நாள்தோறும்
நடக்கும் நிகழ்வுகள், அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள், கடந்த
காலத்தின் சுவைமிகு நிகழ்வுகள்/பொருட்கள் போன்றவற்றை/போன்றவர்களைக் கதைக்களம்/கதை
மாந்தர்களாக்கி எழுதப்படும் இயல்பான பதிவுகளுக்கான உதாரணங்களாக ‘நிசப்தம்’ வா.மணிகண்டனின் வலைப்பதிவுகளைச் சொல்வேன். என்னளவிலான
வாசிப்பனுபவத்தின் விளைவாக நான் முன்வைக்கும் பரிந்துரை என்றாலும், அதற்கு
அவரது ‘மசால்
தோசை 38 ரூபாய்’ மற்றும் ‘லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்’ எனும் இரு நூல்களும் கட்டியம் கூறும் (’காமதேனு’வில் தமிழச்சி
தங்கபாண்டியன் எழுதும் ‘சொட்டாங்கல்’ இங்கு அவசியம் எடுத்துக்காட்டப் படவேண்டிய தொடர்).
இதன்
நீட்சியாக சமீபத்தில் ’இடம் பொருள் மனிதர்கள்’ என்ற
நூலை வாசிக்க நேர்ந்தது. அப்பா
பணியாற்றும் வங்கியில் இந்நூலின் ஆசிரியரான மாதவ பூவராக மூர்த்தியும் ஒரு பணியாளர் எனும் முறையில் அப்பாவின் கைக்குச் சிக்கிய இப்புத்தகத்தை அப்பா வழக்கம்போலவே படித்துமுடித்த பின்னர் என்னிடம் ஒப்படைத்தார்.
நூலின்
முன்னுரையிலேயே இது மா.பூ.மூர்த்தி அவர்களின் முகநூல் சுவரில் பதிவிடப்பட்ட நிலைதகவல்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு என்றறிந்தேன். திருக்குறளின் அறம், பொருள், இன்பம் போலவே இந்நூலும் ‘இடம்’, ‘பொருள்’, ‘மனிதர்கள்’ என்று
மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நூலடக்கத்தைப் பார்க்கும்போதே ஆசிரியரின் தேர்வுகளில் இருக்கும் தெளிவு நன்றாகவே
புலப்படுகிறது. இப்புத்தகத்தின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமாகிறது. மொத்தம் 26 கட்டுரைகளைக் கொண்ட இத்தொகுப்பு 5, 11, 10 என்ற எண்ணிக்கையில் மூன்று பிரிவுகளாகப்
பிரிந்திருக்கிறது.
இடம் எனும் குடையின் கீழ் ஆசிரியர்
தேர்வு செய்திருக்கும் ஐந்து கட்டுரைகளுமே தனித்துவமானவை. புழக்கம் குறைந்து கேட்பாரற்றுக்
கிடக்கும் ஒரு உணவகத்தைப் பற்றிய பதிவில் தொடங்குகிறது நூல். ‘ஒரு புளியமரத்தின் கதை’யில்
அம்மரம் அதைச் சுற்றி நடக்கும் அனைத்து மாற்றங்களுக்கும், நியாய அநியாங்களுக்கும் மௌன
சாட்சியாய் இருப்பதைப் போல, இங்கு அந்த டிரைவ்-இன் உணவகமானது பல்வேறு மனிதர்களின் எதிர்காலக்
கனவுகளை – குறிப்பாக, திரையுலகில் நுழைய வேண்டும் எனும் இளைஞர்களின் கனவுகளை – வளர்க்கும்
சொர்க்கபுரியாய்த் திகழ்கின்றது. பலர் வந்து வணிகப் பேச்சுக்களும், வியாபார ரகசியங்களும்,
திரைக்கதைகளும் பேசிச் செல்கின்றனர். நேரம் குறித்த பிரக்ஞை இன்றி அவர்களால் அங்கு
சுதந்திரமாக உரையாட முடிகின்றது. தற்காலத்தில் இதற்கு ஈடாக ‘கஃபே காஃபீ டே’வை மட்டுமே
நினைத்துப் பார்க்க முடிகிறது (’முருகன் இட்லிக் கடை’ போன்ற இடங்களில் ஏதோ அன்னதானச்
சாப்பாடு உண்ணும் ஏதிலிகளைப் போல் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகும் அமர்ந்திருந்தால்
நம்மைத் துரத்தும் பணியாளர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது). பி.பீ.ஸ்ரீநிவாஸ்
அவர்கள் வந்து அமர்ந்து ஏகாந்தமாய்த் தனிமையில் ரசித்த பொழுதுகளை பற்றிய குறிப்புகள்
நெஞ்சைக் கனக்கச் செய்கின்றன. அனைத்துப் பதிவிகளிலும் முடிவுப் பத்தியானது நினைவலைகளைப்
பின்னோக்கி இழுக்கும் வகையிலேயே அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு
சோறு பதம் என்பதற்கு இணையாக, இக்கட்டுரையின் முடிவையே சுட்டிக்காட்டலாம். “பீ.வி.ஆரும்,
எஸ்கேப்பும் ஜெமினியை ஈடுகட்டலாம். ஆனால், உட்லேண்ட்ஸ் டிரைவ்-இன்னை ஈடுசெய்ய எதுவுமில்லை”.
தொடர்ந்து வரும் சர்க்கஸ் குறித்த
பதிவும் சுவாரசியமானது. ஆரம்பப் பள்ளிக்காலத்தில் நாம் பார்த்து ரசித்திருக்கக்கூடிய
இக்கேளிக்கை குறித்த ஒரு மீள்பதிவாகவே அமைகிறது என்று கூறினால் அது மிகையல்ல.
‘இடம்’ எனும் தலைப்பின் கீழ் இருக்கும்
ஐந்தாவது கட்டுரையான ‘வீடு மாற்றம்’ குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய பதிவு. ஆசிரியர்
வர்ணிக்கும் ஓட்டு வீடும், அதிலிருக்கும் ’முத்த’மும் (’உம்மா’ அல்ல, முத்தம்/முற்றம்
என்பது வீட்டின் ஒரு பகுதி), நீண்டு செல்லும் வீட்டில் இருக்கும் பல அறைகளும் அதில்
வசிக்கும் தனிகுடித்தனங்களும், கடைசியில் இருக்கும் கிணறும், அதைத் தொடர்ந்து இருக்கும்
(திறந்தவெளிக்) கழிப்பறையும் பாட்டி வாழ்ந்த எங்கள் பரம்பரை வீட்டை அச்சுஅசலாகப் பிரதியெடுத்ததைப்
போலவே இருந்தது.
நூலில் முக்கியமான அம்சமாக அறுதியிட்டுச்
சொல்லவேண்டியது, ஆசிரியர் தேர்ந்தெடுத்துள்ள தலைப்புகள். ‘ஷண்முக விலாஸ் ராமநாதன்’
என்ற தலைப்பைப் பார்த்தவுடன் “மீண்டும் உணவகப் பதிவா?” என்று சலிப்புடன் வாசிக்கத்
தொடங்கினால், அது தட்டச்சுப் பயிலகத்தின் பெயராக இருக்கிறது. ‘அப்பரும் நானும்’ என்ற
தலைப்பைப் படித்தவுடன் ‘ஆன்மிக அரசிய’லுக்கு மனம் தயாரானால், அது ரயிலில் இருக்கும்
‘அப்பர் பெர்த்’ எனும் மேலடுக்கும், அதனால் ஆசிரியருக்கு விளைந்த தொந்தரவுகளும் என்று
விரிகிறது. இத்தகைய எதிர்பார்ப்புகளும், அதனால் விளையும் ஏமாற்றங்களும், அந்த ஏமாற்றங்களையே
தூக்கிச் சாப்பிட்டுவிடும் சுவாரசியாமான எழுத்து நடையுமாகச் சேர்ந்து, வாசகருக்கும்
எழுத்தாளருக்குமான மனரீதியான ஒரு உறவை ஏற்படுத்துக்கின்றன.
நாஞ்சில் நாடனுக்கு அடுத்தபடியாக
சமையல் காரியங்களை வர்ணிப்பதில் மா.பூ.முர்த்தியை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. ’பொருள்’
பகுதியில் இடம்பெற்றுள்ள ‘அப்பாவின் அரிவாள்மனை’யில் வரும் வர்ணனை அபாரமானது.
“பூசணிக்காய் சாம்பார் என்றால்
அச்சு வெல்லம் போல் நறுக்கி வைப்பார். கூட்டு என்றால் க்யூபிக் பொல இருக்கும். பாத்திரத்தைப்
பார்த்தால் சீராக இருக்கும். பரங்கிக்காய் ஹுலிபல்யம் (எழுத்தாளர் கன்னடத்துக்காரர்)
என்றால் மாங்காய் பத்தை பீச்சில் விற்குமே அப்படி பல் பல்லாய் வடிவம் பெறும். கத்திரிக்காய்
சாம்பாருக்கு நீட்டு வாக்கில் நீரில் மிதக்கும். பொரியலுக்குக் கட்டம்கட்டமாய் நீரில்
மிதக்கும். பிட்லைக்கு (பிட்லை என்பது கிட்டத்தட்ட சாம்பார் போலத்தான்) காய்கள் தட்டில்
சீர்பொல வைத்திருப்பார்…..” என்று வளரும் இக்காட்சி எண்ணிப்பார்க்கையிலேயே நாவில் நீர்
சொட்ட வைக்கிறது (அசைவ உணவுக்குப் பழகியவர்களுக்கு இவ்வர்ணனை அதே அளவு நீரைச் சொட்ட
வைக்குமா என்று தெரியவில்லை).
தலைமுறை இடைவேளைக்குச் சாட்சியாய்
ஒரு வரியேனும் ஒவ்வொரு கட்டுரையிலும் இடம்பெறுகிறது. ‘அப்பாவின் அரிவாள்மனை’யில், வெங்காயம்
நறுக்கும் ‘கட்ட’ருக்கும், அரிவாள்மனைக்குமான வேறுபாடு முக்கியமானது. கட்டரில் ஒரே
அழுத்தத்தில் நறுக்கப்படும் ஒரே அளவிலான துண்டங்களில் என்ன சுவாரசியம் இருக்க முடியும்
என்ற தொனியில் அமையும் ஆசிரியரின் கேள்வி, வாசகராகிய நம்மையும் பின்தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கிறது.
‘மனிதர்க’ளில் இடம்பிடித்திருக்கும்
‘கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்’ நம் பள்ளி கேண்டீனையோ, தெருவில் இருக்கும் ‘அண்ணாச்சி
கடை’யையோ தவறாமல் நினைவுபடுத்தும். ஊர் உலகத்தில் எங்கேயும் கிடைக்காத சிறுசிறு பொருட்கள்
கிடைக்கும் புதையலாகவே விளங்குகிறது கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர். டிபார்டமெண்ட் ஸ்டோர்
என்றால் நம் கண்முன் விரியும் ‘எம்டன் மகன்’ திரைப்படத்தில் வருவது போன்ற மிகப் பிரம்மாண்டமான
‘ஜினல் ஜினல் ஒரிஜினல்’ கடையல்ல அது. ஒரு சின்ன பெட்டிக் கடையை ஒத்த அளவுடையது. அவ்வளவே.
என் பேனா முனையை உடைத்தபின்னர் அதற்கான புதிய ‘நிப்’ – எந்தப் பெரிய ‘பேப்பர் ஸ்டோர்’ஸிலும்
இல்லாதது – கேண்டீனில் வாங்கியது ஞாபகம் வந்தது. அதை வைத்துத்தான் பொதுத்தேர்வின் இரு
தேர்வுகளை எழுதினேன் என்பதும் சொல்லியே ஆக வேண்டிய தகவல்கள். இவ்வாறு படிக்கும்போது
எண்ணங்களைப் பின்னோக்கிச் சுழற்றிப் பெருமூச்சையோ, புன்சிரிப்பையோ வரவழைப்பதில் ஆசிரியரின்
வெற்றி இருக்கிறது.
ரஷ்ய எழுத்தாளர்களைக் கொண்டாடிக்
கூத்தாடும் எழுத்தாளர்களின் எழுத்துப் பாணியைப் பார்த்துப் பார்த்துப் புளித்துச் சலித்த
எனக்கு, நிச்சயமாக இந்த இயல்பான எழுத்து ஒரு புத்துணர்சியை அளித்தது என்று சொல்வேன்.
‘பெஸ்ட் செல்லர்’ வரலாற்றில் இடம்பிடிக்க முடியாவிட்டாலும் – அது தமிழிற்குக் கிடைத்த
மிகப்பெரிய ‘வரம்’ (!?) – காலத்தின் கண்ணாடியாக விளங்குகிறது ‘இடம் பொருள் மனிதர்கள்’.
நூல்: இடம் பொருள் மனிதர்கள்
ஆசிரியர்: மாதவ பூவராக மூர்த்தி
வெளியீடு: விருட்சம் பதிப்பகம்
பக்கங்கள்:156
விலை: 130