”யாரு வண்டிப்பா இது?” எனும்
குரல் கேட்டுப் பதறித் திரும்பினேன். ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரயில் நிலையத்தில் நண்பனை வழியனுப்பிவிட்டு, வெளியே வடா பாவும், ஃப்ராங்கியும்
அமுக்கிக் கொண்டிருந்த எனது வேலைப்பளுவைத் திசைதிருப்பியிருந்தது ரயில் நிலைய வாட்ச்மேன்.
”சாரிண்ணா, இந்தா
எடுத்துடுறேன்” என்று சொல்லி வாயருகே கொண்டுசென்ற வடாபாவை மேடையில் கிடத்திவிட்டு, ஓட எத்தனித்தபோது, “சார், சார்… பதறாதீங்க! உங்களோடதான்னு
கேட்டேன். சாப்பிட்டு
வாங்க பொறுமையா” என்றார்.
அப்பொன்மாலைப்பொழுதில்
எனக்கும் வேறு வேலை இல்லாததால் அவருடன் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினேன். “ஒரே தலவலி சார். ஏதாச்சும்
பசங்க வந்து பொண்ணத் தள்ளின்னு போய்ர்றானுங்க. நமக்குதான் அப்புறம் டார்ச்சரு. அதான்
வண்டியெதுவும் தனியா நின்னாலே ஒரு குரல் விட்டுர்றது” என்றவரின் தொனியில் வெறுப்பைத் தாண்டிய கரிசனமே வெளிப்பட்டது.
அவருக்கும்
ஒரு வடாபாவ் வாங்கிக் கொடுத்தபின், உற்சாகமாகப் பேசத்தொடங்கினார். “நான் இப்போ சொல்லப்போறத நெறைய பேரு கிட்ட சொல்லிருக்கேன் பாத்துக்கோங்க. அதுல முக்காவாசிப் பேரு ‘பொம்பளைங்களப் பத்தி இந்தாளுக்கு எவ்ளோ ஒரு மட்டமான எண்ணம்?’னு
தான் நெனைப்பாங்க. நீங்களும் அப்டி நெனச்சாலும் பாதகமில்ல. சொல்றத
சொல்லிடுறேன்” என்றவர், வடாபாவை
ஒரு கடி கடித்துவிட்டு, “என்னதான் சொல்லுங்க, நார்த்ல
இருக்குறவங்கள சோத்துல மட்டும் அடிச்சுக்கவே முடியாது. என்னா
ஒரு கண்டுபிடிப்பு சார் இதெல்லாம்?” என்று
சப்புக் கொட்டினார்.
”இங்கனக்குள்ள தெனமும் ஒரு பொண்ணு வந்து நிக்கும். மொதல்
நாள் ஒரு பையன் வந்து கூட்டிட்டுப் போனான். கொஞ்ச
நாள் கழிச்சு இன்னொருத்தன் வந்தான். அப்புறம்
ஒரு நாள் கார்ல நெறைய பேரு வந்தாங்க. அன்னைக்குத்தான்
டவுட்டே வந்துச்சு. பக்கத்துல
ஒரு ஜீப்ல போலீஸ் இருந்தாங்க. லைட்டா சிக்னலா சொன்னேன். விசாரிச்சுப்
பாத்தா அந்தப் பிள்ளைய ரொம்ப நாளா எதோ சொல்லி ப்ளாக்மெயில் பண்ணிட்டு இருந்துருக்கானுங்க. அதுல இருந்துதான் எனக்கு நான் என்ன பண்ணிட்டு இருக்கேன், என்னல்லாம்
பண்ண்ணும்னு ஒரு தெளிவே வந்துச்சு. அதுக்கு
முன்னாடி எத்தன டைம் அந்த மாதிரி அசால்டா விட்டுருப்பேனோன்னு ஒரு பயம் வந்துச்சு. அதான்
பாருங்க இப்போ உங்க வண்டியப் பத்திக் கேட்டேன்”, என்று
அவர் சொன்னபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
அவர்
முகத்தைப் பார்த்தபோது கோபமும், விரக்தியும்
கொப்பளிப்பது தெளிவாகத் தெரிந்தது. பேச்சை
மாற்றுவதற்காக, “ஒரு நாளைக்கு எவ்ளோ நேரம்ண்ணா இருப்பீங்க?” என்றேன்.
“என்ன சார் இப்டி கேட்டுட்டீங்க? நம்ம கவர்மெண்டு ஸ்டாஃப்ல?” என்று
கம்பீரமாய்ச் சிரித்தார். “மெட்ரோன்னா கவர்மெண்டுதானே? அதுல என்ன தலைவருக்குப் பெரும வேண்டிக்கிடக்கு?” என்று மனதுக்குள் நினைத்தாலும், கேட்க முடியாமல், பொதுவாக
ஒரு மெல்லிய சிரிப்பை உதிர்த்தேன்; புரிந்திருக்கும் போல. “கார்ப்பரேஷன்
ஆஃபிஸ்ல வேல செய்யுறேன் சார். மதியத்துக்குள்ள
அந்த நாளைக்குள்ள அத்தன வேலையும் முடிச்சிட்டு, மதியமே இங்க வந்துடுவேன். 2 டு 10 தான்
நம்ப ஷிஃப்ட் டைமிங்” என்றார்.
உலகிலேயே
நான்தான் பெரிய உழைப்பாளி எனும் என் எண்ணத்தில் ஓங்கி ஒரு சம்மட்டி அடி விழுந்தது போலிருந்த்து. “ஏன்ணே இப்டி ரெண்டு வேல பாத்துக்கிட்டு?” என்றேன். “இங்க
ஒரு 12,000 ரூபா
கெடைக்குது. அதுபோக அந்த வேலைல வர்ற காசு. காசுக்காண்டி
இல்ல தம்பி இதெல்லாம். ஒரு
மனசு சந்தோஷம்தான். முடியாம வர்ற ஒரு ஆயாவ படிலயோ, லிஃப்டுலயோ
ஏத்திவிட்டா ஒரு திருப்தி. அது
கவர்மெண்டு வேலையில கெடைக்காது. அங்க கார்ப்பரேஷன் ஆஃபீஸ்ல ஒரே சள்ள தான் தெனைக்கும். எப்போதும் மனு, கோரிக்கைனு
வயசானவங்க, முடியாதவங்க
எல்லாரும் வருவாங்க. வேல
முடியாம அவங்க திரும்பிப் போகும்போது மனசு வலிக்கும். அதுக்கெல்லாம்
இதுதான் ஒரு மருந்து மாதிரி”, என்று
சொல்லி வெறுமையாய்ச் சிரித்தார். அவ்வப்போது எனக்குள் தோன்றி மறையும் ‘காசேதான்
கடவுளப்பா’ எண்ணம்
பதுங்கிச் செத்தது அந்நொடியில்.
வடாபாவ்
சாப்பிட்டு, நீரருந்தி, பெரிதாக
ஒரு ஏப்பம் விட்டார். “மழை
சீசன்ல அங்கனக்குள்ள (கார்ப்பரேஷன் அலுவலகம்) கையெழுத்தப்
போட்டுட்டு ஓடியே வந்துடுவேன் இங்க. துரோகம்
இல்லையா செய்யுற வேலைக்குன்னு நீங்க கேக்கலாம். ஆனா, அங்கனக்குள்ள அப்பல்லாம் யாரு தம்பி மனு குடுக்க வருவாங்க? அவனவன்
மொடங்கிக் கெடந்தான் தெருவுலயும், வீட்டுக்குள்ளயும். மெட்ரோதான் ஒரே வழி. அப்போ
நாம இங்க இல்லன்னா வேல எப்டி தம்பி நடக்கும்? அவ்ளோ
ஹெல்ப் பண்ணிருக்கேன். பெருமைக்காகச் சொல்லல. எவ்ளோவோ
பேரு என்னென்னமோ செஞ்சாங்க. நம்பளால
பணம் எல்லாம் குடுக்க முடியாது. ஆனா
வேல செய்ய முடியும், வர்றவங்களுக்கு
உதவி பண்ண முடியும்.”
“வீட்டுல இருந்து சாப்பாடெல்லாம் கூட எடுத்துட்டு வந்து தெனமும் ஒரு 10 – 15 பேருக்குக்
குடுத்தேன். ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு. சாதியாச்சு, சனமாச்சு! த்தா… ஒரு கருமமும் கெடையாது. கெடைச்சத
சாப்பிட வேண்டிய சூழ்நிலை. ஒரு
பக்கம் சனங்களுக்குக் கஷ்ட்த்தக் குடுத்தாலும், நெறைய கத்துக்குடுத்துட்டுத் தான் போச்சு அந்தப் பேய்மழை” என்றபோது
கடலூர் ஞாபகம் வருவதைத் தடுக்க முடியவில்லை. ஆண்டுதோறும் தவறாமல் இதையெல்லாம் அனுபவிக்கும் கடலூர் சொர்க்கமாய்த் தெரிந்தது.
அவரிடம் நிறையப் பேச வேண்டும் என்று
தோன்றினாலும், அலைபேசியில் அழைப்பு வந்துகொண்டேயிருந்ததால் விடைபெற வேண்டியிருந்தது.
கைகுலுக்குவதற்காகக் கைநீட்டியபோது, முதலில் தயங்கிப் பின் கைகுலுக்கினார். “என் பேரு
கிரிதரன். இங்கதான் அண்ணா யுனிவர்சிட்டில படிக்கிறேன்” என்றேன். அந்த ‘அண்ணா யுனிவர்சிட்டி’
கெத்தை எங்கேயும் விடக்கூடாது என்பது எழுதப்படாத ஒரு விதி. அதிலும் கொடுத்தார் ஒரு
சவுக்கடி. “படிங்க படிங்க. ஆனா மொதல்ல மனுஷனப் படிங்க. நின்னுப் பேசக் கூட முடியாம
இருக்குறவந்தான் இன்னிக்குப் பெரிய இஞ்சினியராம், டாக்டராம். என்னமோ போங்க”, என்று
சதமடித்த சச்சினைப் போல் ஆகாயத்தை நோக்கி அண்ணாந்து பார்த்தார்.
“உங்க பேரு சொல்லவே இல்லையேண்ணே!”
என்றேன். “விக்கிரமாதித்யன். திருச்சிதான் சொந்த ஊரு. இங்க ஃபேமிலியோட கிண்டில தான்
தங்கியிருக்கேன். ஆயிரம் சொல்லுங்க, சென்னைதான் நம்ப ஊரு. இங்க வந்து 30 வருஷத்துக்கு
மேல ஆச்சு. ஒருக்க வீட்டுக்கு வாங்க” என்று பேசிக்கொண்டே சென்றார்.
கல்லூரிக்குத் திரும்பிச் செல்லும்போது
யோசித்தால் விக்கிரமாதித்யனாய்த் தெரியவில்லை அவர். தெளிவு கற்பித்த வேதாளமாகவே தெரிந்தார்.
அவர் வாய்திறந்து கூறியதைக் காட்டிலும் பல்வேறு உதவிகள் செய்திருக்கக் கூடும். எதையும்
வெளியே காட்டிக்கொள்ளாமல் பெரிய மனிதர்கள் நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள்.
காதில் ஒலிப்பானை மாட்டிக்கொண்டு, கண்ணில் குளிர்கண்ணடியணிந்து நாம்தான் எதையும் கவனிக்க
நேரமின்றி ஒடிக்கொண்டிருக்கிறோம் எதற்கென்று தெரியாமலேயே. பயணங்கள் முடிவதில்லையல்லவா?