு விட்டபடி, வெளியிலிருந்தவாறே ஒரு பார்வை பார்த்தேன். பின்னர், வண்டியை எடுத்துக்கொண்டு திரும்பிவிட்டேன்.


மூன்று வருடங்களுக்கு முன்பு

நான் இயந்திரவியல் பட்டப்படிப்பின் முதலாம் ஆண்டு விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தேன். “ஸ்கூலுக்கு நீ எதுக்குடா படிக்கப் போற மாதிரி 9 ணிக்கே போகணும்னு அடம் பிடிக்குற?” என்று கடிந்து கொண்ட அம்மாவிடம், ”ம்மா. இன்னிக்கு ரிஸல்ட் மா. என்ன மார்க் வாங்கிருக்காங்கன்னு பாத்துட்டு அரைமணிநேரத்துல வந்துடுறேன்என்று சொல்லி வண்டியில் கிளம்பினேன். அதற்கு முந்தைய வருடம் பள்ளியில் முதல் மாணவனாக வந்ததால் இருந்த ஒரு ஆர்வமேயன்றி வேறேதும் இல்லை.

9:20-க்கெல்லாம் அங்கு பட்டியல் ஒட்டப்பட்டிருக்கவில்லை. நான்கைந்து மாணவர்கள் கையில் கைப்பேசியுடன் இணையதளத்தில் முடிவுகளைத் தரவிறக்க முயன்றுகொண்டிருந்தனர். “அவ்ளோதான் தம்பி. ஸ்கூலுக்கு வர்றணும்ன்ற எண்ணம் எல்லாம் இன்னிக்கு யாருக்கு இருக்குது? எல்லாம்தான் அந்தச் செல்போனுக்குள்ள வந்துடுச்சுல்ல?” என்று கூட்டம் குறைவாயிருந்ததற்கான காரணங்களை அடுக்கினார் வாட்ச்மேன். மணி 9:30-ஐத் தொட்டிருந்தது. என்னையேயறியாமல் நகத்தைக் கடிக்கத் தொடங்கியிருந்தேன். ‘நம்ம ஸ்கூல் கிருஷ்ணசாமி ஸ்கூலையும், செயிண்ட் மேரிசையும் முந்திடணும்டா’ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டிருந்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு எம் நண்பர்களும், நானும் சாதித்திருந்த (மதிப்பெண்தான் சாதனை என்று நம்பிய காலங்கள் அவை) மைல்கல் அது.

பதற்றமாய் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த என் தோளில் பின்னாலிருந்து ஒரு கை தொட்டது. திரும்பினேன். பி.ஈ.டி. வாத்தியார் நின்றுகொண்டிருந்தார்.

“குட் மார்னிங், சார்.”

“…”

“சும்மாத்தான் சார் ரிஸல்ட் பாத்துட்டுப் போலாம்னு…”

“நீ என்ன இந்த வருஷம் பிளஸ் டூவா?”

“இல்ல சார். ஜூனியர் பசங்…”

“இதோ பாரு தம்பி. நீ டிஸ்டிரிக்ட் ஃபர்ஸ்ட் வந்த்து நல்ல விஷயம்தான். அதுக்காக ஸ்கூல்ல யாராச்சும் நம்பள முந்திடுவாங்களோன்னு வேவு பார்க்க எல்லாம் வரக்கூடாது. அப்புடியே முந்துனாலும், ஸ்போர்டிவ்வா எடுத்துக்கணும்.”

“சார், அதெல்லாம் ஒண்ணும் இல்ல சார்.”

“இந்த வயசுல ஏன் இந்தப் பொறாமை எல்லாம்?”

“சார், ஒரு நிமிஷம் பேச விடுங்க சார்.”

“டேய், என்ன கைய நீட்டிப் பேசுற? வாட்ச்மேன், வெளிய போகச் சொல்லுங்க இவன.”

அடுத்த நிமிடம் பள்ளிக்கு அந்நியமாகிப்போனேன். என்ன நடந்தது என்று யோசிக்கக் கூட முடியவில்லை. விம்மி, விம்மி அழவேண்டும் போலிருந்தது. வண்டியை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்.

“ரிஸல்ட் என்னடா ஆச்சு?” என்ற அம்மாவிடம், “டைம் ஆகும் போலம்மா. அதான் நான் வந்துட்டேன்” என்றேன்.


ஒரு வருடத்திற்கு முன்பு

“அக்கா, எப்போ ஊருக்கு வர்றீங்க?”

“டேய், நல்லவேளை நீயே கேட்ட. உங்க ஊருல எனக்கு ஒரு வேல இருக்கு. அடுத்த வாரம் போலாம்.”

என்னை முதல்முதலாகக் கல்லூரிப் பத்திரிக்கையில் எழுதத்தூண்டிய சகோதரியிடம் பேசிக்கொண்டிருந்தேன். என்னை விட இரண்டு வயது மூத்தவர் அவர். எழுதுவது மட்டுமன்றி, பல்வேறு வகையில் எனக்கு தெளிவான ஆலோசனைகள் கொடுத்து உதவியவர்.

வார இறுதி நாட்களுக்காகக் காத்திருந்த நான், வெள்ளிக்கிழமை மாலை மத்திய கைலாசம் சென்று காத்திருந்து, அவரும் அங்கு வந்த பிறகு, கிழக்குக் கடற்கரைச் சாலை மார்க்கமாகக் கடலூர் செல்லும் பேருந்தில் ஏறினேன். வரும்வழியில் அவரது பணியைப் பற்றி விவரித்துக்கொண்டே வந்தார் அவர். பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் பணியாற்றியபடியே,‘கூகிள் மேப்ஸ்’-ஐப் போன்ற ஒரு உலகளாவிய வரைபடத்தை லாபநோக்கமற்றுத் தயாரிக்கும் ஒரு அணியுடன்  இணைந்து வேலைசெய்து கொண்டிருந்தார். நகர எல்லைகளைத் தாண்டி, சிறுகுறு கிராமங்களிலுள்ள முக்கியமான இடங்களையும் பதிவு செய்வதே நோக்கம் என்று சொன்னார்.

வரும் வழியெங்கிலும் குழந்தையாய் மாறி, “இது என்ன இடம்? அடுத்தது என்ன ஊர் வரும்?” என்று உற்சாகமாய்க் கேட்டுக்கொண்டிருந்தார். கோவளம், மஹாபலிபுரம், கல்பாக்கம், கடப்பாக்கம், மரக்காணம் கடந்து, புதுச்சேரியையும் தாண்டி, ஒருவழியாகக் கடலூர் வந்தாயிற்று. அம்மா, அப்பாவின் புன்னகை மாறாத வரவேற்பு பாதி பசியைப் போக்கியதென்றால், சூடான இட்லியும், தேங்காய்ச் சட்னியும், பின்னர் வந்த முறுகலான தோசைகளும் வயிற்றை நிரப்பின.

அடுத்த நாள் காலையில் வண்டியில் இருவரும் கிளம்பினோம். “நம்பளால முடிஞ்ச வரைக்கும் கவர் பண்ணுவோம்டா. இதுல இவ்ளோ முடிக்கணும்னு எந்த டார்கெட்டும் கெடையாது” என்றார். அவருக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் நான் படித்த பள்ளியில் படித்திருந்தபடியால், “அந்த ஸ்கூலுக்குப் போயே ஆகணும். லெஜண்ட்ஸ் எல்லாம் படிச்சிருக்கீங்க” என்று கலாய்த்தபடியே வந்தார்.

ஆட்சியர் அலுவலகம் சென்று, கடலூர் நகராட்சியின் பழைய மாதிரி வரைபடங்கள் எதுவும் கிடைக்குமா என்று விசாரித்தபோது, அவர்கள் ‘முனிசிப்பாலிட்டி ஆஃபீஸ்ல கேளுங்க’ என்றும், அவர்கள் இவர்களைக் கேட்க வேண்டும் என்று அலைக்கழித்ததால் நாங்களே குத்துமதிப்பாகச் சில இடங்களைப் பதிவு செய்வது என்று முடிவு செய்தோம்.

முதலில் சென்ற இடம் நான் படித்த பள்ளி. இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் ஆறாத வடுவாய்ப் பதிந்திருந்தாலும், “அந்த சார் கூட மட்டும்தானே பிரச்சனை? அந்தாளைப் பார்க்க வேண்டாம். மத்தபடி ஸ்கூலுக்குச் சும்மாப் போயிட்டு வருவோம்” என்று எனக்கு நானே கட்டியம் கூறிக்கொண்டேன். உள்ளே சென்றவுடன் தலைமையாசிரியர் அறைக்குச் சென்று விஷயத்தைக் கூறினோம். சிரித்தபடியே, “ஆல் த பெஸ்ட் ஃபார் யுவர் வென்சர்” என்று அக்காவுடன் கைகுலுக்கி உள்ளே செல்ல அனுமதித்தார்.
எனக்கு உண்மையிலேயே பறக்க வேண்டும் எனத் தோன்றியது. பள்ளிக்காலத்தின் சனிக்கிழமையாதலால், அன்று வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. “ஃபோர் ஒன் இஸ் ஃபோர், ஃபோர் டூஸ் ஆர் எயிட்” என்று கும்பலாக மாணவர்கள் கத்துவது கேட்ட்து. எல்லா வகுப்பிலும் உரக்க வாய்ப்பாடு சொல்வதற்கென்று ஒரு அருண்ராஜா காமராஜ் / அனுராதா ஸ்ரீராம் இருக்கிறான்(ள்) அல்லது உருவாக்கப்படுகிறார்கள்.

நல்ல வேளையாக அன்று அந்த எமன் வந்திருக்கவில்லை அல்லது நாங்கள் போன நேரம் பள்ளி வளாகத்தில் இருக்கவில்லை. கால்பந்து விளையாடும் இடத்தில் வெயில் சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்தது. அரும்பிய வியர்வை முத்துக்கள், கண்ணாடியில் படிந்து கண்ணை அவ்வபோது மறைத்தன. ஒவ்வொரு அடியையும் அளந்து அளந்து வைப்பது சுவாரசியாமாயிருந்தது. புன்முறுவலுடன் என் செய்கைகளைப் பார்த்துக்கொண்டே வந்த அக்கா, அவ்வப்போது கைப்பேசியில் புகைப்படம் எடுத்து, நில அளவைகளையும் ஏதோ ஒரு செயலி மூலமாகப் பதிவு செய்துகொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று முதல் மாடியில் இருந்து என்னை யாரோ அழைக்கும் சத்தம் கேட்டது. உயிரியல் வாத்தியார் நின்றிருந்தார். கீழேயிருந்தபடியே கையால் சலாம் அடித்துவிட்டு, விருட்டென்று படிக்கட்டுகளில் விரைந்தேன்.

"குட்… மார்…னிங்… சார்” என்று மூச்சிறைத்தபடியே சொன்னேன்.

“என்ன கிரிதர்? ஹவ் ஆர் யூ?”

“ஐ ஆம் குட், சார்.”

“என்ன இந்தப் பக்கம்?”

“சும்மா ஸ்கூலுக்கு வந்து ரொம்ப நாளாச்சேன்னுதான் சார்.”

“குட் குட். அது சரி, கூட இருக்குறது யாரு?”

அந்தத் தொனியிலேயெ உள்ளர்த்தம் புரிந்தது. அவரது முகத்தில் தவழ்ந்த ஒரு இளக்காரப் புன்னகை நான் நினைத்ததை ஊர்ஜிதப்படுத்தியது. “அக்கா, சார்” என்றேன்.

“அக்கான்னா, கூடப் பொறந்தவங்களா?”

“இல்ல சார். காலேஜ் சீனியர்.”

“அவங்க கூட இங்க என்ன வேல?”

’எதுக்கு வந்திருக்காங்க?’ என்று கேட்டிருந்தால் கூட அவர் மேல் இருந்த கொஞ்சநஞ்ச மரியாதை அப்படியே தங்கியிருக்கும். ஆனால், அவர் கேட்டது கோபத்தை வரவழைத்தது.

“அவங்க ஒரு மேப்பிங் பிராஜெக்ட் பண்ணிட்டிருக்…”

“லுக், கிரிதர். நீ நல்ல அக்காடெமிக்கலி இண்டெலிஜெண்ட்தான். ஐ ஆம் நாட் டினையிங் த ஃபாக்ட். பட் ஆஸ் ய ஸ்டுடண்ட், யூ ஹாவ் டூ மெயிண்டெயின் யுவர் டெகோரம் அண்ட் த ஸ்கூல்ஸ் டெக்கோரம்…”

அவர் சொல்லிமுடிப்பதற்கு முன்னால், நான் படியிறங்கத் தொடங்கியிருந்தேன். “டாப்பர்-னா? பொண்ணுங்கள எல்லாம் கூட்டிட்டு வரலாமா சார்?” என்று மற்றொரு வாத்தியாரிடம் கேட்பதுபோல வேண்டுமென்றே சத்தமாகக் கேட்டார். கீழே இறங்கி அக்காவிடம் சென்றபோது, எதுவுமறியாது புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார். “என்னடா டாப்பரு? ஒரே புகழ்ச்சிதான் போல ஸ்கூல் பூரா?” என்று தெற்றுப்பல் தெரியச் சிரித்தார். “போலாம் அக்கா” என்ற இரண்டு பொன்வார்த்தைகளை மட்டும் பதிலாக வைத்தேன்.

போகும்வழியில் பூச்செடிகளுக்கு நீரூற்றிக் கொண்டிருந்த செல்வி ஆயா – எப்பொழுதும் நான் நின்று பேசிவிட்டு வரும் எனது பாட்டியின் குரலையொத்த குரலுடைய ஆயா – அழைத்தபடியே இருந்தாள். திரும்பிப்பார்க்க மனமில்லை.


இன்று

“டேய் தலைவரே, யப்பா! நீ ஏன், எதுக்குன்னு கூடச் சொல்ல வேணாம்டா. அதுக்காக இப்புடி ஒரே எடத்தையே வெறிச்சுப் பாக்காத” என்றான் நண்பன். அழைப்பு வராத கைப்பேசியை எடுத்துப் போலியாய்ப் பேசிவிட்டு, ”அம்மா எதோ அவசர வேலையாக் கூப்பிடுறாங்கடா. நான் போயிட்டு இன்னொரு நாள் வர்றேன்” என்றபடி கிளம்பினேன்.


குளமாய் நிரம்பியிருந்த என் கண்களை அவன் கவனித்தானா என்று தெரியவில்லை. கண்ணீர் கண்ணாடியில் பட்டுப் பார்வையை மறைக்கும் என்பதால், கழற்றிச் சட்டைப்பையில் வைத்தேன். வண்டியைத் திருப்பியபோது, “டேய் குருட்டுக் கபோதி, ,கண்ணாடியைப் போடுடா. எங்கேயாச்சும் விழுந்து சாவப்போற” என்றான். அழுகையினூடே சிரித்தேன்; வானத்தில் வானவில் தோன்றியிருந்தது.