Saturday, June 17, 2017

எண்ண அலைகளைத் தூண்டும் மீரான் மைதீன்: ‘கவர்னர் பெத்தா’ சிறுகதைத் தொகுப்பு குறித்த கருத்துக்கள்

நாவலுக்கும், சிறுகதைக்குமான வித்தியாசங்களை ஆராய வைத்தது என்னிடம் நண்பன் ஒருவன் கேட்ட கேள்வி. “ஒரு நாவலைப் படிக்கும்போது அதிலுள்ள மையக்கருத்து, கிளைகளாய்ப் பிரிந்து நினைவலைகளை ஏற்படுத்தும். ஆனால், சிறுகதைத் தொகுப்புகளைப் பொறுத்தவரையில் அப்படியான மைய நீரோட்டம் என்பது கதைக்குக் கதை மாறுபடும். எனவே, பல்வேறு விதமான எண்ணவோட்டங்களைப் பல திசைகளில் பயணிக்க வைக்கும்என்பதைப் பதிலாக அளித்தேன். அவன் கேட்ட அவ்வினாவும், அதன் தொடர்ச்சியாக நான் படிக்க நேர்ந்தகவர்னர் பெத்தாஎன்ற மீரான் மைதீனின் சிறுகதைத் தொகுப்பும் என்னுள் ஏற்பட்டிருந்த தவறான ஒரு தீர்மானம்நாவல்கள் சிறுகதைகளைக் காட்டிலும் மேலானவைமுற்றிலுமாக உடைந்து சிதறியது.

பத்து சிறுகதைகள், 93 பக்கங்கள் என்று முத்தாக வந்திருக்கிறது இந்நூல். அனைத்துக் கதைகளுமே தமிழ் இசுலாமியச் சமூக வாழ்வியலை எடுத்துரைப்பதாக இருப்பினும், மற்ற சமூகத்தினரும் தொடர்புபடுத்திப் பார்க்கும் வகையிலேயே அமைந்துள்ளது வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். இதன் காரணமாக நான் கருதுவது, நம் நாட்டில் இருக்கும் எல்லாச் சமூகத்தினரும் வெவ்வேறு பெயர்களில் அனுசரிக்கும் பல வழக்கங்களும் ஏதேனும் ஒரு மையப்புள்ளியில் சங்கமிக்கின்றன எனும் நிதர்சனம்.

அசன் கண்ணப்பாவில் தொடங்கி, ‘ரோஜாப்பூ கைத்துண்டுவரையிலான பத்துக் கதைகளும் அன்றாட வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டவை. கதைமாந்தர்களாய் வரும் காதர் சாகிபையோ, யூசுப்பையோ வேறு பெயர்களில் வாசகனும் சந்தித்திருப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் எனுமளவிற்குக் கதைச் சம்பவங்கள் வலுவானவையக உள்ளன.

கதைகளில் கையாளப்படும் நையாண்டி, இளக்காரம், சோகம் அனைத்தையும் தாண்டி, கதை முடிவுகள் சொல்லும் சில செய்திகள் மிக முக்கியமானவை. சொல்லப்போனால், கதைகளே கடைசி வரியில்தான் சொல்லப்பட்டிருக்கின்றன எனும் தோற்றத்தை ஏற்படுத்தும் சாட்டையடிச் செய்திகள் நிறைந்து வழிகின்றன. நூலின் தலைப்பானகவர்னர் பெத்தாஎனும் சிறுகதை, இதற்கான சிறந்த உதாரணம். ஆளுனர் ஃபாத்திமா பீவி ஒரு கிராமத்திலுள்ள பள்ளிவாசலுக்கு வருகை தரும் அதன் களம், இறுதியில் அதன் பாத்திரமான பீர்மா எனும் பெண்மணியின் யதார்த்தமான தொனியில் கேட்கப்படும், “’பொட்டப்புள்ள படிச்சு என்ன கவர்னரா ஆகப்போற?’ன்னு எங்க உம்மாவும், வாப்பாவும் சொல்லாம இருந்திருந்தா நானும்தான் பெரிய ஆளா ஆயிருப்பேன்என்ற கேள்வி நமக்குள் விளைவிக்கும் அதிர்வுகள் ஏராளம். கொஞ்சம் பிசகியிருந்தாலும் பிரச்சாரத் தோற்றம் கொள்ளக்கூடிய பெண்கல்வி தொடர்பான செய்தியை அழகாகக் கோடுகாட்டிச் செல்கிறது கதை.

மற்றொரு உதாரணமாகக் குறிப்பிட வேண்டிய சிறுகதை, நூலின் கடைசியில் இடம்பெற்றிருக்கும்ரோஜாப்பூ கைத்துண்டு’. மேலோட்டமாகப் பார்க்கும்போது விடலைப்பருவக் காதலாகத் தோன்றும் இது (காதல் கதைதான் என்பதை மறுப்பதற்கில்லை) இறுதியில் நாயகியின் வார்த்தைகளின் மூலம் சொல்ல வரும் செய்தியும் சக்திவாய்ந்தது. ’பெந்தகொஸ்துஎனும் கிறித்துவ சமூகத்தைச் சார்ந்த பெண்மணியான அவளுக்கும், இசுலாமிய இளைஞனுக்கும் ஏற்படும் உரையாடல், அது கொடுக்கும் ஊடல் என்று வளரும் சிறுகதையில், அவள் நகைகளும், பூவும் அணிந்துகொள்ளாதது அவனுக்கு வியப்பை ஏற்படுத்துகிறது; ஏற்றுக்கொள்ளவே முடியாததாக இருக்கிறது. “உங்க வீட்டுல பொட்டு வெச்சுப்பாங்களா? மாட்டாங்கல்ல. அதே மாதிரிதான் இதுவும்” என்று அவள் சொல்லும் இடம், இந்நாட்டின் மதக்காவலர்களும், ‘புனிதர்’களும் அவசியம் உணர வேண்டிய ’மதமும், அது சார்ந்த நம்பிக்கைகளும், கலாச்சாரங்களும் வலுக்கட்டாயமாக நிறுத்தவோ, திணிக்கவோ, மாற்றவோ படக்கூடாது’ எனும் செய்தியைப் பறையடித்துச் சொல்வதுபோல் உள்ளது.

தொழில்சார்ந்து குடும்ப உறுப்பினர்கள் ஒருவரோ, பலரோ இடம்பெயர்ந்து குடும்பத்தின் பிற அங்கத்தினரைச் சொந்த இடத்தில் விட்டுவரும் அவலம், ‘சம்மந்தக்குடி’யின் ஒரு பகுதி என்றால், எவ்விதப் பிரதிபலனும் எதிர்பார்க்காது உழைத்து, ஓடாகத் தேயும் மூத்த உறுப்பினர்களின் தியாகத்தின் உருவமாகத் திகழும் மொய்து சாயிபு மறுபக்கமாக மனக்கண் முன் வந்து செல்கிறார்.

’அசன் கண்ணப்பா’ என்ற தொடக்கக்கதை, சற்றும் பிசகாமல் சுந்தர ராமசாமியின் ‘விகாசம்’ எனும் சிறுகதையை நினைவுபடுத்துகிறது. முன்னது, தொலைக்காட்சியின் வரவால் தனித்துவிடப்படும் கதைசொல்லி முதியவரைப் பற்றிய பதிவு; பின்னது, ‘கால்குலேட்ட’ரின் வரவால் மனிதக் கணினியாக இயங்கிய ராவுத்தர் எனும் முதியவரைப் பற்றியது. ஆனால், ‘விகாச’த்தில் மனிதர்கள் இயந்திரங்களைக் காட்டிலும் மேன்மையானவர்கள் எனும் கருத்து கடைசியில் சொல்லப்பட்டிருக்கும்; ‘அசன் கண்ணப்பா’வில் அத்தகைய முடிவுகள் வலிந்து திணிக்கப்படுவதில்லை, அசன் கண்ணப்பாவின் எரிச்சலான புலம்பலும், தன்னிடம் இனி எவரும் கதை கேட்க வரப்போவதில்லை எனும் நினைப்புடனும் கதை முடிகிறது. இது வாசகர்களுக்கான மனத்திறப்பை அதிகப்படுத்துகிறது. நம் வசதிப்படி, நாமே கதையை அதற்குப் பின்பு தொடர்ந்து நமக்கு ஏற்றார்போல் ஒரு முடிவைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் சுதந்திரத்தை அளிக்கிறது.

கதைகளின் முக்கியமான நோக்கங்களாக நான் பார்ப்பது, வாசகரின் வாழ்வினையும், வாழ்வியலையும் அசைபோட்டுப் பார்க்கச்செய்வது. அவ்வகையில், ‘தம்பிக்குட்டி’ எனும் கதையில் வரும் ஆட்டுக்குட்டி, எங்கள் வீட்டில் வளர்ந்த ’பப்பூ’ எனும் பூனைக்குட்டியை நினைவுபடுத்தத் தவறவில்லை. ஆசையுடன் குழந்தைகள் கண்பட வளரும் ஆட்டுக்குட்டி, பள்ளிவாசலுக்கு நேர்ந்துவிடப்படுவது ‘தம்பிக்குட்டி’யின் சாரம். என் கண் முன்னால் வளர்ந்த பப்புக்குட்டியும், அதன் குழந்தைகளும் நான் கல்லூரி சென்றபிறகு கோயிலில் விடப்பட்டது (பின்னர் அதற்காக அம்மாவும், அப்பாவும், நானும் அழுதது) வாழ்வில் நடந்த நிஜம்.

‘பெஞ்சி’ எனும் கதையில் வரும் மோதியரும் முக்கியமான சில சடங்குகளை நினைவுபடுத்துகிறார். மோதியராய் இருக்கும் அவர், இறப்பு நிகழ்வுகளுக்குச் சென்றுவருவதால், அவர் ஒதுக்கிவைக்கப்படுகிறார்; வயது பேதமின்றி, ஊரின் அனைத்துத் தரப்பு மக்களின் கேலிகளுக்கும், கிண்டல்களுக்கும் ஆளாகிறார். ஆனால், அவரைத் தூற்றும் அதே மக்கள் அடுத்தடுத்த இறப்புக்குத் திரும்பத்திரும்ப அவர் சேவையை நாடுகின்றனர். அவரது உளச்சிக்கல்களுக்கும், வாழ்வுப் பிரச்சினைகளுக்கும் யாரிடமும் உதவியில்லை. பிராமணர் வழக்கத்திலும் இத்தகைய சடங்கொன்று உள்ளது. பிராமணர் ஒருவர் இறந்தால் அவரது ஆத்மாவே சாப்பிட வருகிறது எனும் நம்பிக்கையில் பிராமணர் ஒருவர் உணவுண்ண அந்த இழவு வீட்டிற்கு அழைக்கப்படுவார். அன்று மட்டுமே அவருக்கு ராஜ மரியாதை. பிற நாட்களில் அவர் ஒரு அபசகுனம். அவரது வீட்டில் பெண்ணெடுக்க அனைவரும் தயங்குவர்; சாலையில் செல்லும்போது அவரைப் பார்த்துவிடக் கூடாது, பார்த்தாலும் ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்று பல மூடநம்பிக்கைகள் இருக்கின்றன. அதேபோல் பிற சமூகத்தினரிடமும் பல்வேறு பைத்தியக்காரத்தனமான வழக்கங்கள் – இப்படிச் சொல்வதில் எனக்கு எவ்விதக் கூச்சமும் இல்லை – இருக்கக்கூடும். ‘இவையெல்லாம் யார் தொடங்கியது?’, ’எதற்காக இவற்றை எவ்வித எதிர்க்கேள்விகளுமற்றுப் பின்பற்றுகிறோம்?’ எனும் வலுவான கேள்விகளை எவ்விதத் தூண்டுதலும், பிரச்சாரமுமின்றி அகத்தே எழுப்புகிறது ‘பெஞ்சி’ கதை.

‘ஓட்டு’ எனும் கதையில், மாந்தர் அனைவரும் குழந்தைகளாயிருப்பினும், அது குறிப்பால் உணர்த்தும் உண்மை அசாத்தியமானது. ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘அனிமல் ஃபார்ம்’ எனும் கதையின் சாயலை ஒத்திருக்கும் இது (இக்கதையில் குழந்தைகள் ஓட்டுப்போடுவதாய் வர்ணிக்கப்படுகின்றது; ‘அனிமல் ஃபார்’மில் விலங்குகள் அரசியல் செய்வதாகப் புனையப்பட்டிருக்கும்), கள்ளவோட்டு, அழுகுணி ஆட்டம் என்று இன்றைய அரசியல்வாதிகள் செய்யும் சாக்கடைச் சண்டை அனைத்தையும் தோலுரித்துக்காட்டுகிறது.

தொடக்கத்தில் சொன்னதுபோல், பத்துக் கதைகளும் பத்து விதமான சிந்தனை ஓட்டங்களை அளிக்கிறது. அவ்வகையிலும், தமிழ் இசுலாமிய (திருநெல்வேலிப் பகுதியைச் சேர்ந்தவர் மீரான் மைதீன் என்று அம்மா சொன்னார்; எனவே அப்பகுதி சார்ந்த மக்களின் பதிவாக இருக்கும் என்று தோன்றுகிறது) மக்களின் வட்டார வழக்கங்களைப் பிரதிபலிப்பதிலும் வெற்றி பெறுகிறது ‘கவர்னர் பெத்தா’. ’பிரதிபலிக்கிறது’ என்று சொல்லுமிடத்தில் நூல் முழுவதும் கையாளப்பட்டிருக்கும் வட்டார நடையை குறிப்பிட வேண்டிய அவசியம் எழுகிறது. ‘நீக்கம்பத்துல போக’, ‘பாளறுவானுவளே’ போன்ற வசைச்சொற்கள் படிக்கும்போது கதைகளின் சுவையைப் பன்மடங்கு கூட்டுகின்றன.

ஆசிரியரும், சிறப்பாக வெளியிட்டுள்ள காலச்சுவடு பதிப்பகத்தாரும் பாராட்டுக்குரியவர்கள்.

எல்லாம் ஒரு வெளம்பரம்தான்!

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்தொலைக்காட்சியில், மட்டைப்பந்து வீரர்களை ஒருமையில் விளிக்கும்தென்னிந்திய நவ்ஜோத் சிங் சித்துஎனும் பட்டத்திற்குத் தகுதியான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தைத் தாண்டிய சில முக்கியமான மாற்றங்களைக் காண நேர்ந்தது. “என்னோட ஸ்மார்ட்ஃபோன் கிட்ட உடையாம இருக்கணும்னு சொல்லுவேன்என்று தமிழ் மொழிமாற்றத்தில் மழலையாய்ப் பேசும் வடநாட்டுக் குழந்தைகளும், “அப்பா, நான் பின்னாடி உக்காந்திருக்கேன், எனக்கு ஏர்பேக் எங்கே?” என்று கேட்கும் குழந்தையுமாய்த் திரையில் தோன்றிய விளம்பரங்கள்தாம் கவனத்தை ஈர்த்தன, ஆட்டத்தின் சுவாரசியத்திலிருந்து திசைதிருப்பின.

குழந்தைகள் திரையில் தோன்றுவது என்பது புதிய நிகழ்வல்ல என்பதைப் போலியாகப் பெற்றோரை அழ வைக்கும் பாட்டுப் போட்டிகளும், “அம்மாதான் அப்பாவை அடிப்பாங்கஎன்று மழலைகளைச் சொல்லவைக்கும் (அக்குழந்தைகள் தாமாக அவ்வாறு பேசுகிறார்கள் என்று சொன்னால் சிரிப்போ, கோபமோ அந்நேரத்து மனநிலையைப் பொறுத்து முகத்தில் தோன்றும்) ‘ரியாலிட்டி ஷோக்களும் நினைவுபடுத்தியபடியே இருந்தாலும், ‘எங்கெங்கு காணினும் குழந்தைகளடாஎனுமளவிற்கு விளம்பர உலகை இவர்கள் ஆக்கிரமித்திருப்பது நிச்சயமாக ஏதோ எதேச்சையாக நிகழ்ந்த ஒரு மாற்றம் அல்ல.

தொலைக்காட்சி என்பது தலைமுறை இடைவெளிகளைக் கடந்து மனித வாழ்வை அளவற்ற மூர்க்கத்தனத்துடன் ஆட்கொண்டுள்ளது என்பதை வெளிக்காட்டும் ஒரு உதாரணம், விளம்பரங்களில் குழந்தைகள் தோன்றும் காட்சிகள். தகவல் வழங்கும் ஒரு ஊடகமாக விளங்கிய தொலைக்காட்சியானது, நுகர்வோர் கலாச்சாரத்தின் விளைவாகத் தன் முகத்தையே மாற்றிக்கொண்டுள்ளது என எவ்விதத் தயக்கமுமின்றிச் சொல்ல முடியும். அதன் ஒரு விளைவே குழந்தைகளைப் பயன்படுத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்தும் உத்தி. இவற்றைப் பல்வேறு கோணங்களிலிருந்து அலச முடியும்.

உளவியல் சிக்கல்கள்:

முதலாவதாக, குழந்தைகளை விளம்பரங்களில் பயன்படுத்தும் யோசனை எப்படி வந்தது? இதற்கான விடை பெற்றோருக்கும், குழந்தைகளுக்குமான உறவுமுறையில் உள்ளது. ‘பேரண்டிங்என்று ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய குழந்தைகள் வளர்ப்புமுறையானது அதிவேக உலகில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு மாறிவருகின்றது. 21 வயதேயான எனக்கே வியப்பை ஏற்படுத்தும் ஒரு கூறாக இருக்கிறது, பள்ளி செல்லும் பருவத்திலும், அதற்கு முந்தைய காலத்திலும் இருக்கும் இன்றைய குழந்தைகள் வளரும் சூழல். ‘அம்புலிமாமாகதைகள், ‘வாண்டுமாமாஎழுதியநீலன்எனும் கதாபாத்திரம் இடம்பெறும் சிறுகதைகள், நாவல்கள், சுட்டி விகடன், ’டிங்கிள் டைஜெஸ்ட்’, மாவட்ட மத்திய நூலகம் என்று கழிந்த எனது குழந்தைப் பருவத்தைப் போலவே தொடர்ந்து வரும் தலைமுறைகளும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறெனினும், பிறக்கும் குழந்தைக்குச்சோட்டா பீமைக் காட்டிச் சோறூட்டுவதைக் காட்டிலும் அபத்தம் வேறேதும் இருக்க முடியாது.

பிரச்சினையின் வேரானது படிக்கும் பழக்கம் குறைந்து போனதில் இருக்கின்றது. பெற்றோர்கள் பலருமே படிப்பதில்லை. தினசரி செய்தித்தாள்களிலும் கூட, கட்சிப்பிளவு, கொலைகொள்ளை போன்ற மேலோட்டமான செய்திகளைப் பற்றி மட்டுமே தெரிந்துகொள்ளும் பல பெற்றோர்களை எனக்குத் தெரியும். இதன் உச்சக்கட்டம் என்னவென்றால் தான் படித்த இரண்டு செய்திகளை வைத்து வாயில் வடை சுட்டுக்கொண்டே, ‘எனக்கு எல்லாம் தெரியும்என்று குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டும் பல பெரியவர்களை அன்றாடம் சந்திக்க நேர்கிறது. ‘இதில் என்ன இருக்கிறது?’ எனும் வாதத்தை முன்வைத்தால், இவ்வாறு இருக்கும் பெற்றோர்களை முழுவதுமாகப் புறந்தள்ள முடியாது (செய்தித்தாள்களைப் பார்த்தாலே முகத்தை அஷ்டகோணலாக்கிக்கொண்டு, “நான் டீ.வி.லையே நியூஸ்- பாத்துக்கறேன்என்று சொல்லும் வகையறாக்களுக்கு இவர்கள் எவ்வளவோ தேவலாம்); ஆனால், இவ்வாறு மேம்போக்கான செய்திகளை மட்டுமே தெரிந்துகொள்பவர்களிடம், உளவியல் ரீதியான இரண்டு குறைகள் உள்ளன; பொறுமையில்லாமை, எதையும் ஆராய்ந்து அதன் சரி-தவறுகளைக் கூர்ந்து நோக்கும் தன்மை இல்லாமை.

விளைவாகக் குழந்தைகளிடமிருந்து இயல்பாகவே வெளிப்படும் ஏன்? எதற்கு?’ எனும் கேள்விகள் இவர்களைக் கோபப்படுத்துகின்றன, அல்லது பதில் தெரியாததால் வரும் இயலாமை பெருகுகின்றது. இதன் இறுதி வடிவம்தான் குழந்தைகளைத் தொலைக்காட்சியை நோக்கித் திருப்பும் உத்தி. பெற்றோர்களின் இப்பலவீனத்தை உலகின் முக்கியமான ஊடகமானது நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

அதெல்லாம் இருக்கட்டும், திடீரென்று குழந்தைகள் நம் தொலைக்காட்சி உலகத்தை எப்படித் திரளாக ஆக்கிரமித்தார்கள்? இதற்கான விடை, தொழில்நுட்பப் புரட்சியில் இருக்கிறது.

(தொழில்)நுட்பமான வியாபாரம்:

சோப்பு டப்பாஎன்று கேலி செய்யப்பட்டு அழித்தொழிக்கப்பட்ட நோக்கியாவின் கைப்பேசிகளை ஏறி மிதித்துக்கொண்டு வரத்தொடங்கினஸ்மார்ட்ஃபோன்கள். அவசரத்திற்கென வீட்டில் ஒருவரிடம் புழங்கத் தொடங்கிய கைப்பேசியானது இன்று ஏறத்தாழ ஒவ்வொரு மனிதரிடத்திலும் இருக்கிறது. போகிறபோக்கில் கருப்பையில் ஊசியைச் செலுத்தி, பிறக்கும் குழந்தையின் தொப்புள்கொடியில் ஒரு ஸ்மார்ட்ஃபோன் இணைந்தே பிறக்கும்படியான தொழில்நுட்பம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. குடும்பப் பெரியவர்கள் அனைவரிடமும் அணுக்கமாயிருந்த கைப்பேசிகள், குழந்தைகளிடமும் வலம்வரத் தொடங்கியதில் வியப்பேதுமில்லை.

இதன் விரிவாகப் பெருகத் தொடங்கிய இணையம், ‘மார்க்கெட்டிங்’, ‘பிராண்டிங்போன்ற வியாபார உலகின் தாரக மந்திரங்களின் சாரத்தை மாற்றத் தொடங்கியது. செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்தால்தான் ஆயிற்று என்ற காலம் முன்னரே மாறிவிட்டாலும், தொலைக்காட்சியில் திரைத்துறைப் பிரபலங்களும், கிரிக்கெட் ஆட்டக்காரர்களும் பொருட்களை ஆதரித்துத் தோன்றுவது சமீப காலம் வரை நடந்தது (இப்போதும் நடக்கிறது). குழந்தைகளின் ஆதர்ச நாயகர்களைக் காட்டி மயக்கும் இத்திட்டமானது, நிறுவனங்களுக்குச் செலவை ஏற்படுத்தும் ஒரு விஷயமே. துறை சார்ந்து ஒரு பிரபலம் சம்பாதிக்கும் ஆண்டுத்தொகை, அவர் விளம்பரங்களின் மூலம் பெறுவதில் கால் பங்கு கூட இருக்காது.

இதற்கிடையில்தான், சமூக வலைத்தளங்கள் புத்தம்புதிய கதவுகளைத் திறந்தன. பாரம்பரிய விளம்பர முறைகளின் சாரத்தை அடியொற்றி, அவற்றிலிருந்து மாறுபட்ட பல புதுமையான அம்சங்கள் தோன்றத்தொடங்கின. ‘சோஷியல் மீடியா மார்க்கெட்டிங்சூடுபிடிக்கத் தொடங்கிய அதே நேரத்தில்தான், ‘இண்டராக்டிவ் லேர்னிங்எனும் வழிமுறையைக் கையாளும் வழக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. பல்வேறு பயன்பாட்டுத் தளங்களில் கையாளப்படும் இம்முறையானது, முக்கியமாகக் காலூன்றியிருப்பது விளம்பரத்துறையில்தான். பெயரை அடியொற்றிப் பார்க்கும்போதுலேர்னிங்என்பதன் அர்த்தம் வேறாக இருப்பினும், இதன் சாராம்சம் முற்றிலும் வேறானது. “தம் வயதொத்த நிஜம்/நிழல் பாத்திரங்களைக் குழந்தைகள் பின்பற்றுகிறார்கள்என்பதே அது. டோரா ஒரு முப்பது வயதொத்த பாத்திரமாயிருப்பின் அது இவ்வளவு தூரம் குழந்தைகளை ஈர்த்திருக்காது என்பதே நிதர்சனம்.

டோண்ட் அண்டர் எஸ்டிமேட் கோலுஎனும் கொசுவர்த்தி விளம்பரத்தையும், ‘டெட்டாலு டெட்டாலுதான்எனும் ராகத்துடன் கூடிய சோப்புக்கட்டிக்கான பாடலையும் இந்தஇண்டராக்டிவ் லேர்னிங்’-ன் விளைவாகத்தான் இணைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.

குழந்தைகளின் வெளியுலகம்:

ரியல் எஸ்டேட்டின் இரும்புக்கரமும், பருவநிலை மாற்றமும் அதனுடன் வரும் பெயர்தெரியாத, இனம்புரியாத நோய் அச்சுறுத்தல்களுமாய்ச் சேர்ந்து குழந்தைகளின் வெளியுலக இணைப்பைச் சற்றேறக்குறைய முற்றிலுமாகத் துண்டித்துவிட்டன. அவர்கள் வெளியே செல்வதற்கான முக்கால்வாசிக் காரணம், பெற்றோர்ஷாப்பிங்செய்யும் நேரம் என்றான பிறகு, குழந்தைகளின் பார்வையோட்டம் சக மனிதர்களிடம் பழகுவது என்பதிலிருந்து மாறி, பொருட்களின் மீதான கவனமாய்க் குவிந்துவிட்டது.
வர்ணங்களை வைத்தே குழந்தைகளைக் கவர்ந்த காலமெல்லாம் மலையேறிஇப்போதெல்லாம் தொலைக்காட்சியில் அவர்களுக்குத் தேவையான வண்ணமயமான உலகம் கிடைத்துவிடுகிறதுஅவர்களைக் கவர்வதற்கு அடுத்தகட்ட உபாயமாய் வந்ததுதான் இவ்விளம்பர யுக்தி.

நிறுவனங்களுக்கும் லாபம்; அவர்கள் கோடிகோடியாய்க் கொட்டிச் செலவு செய்து, பணத்தை வாரியிறைத்து விளம்பரங்கள் தயாரிக்கத் தேவையில்லை; அதற்குப் பெரும்புள்ளிகளை ஒப்பந்தம் செய்யத் தேவையில்லை. நடிக்கும் குழந்தைகளுக்கு என்ன நடக்கிறதென்று புரியாது; அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் பார்த்து மகிழ்ந்த ஒரு உலகத்தின் அங்கமாய் ஆகிவிட்ட மகிழ்ச்சியில் விளம்பர உலகின் வணிக நோக்கம் புலப்படுவதில்லை. பெற்றோர்களைப் பொறுத்தமட்டில், குறைந்தபட்ச பெருமிதம் அக்கம்பக்கத்து வீட்டுக்கார்ர்களிடம் பெருமையடிப்பது (நேரில் அல்ல, எல்லாம் வாட்ஸப்பில்தான்; இன்று நேரிலெல்லாம் யாரப்பா பேசிக்கொண்டிருக்கிறார்கள்?) அல்லது, அடுத்த அலியா பட்டாகவோ, சமந்தாவாகவோ தம் குழந்தைகள் ஜொலிப்பதற்கான வாய்ப்பாகவே பார்த்துப் புளகாங்கிதம் அடைவது.

ஆனால் நமக்கென்ன கவலை? நாம் எதையாவது ஒரு தொடரையோ, விளையாட்டுப் போட்டியையோ பார்த்துக்கொண்டிருப்போம். அரைகுறை ஆடைகளுடன் அழகிகள் நடனமாட, ஜொலிக்கும் ஜிப்பாவுடன் போட்டிகளுக்கு நடுவர்கள் அணிவகுக்க, இயல்பாக நடக்கும் குடும்ப நடவடிக்கைக்குச் சற்றும் தொடர்பில்லாத செயற்கையான நாடகங்கள் வரிசை கட்ட நம் பொழுதுபோக்கிற்குச் சற்றும் தொய்வில்லை. கவலைப்பட வேண்டியதெல்லாம் தோனியும், கோஹ்லியும்தான். இக்குழந்தைகள் வேட்டுவைக்கப்போவது அவர்களின் வருமானத்தில்தான்.