கௌதம் வாசுதேவ் மேனன் ‘டூயல் ஜானர்’ திரைப்படம் எடுக்கிறேன் பேர்வழி என்று நடிகர் செம்மல் தொப்பை சிலம்பரசனை நடிக்க வைத்து ‘அச்சம் என்பது மடமையடா’ என்றொரு காவியத்தைப் படைத்தார். ‘எங்கப்பா டீ.ஆரு, நான் அடிப்பேன்டா பீரு’ என்று படப்பிடிப்புக்கு வராமல் ‘பெப்பே’ காட்டிய சிம்புவை முன்பின்னாக எப்படியோ படம்பிடித்துப் படத்தை ஒப்பேற்றி விட்டார்கள். ஆனால் பிரச்சனை அதுவல்ல; ‘டூயல் ஜானர்’ படமாக வந்திருக்க வேண்டியது, ‘இடைவேளைக்கு முன், இடைவேளைக்குப் பின்’ என்று இரண்டு வெவ்வேறு திரைப்படங்களையே பார்ப்பது போன்ற குழப்பத்தை ஏற்படுத்தியதுதான்.
இதைச் சொல்ல வேண்டிய கட்டாயத்தை விளக்குகிறேன். சமீபத்தில் ‘தமிழ் இந்து’ குழுமம், ‘காமதேனு’ என்ற வார இதழ் ஒன்றைத் தொடங்கியுள்ளது. ஒன்றரை இதழ்களைப் படித்து முடித்துவிட்ட நிலையில், இந்த ‘மள்டிப்பிள் ஜானர்’ பிரச்சனை அப்பட்டமாகத் தெரிகிறது. பாலை மட்டுமே கொடுக்க வேண்டிய ‘காமதேனு’விடம் சாராயம், தண்ணீர், ரசாயனம் என அனைத்தையும் கறக்க முயன்று தோற்றிருக்கின்றனர். இதிலிருக்கும் குழப்பங்களைப் பலவகையாகப் பிரிக்கலாம்.
(1) நாளிதழ் - வார இதழ்:
முதலில் ஒரு வார இதழோ, மாத சஞ்சிகையோ நாளிதழைப் போல் அனைத்து வகையான செய்திகளையும் தொகுக்கத் தேவையில்லை என்பது என்னுடைய கருத்து. ‘காமதேனு’வின் முதல் சறுக்கல் அங்குதான் தொடங்குகிறது. விளையாட்டு, திரைப்படங்கள், சமூகம், ஆக்ரோஷமான பதிவுகள், அரசியல், வரலாறு, புவியியல், பூகோளம், அறிவியல், தமிழ் (முதல் மற்றும் இரண்டாம் தாள்), ஆங்கிலம் (முதல் மற்றும் இரண்டாம் தாள்) என்று ஏதோ பொதுத்தேர்வின் மாதிரி வினாத்தாள் போல அனைத்தையும் குழப்பியடித்து ஏதோ முயற்சி செய்திருக்கிறார்கள். சற்றே விசனத்துடன், “கேவலமா இருக்கு; தயவு செஞ்சு இப்டிக் கூமுட்டத்தனமாப் பண்ணாதீங்க” என்றுதான் மன்றாட வேண்டியிருக்கிறது.
(2) தெளிவின்மை:
ஆனந்த விகடனில் இலக்கியத்திற்கான பெரிய பரப்பு இல்லையென்று ஆசிரியர் குழுவிற்குப் புரிந்த பின்னர், சற்றே மெனக்கெட்டு ‘தடம்’ என்ற இதழை வெளியிடுகிறார்கள். வெகுசன இலக்கிய வெளியில் ‘தடம்’ ஒரு முக்கியமான பத்திரிக்கை. ‘ஆனந்த விகட’னின் பரந்த வாசகர் வட்டமும், இலக்கிய ஆர்வமுள்ளவர்களும் படிப்பதற்கான ஒரு பொதுப்புள்ளியாக இருக்கிறது ‘தடம்’. திராவிட இலக்கியம், தமிழ் இடதுசாரிப் படைப்புகள் குறித்த சில தொடக்க நிலை புரிதலுக்காகவேனும் கண்டிப்பாக அது உதவுகிறது (என்ன ஆச்சரியமென்றால், “இலக்கியம் புனிதமானது; திராவிட இலக்கியம் குப்பை” என்று உளறிக்கொண்டிருக்கும் ஜெயமோகன் மாதிரியான ஆட்களும் எழுதுகிறார்கள். எங்கே போயிற்றோ இலக்கியப் பாசமும், நேசமும்? ஆனால் அந்த அதிமேதாவி ‘தட’த்தில் எழுதும் விஷயங்களில் தற்பெருமைதான் முக்கால்வாசி நிறைந்திருக்கிறது என்பது முக்கியமானது). இதைத்தான் செய்யப்போகிறோம் என்பதில் தெளிவான ஒரு வரையறைகளை வைத்துக்கொண்டு அவர்கள் செயல்படுவதுதான் ‘தட’த்தின் வெற்றிக்குக் காரணம்.
ஆனால், ‘காமதேனு’வை எப்படிக் கொண்டுசேர்ப்பது எனும் ஆசிரியர் குழுவின் தெளிவின்மை, தெள்ளத்தெளிவாகப் புலப்படுகிறது. ‘ரூல்ஸ் ராமானுஜம்’ அம்பியைப் போல் சமூக விஷயங்களைப் பேசிக்கொண்டிருக்கும்போது, “அய்யய்யோ, ரொம்ப நேரமா கருத்து சொல்லிட்டோமோ!” என்று சுதாரித்து, உடனே ‘ரெமோ’வாக மாறி, கிசுகிசு பக்கங்கள் வருகின்றன.
(3) வரிசையின்மை:
‘தினத்தந்தி’யைப் போல் கண்ட இடத்தில் கண்ட செய்தியைப் பதிவிடும் நாளிதழை நான் இதுவரை கண்டதில்லை. வார இதழ்களில் ‘காமதேனு’விற்கு நிச்சயம் அந்த இடத்தைக் கொடுக்கலாம். ஒரு வரைமுறையேயின்றி, திடீரென்று ஒரு விளையாட்டுச் செய்தி, அடுத்தது அதற்கு சற்றும் தொடர்பில்லாத ஏதோ ஒரு பெட்டிச் செய்தி என்று ‘ஏனோதானோ’ செய்திருக்கிறார்கள். 25 ரூபாய் கொடுத்து வாங்கும் இளிச்சவாயன்கள் எல்லாம் ‘இந்து’ என்ற ஒரே பெயருக்காக மட்டுமே வாங்குகிறோம் என்பதை ஆசிரியர் குழு விரைவில் உணர்தல் நலம். “உன் பேருக்குப் பின்னாடி இருக்குர சுப்பிரமணியம்ன்ற பேர எடுத்துட்டா உனக்கு அடையாளமே கெடையாது” என்ற வி.ஐ.பி. திரைப்பட வசனம் போல, இவர்களும் குழுமத்தின் பெயரைக் கூவி விற்றுக் காசாக்க முடியாது என்பதைக் கூடிய சீக்கிரம் அறிய வேண்டும்.
(4) வாசகர்களைக் குறைத்து மதிப்பிடல்:
‘காலச்சுவடு’, ‘உயிர் எழுத்து’, ‘உயிர்மை’ போன்ற இதழ்கள் குறுகிய வாசகர் வட்டம் உடையவை. ஆண்டுச் சந்தா, ஆயுள் சந்தா கட்டும் உறுப்பினர்களை நம்பியே நடத்தப்படும் இதழ்கள் இவை. ஆழமான இலக்கிய உரையாடல்களும், படைப்புகளும் நிறைந்து வழியும் அவற்றை லேசாக மாற்றியமைத்தால் கூட அவர்களது வியாபாரம் கணிசமாகப் பெருகும். ஆனால், இலக்கியத்தையும், இதழியலையும் வெறும் வியாபாரமாக மட்டுமே பார்க்காமல் இயங்கும் ஆசிரியர் குழுக்கள் மேற்கூறிய அனைத்து இதழ்களிலும் உண்டு (மனுஷ்யபுத்திரன் குறித்து கருத்து கூற விரும்பவில்லை).
தரமான படைப்புகளை வாசகர்களுக்குக் கொண்டுசேர்க்க வேண்டுமென்ற நோக்கில், நீண்ட நெடிய 16 பக்க, 24 பக்க நேர்காணல்களையும், கதைகளையும் அவர்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். ‘அட்டேன்ஷன் ஸ்பேன்’ என்று சொல்லப்படும் விஷயம் இணைய உலகில் குறைந்துகொண்டே வந்தாலும் கூட, தரத்தில் எவ்விதக் குறைபாடும் இல்லாமல் இயங்கிவரும் இதழ்களுக்கு மத்தியில், எந்தக் கட்டுரை/கதை/இன்ன பிற இதர விஷயங்களையுமே இரண்டு, மூன்று பக்கங்களுக்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்வது கயமைத்தனம்.
இந்த மூன்று பக்க நெரிசலின் விளைவு, வாசகனுக்கு அவசரகோலத்தில் ‘எடிட்’ செய்யப்பட்ட ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் அனுபவமே கிடைக்கிறது. ஸ்டார்ட்டர், மெயின் கோர்ஸ், டெஸ்ஸர்ட் என்று ‘பார்பெக்யூ புஃபே’ சாப்பிடும்போது ‘ஆர்கஸம்’ போன்ற ஒரு பரவச நிலை கிட்டினாலும், அந்த நாள் முழுவதும் மயக்கமாக, வயிற்று வலியுடன் அவஸ்தைப்படுவதைப் போல, நிறைய படித்ததைப் போலிருந்தாலும், கடைசியில் ஒரு திருப்தியே இல்லை.
(5) ஈயடிச்சான் காப்பி:
‘இந்தியா டுடே’, ‘புதிய தலைமுறை’யிலிருந்து முதல் ஐந்தாறு பக்கங்களுக்கான வடிவமைப்பைத் திருடிக்கொண்டவர்கள், ‘ஆனந்த விகட’னில் வரும் அந்தக் குறும்புக் குரங்காரை மாற்றி இங்கும் ஒரு கோமாளியை அலைய விட்டிருக்கிறார்கள். முக்கியமாக அந்தக் குரங்கு கூறும் ஒற்றைவரி நையாண்டிகள் சிரிக்க வைப்பதும், சிந்திக்க வைப்பதுமாக இருக்கும்; இங்கோ, எதையோ சொல்ல வேண்டுமென்ற நோக்கில் ஒற்றைவரி நக்கல்களை அங்குமிங்குமாய்த் தூவி விட்டிருக்கிறார்கள்.
இன்னும் நிறைய வருத்தங்களும், கோபங்களும் இருக்கின்றன. ஒரே வாக்கியத்தில் சொல்ல வேண்டுமென்றால், “50 ரூபாயை இந்த ரெண்டு இதழ்களுக்கு வேஸ்ட் பண்ணியிருக்க வேண்டாமோ?” என்ற கேள்விதான் எழுகிறது. வரும் நாட்களில் கொஞ்சம் அறிவுடன் செயல்படுவார்கள் என நம்புவோம். ஏனெனில், “எக்ஸ்பெரிமெண்ட் பண்ணிட்டிருக்கோம்” என்று வேறு யாராவது சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம், ‘இந்து’ குழுமத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் குழு அப்படிச் சப்பைக்கட்டு கட்டினால், அது முழுப்பொய்.
‘கேட்டதெல்லாம் கிடைக்கும்’ என்று அட்டையில் அவர்களது தாரக மந்திரமாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ‘ஆன்மீக அரசியல்’ என்ற சொற்பதத்திற்குப் பிறகு நான் அறியும் இரண்டாவது முட்டாள்தனமான பதம் இதுதான். கேட்டதெல்லாம் கிடைப்பதற்கு இது ஒன்றும் ‘நீல்கிரிஸ்’, ‘மோர்’ போன்ற சூப்பர் மார்க்கெட் அல்ல; வார இதழ்.