Thursday, January 4, 2018

சென்னைத் திமிர்

இப்பதிவை ஒரு முகநூல் நிலைதகவலாகப் பதிவு செய்வதாகத்தான் உத்தேசித்திருந்தேன். அதை விடுத்து, வலைப்பதிவாக எழுத இரு காரணங்கள்: 1) முகநூலில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்பதிவைத் தேடி மறுவாசிப்பு செய்வது இயலாத காரியம் 2) ஒரு முகநூல் பதிவில் அடக்க முடியாத அளவிலான பல்வேறு சம்பவத் தொகுப்புகள்.

மாலை ஐந்தரை மணியளவில் திடீரென்று கோயம்பேடு வரை செல்ல வேண்டிய சூழ்நிலை. திருவான்மியூர் பேருந்து பணிமனைக்குச் சென்றபோதுதான் பேருந்து நிறுத்தம் குறித்த அறிவிப்பு தெரிய வந்தது. “*த்தா, என்ன மயித்துக்குத்தான் இப்போ ஸ்ட்ரைக்னு தெரியலஎன்பவைதாம் அடியேனது திருவாய் மலர்ந்தருளிய முதல் திருவார்த்தைகள். ஊபரில் பங்கீட்டுப் பயணம் மேற்கொண்டு கோயம்பேடு பேருந்து நிறுத்தம் செல்லும் வழியெங்கிலும் பால்டாயியலை முகர்ந்து மயங்கி விழும் ஸ்னேக் பாபுவின் தொண்டர் படை போல சாலையெங்கும் ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன. பேருந்து ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கான போராட்ட வடிவமே இவ்வேலைநிறுத்தம் என விரல்நுனியில் அறிந்தேன்.

டைடல் பார்க் வழியே .எம்.ஆர் சாலை சென்று கண்ணகி நகரை அடையும் பேருந்துகளெல்லாம் நிரம்பி வழிந்தன. கடைசிப் பேருந்து நிறுத்தத்தை அடைந்த பின்பு, அப்பேருந்துகளும் நிறுத்தப்பட்டுவிடும் என்பதால் அடித்துப் பிடித்து இளசுகளும், பெருசுகளும் முச்சுத் திணறித் தொங்கிக்கொண்டிருந்தனர். மேலே பறக்கும் ரயிலில் இன்னமும் தம்கட்டும் அளவிற்குக் கூட்டம் நெரியவில்லை. குறைந்தபட்சம் எக்கணத்திலும் ஒரு பேருந்தாவது நின்று செல்லும் மத்திய கைலாசம் பேருந்து நிறுத்தம், நின்று கொண்டிருந்த மக்களால் மட்டுமே நிரம்பி வழிந்தது.

காந்தி மண்டபத்தைத் தாண்டியபோது கிண்டி பொறியியல் கல்லூரியிலிருந்து (‘அண்ணா பல்கலைக்கழகம்என்பது உலகமறிய வேண்டுமென்பதற்கான பொதுச்சொல்; உண்மையில் அவ்வளாகம் அண்ணா பல்கலை.யின் மூன்று முக்கியமான கல்லூரிகளை - கிண்டி பொறியியல் கல்லூரி அவற்றில் முதன்மையானது - உள்ளடக்கிய சொர்க்கம்) வீட்டிற்குச் செல்வதற்காக களைப்புடன் காத்திருந்தனர் விடுதியில் தங்கும் பொன்னான வாய்ப்பைப் பெறாத சென்னைவாசிகள். “இந்த மாதிரி ஸ்ட்ரைக் சமயத்துல நமக்குக் கொஞ்சம் ட்ரிப் நெறைய வரும்என்றுகெட்டதிலும் நல்லதுபேசினார் ஊபரின் மாயவலையில் வீழ்ந்திருந்த மகிழுந்து ஓட்டுநர்.

கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் கடந்து அசோக் நகரை அடையும்போதுதான் வேலை நிறுத்தத்தின் உண்மையான விளைவு முகத்தில் அறைந்தது. வடபழனி செல்லும் வழியெங்கும் சாலையின் இருமருங்கிலும் செய்வதறியாது திகைத்து நின்ற, ஸ்மார்ட்ஃபோனும் ஊபர்-ஓலாவும் அறியாத பல மக்களின் பரிதாபமான நிலைமையைக் காண முடிந்தது. ஒருவழியாகக் கோயம்பேடு பேருந்து நிலையத்தை அடைந்தபோது, ‘பாலிமர்தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளரும், நிருபரும் சம்பிரதாயமான உப்புச் சப்பில்லாத தகவல்களை நேரலை ஒளிபரப்பிக்கொண்டிருந்தனர். “இப்போ நீங்க பாக்குறது சி.எம்.பி.டி.எனப்படும் சென்னைப் புறநகர் பேருந்து நிறுத்தத்தின் ஒரு வாயில். பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். இதைப் பற்றிய கருத்துக்களை மக்களிடம் கேட்கலாம்என்று இந்தியச் செய்தித் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக முழங்கிக்கொண்டிருந்தனர். “நாங்க இப்போ சைதாப்பேட்டை போகணும். ஏற்கனவே அரைமணிக்கு மேல வெயிட் பண்ணிட்டோம், கால் ரொம்ப வலிக்குது, நிக்கவே முடியல. இந்தப் பிரச்சனை சீக்கிரம் முடிவுக்கு வந்தா நல்லா இருக்கும்என்று இளித்துக்கொண்டே கால் வலியைப் பிரகடனம் செய்து கொண்டிருந்தனர் திருவாளர். பொதுஜனங்கள்.

எரிச்சலும், கோபமுமாய் மெட்ரோ ரயிலில் செல்லலாம் என்று முடிவெடுத்தபோதுதான், “ஒரு பத்து நிமிஷம் பாத்துட்டுத்தான் போவோமேஎன்று தோன்றியது. சற்றே வெளியே வந்தேன். பேருந்துகள் வெளியே செல்லும் வாயிலருகே நின்று கவனித்தபோதுதான் மனிதாபிமானம் என்பதற்கான அர்த்தம் சிறிதுசிறிதாகப் புலப்பட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள் பலர், தன்னிச்சையாகப் பின்னிருக்கையில் ஒரு பயணிக்கு இடம்தரத் தொடங்கியிருந்தனர். கூட்டத்தில் மயங்கி விழுந்த ஒரு முதியவரை அழைத்துச் சென்று இட்லி-சால்னா கொடுத்தார் வண்டிக்கடைக்காரர். என்னுடன் நின்றிருந்த இரண்டு, மூன்று பேர் என்னைப் போல் சும்மா நிற்காமல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தப் பிரயத்தனப்பட்டுக்கொண்டிருந்த காவலருக்கு உதவத் தொடங்கினர்.

என்னையறியாமல் உதட்டில் தோன்றிய பெருமிதப் புன்னகையுடன், மெட்ரோ நிலையம் சென்றபோது கூட்டம் சற்றே சூடுபிடிக்கத் தொடங்கியிருந்தது. “சார், வயசானவங்களுக்குக் கொஞ்சம் மொதல்ல போக வழி விடுங்கஎன்ற பயணச்சீட்டு கொடுப்பவரின் ஒற்றைக் குரலை ஏற்று இளைஞர்களும், நடுவயதுக்காரர்களும் வரிசையில் பின்தங்கி வழிவிட்டனர். கையில் ஒரே ஒரு பத்து ரூபாயும், இருபது ரூபாயும் வைத்துப் பேருந்தில் செல்லும் நம்பிக்கையுடன் இருந்த அன்றாடங்காய்ச்சிகளுக்கு பயணச்சீட்டு எடுத்துக் கொடுத்துதவினர் செவிப்பறையில் இசையை அலறவிடும் இளவட்டங்கள். ரயில் ஏறும்போதும் அதே வழிமுறை தொடர்ந்தது. நகரும் படிக்கட்டுகளிலும், மின்தூக்கிகளிலும் அவ்வாறே. ரயில் கதவு மூடிவிடும், ரயில் சென்றுவிடும் என்றறிந்தும், ‘ஒரு பத்து நிமிஷத்துல ஒண்ணும் ஆயிடாது; அடுத்த ட்ரெயின்ல போயிக்கலாம்என முடிவுசெய்து, முதிர்ந்த வயதுக்காரர்களுக்கு வழிகொடுத்தனர் சிலர்.

ஆலந்தூரில் இறங்கி, சின்ன மலைக்கு வேறு ரயில் மாறும் தருவாயிலும் அதே உதவிகள், அதே விட்டுக்கொடுத்தல்கள். சின்ன மலையில் இறங்கி மீண்டும் திருவான்மியூருக்குச் செல்வதற்கு ஊபர் பங்கீட்டுப் பயண முறையைத் தேர்வு செய்தபோது, எல்&டி நிறுவன ஊழியர்களுக்கான பேருந்துகள், பொதுமக்களை ஏற்றிச் செல்வதக் காண முடிந்தது. மூன்று நிமிடங்களில் வந்த ஊபர் ஓட்டுநர், அடுத்த இரண்டாவது நிமிடத்தில் வண்டியை ஓரம்கட்டினார். கைத்தடி ஊனியபடி நடந்த தாத்தா-பாட்டியை நலம் விசாரித்து அவர்கள் இறங்க வேண்டிய இடம் அதே வழியில் என்பதையறிந்தார். அவர்களை ஏற்றியபோதுஉச்கொட்டிய மற்றொரு பயணியிடம், “சார், இந்த மாதிரி நெலமை தெனமும் வராது. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கஎன்று பணிவாகச் சொன்னார். அப்பணிவிலும் ஒரு கம்பீரம் தென்பட்டதை உணராமலிருக்க முடியவில்லை.


உதவும் எண்ணங்களை மழுங்கச்செய்யும் அவசர உலகில் வாழும் இத்தலைமுறைக்கு, இடையிடையே வரும் தடைகளே மனிதமெனும் கண்ணியை உயிர்ப்பிக்கின்றன. சென்னை வெள்ளத்தின்போது ஒன்றுபட்ட நல்லெண்ணமும், இன்றைய சவாலான போக்குவரத்துச் சூழ்நிலையும் நினைவுபடுத்துவது ஒன்றே ஒன்றைத்தான்: ‘வணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை, உனக்கு ஈடு இல்லையே’. வாரக்கடைசியில் பெங்களூருக்கு உல்லாசப் பயணம் சென்றுவிட்டு, “ட்யூட், என்ன இருந்தாலும் அந்த கல்ச்சர் மாதிரி வருமா?” என்று உடான்ஸ் விடும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நடுவிரல் வணக்கங்கள்.