Thursday, December 1, 2016

ஒரு நாள், ஆனால் திருநாள் #1

(மூன்று பாகங்கள் கொண்ட இத்தொடரின் முதல் பாகம் இது)

விடுமுறை விட்டாலும் விட்டார்கள். கல்லூரியில் இருந்தபோது, “வீட்டுச் சோறு வீட்டுச் சோறு என்று அலைந்த மனது, வீட்டில் இருப்புக் கொள்ளவில்லை. நான் வீட்டில் வெட்டியாக இருந்தது போதாமல் பாட்டியை வேறு நச்சரித்துக் குடைந்துகொண்டே இருந்தேன். முதலில் ஓரிரண்டு முறை, “பேராண்டிதானே?என்ற நினைப்பில் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாலும், போகப்போக அவரது முகபாவங்கள், “எப்போடா காலேஜ்ல இருந்து வருவான்?என்பதிலிருந்து “ஏன்டா இங்க வந்து என் உயிர வாங்குற?என்கிற ரீதியில் மாறுவதை ஒவ்வொரு கணமும் தெள்ளத்தெளிவாகப் பார்க்க முடிந்தது.

வெட்டியாக வீட்டில் இருந்தால், என்னாலும் பாட்டியை வெறுப்பேற்றுவதைத் தவிர்க்க முடியாது என்ற ஞானோதயம் சீக்கிரமே மனதுக்குள் பிறந்துவிட்டமையால், எங்கேனும் வெளியில் செல்லலாம் என்று முடிவெடுத்தேன்.

அன்றைய தினம் ராசிபலனில் யோகம் அல்லது நட்பு எனும் குறிப்பு ரிஷபத்திற்கானதாக இருந்திருக்க வேண்டும். நண்பன் தீபக்கும் வெட்டியாக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களின் மூலம் தகவல் கிட்டியது. எனது அதிர்ஷ்டம், அவனுக்குப் பூர்வ ஜென்ம பாவம்! சிக்கிக்கொண்டான் பலியாட்டைப் போல. ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடந்த பேச்சுவார்த்தையின்படி, அடுத்த நாள் காலை பிச்சாவரம் செல்வது என ஏகபோகமாக, ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது; இருவருக்காகச் சட்டரீதியாகத் தீர்மானம் நிறைவேற்றாத குறைதான்.

அம்மாவிடம் சொல்லி அனுமதியும் வாங்கியாகிவிட்டது. ஆனால், நம் நேரம்தான் எப்போதுமே கொஞ்சம் சறுக்கலாகச் செல்லுமே! அன்றென்று பார்த்து அம்மாவுக்கும், எனக்கும் நல்ல வாக்குவாதம். அதனால் நான் கிளம்பும் முன்பாக அவர் என்னுடைய கஜானாவிலேயே காசை வைத்துவிட்டார். பொதுவாகக் கையில் கொடுப்பதுதான் வழக்கம். ‘ஏனோ ஏனோ விதியின் சதி விளையாடுதேஎன்ற ரீதியில் அன்று வாய்க்கால் தகராறு. காசை அவர் வைத்தபோது எதையுமே கண்டுகொள்ளாமல், போடா... ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்என்கிற அளவிற்குப் பந்தாவாகச் சுற்றிவிட்டு, அவர் அந்தப்பக்கம் திரும்பியவுடன் பர்ஸைத் திறக்காமல் அப்படியே தொட்டுப் பார்த்தேன்; கனமாக இருந்தது. ‘அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டருஎன்று மனம் துள்ளியது.

உள்ளே இருப்பது 20 ரூபாய்க் கட்டு என்றும், “750 ரூபாய் வெக்கறேன்டா. போதுமா?என்றும் அம்மா கேட்டதும் என் மனத்தில் பதியவில்லை. கோபத்தினால் காதிலிருந்து புகைந்து கொண்டிருந்தபோது எப்படிக் காது கேட்கும்?

இப்படியாகத் தொடங்கியது பிச்சாவரம் பிக்னிக். சிதம்பரம் பேருந்தைப் பிடித்து, வண்டி கேட்நிறுத்தத்தில் இறங்கி, டவுன் பஸ் பிடித்துப் பிச்சாவரம் படகுத்துறையில் இறங்கியாயிற்று. இருவருக்கென்று சொல்லித் துடுப்புப் படகுக்குச் சீட்டும் வாங்கியாயிற்று. படகில் ஏறிய பிறகு துடுப்புப் போடுபவரிடம் தனியாக ஒரு ‘அமௌண்டைக் ‘கரெக்ட்செய்தால் காடுகளுக்குள் கூட்டிச் செல்வார் என்பதும் தெரியும். அது சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதா, இல்லையா என்பதெல்லாம் யோசிக்கக்கூடிய விஷயமே இல்லை. அந்தக் கூடுதல் பணம்தான் பிச்சாவரம் படகு அனுபவத்தை முழுமையாக்கும்.

படகுக்காரரிடம் கூடுதல் காசு கொடுக்கலாம் என்று, “ஹெஹ்ஹே... நாங்கல்லாம் யாரு?என்ற தொனியில் பர்ஸைத் துழாவியபோதுதான் தெரிந்தது அவருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தில் 20 ரூபாய் குறைந்தது என்று. மேலும், அவருக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டால், ஊருக்குத் திரும்பிச் செல்லக் காசு இல்லை என்பதும் உறைத்தது. தீபக், “வேண்டாம்டா ராசாஎன்பதாகக் கெஞ்சும் பார்வையைத் தெளித்தான். ஆனால் அவ்வளவு பெரிய பரப்பில் இருக்கும் இயற்கையன்னையின் பரிசை விட்டுவிட்டுப் போக மனமில்லை. பயணம் இனிதே தொடங்கியது, பின்விளைவுகளை அறியாமல்.
சிறிது தூரம் சென்ற பிறகு, படகுக்காரரிடம் பேச்சு துவங்கியது. அவரது பெயர் பாலசுப்பிரமணியன் என்று பேச்சினூடே அறிந்தோம்.

எவ்ளோ நாளாண்ணா இங்க இருக்கீங்க?

“அது இருக்கும் தம்பி ஒரு 25 வருஷம். இதான் ஊரு ஒலகம் எல்லாம் நமக்கு.
“மழையெல்லாம் வந்தப்போ போட்டிங் இருந்துச்சா?

(இந்த வருடம் பெய்த அவ்வப்போதையத் தூறல்களைக் குறிப்பிடுகிறோம் என நினைத்துக்கொண்டு) “அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனையே இல்ல தம்பி. இந்தச் சாரலுக்கெல்லாம் ஒண்ணும் பிரச்சன ஆகாது.

“அட, அதில்லிங்கண்ணா! போன வருஷம் பெஞ்சுச்சே அந்தப் பேய் மழையச் சொல்றோம்.

“ஓ அதுவா? அதுக்கென்ன தம்பி. எங்க ஊடெல்லாம் தண்ணியில தான் மெதந்துச்சு.

“இங்க பிச்சாவரத்துல இருக்குற மரம், செடியெல்லாம் புயல், மழையெல்லாம் கொறைக்கும்னு சொல்லுவாங்க. அதான் கேட்டேன்.

“காத்தோட வேகத்தக் கொறச்சிடும் சார். தண்ணியெல்லாம் ஊருக்குள்ள வந்தா ஒண்ணும் பண்ண முடியாது.

“அப்பல்லாம் வேலைக்கு வருவீங்களா?

“(சிரிக்கிறார்) அதெல்லாம் ஒண்ணும் கெடையாது. தட்டுமுட்டுச் சாமான அடகு வெச்சுட்டு, அங்க இங்கக் கடன வாங்கி அப்டியே ஓட்டிர வேண்டியதுதான். அப்புறம் காசு வந்த பின்னே, திரும்பக் குடுக்குறதுதான்.

இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது சிலர் படகுகளில் பயணிகளே இல்லாமல் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தோம்.

“அண்ணா, அவங்க எல்லாம்....என்று இழுத்தோம்.

“மீன் பிடிக்குறாங்க தம்பி. இங்க நெறய அம்புடும். மீனு, எறா எல்லாம் பிடிச்சுட்டுப் போயி சமைக்குறதுக்கு வெச்சுக்கிட்டு, மீதிய வித்துடுவாங்க

“மீன் பிடிக்கலாங்களா? எதுவும் தடையெல்லாம் இல்லையா?

(அவர் சொன்ன பதிலிலிருந்து தடையைப் பற்றிய உண்மையான நிலைமையை அறிய முடியவில்லை) “அதுக்கென்ன? அதெல்லாம் ஒண்ணுமில்ல சார். நான் போட் ஓட்டுறேன். நான் மீன் பிடிக்குறென். இதுல அவங்களுக்கென்ன? நான் பாட்டுக்கு அப்புடியே போட்ல வெச்சு மறைவா எடுத்துட்டு போயிடுவேன்.

சிறிது தூரம் இன்னும் உள்ளே சென்றபோது, தண்ணீரில் மிதந்தபடி சில பெண்மணிகள் கூடையுடன் ஏதோ செய்துகொண்டிருந்தனர்.

“இவங்க என்னண்ணா பண்றாங்க?

“எறா பிடிக்குறாங்க.

“கூடையிலயா?

“ஆமா ஆமா. சிக்கிடும் சார். நீங்க நெனைக்குற மாதிரி இல்ல. கரெக்டா பிடிச்சுடுவாங்க.

“சரி, அதெல்லாம் இருக்கட்டும். எப்புடி மெதக்குறாங்க?

“நல்லா பாருங்க தம்பி. மெதக்கல, உக்காந்துருக்காங்க. மரத்த ஒட்டுன எடத்துல எல்லாம் ரெண்டடி, மூணடி ஆழம்தான் தண்ணி இருக்கும். உக்காந்த மேனிக்கே பிடிச்சுடலாம்.

“நாள் பூரா இப்புடியே உக்காந்துருப்பாங்களா?

“அர நாள் இருப்பாங்க. சில நேரம், அதையும் தாண்டி. மீனு கூட நெறைய சிக்குச்சுன்னா கெளம்பிடுவாங்க.

“கெளம்பிடுவாங்கன்னா? போட்லயா?

“சில நேரம் கடைசி போட் வரும். சாயங்காலம் அதுல ஏறிப் போயிருவாங்க. இல்லாட்டி, அப்புடியே தண்ணியோடவே நீஞ்சிப் போயிருவாங்க. இங்கப் பக்கத்துலதான் தம்பி எல்லாருக்கும் வூடு இருக்கும்.

இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது கூடுதல் பணம் கொடுத்ததற்கான இடம் வந்தது. இருபக்கமும் அடர்ந்த மரங்கள் சூழ, இடையில் படகில் சுகமாகச் செல்வது அலாதியான இன்பம் தருவதாக இருந்தது. ‘செல்ஃபிஎடுக்கத் தொடங்கினோம். “வேணும்னா அந்தப் பக்கம் போயி உக்காருங்க சார். நான் பிடிக்குறேன் ஃபோட்டாஎன்றார்.

முதலில் சற்றே தயங்கிய நான், பின்பு அவரிடம் கைப்பேசியைக் கொடுத்து, புகைப்படம் எடுக்கும் முறையை விளக்கத் தொடங்கினேன். “தெரியும் தெரியும் தெரியும் தம்பி. என் கூட வர்ற எல்லா ஆளுங்களுக்கும் நான் இந்த மாதிரி ஃபோட்டா எடுத்துக் குடுத்துருக்குறேன்என்றபடி, சரமாரியாக எடுக்கத் தொடங்கினார். தேர்ந்த புகைப்படக் கலைஞர் போல, கைப்பேசியை மேலும், கீழும் தூக்கி, இறக்கியபடி அங்கும், இங்குமாக அலைக்கழித்துச் சுமாராக ஒரு 10 படங்கள் எடுத்தார். “என்னத்த எடுத்தாரோ?என்ற நினைப்புடன் வாங்கிப் பார்த்தபோது நன்றாகவே வந்திருந்தது.

மரத்தின் பெயர்களை எல்லாம் சொல்லிக்கொண்டே வந்தார். படகுத்துறையில் பார்த்த ரைசோஃபோரா என்ற ஒரு பெயரை வைத்துப் பீலா விடலாம் என எத்தனித்தபோது, கண்டன், சுரபுன்னைஎன்று பெயர்களாக அடுக்கிக்கொண்டே சென்றார் (இரண்டு பெர்யர்கள்தாம் எனக்கு நினைவிருக்கிறது). “வாயையும், ##**&யும் மூடலாம்என்று என்னிடம் சொல்லாமல் சொல்லியது போலிருந்தன அவரது பதில்கள். அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்த அந்த ‘மண்ணின் மைந்தன்எனும் பெருமையும், திமிரும் அவரது பேச்சில் வெளிப்பட்டன.

இந்த மரத்த எல்லாம் ஃபாரீன் ஆளுங்க காந்தம் போட்டு வேரோட இழுக்குறாங்க தம்பி. கோடி கோடியா காசு வரும் இதுல.

“அது எப்புடி அண்ணா பண்ண முடியும்? இங்க இருக்குற ஆளுங்க விட்டுடுவாங்களா?

“அதுக்கென்னங்க. நமக்கும்தான் காசு குடுக்குறாங்க. நானே இங்க கெளையெல்லாம் வெட்டிக் குடுத்துருக்குறேன். நெறைய காசு தருவாங்க. இந்தச் சதுப்புல ஒரு சில பகுதிய எடுத்துட்டு போயி வேற ஊருல எல்லாம் வெதச்சா அங்கயும் புயல் எல்லாம் தடுக்கும்ல? மூலிகைங்க வேற எல்லாம். அதான் எடுத்துட்டுப் போறாங்க.”

இப்பதில் அதிர்ச்சியளித்தது; ஆனால், யோசித்துப் பார்த்தபோது அவர் சொன்னதன் உண்மையான முகம் தெரிந்தது. என்னதான் அவ்விடத்தின் மீது பாசமும் பற்றும் இருந்தாலும், மூன்று வேளைச் சோற்றுக்கே வழியில்லை எனும் நிலையில், வேறு வழியின்றியேனும் அவர்கள் அவ்வாறு செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று புரிந்தது.

“சரி அத விடுங்கண்ணா. எவ்ளோ தூரம் ஒரு நாளைக்குத் துடுப்புப் போடுவீங்க?

“அது என்ன அப்புடிக் கேட்டுட்டீங்க? ஒரு நாள்ல மூணு நாலு ட்ரிப் எல்லாம் போயிருக்கேன் தம்பி. வேகமா ஓட்டுவேன். மத்தவங்க எல்லாம் ரெண்டு மணிநேரம், ரெண்டர மணிநேரத்துல கடக்குற தூரத்த நான் ஒண்ணர மணிநேரத்துல கடந்துருவேனே பெருமையும், அகங்காரமும் நிறைந்த புன்னகை வெளிப்பட்டது அவரது திருவாயிலிருந்து.

“ஒடம்பு, கை, காலெல்லாம் வலிக்காதாண்ணா?

“வலிக்கும்தான். அதுக்குத்தான் சரக்கு இருக்கே. சாயங்காலம் போயி குடிச்சிடுவேன். இங்க இருக்கும்போதுதான் குடிக்கக்கூடாதுன்னு ரூல்ஸ் எல்லாம். வெளிய போயிட்டா நான் யாரோ, இவனுங்க யாரோ.

“ஓ அப்புடியா?

“அட, அத விடுங்க. ஒரு டைம் காலையில குடிச்சிட்டு வேலைக்கு வந்துட்டேன். மிஷின்ல ஊதிக்காட்டச் சொன்னாங்க. 70 பக்கம் காமிச்சுச்சு. ‘என்ன, குடிச்சுருக்கியா?னு கேட்டு அனுப்பிட்டாங்க. அதுல இருந்துதான் ஒரு டெக்னிக்கக் கத்துக்கிட்டேன். முட்டக் குடிச்சுட்டாக் கூட, வழக்கமா சாப்புடுறத விட ரெண்டு தட்டு, மூணு தட்டு அதிகமா சாப்புட்டுட்டா, மிஷின்ல காமிக்காது. நமக்கும் கொஞ்சம் இஸ்டெடி ஆயிடும். அப்புறம் பிரெச்சன இருக்காது.

இதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தோம். நாங்கள் அவரது பேச்சை ரசிக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்ட அவர் மேலும் தொடர்ந்தார்.

“சில நாளு காலைல இங்க இருக்குற ஆளுங்களே வைன் ஷாப்ல பாத்துடுவாங்க என்னைய. நான் போயி நல்லா சாப்புட்டுட்டு குளியலப் போட்டுட்டுக் கொஞ்சம் லேட்டா வருவேன். மிஷின்ல ஊதச் சொல்லுவாங்க. ஒண்ணுமே காமிக்காது. சிரிச்சுனே போய்ருவேன். ‘எப்புடிடா தப்பிக்கிறான்?னு யோசிப்பானுங்க. ‘ஏன் லேட்டு?னு கேட்டா, ‘வேல இருந்துச்சு, ஜாமான் வாங்கப் போயிருந்தேன்னு சொல்லிச் சமாளிச்சுடுவேன் இப்போது அவரது கர்வம் தலைக்கேறியிருந்தது. விட்டால் நெஞ்சில் குத்தி, ‘வெற்றி நிச்சயம், இது வீர சத்தியம்என்ற ரீதியில் பெருமைப் பாடல்கள் பாடுவார் போலிருந்தது.

“இது என்னோட போட் இல்ல தம்பி. என்னோடதுல 98ன்னு நெம்பர் போட்டுருக்கும். இது 81, வெற ஆளோடது. இது எனக்குப் பிடிக்கவே இல்ல. என்னோட போட் சும்மா தண்ணியக் கிழிச்சிட்டுப் போகும் பாத்துக்கோங்கஎன்றார்.

கரையை நெருங்கியிருந்தோம். “அங்க பாருங்க. முன்னாடி கூம்பா இருக்குல்ல? அதெல்லாம் மீன் பிடிக்குற போட். அலைய, தண்ணிய எல்லாம் கிழிச்சிக்கிட்டுப் பறக்கும். இது கொஞ்சம் சப்பையா இருக்கும். இதுல மீனெல்லாம் பிடிக்க முடியாது. சும்மாச் சுத்திக் காமிக்க மட்டும்தான். இதுல மீன் பிடிக்கப் போனா, போட்டக் கிழிச்சு ஒடச்சிரும் அலைங்க எல்லாம்என்றார்.

விடைபெறும் நேரம், “இங்கப் பக்கத்துல எங்கண்ணா ஏ.டி.எம் இருக்கும்?என்றோம்.

“நீங்க கடலூர்தானே போகணும்னு சொன்னீங்க! வண்டி கேட் பக்கத்தால இருக்கும் தம்பிஎன்றவர், “இந்தாங்க, டவுன் பஸ்ஸுக்கே இப்போ உங்ககிட்டக் காசு இல்லல்ல?என்றபடி நாங்கள் கொடுத்திருந்ததில் ஒரு பத்து ரூபாய் நோட்டை நீட்டினார்.

காசு இல்லை எனும் நினைவே அப்போதுதான் வந்தது. வாழ்க்கையில் எத்தகைய பிரச்சனைகளும், கஷ்டங்களும் இருந்தாலும், அவையனைத்தையும் மறக்கச் செய்யும் சக்தி இயற்கைக்கு இருக்கிறது என்பதைச் சம்மட்டியால் அடித்து யாரோ என் பின்மண்டையில் இறக்குவது போலிருந்தது. அவருக்கு நன்றி கூறி படகுத்துறையில் இருந்து விடைபெற்றுப் பேருந்துக்காகக் காத்திருக்க வெளியில் வந்தோம்.

“ஹப்பாடா, எப்புடியோ மச்சான். நல்லா ஆளா சிக்குனாரு. டவுன் பஸ்ஸுக்குக் காசு வேற குடுத்துட்டாரேடா. வண்டி கேட்ல எறங்கி ஏ.டி.எம். போறோம். காசு எடுக்குறோம். ஊரப் பாத்துப் போறோம். இன்னிய நாள் எனக்கு அந்த மரம், செடியெல்லாம் பாத்தப்போவே முடிஞ்சு போச்சு மச்சான்என்று தீபக்கிடம் சொன்னேன். அத்தினம் அத்துடன் முடியவில்லை என்பது அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

                                                                                                                               (தொடரும்)