சென்னைச்
சாலைகளில் செல்லும்போது இரண்டு விஷயங்கள் அனைவரின் கண்களிலும் தட்டுப்படும். ஒன்று,
சென்னை மெட்ரோ ரயில் பணிகளும், அதனால் மக்கள் பாதிக்கப்படுவதும்; மற்றொன்று, வீதிகளெங்கும்
பரவி, ஊடுருவிச் செல்லும் தம்பட்ட ஊடகங்களாகிய (media of self-propoganda) சுவரொட்டிகளும்,
அவற்றுள் அடங்கும் இன்ன பிற இதர வகையறாக்களும்.
முன்னது
அரசு இயந்திர வேலைகளுக்கான ஒரு முன்னோட்டம்; அது தேசமெங்கும் நிறைந்திருக்கும் கொடிய
நோய். ஆனால் பின்னது சற்று சுவாரசியமானது; தமிழர்கள் என்று தம்மைத்தாமே சொல்லிக்கொண்டு,
ஊரில் வாழும் மற்றவர்கள் அனைவரும் வேற்றுக்கிரகவாசிகள் என்ற நினைப்பில் காலந்தள்ளும்
சில மனிதர்களின் ‘உணர்வு வெடிப்பு’ எனப்படும் நிகழ்வின் வெளிப்பாடு.
சிறிது
காலமாக சில காரணங்களால் தினந்தோறும் பேருந்தில் பயணிக்கும் பேறு கிட்டியதில், அடியேனின்
எண்ண ஓட்டங்கள் தாறுமாறாகச் சிதறி ஓடியதன் விளைவே இக்கட்டுரை. எந்தத் தலைவரையும், நடிகரையும்
நேரடியாகவோ, மறைமுகமாகவோ சுட்டிக்காட்டுமானால், அதற்காக முன்ஜாமீன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு
பேருந்து நிறுத்தத்திற்கருகே திருமண வாழ்த்துக்கென வைக்கப்பட்டிருந்த, பிரம்மாண்டமான
விளம்பரப்பலகையைக்கண்டு குலுங்கிக்குலுங்கிச் சிரிப்பதா, மணமக்களைக்கண்டு பரிதாபப்படுவதா
என்று புரியவில்லை. தமிழ்த்திரையுலகின் முக்கிய நடிகரும், மணப்பெண்ணும் ஒரு ஓரத்தில்
சிரித்துக்கொண்டிருந்தனர்; மறுபுறம், தமிழே பேசத்தெரியாமல், கோலிவுட்டில் நடித்துக்கொண்டு,
‘கலைமாமணி’ விருது வாங்கிய நடிகை ஒருவர், மணமகனுடன் நின்றுகொண்டிருந்தார். வேறு மாநிலத்தவர்
எவரேனும் அக்காட்சியைப் பார்த்திருந்தால் ஒரே மேடையில் இரு திருமணங்கள் நடைபெறப்போகிறது
என்னும் முடிவுக்கு வருமளவிற்கு இருந்தது அவ்விளம்பரப்பலகையின் தோற்றம் (நானே கண்ணாடியணியாமல்
அதைப் பார்த்திருந்தால், இதே முடிவுக்கு வந்திருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது). நடுவில்
அந்த நடிகரின் பெயரும், நடிகையின் பெயரும் குறிப்பிடப்பட்டு, அவர்களின் ஆசிகளுடன் நடக்கும்
திருமணம் என எழுதப்பட்டிருந்தது. இப்போது இன்னொரு சத்திய சோதனை. அந்த நடிகர், நடிகையின்
பெயர்கள், ’-’ குறியீட்டால் பிரிக்கப்பட்டிருந்தது; இது பார்ப்பவர் கண்களுக்கு, அவர்கள்
இருவரும் தம்பதியர் என்னும் தோற்றத்தை வேறு ஏற்படுத்தியது.
இதை
மன்னித்துவிடலாம். அடுத்தக் கேடுகெட்ட கலாச்சாரம் ‘ரசிகர் மன்றங்கள்’ என்ற பெயரில்
தொடங்கப்படும் குப்பைத்தொட்டிகள். உழைத்துப் பிழைக்கும் ஒருவன், ஊர்சுற்றித் திரிவதற்கும்,
ஏற்கனவே ஊர் சுற்றுபவன், அதைவிட வெட்டி வேலைகளில் ஈடுபடுவதற்கும் முக்கியக் காரணிகள்
இந்த ரசிகர் மன்றங்கள்தாம். சமீபத்தில் வெளிவந்த ஒரு திரைப்படத்தின் வெற்றியைப் பாராட்டி
(படம் வெளியாகிய இரண்டாம் நாளிலேயே) ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி ஒன்றில், ‘எங்களின்
விசிறியே’ என்று ரசிகர் பெருமக்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். விழுந்து, விழுந்து
சிரித்த என்னைப்பார்த்து முறைத்தார் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பெரியவர்;
சிரிப்பை நிறுத்தினேன். பின்பு ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால், அச்செய்திக்கோர் உண்மையான
அர்த்தம் இருப்பதாகவே தோன்றியது. நியாயமாகப் பார்த்தால், பத்துப்பைசாவுக்குக் கூடப்
பிரயோஜனப்படாத அத்தகைய திரைப்படங்களில் நடிக்கும் ‘நட்சத்திரங்கள்’, 120 ரூபாய் (சில
நேரங்களில் இத்தொகை 300, 400 என்று கூடிக்கொண்டே போகும். ஆனால் என்ன செய்ய? அவர்களின்
திருமுகங்களை முதல் நாளிலேயே பார்க்க வேண்டுமே?) கொடுத்துப் படத்தைப் பார்த்துவிட்டு,
அப்படம் கேவலமாக இருந்தாலும், “மச்சான்… செம்ம படம்ல. தலைவரு என்னா நடிப்பு?” என்று
சொல்லிப் பீலா விடும் ரசிகப்பெருமக்களுக்கு விசிறிவிட வேண்டும் அல்லவா? (இக்கருத்தை
மேற்சொன்ன சுவரொட்டிக்குக் காரணமான ஆசாமி காண்பாராயின், அவரது சொந்தக் கருத்தாகக் கூறிச்
சமாளிப்பதற்கான முழு உரிமை அளிக்கப்படுகிறது)
திருமதி.
சுப்புலட்சுமி ரெட்டியின் பெயரில் தொடங்கப்பட்ட ஒரு திட்டத்துக்கு வேறு ஒரு அரசியல்
தலைவியின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது. ”ஒருவேளை இவருக்குச் சுப்புலட்சுமி ரெட்டி
என்றொரு பெயர் இருக்குமோ? இல்லையேல் கூடுவிட்டுக்கூடு பாய்ந்திருப்பாரோ? அவரது ஆவி
இவரது உடலில் புகுந்திருக்குமோ?” என்ற ரீதியில் எனது புத்தி தறிகெட்டு ஓடியது. இதன்
உச்சக்கட்டமாக கண்ணைக் கசக்கிக் கசக்கிப் பார்த்தேன்; ஆனால், அதற்குலள் பேருந்து அவ்விடத்தைத்
தாண்டியிருந்தது. “ஒருவேளை என் பார்வைதான் சரியில்லையோ?” என்னும் ஐயம் எழுந்தது. குழப்பத்தில்
தவித்த எனக்கு விரைவில் தெளிவு கிடைத்தது. அதே சுவரொட்டியை வேறிடத்தில் பார்த்தபோது,
என் கண்ணில் பெரிய கோளாறு எதுவும் இல்லை என்னும் உறுதி கிடைத்தது. ஏனெனில் உண்மையாகவே
அவரது பெயரில் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்திற்கு இவரது புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது.
இப்போது மூளைக்கும், மனதிற்கும்
சண்டை தொடங்கியது.
மூளை: அதுசரி, எல்லாம் தேசியக் கொடியின் வழியில்தான் சென்றுகொண்டிருக்கின்றது;
மூவர்ணத்தில் முதலில் வரும் வண்ணத்தைப் பிரபலப்படுத்த தேசியக் கட்சி ஒன்றிருக்கிறது;
மூன்றாவதாக இருக்கும் வர்ணத்தைப் பிரபலப்படுத்த மாநிலக்கட்சி ஒன்றிருக்கிறது. கூட்டிக்கழித்துப்
பார்த்தால் கணக்குச் சரியாகத்தானே வருகிறது?
மனம்: எப்படிக் கணக்குச் சரியாக வரும்? நடுவில் இருக்கும்
நிறம் பற்றி எதுவும் கூறவில்லையே?
மூளை: அட, மிலேச்ச மனமே! அவ்வர்ணத்தில் இருக்கும் சுண்ணாம்பைத்தான்
பொதுமக்களின் தலையில் தடவிவிட்டு, அவர்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கிறார்களே மக்களின்
தலைவர்கள்? இப்போது கணக்கு சரியாக வருகிறதா?
மனம்: ??!!
இதற்கெல்லாம்
உச்சக்கட்டமாகத் தேசியத் தலைவர் ஒருவர் சென்னை வந்தபோது, “எங்களின் ஜன் தன் யோஜனாவே”,
“எங்களின் நிதி ஆயோகே” போன்ற வாழ்த்து விளம்பரங்களைக் காண நேர்ந்தது. தமிழில் பெருமக்களை
வாழ்த்திப் புகழ்வதற்குக் கோடான கோடி வாக்கியங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு
ஒரு அரசின் திட்டங்களைத் தனிமனிதர் ஒருவரைப் பாராட்டுவதற்கு உபயோகப்படுத்துவதைவிட ஒரு
வெட்கக்கேடு வேறு எதுவும் இருக்க முடியாது. இப்படி வாழ்த்துவதற்குப் பதிலாகப் பின்வரும்
வாக்கியங்களைப் பிரயோகித்தால்கூட, நன்றாயிருக்கும் என்று தோன்றியது. அவை:
1) எங்களின்
கைவிரலே!
எங்களை
அரைக்கும் உரலே!
2) எங்கள்
வீட்டுத் திண்ணையே!
பின்கட்டில்
இருக்கும் கோழிப் பண்ணையே!
3) இம்மண்ணின்
உரமே!
மக்களை
அணைத்துப் பின் அடிக்கும் கரமே!
4) இந்தியாவின்
‘காவி’யமே!
சுவற்றில்
தொங்கும் ஓவியமே!
5) காவி
ஜிப்பாவே!
நாட்டை
முன்னேற்றும் அப்பாவே!
6) பத்து
ரூபாய்ப் பிளாஸ்டிக் டப்பாவே!
தெருவோரத்தில்
விற்கும் கோல்கப்பாவே!
குறைந்தபட்சம் சந்த நயங்களாவது நிறைந்திருக்கின்றன. மேலும்
விவரங்களுக்கு ‘செண்டிமண்டுல தார்மாரு’ என்று பாடப்பட்டவரைத் தொடர்புகொள்ளுமாறு, வாசகர்கள்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.