Sunday, June 27, 2021

கரை வந்த பிறகே | #2 - ஆசான், சென்ன வட சென்ன, செரியன் நகர் & அரத்தூண் ரோட் @ நியூ மார்க்கெட் ஃபார்ம்

 முன்குறிப்பு:

1. முதல் பகுதியைப் படிக்க, இங்கு சொடுக்கவும்

2. ஜெயமோகன் விசிறிகளுக்கு: இங்கு ‘ஆசான்’ என்பது அவரைக் குறிக்கும் சொல்லல்ல.


**********


ஜூன் 2, 2018


முதல் நாள் இரவுதான் சென்னைக்கு வந்திருந்தேன். புதுவண்ணாரப்பேட்டையில் வாடகைக்கு வீடெடுக்கும் வரை ‘டீச் ஃபார் இந்தியா’வில் வேலை செய்த நண்பர் ராம்பிரசாத்தின் வாடகை வீட்டில், சாலிக்கிராமத்தில் ஜாகை. இரவு உண்ட ’கோவை சாவித்திரி மெஸ்’  மசால் தோசையும், சப்பாத்திகளும் அருமையான உறக்கத்தை அளித்துவிட்டிருந்தன.


ஜூன்3-ஆம் தேதியே பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு திறப்பதாக இருந்தாலும், ஜூன்2 அன்றே ஒருமுறை பள்ளிக்குச் சென்றுவிட வேண்டுமென்ற நிலைமை. ”நிலைமையா? அப்போ நீயா முடிவெடுக்கலையா? யாரோ வற்புறுத்தி பள்ளிக்கு ஒரு நாள் முன்னாலயே வரணும்னு கட்டாயப்படுத்துன மாதிரி சொல்ற?” என்ற கேள்விக்கு எனது பதில், “ஆம்”. என்னை வரச் சொல்லியிருந்தவர் ஆசான் (’மெண்டார்’ எனும் ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் அதுவே என நினைக்கிறேன். ‘ஆசிரியர்’ என்று சொன்னால் ‘டீச்சர்’ என்று பொருள்படுகிறது; ’வழிகாட்டி’ என்பது ‘கைட்’ என்றாகிவிடுகிறது) பாலசுப்ரமணியன் (எ) பாலா.


**********


ஐந்து வார ‘ட்ரெய்னிங்’-ன்போதே இவரைப் பற்றிய பலவாறான கருத்துக்களைச் செவிவழிச் செய்திகளாய் அறிந்திருந்தேன்.

1. “2012 தொடங்கி 2014 வரைக்கும் ஃபெல்லோவா இருந்தவரு. அதுக்கப்புறம் வேற வேலைக்கெல்லாம் போகாம அவரு க்ளாஸ் பசங்களப் படிக்க வைக்கறதுக்காக ஃபுல் டைம் அதே ஸ்கூல்லயே வேலை செய்யுறார்”

2. “அவருகிட்ட அளவா வெச்சிக்கோ. புதுசா வர்றவங்கள அடக்கி அவரு வழிக்குக் கொண்டுபோயிடுவாரு”

3. “பசங்கள அநியாயத்துக்கு அடிப்பாரு. அதெல்லாம் க்ரைம். ரௌடித்தனமா நடந்துப்பாரு நீதான் க்ளாஸ்ல ஒரு ஸ்டெபிலிட்டி கொண்டு வரணும்”

இத்தகைய துணுக்குகள் எனக்கு மிரட்சியை ஏற்படுத்தியிருந்தன.


ஏப்ரல் 27, 2018 அன்று புனே நகரில் தொடங்கிய ‘ட்ரெய்னிங்’கில் இருந்த எனக்கு, பல்வேறு சந்தேகங்கள் இருந்தன. முந்தைய நிறுவனத்தில் இருந்ததுபோலன்றி சற்றே வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மனத்தில் நிலைபெற்றிருந்தது. அவ்வப்போது வழிகாட்டிகளிடமும், ட்ரெய்னர்களிடமும் எதிர்க்கேள்விகள் கேட்டு வாயைக்கொடுத்து அனைவரிடமும் வாங்கிக்கட்டிக் கொண்டிருந்தேன். எனக்கு ‘டீச் ஃபார் இந்தியா’வில் சொல்லித் தரப்பட்ட வழிமுறைகளின் மேல் பெரிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கவில்லை. யாரிடம் சொல்லித் தெளிவுபடுத்திக்கொள்வது என்றும் தெரியவில்லை.


மே மாதம் மூன்றாவது வாரத்தில் ஒவ்வொருவரும் எந்தப் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற அறிவிப்பு வந்தது. எனக்கு அளிக்கப்பட்ட பள்ளியின் பெயர் ’நியூ மார்க்கெட் ஃபார்ம்’. விநோதமான பெயராக இருந்தது. அப்போது உடனிருந்த மேற்குறிப்பிட்ட ‘சாலிக்கிராமத்து நண்பர்’ “ஓ என்.எம்.எஃப்.-ஆ? சூப்பர். பாலாண்ணா ஸ்கூல். செம்மையா இருக்கப் போகுது” என்று சிரித்தார். அதன்பிறகே, மேற்சொன்ன மூன்று துணுக்குகளையும் பலரிடமிருந்து கேட்க நேர்ந்தது.


”எங்கடா கால விட்டிருக்கேன் நானு?” என்று எனக்குள்ளாகவே கேட்டுக்கொண்டிருந்தேன். பயங்கர குழப்பமான மனநிலையில் தலை வெடித்துக்கொண்டிருந்தது. “புலி கிட்டயிருந்து தப்பிக்கிறேன்னு சிங்கத்துகிட்ட மாட்டிக்கிட்டேனோ?” என்று நடுங்கிக்கொண்டிருந்தேன். இருவிதமான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன.

1. முதல் வேலையில் பதுங்கியது போலன்றி, சண்டைக்காரனாக மாறி எனக்கான வெளியை நானே உருவாக்கிக் கொள்வது.

2. ’சண்டைக்காரனாக மாறி, கேள்விகள் பல கேட்கத் தொடங்கிவிட்டால், இங்கும் வேலை போய்விடுமோ?’ என்ற எதிர்க்கேள்வி.


இத்தகைய குழப்பங்களுக்கிடையில்தான் மே மூன்றாம் வாரத்தில் என் வாட்ஸாப்பிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. “ஹாய் கிரி, திஸ் இஸ் பாலா. ஐ வொர்க் அட் என்.எம்.ஃப். ஆஸ் அ சீ.ஈ.ஜீ. அலம், ஐயம் க்ளாட் டு வொர்க் வித் அ ஃபெல்லோ சீ.ஈ.ஜீ.-இயன்.” ("Hi Giri, this is Bala. I work at NMF. As a CEG alum, I am glad to work with a fellow CEGian") சீ.ஈ.ஜீ. என்பது காலேஜ் ஆஃப் இஞ்சினியரிங் கிண்டி. அதாவது கிண்டி பொறியியல் கல்லூரி. அவர் 2002-ல் ஈ.சீ.ஈ. படித்தவர் என்று பின்னர் அறிந்தேன். குறுஞ்செய்திக்குப் பதிலெதுவும் அனுப்பவில்லை.

அதற்கடுத்த நாள் ராம்பிரசாத் தன் கைப்பேசியை எடுத்து வந்து நீட்டினார். “லைன்ல பாலாண்ணா. உன் கிட்டப் பேசணுமாம்.” எனக்கு அவரிடம் பேச வேண்டுமென்ற விருப்பம் பெரிதாக இல்லையெனினும், வேலையனைத்தையும் விட்டுவிட்டுப் பள்ளியில் மாணவர்களைப் படிக்க வைப்பதற்கான முனைப்புடன் செயல்படுகிறார் என்ற செய்தி அவர்மீது மரியாதையை உருவாக்கியிருந்தது.


“ஹலோ?”

”ஹலோ! நான் பாலா பேசுறேன். என்னப்பா, எப்புடி இருக்க?” - குரலில் ஒரு கம்பீரம்.

“ஹாய் பாலா, நல்லா இருக்கேன். நீங்க?” - தயங்கித் தயங்கியே பேசினேன். ‘பெரிய ஆளு கிட்ட பேசிட்டிருக்கோம்’ என்ற பிம்பம் மனதில் பதியத் தொடங்கி விட்டிருந்தது.

“குட் பா. எப்புடிப் போயிட்டிருக்கு ட்ரெய்னிங்லாம்?” - அவர் கேட்ட தொனியிலேயே கிண்டல் தொனித்தது. என்னிடம் ஏதோ பதிலை எதிர்பார்த்துக் கேட்பது போலவே இருந்தது.

“ம்... பரவாயில்லைங்க. போகுது.” - உடனே இப்படியோ, அப்படியோ பதில் சொல்லி மாட்டிக்கொள்ள வேண்டாமே என்று பொத்தாம்பொதுவாக ஒரு பதிலைச் சொல்லி மழுப்ப முயன்றேன். ஆனால், ட்ரெய்னிங்கில் ஏதோ சரியில்லை என்று சொல்லி, அவரது கருத்தைக் கேட்க வேண்டுமெனத் தோன்றியது.

“நல்லா இல்லையா?” - என் எண்ணவோட்டத்தை எனது குரல் அவருக்கு அறிவித்திருக்க வேண்டும். தெள்ளத்தெளிவாகக் கேட்டார்.

“இல்ல. அப்புடி இல்ல. நான் ஸ்கூல் படிக்கும்போது என் டீச்சர்ஸ்லாம் இப்புடி க்ளாஸ் எடுத்ததில்ல. இவங்க சொல்ற மாதிரி லெஸன் ப்ளான் (Lesson Plan), இண்டிப்பெண்டண்ட் ப்ராக்டீஸ் (Independent Practice) அப்புடின்னு எல்லாம் பிரிச்சு க்ளாஸ் எடுத்தா நைன்த் ஸ்டாண்டர்ட் போர்ஷன்ஸ் முடிக்க முடியுமான்னு ஒரு டவுட் இருக்கு...” - இழுவையுடன் முடித்தேன். ஆனால் அவருக்குப் புரிந்திருக்க வேண்டும்.

“அவங்க சொல்றதெல்லாம் கேட்டுக்கோ. இங்க வரும்போது நீயே புதுசா நெறைய கத்துப்ப” - எனக்கு ஆறுதலளிப்பதற்காகச் சொல்கிறார் என்று நினைத்தேன். இரண்டு வருடங்கள் அவருடன் பண்ணியாற்றுவதில் எனது கல்வி சார்ந்த பார்வை குறித்தும், பல்வேறு விஷயங்கள் குறித்தும் நிறைய கற்றுக்கொள்வேன் என்று அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

“ஒகே பாலா. நான் உங்க நம்பர் ராம் கிட்ட வாங்கிக்குறேன். டவுட்ஸ் இருந்தா மெசேஜ் பண்றேன்.” - அவரிடம் உரையாடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என உண்மையிலேயே முடிவெடுத்திருந்தேன்.

“நல்லது பா. ஆல்ஸோ, வெல்கம் டு என்.எம்.எஃப்.” - என்.எம்.எஃப். என்பது நியூ மார்க்கெட் ஃபார்ம் என்பதன் சுருக்கம்.

“தேங்க்ஸ் பாலா. லுக்கிங் ஃபார்வர்ட்.”


பேசி முடித்த பின்னர் சற்றே தெளிவு பிறந்திருந்தது. “அவங்க சொல்றதெல்லாம் கேட்டுக்கோ. இங்க வரும்போது நீயே புதுசா நெறைய கத்துப்ப” என்ற சொற்களின் அர்த்தம் நன்றாகவே புரிந்தன. நடைமுறையில், தினம் தினம் வகுப்பறையில் நான் கற்க வேண்டிய விஷயங்கள் அதிகமானவை எனும் நினைப்பு சென்னைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை அதிகமாக்கியது.


சட்டென நினைவு வந்தவனாய், “ஐயையோ! அவர்கிட்ட முக்கியமான விஷயத்தக் கேக்க விட்டுட்டேனே!” என்றெண்ணிக்கொண்டு அவருக்கு வாட்ஸாப் செய்தேன். “ஹாய் பாலா. ஸாரி, கேக்கணும்னு நினைச்சேன். அங்க நீங்க க்ளாஸ்க்கு லெஸன் ப்ளான்லாம் எப்புடி பண்ணுவீங்க?”

அவர் அன்று சொன்ன பதில் இன்றும் தெளிவாய் நினைவிருக்கிறது. “வீ டோண்ட் ப்ளான் பா. வீ ஜஸ்ட் விங் இட்.” ("We don't plan pa. We just wing it.") அப்பதிலைப் படித்தவுடன் உப்பில்லாத சோற்றைத் தின்றதுபோலாகிவிட்டது. ஏனோ அதில் ஒரு உத்வேகமே இல்லாதது போலத் தோன்றியது. ‘என்னடா இந்த மனுஷன்! அவ்ளோ சின்சியர்னு சொல்றாங்க? இவ்ளோ வருஷமா வேல வெட்டி எல்லாம் விட்டுட்டு வந்துருக்காரு ஸ்கூலுக்கு ப்ளான் கூட பண்ணாமக் க்ளாஸ் எடுப்பாரா? இன்சின்சியரான ஆளா இருக்காரே!’ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அவர் சொன்னதன் பொருள் அது அல்ல; ‘எவ்வளவுதான் திட்டமிட்டாலும் ஒரு வகுப்பென்பது நாம் எதிர்பார்த்தபடி செல்லாது.’ - இதுதான் உண்மையான பொருள் என்பதைப் பின்னர் அனுபவத்தில் அறிந்தேன். அதையெல்லாம் எப்படியும் பின்னால் பார்க்கத்தானே போகிறோம்!?


**********


மறுபடியும் ஜூன் 2-ஆம் தேதிக்கு வருவோம்.


”பாலாண்ணா கோடம்பாக்கம் ஸ்டேஷன்ல 7.30 மணிக்கு வெயிட் பண்றேன்னு சொல்லிருக்காரு. நான் ஜிம் போயிட்டு வந்து உன்ன ஸ்டேஷன்ல ட்ராப் பண்ணிடுறேன். அவர் கூடவே ஸ்கூலுக்குப் போயிடு.” - ராம்பிரசாத் என்னை எழுப்பி இதைச் சொல்லும்போது காலையில் மணி 6. அரைத்தூக்கத்தில் நான் “செரி, ராம். நீங்க போயிட்டு வாங்க. ஐ வில் பீ ரெடி” என்று சொல்லிவிட்டு மறுபடியும் தூங்க முயன்றேன். “டேய், அவர் கொஞ்சம் சீரியஸான ஆளு. டைம் ரொம்ப எதிர்பாப்பாரு. நீ பாட்டுக்கு தூங்கிட்டு லேட் ஆக்கிடாத” என்று ஒருமுரைக்கிருமுறை ராம் சொல்லவே, நான் கடுப்பானேன்.


“நாளைக்குத்தான் ராம் ஸ்கூலே. இவரென்ன இன்னைக்கு வர சொல்றாரு? செரி போங்க, ரெடி ஆகுறேன்” என்றபடி படுக்கைத் துணிகளை மடித்து வைக்கத் தொடங்கினேன்.


சொன்னபடி 7.30க்கு அவர் வந்துவிட்டார் போல. என்னை கோடம்பாக்கம் ரயில் நிறுத்தத்தில் விட்டுவிட்டுப் படியேறி வந்து பாலாவிற்கு அறிமுகம் செய்துவிட்டுக் கிளம்பினார் ராம். இறுக்கமான, நம்பிக்கை கொடுக்கும் கைக்குலுக்கலுடன் தொடங்கியது பாலாவுக்கும் எனக்குமான முதல் உரையாடல்.

”என்னப்பா கடலூர்ல இருந்து எப்போ சென்னை வந்த?”

“நேத்தைக்கு ராத்திரி, பாலா” - பெயரழைத்துக் கூப்பிடலாம் என்ற ஒரு நல்ல விஷயத்தை மட்டும் ஐ.டி. நிறுவனம் எனக்குக் கற்றுக்கொடுத்திருந்தது.

“ட்ராவல்லாம் ஓகேவா?”

“ஹ்ம்ம். ஆல் குட் பாலா.”

“என்ன சொல்றான் ராம்?” - இந்தக் கேள்வி வம்புக்கானதா, அல்லது உண்மையிலேயே ஏதேனும் பதில் சொல்ல வேண்டுமா என்று தெரியவில்லை.

“ஸ்கூலுக்கு ஒரு நாள் முன்னாடியே போறது நல்லதுன்னு சொன்னாரு” என்று கூச்சமே படாமல் பொய் சொன்னேன்.

7.40-க்கு ரயிலேறினோம். ”இதான்பா நம்ம ரூட். நான் பொதுவா நுங்கம்பாக்கம் ஸ்டேஷன்ல ஏறுவேன். என் வீடு சூளைமேடுல இருக்கு. ஸோ எனக்குப் பக்கம். இன்னைக்கு உனக்கு ஃபர்ஸ்ட் டைம்ன்றதுனால வந்தேன். கோடம்பாக்கம் - நுங்கம்பாக்கம் - சேத்பேட் - எக்மோர் - பார்க் - ஃபோர்ட் - பீச்; இதான்பா ஸ்டேஷன்ஸ். ஸோ உனக்குக் கோடம்பாக்கத்துல ஏறுனா ஆறாவது ஸ்டேஷன். எப்புடியும் அதான் லாஸ்ட். ஸோ பயப்பட வேணாம்.”

அவர் சொல்வது பெரிதாகக் கவனம் ஈர்க்கவில்லை. எனக்கு “நீங்க ஏன் வேலைய விட்டுட்டு இதைய உங்க தோள்ல இழுத்துப் போட்டுட்டு செய்யுறீங்க? உங்களுக்கு எங்க இருந்து வருது காசு? ஏன் உங்களுக்கும் ‘டீச் ஃபார் இந்தியா’க்கும் வாய்க்காத் தகராறு?” என்று பல கேள்விகளைக் கேட்க வேண்டுமென்று தோன்றியது.

“அதென்னங்க ஸ்கூலுக்குப் பேரு நியூ மார்க்கெட் ஃபார்ம்?” - முக்கியமான கேள்விகளை அவரிடம் நன்றாகப் பழகியபின் கேட்டுக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

“அங்க பெரிய சந்தை இப்பவும் உண்டுப்பா. மார்க்கெட் சந்துன்னே ஸ்கூல் பக்கத்துல இருக்கு. ஆக்சுவலா ஸ்கூலோட ஃபுல் பேரு ’சென்னை ஹை ஸ்கூல் - அரத்தூண் ரோட் @ நியூ மார்க்கெட் ஃபார்ம்’” - அவரிடம் மார்க்கெட் ஃபார்ம் தொடர்பான பின்கதைகள் இருக்கும் என்று பட்டது. ஆனால் அதைவிட சுவாரசியமான ஒரு செய்தியைத் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது.

”அதென்னங்க ஸ்கூல் பேருல @ சிம்பல்லாம் வருது?” - சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும் ஏதோ உறுத்தலாக இருக்கவே கேட்டுவிட்டேன்.

“ஓ அதுவா? நம்ம ஸ்கூல் வெறும் நியூ மார்க்கெட் ஃபார்மாத்தான்பா இருந்துச்சு. அது ஒரு மெர்ஜர். ராயபுரத்துல அரத்தூண் ரோடுன்னு ஒண்ணு இருக்கு. அங்க இருக்குற ஒரு ஸ்கூல் நம்ம ஸ்கூலோட மெர்ஜ் ஆனதுனால தான் ‘அரத்தூண் ரோட் @ நியூ மார்க்கெட் ஃபார்ம்’.” - விளக்கம் திருப்திகரமாக இருந்தது.

“ஏன் மெர்...?” - கேள்வியை நான் முடித்திருக்கவில்லை. அவர் அதை எதிர்பார்த்திருக்க வேண்டும்.

“நெறைய ரீஸன்ஸ் இருக்கலாம்பா. ஸ்டாஃப் ஷார்ட்டேஜ், ஸ்டூடண்ட்ஸ் நெறைய பேரு ட்ராபவுட் ஆகுறது அப்புடின்னு.”

தலையாட்டிக்கொண்டே இருந்தேன். அவர் பேசி முடித்திருந்தார். அதை உணர்ந்தவனாய் ஜன்னல் வழியாக வெளியே பார்க்கத் தொடங்கினேன். அவரே கேட்டார். “நார்த் சென்னை இதுக்கு முன்னாடி வந்திருக்கியாப்பா?” - என்ன பதில் வரும் என்று அவருக்கு சர்வநிச்சயமாகத் தெரிந்திருக்கும்.

“இல்ல பாலா. கடைசி அஞ்சு வருஷமா சென்னையில தான் இருந்திருக்கேன். காலேஜ் நாலு வருஷம் அப்புறம் திருவான்மியூர்ல ஒரு வருஷம் தங்கியிருந்தேன் போன வேலைக்காக. ஆனா இந்தப் பக்கம் வந்ததில்ல.” - பதிலேதும் சொல்லவில்லை அவர். ஆனால் பொதுவாக ஒரு புன்னகையை உதிர்த்தார்.


கடற்கரை நிலையம் வந்துவிட்டிருந்தது. இறங்கி நடைமேடையில் நடந்து பஜார் பக்கம் இருந்த சப்வேயில் இறங்கி மறுபுறம் சென்று ஷேர் ஆட்டோவிற்காக நின்றோம். ஹெச்.எஸ்.பீ.சீ. வங்கிக் கட்டடம் பளிச்சென்ற வெள்ளை நிறத்தில் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது. “பஸ்ஸும் கெடைக்கும் பா. ஆனா நெறைய கூட்டம் இருக்கும். க்ளாஸ்க்குப் போகும்போதே வேர்த்து ஊத்திரும். ஆட்டோன்னா உக்காந்து போகலாம்.” என்றார்.


வந்த ஷேர் ஆட்டோவில் “சோலாஸ்” என்றார். ஓட்டுநர் தலையசைத்தவுடன் அமர்ந்தோம். ”அதென்னங்க ‘சோலாஸ்’?” என்றேன். “நாம எறங்க வேண்டிய பஸ் ஸ்டாப் பேறு என்.4 பா. என்.4 போலீஸ் ஸ்டேஷன் இருந்ததுனால அந்த ஸ்டாப்புக்குப் பேரு அப்புடி. ஆனா அங்க எறங்குனா ஸ்கூலுக்குக் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா நடக்கணும். அதையத் தாண்டிக் கொஞ்ச தூரத்துல ஸ்வாலோஸ் எஸ்டேட்னு (Swallows Estate) ஒரு எடம் இருந்துச்சு. அதுதான் பேச்சு வழக்குல சோலாஸ் ஆயிருச்சு” - இதுவரை அன்று நான் தெரிந்து கொண்ட எத்தனையாவது புதிய தகவல் அது என்று புரியவில்லை.


கடற்கரை நிலையத்தில் ஏறிய நாங்கள், ராயபுரம், கல்மண்டபம், காசிமேடு எல்லாம் கடந்து என்.4-ஐயும் தாண்டி, ‘சோலாஸில்’ இறங்கினோம். செரியன் நகர் மெயின் ரோடில் நடக்கும்போதுதான் கவனித்தேன். சாலையின் இருபுறங்களிலும் குறுக்குச்சந்துகள் பிரிந்துபிரிந்து சென்றன. ஒரு பக்கம் தேசிய நகர் ஒன்றாம் தெரு, இரண்டாம் தெரு, மூன்றாம் தெரு என்றும், மறுபக்கம் செரியன் நகர் ஒன்றாம் தெரு, இரண்டாம் தெரு, மூன்றாம் தெரு என்றும் பலகைகள் அடையாளம் காட்டின. அடைசலான வீடுகள். தண்ணீர்க்குடத்தை வைத்துக்கொண்டு பலர் நின்றுகொண்டிருந்தனர். தண்ணீர் லாரி ஒன்று நின்றிருந்தது. குடிநீர்ப் பகிர்வில் ஏதோ தகராறு நடக்கவே, வசைச்சொற்கள் மாறி, மாறி விழுந்தன. சட்டை போடாமல் வீட்டு வாசல்களிலும், வீதியின் ஓரத்திலும் ஒரு சிலர் பல்துலக்கிக் கொண்டிருந்தனர். வண்டிக்கடை ஒன்றில் பள்ளிச் சீருடை அணிந்து ஒரு கூட்டம் இட்லி வடை தின்றுகொண்டிருந்தது. பத்துப் பன்னிரெண்டு பேர் கொண்ட அக்குழுவில் திடீரென்று இரண்டு மூன்று பேர் பாலாவைப் பார்த்து விட்டுப் பள்ளி வளாகத்திற்குள் தெறித்து ஓடினர்.


சர்வ வல்லமை படைத்த, அனைத்தும் அறிந்த மேதாவியாய் உணர்ந்து பெருமிதத்துடன் பள்ளியின் விளையாட்டுத் திடலை ஒட்டியிருந்த வாயிற்கதவின் வழியே, ஏதோ அப்பள்ளியை மீட்டெடுக்க வந்த தேவதூதன் என்று என்னை நானே எண்ணிக்கொண்டு வலதுகால் எடுத்துவைத்தேன், அடுத்த ஒரு மாதத்தில் என் கர்வம் அனைத்தும் சின்னாபின்னமாகிச் சிதறிவிடும் என்றறியாமலேயே.


அரசுப் பள்ளியின் தற்காலிக ஆசிரியனாய் எனது முதல் நாள் தொடங்கவிருந்தது.


**********


மூன்றாம் பகுதியைப் படிக்க:

#3 - முதல் நாள் இன்று, எதுவோ ஒன்று...


Saturday, June 26, 2021

கரை வந்த பிறகே | #1 - அகர முதல

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இருபது முறையேனும் எழுத வேண்டுமென்று நினைத்தபடியோ, எழுதத் தொடங்கிய பின்னர் முடிக்காமலேயோ கிடப்பில் போடப்பட்டுக் கொண்டேயிருந்த பிறகு, இறுதியாக இன்று அமர்ந்தாகி விட்டது.


பொதுவாக, எழுத வேண்டும் என்றமர்ந்த பிறகு இவ்வளவு யோசித்துக் குழப்பிக் கொண்டதேயில்லை. ஆனால் இம்முறை எழுத வேண்டும் என்று எத்தனித்தது 2018-ல் இருந்து 2020 வரையிலான இரண்டு வருடங்களில் நான் என்ன பணி செய்தேன், என்ன கற்றேன் என்பது குறித்த ஒரு தன்னிலை விளக்கம்.


ஆரம்பத்திலேயே பல குழப்பங்கள்.

1. பல நாட்கள் தொடர்ச்சியாகத் தட்டச்சு செய்து, மிக நீண்ட பதிவாக மொத்தமாகப் பதிவிடலாமா? அல்லது, பல பகுதிகளாக அவ்வப்போது பதிவேற்றலாமா?

2. நிறைய பேர் படிப்பதற்கான வாய்ப்பிருக்கிறது என்பதற்காக ஆங்கிலத்தில் எழுதலாமா? அல்லது, சரளமாக வரும் தமிழில் எழுதலாமா?

3. வரலாற்றில் எழுதிப் பொன்னெழுத்துக்களால் பொறிக்கும் அளவிற்கு நான் எழுத எத்தனிப்பது உபயோகமானதா?


எனினும் இக்குழப்பங்கள் தாண்டி, சிற்சில நிகழ்வுகள் முக்கி முனகி என்னை எழுத வைத்திருக்கின்றன.

1. இளங்கலைப் படிப்பு முடித்து நான்கு வருடங்கள் சென்ற பிறகு, போதுமான வேலையனுபவத்துடன் மேலாண்மைக் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தபோது நான் தொடர்ச்சியாக எதிர்கொண்ட “நீ நிலையாக ஒரு வேலையில் இருந்திருக்கவில்லை. Your profile shows professional inconsistency” என்று தொடர்ச்சியாக என்னைக் குற்ற உணர்ச்சிக்குத் தள்ளிய மேதகு நேர்காணல் நடத்தியவர்கள். (பி.கு.: பல நிராகரித்தல்களுக்கும், சில ஒப்புதல்களுக்குமிடையே ஒருவழியாக ஒரு நல்ல மேலாண்மைக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது என்பது வேறு விஷயம்.)

2. தமிழக அரசாங்கத்தின் சமீபத்திய அறிவிப்பான “2 லட்சம் பள்ளி மாணவர்களுக்குக் கண் பரிசோதனை செய்யப்படும்” என்பது.

3. நண்பர்கள் பலர் 2019-ல் இருந்தே என்னுடைய வேலை அனுபவங்களைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்று திரும்பத் திரும்பக் கூறி வந்தனர். வெவ்வேறு காரணங்களால் “பிறகு பார்க்கலாம்” என்ற அளவில் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தேன். சமீபத்தில் 2018-2020 காலகட்டத்தில் என்னை வழிநடத்திய நபருடன் பேசுகையில், அவரும் “நாம அனுபவத்த எல்லாம் எழுதணும் பா” என்று சொல்லக்கேட்டு, அடியேனும் வேலை வெட்டியின்றி தண்டச்சோறு தின்று குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருக்கிறபடியால், எழுதலாமே என்று எண்ணம்.


மேற்சொல்லியபடியே, அப்படி நான் 2018 தொடங்கி 2020 வரையிலான இரண்டாண்டுகளில் அப்படியென்ன சாதித்து விட்டேன் என்று இந்த விளக்கம்? காரணம் இருக்கிறது. இடஞ்சுட்டிப் பொருள் விளக்குவதற்கு முன், சில விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது.


நான் கடலூரைச் சேர்ந்தவன். கிண்டி பொறியியல் கல்லூரியில் 2017-ஆம் ஆண்டு இயந்திரவியல் பிரிவில் படித்து முடித்து, ஐ.டி. நிறுவனமொன்றில் பணியாற்ற முனைந்தவன். உலக ஆன்றோர் சான்றோரால் ’பணிபுரிபவர்களைக் கண்ணியத்தோடு நடத்தும் நிறுவனம்’ என்று அன்போடு அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அவ்விடத்தில், எனக்கு அமைந்த மேலாளருக்கும் எனக்கும் வாய்க்கால் தகராறு. தகராறு என்றால் நான் ஏதோ அவரை எகிறிச் சென்று சட்டையைப் பிடித்துவிட்டேன் என்ற ஹீரோயிஸத் தகராறல்ல. “நீயெல்லாம் ஒரு ஆளா? உன்னையெல்லாம் எதுக்கு வேலைக்கு எடுத்தாங்க?” என்ற ரீதியில் தினம் காரணமேயின்றி அவரிடம் பேச்சு வாங்க நேர்ந்ததைத்தான் நாசூக்காகத் ‘தகராறு’ என்கிறேன்.


2017 ஜூன் 21-ஆம் தேதி தொடங்கிய அப்பணியிலிருந்து 2018 மார்ச் 30-ஆம் நாள் விலகினேன். சற்றேறக்குறைய 9 மாதங்கள்; அவ்வளவே. தினமும் வேலைக்குச் சென்று, தேவையில்லாமல் கூனிக் குறுகி நின்று, எதற்கும் லாயக்கில்லை என்று வசவுகளை வாங்கிப் பழகிப் போய்விட்டிருந்த எனக்கு, இழந்த என் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது. வேலையிடத்தில் வெற்று அவமானத்திற்கு மட்டுமே பழக்கப்பட்டிருந்த நான், எனக்கு என்னையே அடையாளப்படுத்திக் கொள்ள வழிகொடுக்கும் ஒரு வேலையை ஜனவரி 2018-ல் இருந்தே தேடத் தொடங்கிவிட்டிருந்தேன். ‘டாடா ட்ரஸ்ட்ஸ் ஃபெல்லோஷிப்’ (Tata Trusts Fellowship), ‘அஸீம் ப்ரேம்ஜி ஃபவுண்டேஷன் ஃபெல்லோஷிப்’ (Azim Premji Foundation Fellowship), ‘டேட்டா காப்ஸ்’ (Data Cops), ‘காந்தி ஃபெல்லோஷிப்’ (Gandhi Fellowship), ‘லாம்ப் ஃபெல்லோஷிப்’ (LAMP Fellowship) போன்ற இயல்பான கார்ப்பரேட் பணியிலிருந்து சற்றே மாறுபட்ட வேலைகளுக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்தேன்.


எதிர்பார்த்தது போலவே பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுக் கொண்டேயிருந்தன. மின்னஞ்சலைத் திறந்துபார்த்தாலே “வீ ரெக்ரெட் டு இன்ஃபார்ம் யூ தட் யுவர் அப்ளிக்கேஷன் ஹாஸ் பீன் ரிஜெக்டட்” ("We regret to inform you that your application has been rejected") எனும் தகவல்கள் முகங்காட்டின. ஒருகட்டத்தில், பிப்ரவரி 2018-ல் எல்லாம், “உண்மையிலேயே நான் லாயிக்கில்ல தான் போல!” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு, இருக்கிற வேலையை விட முடியாது போலிருக்கிறது என்ற முடிவுக்கு வந்துவிட்டிருந்தபோதுதான், ‘டீச் ஃபார் இந்தியா ஃபெல்லோஷிப்’பிற்குத் (Teach For India Fellowship) தேர்வாகியிருப்பது தெரிய வந்தது.


தெம்புடன் சென்று மேலாளரின் முகத்திலறையும் தொனியில், “நான் மார்ச் மாத இறுதியில் வேலையை விட்டு விலகுகிறேன்” என்று சொன்னபோது இனம்புரியாத மகிழ்ச்சி. மனதில் உத்வேகம் கூடியிருந்தது. அவரது நடத்தை குறித்துப் பலமுறை புகார் செய்தும் கண்டுகொள்ளாத மனிதவளத் துறை சார்ந்தவர்களிடமும் விவரத்தைத் தெரியப்படுத்தினேன்.


2017-18 என்னைப் பொறுத்தவரையில் அழிக்கப்பட வேண்டிய காலம். ஆனால் ஒரு விஷயத்திற்காக அம்மேலாளருக்கும், நிறுவனத்துக்கும் கடமைப்பட்டுள்ளேன் என்று வேண்டுமானால் சொல்லலாம். என்னைச் சுயமரியாதைக்காரனாய் (’ஒடனே தூக்கினு வந்துட்டான்பா திராவிடத்த’ எனும் குரல் கேட்கிறது’; பிறகு பதில் சொல்லிக்கொள்ளலாம்) மாற்றியதில் பெரும்பங்கு வகித்தது என்னை வேலையை விட்டு விலகச் செய்த புண்ணியவான்களே ஆவர்.


ஆனால், 2018-2020 ஆகிய இரண்டு வருடங்களும் ‘டீச் ஃபார் இந்தியா’ அடையாளத்தின் கீழ் பணியாற்றியிருக்க வேண்டிய நான், 2019-ல் விலக நேர்ந்தது. ஏன்?


2018-19 கல்வியாண்டில் எனக்களிக்கப்பட்டது புது வண்ணாரப்பேட்டை செரியன் நகர் நகராட்சிப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு. அமைப்பின் விதிமுறைகளுக்கேற்ப நான் 2019-2020 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பிற்குப் பொறுப்பேற்றிருக்க வேண்டும். ஆனால், பத்தாம் வகுப்பு என்பது பொதுத்தேர்வு போன்ற முக்கியமான கட்டங்களைக் கொண்டிருப்பதால் நிரந்தர ஆசிரியர்களுக்கே அவ்வகுப்பு அளிக்கப்பட வேண்டுமென்பதும் விதிமுறை.


எனக்கு இரு வாய்ப்புகளிருந்தது.

1. ‘டீச் ஃபார் இந்தியா’ அமைப்பில் இருந்துகொண்டே வேறொரு வகுப்பிற்கோ, அல்லது வேறொரு பள்ளியிலோ பாடம் நடத்தலாம்.

2. அதே வகுப்பில்தான் பாடம் எடுப்பேன் என்று அடம்பிடித்தால், அமைப்பிலிருந்து விலகி, வேறு ஏதேனும் வழிமுறைகளைக் கையாண்டு பத்தாம் வகுப்பிற்கு ஆசிரியனாய் இருத்தல்.

நான் முதல் வாய்ப்பைத் தவிர்த்து, இரண்டாவதைக் கையிலெடுத்தேன். காரணம், ‘வாசிப்பு’. இதென்ன புதுக்கதை? அதென்ன ‘வாசிப்பு’? அதையெல்லாம் பின்னர் பார்க்கலாம்.


இத்தருணத்தில், இதைத்தான் நேர்காணல்களில் அவர்கள் professional inconsistency என்றழைத்தனர் என்று தெளிவுபடுத்த விழைகிறேன். அவர்களைப் பொறுத்தவரை, நல்ல ப்ரொஃபைல் (profile) என்பது அனைவரும் அறிந்த கொழுத்த நிறுவனங்களில் பணிபுரிவது. ஒரு மனிதனின் தொழில்முறை வாழ்வில் நிறுவனங்கள் மாறுவது என்பது யாரும் விளையாட்டாய்ச் செய்வதில்லை. ஆனால், அதற்கான விளக்கங்களை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லாத மேதகு மேலாண்மைக் கல்லூரிகளில் என்ன சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.


மேலும், பள்ளியில் பணியாற்றிய அவ்விரு ஆண்டுகளிலும் நான் சந்தித்த பலர், என்னுடன் நண்பர்களாகவே இருந்த மேலும் பலர் என்னைப் பின்வரும் இரு கோணங்களில் ஒன்றில் வைத்தே பார்த்தனர்.

1. ‘பைத்தியக்காரன், நல்ல காசு குடுக்குற வேலைய விட்டுட்டு, சம்மந்தமே இல்லாம எங்கேயோ போய்ட்டு குப்ப கொட்டிட்டிருக்கான்’ - உதவாக்கரை பிம்பம்

2. ‘ப்பா... பெரிய ஆளுப்பா இவன். நல்ல வேலைய விட்டுட்டு டப்புனு மாறிப் போறதுக்கெல்லாம் பெரிய தைரியம் வேணும்’ - அதிநாயகப் பிம்பம்


இவற்றையெல்லாம் தாண்டி என் பெற்றோருக்குமே கூட, நான் 2018-ல் திடீரென்று புதியதோர் பணிக்குச் சென்றபோது ஆச்சரியமும், அதிருப்தியும் மிகுந்திருக்கும் என்பது நிதர்சனம். ‘செரி, இவன் செஞ்சா செரியாத்தான் இருக்கும்’ என்ற ரீதியில் தைரியம் கொடுத்திருக்கும் அவர்களுக்கும், 2018-2020 ஆண்டுகளில் கற்றவை, பெற்றவை, இழந்தவை, கொடுத்தவை இவை போக ‘நான் கண்ட மனிதர்கள்’ என்ற பல்வேறு பரிமாணங்களை விளக்குவது அவசியமாகிறது.


சமீபத்தில் கூட நண்பனொருவன் ‘எப்புடியோ மச்சி. எங்கெங்கேயோ சுத்திட்டு ஃபைனலா எம்.பி.ஏ. பண்ணணும்னு முடிவு பண்ணிட்ட. ஒரு வேளை உன் ப்ரொஃபைல இம்ப்ரூவ் பண்றதுக்குத்தான் இந்த சோஷியல் சர்வீஸ்லாம் பண்ணுனியோ?’ என்று நக்கலாகக் கேட்டான். அதற்கான விளக்கமாகவும் இத்தொடர் இருக்கும் என நம்புகிறேன்.


எத்தனைப் பகுதியாக எழுதப் போகிறேன், எதை எழுத வேண்டும் எதை விட வேண்டும் என்ற எவ்விதத் தெளிவும் இல்லை. அவ்வாறிருத்தலே நலம் என்றெண்ணுகிறேன். இதுவரை நான் எடுத்த முடிவுகள் பல ஆழ்ந்து சிந்தித்து, சிலாகித்து, விவாதித்து, கலந்தாலோசித்து எடுக்கப்பட்டவை அல்ல. இன்றியமையாத் தேவையினால் எனக்களிக்கப்பட்டவை. அதன் சாதக, பாதகங்களுக்கான முழுப் பொறுப்பையும் ஏற்கும் பக்குவம் எனக்கு வந்துவிட்டதாக உணர்கிறேன்.


‘எண்ணித் துணிக கருமம்’ எனும் கூற்று எனக்கு உவப்பானதல்ல. படிப்படியாக, நொடிநொடியாகத் திட்டமிட்டு நான் செயலில் இறங்கிய பல காரியங்களை விட, கணப்பொழுதில் முடிவெடுத்த முன்னெடுப்புகளே என்னைச் செலுத்தியிருக்கின்றன. மேலும், திட்டமிட்ட பல காரியங்கள் உடனே செயல்கூடியதுமில்லை. அவ்வகையில் திட்டங்கள் ஏதும் இல்லாத இத்தொடரும் முழுமை பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


தொடக்கத்தில் குறிப்பிட்ட மூன்று குழப்பங்களுக்கு விடைகளாக எனக்கு நானே சொல்லிக்கொண்டவை.

1. மொத்தமாக எழுதி ஒரேயடியாகப் பதிவிட விருப்பமில்லை. நீளம் கருதிப் பலர் படிக்காமல் போவதற்கான வாய்ப்புகளே அதிகம் (ஏற்கனவே, 50 பேருக்கு அனுப்பினால் 5 பேர் படித்தால் அதுவே அதிசயம்.) என்னை நானே உந்திக்கொண்டு பெரிய ஒரு தொகுப்பாக இதை எழுதிவிட முடியும் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை. அவ்வப்போது ஓரிரு பகுதிகளைப் படித்துவிட்டு எவரேனும், “தொடர்ந்து எழுது” என்று சொல்வது வேகத்தைக் கொடுக்கும் என்பது எண்ணம்.

2. எளிதான பதில். தமிழில் எழுதுவது எளிது. பல பகுதிகளில் கோபம், வருத்தம், ஆற்றாமை போன்ற உணர்வுகள் இடம்பெறுமாயின், அவற்றை வெளிப்படுத்துவதற்குத் தமிழே சரியானது. அவ்வளவு ஆங்கிலப் புலமை பெறவில்லை இன்னும்.

3. வரலாறெனச் சொல்லுமளவிற்கு உபயோகமானதானதை மட்டுமே எழுத வேண்டுமெனில் இவ்வலைப்பூவில் இருக்கும் அத்தனைப் பதிவுகளையும் நீக்க வேண்டியிருக்கும். எழுதத் தொடங்கியிருக்கும் இத்தொடர் என்னளவில் என் வாழ்வின் முக்கியமான இரு ஆண்டுகள் குறித்த பதிவுகளாக இருக்க வேண்டும், இருக்கும்.


தினம் ஒரு பகுதியாக எழுத முடியுமா என்று தெரியவில்லை. ஓரிரு நாட்களுக்கொருமுறையேனும் எழுதிவிட வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.


**********


தொடரின் பிற பகுதிகளைப் படிக்க:


#2 - ஆசான், சென்ன வட சென்ன, செரியன் நகர் & அரத்தூண் ரோட் @ நியூ மார்க்கெட் ஃபார்ம்

#3 - முதல் நாள் இன்று, எதுவோ ஒன்று...