Wednesday, October 24, 2018

சருகு

16 வயது. இல்லை, 16 வயதுதான். நாளை அடக்கம் செய்யவிருக்கிறார்கள். என் வகுப்பில் படிக்கும் மாணவனின் அண்ணன். அண்ணன் என்றால் உடன்பிறந்தவனில்லை. அத்தை பையன். பணமிருந்து, மனமில்லாது வாழும் மனிதருக்குத்தாம் “அவன் சொந்தக்காரப் பையன்”, “கஸின்” என்றெல்லாம் சொல்லத் தோன்றும். இறந்தவன் யாரென்று கேட்டால், “சார், ___ அண்ணன் சார்” என்றுதான் அனைவரும் சொன்னார்கள்.

பள்ளி முடிந்து, மாலை வகுப்புகள் முடியும் நேரத்தில் துக்கம் விசாரிக்கச் சென்றேன். துக்கம் விசாரிக்க என்றுகூடச் சொல்ல முடியாது. தம்பியாகிய வகுப்பு மாணவனின் மனநிலை எவ்வாறு இருக்கிறது என்று அறியும் ஒரு சுயநலத்துடன்தான் போனேன். அவன் என்னிடம் வகுப்பில் பலமுறை வசவுகள் வாங்கியவன். ரொம்பச் செல்லப் பிள்ளையெல்லாம் கிடையாது.

தெரு என்று சொல்ல முடியாத அளவிற்கு ஒரு குறுகலான சந்து. அச்சந்தில் உடலை வைக்க முடியாதென்பதால் தெருவிலேயெ குளிர்பதனப் பெட்டியில் கிடத்தியிருந்தார்கள். யாரும் அழவில்லை. நான்கைந்து பேர் வெறித்துப் பார்த்தபடியே இருந்தார்கள். உடல் முழுவதும் வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருந்தது. முகம் மட்டுமே தெரிந்தது. பார்க்கும்படியாக இல்லை.

ஆயுத பூஜையன்று ஐ.எஸ்.எல் கால்பந்தாட்டத்திற்காக அரங்கிற்குச் சென்றுவிட்டு ரயிலில் திரும்ப வந்துகொண்டிருந்திருக்கிறார்கள் ஏழு பேர். மூவர் இவன் படித்த பள்ளியில் படித்தவர்கள், மூவர் இவன் படிக்கும் பள்ளியில் படிப்பவர்கள். இவனுடன் சேர்த்து ஏழு. ரயிலில் வரும்போது எச்சில் துப்புவதற்காக வெளியே தலையை நீட்டியதாகச் சொல்கிறார்கள், கம்பத்தில் தலை மோதி ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டிருக்கிறான். இரவு ஏழு மணியிலிருந்து எட்டரை மணி வரையிலான போட்டி என்பதால் இது ஒன்பது மணியிலிருந்து, பத்து மணிக்குட்பட்ட நேரத்தில் நடந்திருக்க வேண்டும். அதிக அளவிலான இரத்தம் வெளியேறிய ஆபத்தான நிலையில் ஸ்டான்லியில் சேர்த்திருக்கிறார்கள்.

மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறது. நினைவிழந்த நிலையில், கோமாவுக்குத் தள்ளப்பட்டுப் பின்னர் மூளைச்சாவு ஏற்பட்டுக் கடைசி உயிர்நாடியான செயற்கைச் சுவாசமும் பிடுங்கப்பட்டு இன்று கடுங்குளிர் தெரியாதவாறு துணியால் மூடப்பட்டுக் கதகதப்பாக உறங்கிக்கொண்டிருந்தான். முகம் வெளிர்நீலமாய் மாறியிருந்தது. கண்கள் வீங்கிக் கன்னம் அடையாளம் தெரியாமல் ஆறடிப் பெட்டிக்குள் அடங்கியிருந்தான். வெளியில் கேட்கும் விசாரிப்புகள் அவன் காதில் விழ வாய்ப்பில்லை. கண்ணாடிதான் தடுத்துவிடுமே!

”தம்பி” என்ற சத்தம் கேட்டுச் சட்டென விலகினேன். இரண்டு நிமிடங்களுக்கும் மேலாக அவனையே பார்த்துக்கொண்டிருந்து விட்டேன் எனும் உண்மை அப்போதுதான் உறைத்தது. மாலையுடன் ஒருவர் வந்து, பெட்டிக்கு அதை அணிவித்துப் போனார். அதன் பிறகு, சந்திற்குள் சென்றேன். வகுப்பு மாணவனின் அம்மாவிடம், “_____ இருக்கானாம்மா?” என்று கேட்டு முடித்திருக்கவில்லை. “சாஆஆஆஆஆர்” என்று கதறிக்கொண்டே வந்து என் மேல் சாய்ந்தான். “அண்ணன் சாஆஆர்… ஃபுட்பா…ஃபுட்பால் மேச்சு… ட்ரெயின்ல வரும்போது…” என்றபடி பெருங்குரலெடுத்து ஓலமிட்டான். அவனது தோளை ஒரு கையால் இறுகப் பற்றியபடி, முதுகில் இன்னொரு கையால் தட்டிக்கொடுத்தபடியே இருந்தேன்.

அவனது விசும்பல் ஒவ்வொன்றும் சுற்றிலும் கேட்ட மற்ற அனைத்து இரைச்சல்களையும், ஓசைகளையும் விடப் பல மடங்கு அதிர்வு கொண்டதாக இருந்தது. கண்கள் நீர்த்திரையால் மறைக்கப்படுவதை உணர்ந்தேன். சற்றே தலையில் எடை கூடியது போல் இருந்தது. கண்கள் இருட்டிக்கொண்டு வருவது புரிந்தது. உணர்வுகளும், தசைகளும் ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டு செயலிழந்துகொண்டிருந்தன. கால்களில் வலு படிப்படியாகக் குறைந்து முருங்கைக்காயைப் போல் வளைவதைத் தெளிவாக உணர்ந்தேன். இதயத் துடிப்பு இரு மடங்காக பெருகிக்கொண்டே போவது போல் தெரிந்தது. மலையுச்சியை அடைந்த மனிதனின் செவிப்பறையைப் போல் என் காதுகளும் அடைத்துவிட்டிருந்தன.

எதுவுமே சொல்லத் தோன்றவில்லை. தட்டிக்கொடுத்துக்கொண்டேயிருந்தேன். அனிச்சைச் செயலாய்த் தொடங்கிய அதுவுமே கூட இயந்திரத்தனமாக மாறியிருந்ததைக் கவனிக்கவில்லை. சில நிமிடங்களுக்கு மேல் என் பிடியிலிருந்து அவன் தன்னை விடுவித்துக்கொண்டான். கண்ணைத் துடைத்தவாறு, “டீ குடிங்க சார்” என்றான். குடிப்பதில்லை என்றேன். வெறுமையாகப் பார்த்தான். கழுத்தின் முன்புறம் வழியாக முதுகெலும்பை ஊடுருவிச் சென்றது அவனது வெளிறிய பார்வை. உடம்பு சில்லிட்டது போலிருந்தது.

அவனது அம்மாவிடம், “பையனைக் கொஞ்சம் ஊருக்கு, சொந்தக்காரங்க வீட்டுக்கு அனுப்பிடுங்க. இல்லைன்னா ஸ்கூலுக்கே வரட்டும். வீட்டுல இருந்தாத் திரும்ப திரும்ப அதே ஞாபகமாவே இருக்கும். பாத்துக்கோங்கம்மா” என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடந்தேன். தெருமுனைக்கு வந்தபோது நீல முகம் என்னைக் கட்டாயப்படுத்தித் திரும்பிப் பார்க்க வைத்தது.

உடம்பு உலை போலக் கொதித்தது. காதில் யாரோ சீழ்க்கை அடிப்பதைப் போன்ற ஒரு இரைச்சல். வலிந்து காதை மூடிக்கொண்டு நிமிர்ந்து பார்க்காமல் குனிந்தபடியே நடந்தேன். சாலையில் இருந்த தார்க்கற்கள் அனைத்தும் திடீரெனப் பிளந்து விழுங்க வருவதைப் போல் தோற்றமளித்தன. கண்களை இறுக மூடியபடியே நடந்தேன். நீல வட்டங்கள் மூடிய கண்களுக்குள் வட்டமடித்தன. அவ்வட்டங்களுள் அவ்வெளிர்நீல முகமும் ஒன்று.