Thursday, November 17, 2016

ஆசர்கானா டு அண்ணா யுனிவர்சிட்டி - நடுநிசியில் ஒரு நடைபயணம்

கடலூரிலிருந்து சென்னை செல்வதற்கு இரு வழிகள் உண்டு.

1)  கடலூர்பாண்டிமேல்மருவத்தூர்திண்டிவனம்பெருங்களத்தூர் வழியில் செல்லும்பை-பாஸ்பேருந்து.
2)  கடலூர்பாண்டிமரக்காணம்கடப்பாக்கம்கல்பாக்கம்சோழிங்கநல்லூர்திருவான்மியூர் வழியில் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலைப் (.சி.ஆர்.) பேருந்து.

கிண்டி பல்கலைக்கழக நுழைவாயிலில் () காந்தி மண்டப வாயிலில் சொகுசாக இறங்கி, விடுதிக்குச் சுலபமாகச் செல்ல வேண்டுமெனில், .சி.ஆர். பேருந்துதான் மார்க்கம். பேருந்து நடத்துனர் கூறும் இத்தனை விவரங்களை இங்கு கூறக் காரணம் இருக்கிறது.

என்னத்தத்தான் பூஜையப் போட்டாய்ங்களோ?” என்று சலிப்படையும் வகையில், ஆயுத பூஜை விடுமுறை முடிந்து நான் கடலூரில் ஏறிய பேருந்து, பாண்டிச்சேரி () புதுச்சேரியில்ப்ரேக்டவுண்ஆனது. .சி.ஆர் வழியில் செல்லும் அப்பேருந்துக்கு மாற்றாக வேறொரு பேருந்தில் ஏறச் சொன்னார் நடத்துனர். அம்மாற்றுப் பேருந்தின் முன்னே சென்று பார்த்தால், பெயர்ப்பலகையில்பை-பாஸ்என்றிருந்தது. ‘ப்ரேக்டவுண்நடத்துனரிடம் விசாரித்தால், “போர்டு மாத்திடுவாங்க சார். ஒண்ணும் பிரச்சன இல்ல”, என்று காரைப் பல் தெரியச் சிரித்தார்.

அச்சிரிப்பிலேயே புரிந்திருக்க வேண்டும் அவரதுஅப்பாடா, எதுலயோ ஒண்ணுல ஏத்தி விட்டாச்சு. செத்தான்டா சேகருஎனும் நினைப்பு. அரைத்தூக்கத்தில் அவர் சொன்னதை நம்பி ஏறினேன்; நித்திராதேவியின் அணைப்பிலும், சிலுசிலுவென்று வீசிய வாடைக்காற்றின் வேகத்திலும், சரக்கடித்த சாமியாரைப் போல் தூக்கத்தில் ஆழ்ந்தேன். இரண்டு நிமிடத்தில் எழுந்து பார்த்தால், இரண்டு மணிநேரம் பறந்திருந்தது. உணவிற்காக நிறுத்தும்ஹோட்டல் .சி.ஆர். இன்அன்று சற்றே வேறாய்த் தெரிந்தது. “கொஞ்சம் டீப்பாப் பாப்போம்என்று கண்ணைக் கசக்கிப் பார்த்த பின்புதான் தெரிந்தது, அது திண்டிவனத்தை ஒட்டிய ஏதோ ஒரு உணவு விடுதி என்று. “மச்சான், சாச்சுப்புட்டாய்ங்க மச்சான்என்று கத்தி அழ வேண்டும் போலிருந்த்து.

இந்த நடத்துனரிடம் வாதாடலாம் என்று பொங்கி எழுந்தாலும், “ஏழு கழுத வயசு வளந்துருக்க? இந்த அறிவு வேணாம். படிக்கிற பையன்தானே நீ? போர்டுல தெளிவா, கொட்ட எழுத்துல போட்டிருக்குல்ல?” என்ற அவரது வசவுகள் காட்சிகளாக மனத்தில் அலைபாய்ந்தன. ”அவன் பொய் சொல்றான் டாடி, பொய் சொல்றான்என்று உள்ளே குமுறி ஆத்திரப்பட்டு, அடங்கினேன்.

பாதை மாறியதால் கல்லூரிக்கு மிக அருகிலிருந்த நிறுத்தம்கிண்டி ஆசர்கானாதான். நான் கடலூரிலிருந்து கிளம்பியபோதே மணி எட்டைத் தாண்டியிருந்த்து. கூட்டிக் கழித்துப் பார்த்தாலும், ஆசர்கானா செல்லும்போது மணி பன்னிரண்டைக் கடந்திருக்கும் என்று மனம் கணக்கிட்ட்து. ‘ஷேர் ஆட்டோக்களும், எம்.டி.சி. பேருந்துகளும் இருக்காது அந்நேரத்தில். போவதாக இருந்தால், ஓலாவோ, ஊபரோ என்று முடிவு செய்தேன்.

திடீரென்று ஒரு கஞ்சத்தனமான எண்ணம். “எதுக்கு இப்போ அதெல்லாம்? சாத்திட்டு நடந்து போடா சனியனே. அதான் பனைமரம் மாதிரி கால் வளந்துருக்குல்ல?” என்று என்னை நானே திட்டிக்கொண்டேன். காரணம் அடுத்த நாள் விடுதியில் இரவு உணவு இட்லி. “ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக் கொண்டால் காதல்எனும் வரியின் பாடலாசிரியர், எங்கள் விடுதியில் இட்லி தின்றிருந்தால்ஒரு இட்லி ஒரு கண்ணாடிஎன்று மாற்றி எழுதியிருப்பார். வெளியே சாப்பிடக் காசு வேண்டும், மிச்சப்படுத்தலாம் என்ற ஒரு எச்சத்தனம் மேலோங்கியது. வீட்டில் கேட்டால் காசு கொடுப்பார்கள்தான்; இருந்தாலும் சோடியமும், பொட்டாசியமும் நம் ரத்தத்தில் ஒரு தேக்கரண்டி அதிகமல்லவா? “நான் நடப்பேன்; ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேக்க மாட்டேன்என்று சபதம் போட்டாகிவிட்டது.

நள்ளிரவு பன்னிரண்டேகால் மணிக்கு ஆசர்கானாவில் இறங்கினேன். வாட்ஸப் பார்த்தபோது நண்பன்மூடிட்டு ஓலால போடா *&#?**” என்று கண்டமேனிக்குத் திட்டியிருந்தான். செவிடன் காதில் சங்கூதிய கதையாக, நடக்கத் தொடங்கினேன். மெல்லிய குளிர்க்காற்றும், மயான அமைதியும் சற்றே திகிலூட்டினாலும், “போற போக்கில் ஒரு லுக்க விட்டு என்ன செஞ்சிட்டாளேஎன்று சீழ்க்கையடித்தபடி முன்னேறி நடந்தேன்.

இரவுக்கே உண்டான சில தனித்துவங்கள் அன்றுதான் புரிந்தன. வழக்கமாக கிண்டி மேம்பாலம் ஏறும்போது கண்ணில் படுபவைரெட்டிங்டன் எம்.எம் ஃபோர்ஜிங்ஸ்’, ‘.டீ.சி.’, ‘ஸ்பிக்போன்ற சில பெரிய கட்டிடங்கள் மட்டுமே. அன்று நடக்கும்போதுதான் நகரத்தில் தவறவிட்ட பல நொடிகளை அனுபவித்துக் கடப்பது போன்ற உணர்வு தோன்றியது.

சிறிது தூரம் நடந்தபின், சற்றே ஆசுவாசப் படுத்துவதற்காக, நடைபாதை ஓரமாக அமர்ந்தேன். தண்ணீர் குடிப்பதற்காக அண்ணாந்தபோது, “இன்னா அண்ணாத்தே, பர்ஸத் தொலச்சிட்டியா?” என்றொருவர் வந்தமர்ந்தார். “இல்ல பாஸு. சும்மா அப்டியே நடக்கலாம்னுதான்என்று கூறிவிட்டு, ‘ஆளவிடுடா சாமிஎன்று கிளம்ப எத்தனித்தபோது, “ஹலோ ஹலோ, உங்க கிட்ட எத்தையும் அடிக்க மாட்டேன். பொறுமையா கெளம்பு அண்ணாத்தேஎன்று எழுந்தார். குற்றவுணர்ச்சி மேலிட, “சாப்டீங்களா?” என்றேன். சிரித்துவிட்டு, “ஃபீலாயிட்ட போல? நமக்கு அவ்ளோ சீனெல்லாம் கெடையாது”, என்றபடி மேண்டும் அமர்ந்தார். சரக்கடித்திருந்தார்; பார்த்தாலே தெரிந்தது.

பேச்சைத் தொடரத் தெரியாமல், தூக்கம் கண்ணைக் கட்டச் சிலை போல உட்கார்ந்திருந்த என்னிடம் அவராகவே பேசத் தொடங்கினார். “நமக்கு இங்கதான் வூடு, வாசல் எல்லாம். கிண்டி பக்கத்துல ஒரு வூடு இருந்துச்சு. படிக்காமப் போயிட்டேன்; என்னைய ஏமாத்திப் பத்திரத்துலக் கையெழுத்து வாங்கிகினு தொரத்தி விட்டுட்டான் கூடப் பொறந்தவன். அப்பால நமக்கு இந்த எடந்தான் சொர்க்கம்என்று சொன்ன அவர், பார்வையைச் சாலையின் மறுமுனைக்குச் செலுத்திக் குத்தீட்டியாய் நிலைநிறுத்தினார்.

சிறிய அமைதிக்குப்பின், ”வூடுன்னா பெரிய மாளிகையெல்லாம் இல்ல தல. சாதா ஓட்டுக்கட்ட்டம்தான். என்ன இருந்தாலும் நம்ப எடம்தானே?” என்றார். நம்பும்படியாக இல்லாவிட்டாலும், கேட்டுக்கொண்டிருந்தேன். “அப்டியே ஒரு ஒரு நாள் ஒரு ஒரு வேல. எப்டியோ சமாளிச்சுடுறேன். புதுசா இருந்தப்ப இதெல்லாம் பயமா இருந்துச்சு. இப்போ நாளையப் பத்தின பயமில்ல. இன்னிக்கு வேலைக்கு இன்னிக்குச் சோறு கன்ஃபார்ம்என்றார்.

“இந்தச் சரக்கத்தான் நிறுத்த முடியில. கயித, எதுக்குக் குடும்பம் குட்டீன்னு அதான் கலியாணம் கட்டிக்கிடல. நீயே சொல்லு, நம்ப கேடுகெட்டத் தனத்தால நம்பள நம்பிக்கீனு வந்த பொம்பள இன்னா செய்யும்?” – பெருமூச்சு விட்டார். அவரது சட்டைப் பாக்கெட்டில் சிகரெட் இருந்தது. நான் இல்லாதிருந்தால் கண்டிப்பாகப் பற்றவைத்துப் புகைத்திருப்பார் என்று தோன்றியது. மூச்சு முறையாக இல்லாமல், கொஞ்சம் வேகமாக பின்னர் மெதுவாக என்று வித்தியாசமாக ஏறி, இறங்கியது அவருக்கு.

பரப்பிரம்மமாக அவரையே பார்த்துக் கொண்டிருந்த என்னை நோக்கி, “செரி அண்ணாத்த, நீ அப்டியே கெளம்பு. உன்னையப் பாத்தா நைட்டெல்லாம் கண்முழிச்சு நடக்குற ஆளு மாதிரி தெரியில. நான் அப்டியே நம்ப ஏரியாவுல ஃப்ளாட் ஆகுறேன். நேரத்தோட வூடு போயி சேரு” என்று ‘வெளிய போடா அயோக்கிய ராஸ்கல்’ என்பதைப் ‘பாலிஷாக’ச் சொன்னார்.

எழுந்து நடந்தபோது, ஞானம் உணர்ந்த புத்தரைப் போல் மனம் அல்லல்களின்றி அமைதியாயிருப்பதை உணர முடிந்தது. என்னதான் “என்னப்பா ஊரு இது, ஒரு தோட்டம் உண்டா? கிராமம் மாதிரி ஒரு பண்பாடு உண்டா?” என்று ஆயிரம் குறைகள் சொன்னாலும், மனிதர்களைத் தாங்கித் தன்னம்பிக்கை ஊட்டும் தாயாகவே இருக்கிறது சென்னை. அடுத்த வேளைச் சோற்றுக்கு வழியில்லாதவரைக் கூடத் தன்னம்பிக்கையுடன் வாழ்வை எதிர்நோக்கச் செய்யும் சக்தி, வேறு எந்த ஊருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.


திரும்பிப் பார்த்தபொழுது, கையில் வைத்திருந்த ஒரு துணியை நடைபாதையில் விரித்து அவர் படுத்துவிட்டிருந்தது தெரிந்தது. என்னையுமறியாமல் உதட்டில் புன்னகை தவழுவதை உணர்ந்தேன். நிமிர்ந்து பார்த்தேன்; அமைதியான வானம் பெரிய கட்டங்களுக்கும், சிறிய மனிதர்களுக்கும் சேர்த்து மிகப் பெரிய போர்வை போர்த்தியிருந்தது, குளிர்ந்த காற்று இதமாய் வீசியது.