வலைப்பூப் பதிவுகளை சுவாரசியமாக்க முடியும் என எனக்குச் சொல்லித்தந்த
மானசீக குரு எழுத்தாளர் வா. மணிகண்டன் அவர்கள். நிசப்தம் வலைத்தளத்தில் இடைவிடாது எழுதிவரும்
இவரது எழுத்துக்கள், “நீயும்தான் வெச்சுருக்கியே ஒரு ப்ளாக்கு! ஹும்… பத்து நாளைக்கு
ஒரு தடவ சொத்தையா ஒரு பதிவு எழுதிக்கிட்டு” என்று என்னை நானே சுயமதிப்பீடு செய்ய ஏதுவாய்
விளங்கும் ஒரு காரணி.
நண்பன் ஒருவன் மூலமாக அறிமுகமான நிசப்தம்.காம், நாள்போக்கில்
நான் மூன்று முறையேனும் சொடுக்கும் தளங்களில் ஒன்றாக மாறிவிட்டது. ‘ஏதேனும் புதிய பதிவு
வந்திருக்கிறதா?’ எனும் ஆர்வம் என்னையேயறியாமல் என்னுள் தொற்றிக்கொண்டது பெரிய ஆச்சரியம்தான்.
சிலநேரங்களில் ஒரே மாதிரித் தோற்றம் கொண்ட பதிவுகள் வந்தவண்ணம் இருப்பினும், போதை வஸ்துவாய்
மாறியிருக்கிறது நிசப்தம் வலைத்தளம்.
இப்படி அறிமுகமான திரு. மணிகண்டனின் எழுத்துக்கள், அவரது புத்தகமான
‘மசால் தோசை 38 ரூபாய்’ மூலமாய் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஒரு தொகுப்பு
நூல் என்றாலே அதில் இலக்கிய நயம் பொருந்திய, அறிவார்ந்த படைப்புகள் சில இருக்க வேண்டும்
எனும் மாயையையெல்லாம் உடைத்த இத்தலைமுறை எழுத்தாளர்களுள் என்னளவில் முக்கியமானவர்,
திரு. மணிகண்டன்.
சமீபத்தில் எழுத்தாளர் நாஞ்சில் நாடனைச் சந்திக்கும் பெரும்பேறு
அடியேனுக்குக் கிட்டியது. அப்போது அவர் எனக்குக் கொடுத்த புத்தகங்களுள் ஒன்று, மணிகண்டன்
எழுதிய ‘லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்’. “மணிகண்டன்-னு ஒரு தம்பி, பெங்களூருல இருக்கான்.
இங்க கோபிச்செட்டிப்பாளையத்துக்காரன்தான். அழகா எழுதுறான். ரொம்ப ஆஹா, ஓஹோன்னு இலக்கு
வெச்சு எழுதாம, யதார்த்தமா இருக்கு. அது இருந்தாப் போதும்; போகப் போக அந்த எலக்கியம்
எல்லாம் தானா கைக்குள்ள வந்துடும்” என்று சொன்னபோது, அப்பெருந்தகைக்குத் தெரிந்த ஒரு
மனிதர் எனக்கும் தெரிந்திருக்கிறார் என்று புளகாங்கிதம் அடைந்தேன்.
புத்தகத்தின் தலைப்பு ஒருவகையில், ‘பண்ணையாரும் பத்மினியும்’
திரைப்படத்தின் தலைப்பைப் போன்ற ஒரு திறப்பைத் தந்தாலும், உள்ளே இருக்கும் ஒவ்வொரு
பதிவும் மிகவும் ரசனையுடன் எழுதப்பட்டவையாகவே இருக்கின்றது. ’மின்னல் கதைகள்’ என்று
முகப்பு அட்டையிலேயே குறிப்பிடப் பட்டிருந்தாலும் – ஒவ்வொரு பதிவும் அதிகபட்சம் ஐந்து
பக்கங்களைத் தாண்டுவதில்லை – கதை, கட்டுரை, கவிதை என்பதெல்லாம் வாசகனின் எளிமைக்காகப்
பிரிக்கப்பட்டவை எனும் முக்கியமான கருத்தைச் சொல்லாமல் சொல்வதாகவே இப்புத்தகம் தோன்றியது.
கதை என்றோ, கட்டுரை என்றோ, வர்ணனை என்றோ பகுத்துப் பேசமுடியாத
அளவிற்கு உண்மையா, கற்பனையா என்றளவில் வாசகனை சிந்திக்க வைக்கும் வெவ்வேறு ‘பதிவு’களின்
தொகுப்பாக வந்துள்ள ‘லிண்ட்சே லோஹன்…’ ஒரு வெற்றிப்படைப்பு என்று அறுதியிட்டுச் சொல்வதற்குப்
பல காரணங்கள் இருக்கின்றன.
1) ஒரு வகைமைக்குள்
(கதை/கட்டுரை) அடைபடாத இயல்பான எழுத்தின் மூலம் வாசகனை வாசிப்பிற்குள் இழுக்கும் காந்த
சக்தி மணிகண்டனின் படைப்புகளில் பளிச்சிடுகின்றன.
2) இப்புத்தகத்தைப்
படித்துமுடிக்கும்போது, ‘ப்ச். நமக்கும்தான் இந்த மாதிரி எத்தனை நிகழ்வுகள் நடந்திருக்கின்றன!
அதில் எத்துணை சம்பவங்களைச் சரியாகப் பதிவு செய்திருக்கிறோம்?’ எனும் சுயகேள்வி தானாக
எழுகின்றது.
3) தமிழில்
பேசுவதே குறைந்துவரும் இக்காலக்கட்டத்தில், தமிழில் எழுதும் நபர்களில் எண்ணிக்கை அருகிவருவதைத்
தனியாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை. எழுதுவதற்குப் பலர் முன்வராமல் இருப்பதற்கான
ஒரு காரணமாக எனக்குத் தோன்றுவது, புகழ்பெற்ற பல எழுத்தாளர்களின் புத்தகங்கள் படிப்பதற்கு
ஏதுவாக இருந்தாலும் அவற்றின் அறிவாளித்தனம் வாசகனை எழுதத் தூண்டுவதில்லை. மாறாக, எழுத
வேண்டும் எனும் ஆர்வமுள்ளவன்/ள் கூடப் பயந்து ஒதுங்கும் வகையில்தாம் பல நூல்கள் இருக்கும்.
அத்தடையை மணிகண்டன் போன்றோரின் எழுத்துக்கள் கண்டிப்பாக உடைக்கின்றன; சுக்குநூறாக்குகின்றன.
4) புகழ்பெற்ற
மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீரின் கூற்றுப்படி, “அனைவரும் படிக்க வேண்டுமென்றால்
அவர்களுக்குப் புரியும்படியாகச் சிறிய புத்தகங்களாய் இருக்க வேண்டும். இல்லையென்றால்
அனைவரும் படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது” என்பதற்கேற்ப அமைந்துள்ளது இந்நூல்.
ஒவ்வொரு பதிவாகப் படித்துப் பின் சிந்திப்பதற்கும், நம் வாழ்வின் சம்பவங்களை ஒப்புநோக்குவதற்கும்
நேரம் ஒதுக்கிப் படிக்கலாம்; அல்லது, ஒரே அமர்வில் முழுமூச்சாக வாசித்துமுடித்துவிட்டு,
‘பயபுள்ள… செம்மையா எழுதுறாருய்யா, நாமளும் எழுதுவோம்’ என்று உத்வேகம் கொள்ளலாம்.
வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் சாமானிய
வாசகனையும் ஈர்க்கும் திறன் கொண்ட இப்புத்தகம், சில படைப்புகளின் முடிவுகளின் மூலம்
அதிர்ச்சி கொள்ளவும், ‘எப்புடி இவ்ளோ சாதாரணமா இவ்ளோ பெரிய விஷயத்தைச் சொல்லிட்டு போய்ட்டே
இருக்காரு’ எனும் வியப்பையும் ஏற்படுத்தவும் தவறுவதில்லை. நூலின் முதல் கதையான ‘சாவதும்
ஒரு கலை’யிலேயே மேற்கூறிய ‘அதிர்ச்சி முடிவுகள்’ குறித்து உணர முடியும்.
தனது குழந்தைப்பருவத்தில் கண்ட
கிராமத்து வழக்கங்களை ஆங்காங்கே மழைச்சாராலெனத் தூவிவிட்டுக்கொண்டே செல்லும் மணிகண்டன்,,
பண்பாட்டு ரீதியிலான பதிவுகளையும் தனது எழுத்துக்களின் மூலம் செவ்வனே செய்கிறார் என்று
கூறுவது மிகைப்படுத்தப்பட்ட வாக்கியமாக இருக்கமுடியாது.
காமத்தைப் பற்றிய இவரது எழுத்துக்கள்
அனைத்து விடலைகளையும், ‘நம்ம செய்கைகளையெல்லாம் எங்க இருந்தோ பார்த்துட்டாரோ’ என்று
எண்ணுமளவிற்குத் தொடர்புபடுத்திக்கொள்வதற்கு எளிதானவை. ‘காமத்துளி’, ‘நீலப்படம்’ போன்ற
பதிவுகள் இதற்கான உதாரணங்கள்.
நூலில் இடம்பெற்றுள்ள ‘சில்க் ஸ்மிதா’
எனும் படைப்பு உண்மையைப் பொட்டிலறைந்தாற்போல் சொல்லும் விதம், பின்மண்டையில் சம்மட்டியால்
யாரோ அடித்த விளைவை ஏற்படுத்துகிறது. வெளியுலகிற்காக வேடமிடும் ஒவ்வொரு தனிமனிதனின்
அந்தரங்க வாழ்விலும் மறைந்திருக்கும் கருப்புப் பக்கங்களின் படிமமாகவே ‘சில்க் ஸ்மிதா’வின்
வாழ்க்கை இருந்திருக்கிறது. அப்பெண்ணை, நடிகையை, “அவ கெடக்குறா #%$@%&8*” என்று
திட்டிய பலரும் அவரது படங்களைப் பார்த்து ரசித்திருக்கக்கூடும். இந்த உதாரணத்தின் சமீபத்திய
எழுத்துலக ஒப்புமை சேத்தன் பகத். இவரது எழுத்துக்களைக் குப்பை என்றும், தரம் குறைந்தவை
என்றும் விமர்சிக்காத ஆட்களே (நான் உட்பட) இல்லை எனினும், அவர்கள் யாவரும் (மீண்டும்,
நான் உட்பட) இவரது புத்தகங்களை வாசிக்காமல் குறைகூற முடியாது அல்லவா? அந்த ஒரு இனம்புரியாத
ஈர்ப்பு எதையேனும் ஒன்றை நோக்கி ஒவ்வொரு மனித மனத்தையும் தள்ளிக்கொண்டேதான் இருக்கிறது.
ஈர்ப்புக்கும், விலகலுக்குமான விளையாட்டே மனித வாழ்வு என்று சொன்னால் அது மிகையாகாது.
’நடுப்பாளையம் ஜமீனின் சேட்டைகள்’
எனும் கதை, தவிர்க்க முடியாமல் நாஞ்சில் நாடனின் ‘மாமிசப் படப்பு’ எனும் நாவலை இருபக்கங்களில்
படித்த உணர்வைத் தருகிறது. கதைக்களமும், காட்சிகளும் வெவ்வேறு என்றாலும், இரு படைப்புகளின்
மையக்கோடும் ஒன்றாகவே பயணிக்கின்றது. ஜமீனின் சேட்டைகள் அவரது பெண்ணாசையைப் பற்றியதாகவும்,
‘மாமிசப் படப்பு’ வேலைக்காரர்களுக்கும், நிலவுடைமையாளர்களுக்குமான போராட்டமாகவும் இருப்பினும்,
ஜாதி ரீதியான வெறி, அதன் விளைவாக எழும் கட்டுக்கடங்காத பழிவாங்கும் உணர்ச்சி என்ற ரீதியில்
ஒன்றிணைகின்றன இரு எழுத்தாளர்களின் சிந்தனைகளும்.
அமங்கலமாக முடியும் பல கதைகளில்
சிலவற்றைத் தவிர்த்துவிட்டு, வேறு வகையிலான படைப்புகள் சிலவற்றைச் சேர்த்திருக்கலாம்
எனும் மனக்குறை எழாமலில்லை. எனினும், 80-களில் வெளிவந்த 70 எம்.எம். திரைப்படத்திலிருந்து,
2017-ல் வந்துகொண்டிருக்கும் ‘சாட்டிலைட்’ படங்கள் வரை அனைத்தையும் சுற்றி ஒரு வட்டமடித்தது
போன்ற ஒரு உணர்வைத் தோற்றுவிக்கும் வகையில் ‘லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்’ ஒரு வெற்றிப்படைப்பே.
பின்குறிப்பு: நூலில் இடம்பெற்றுள்ள ‘போலி’ஸ் என்கவுண்ட்டர்’ எனும் பதிவு, எனது வலைப்பூவில் நான் எழுதிய ‘துப்பாக்கித்தோட்டா’ எனும் பதிவைப் போலவே இருந்ததில், ‘எழுத்தாளர்களை மாதிரியெல்லாம் யோசிக்க ஆரம்பிச்சுட்டேனா?’ என்று அடியேனுக்கு மிக்க மகிழ்ச்சி (’என்ன ஒரு ஆனந்தம் அந்தக் கரடிக்கு?’ என்றும் சொல்லலாம்).