’சிங்கம்’ திரைப்படங்களைப்
பார்க்கும்போதெல்லாம் பல்வேறு கேள்விகள் எழுவதுண்டு. ”முதல் பாகத்தில் மாவட்டங்கள் கடந்தும், இரண்டாவது
பாகத்தில் மாநிலங்கள் கடந்தும், மூன்றாவது
பாகத்தில் கண்டங்கள் கடந்தும் சென்றுவிட்ட துரைசிங்கம், நான்காவது பாகத்திற்கு எங்கு செல்வார் – செவ்வாய்க்
கிரகத்திற்கா, வியாழனுக்கா?” போன்ற அஞ்ஞானக் கேள்விகள் ஒருபக்கம் எழுகின்ற வேளையில், “உண்மையிலேயே
இப்படிப்பட்ட காவல்துறை அதிகாரிகள் இருக்கிறார்களா?” எனும் ஐயமும் எழுவதைத் தவிர்க்க முடிவதில்லை. முன்னதற்கான விடை இயக்குநர் ஹரியிடம்தான் உள்ளது; பின்னதற்கான
விடையை அலசி ஆராய்வதற்கு முன்பாக, காவல்
நிலையங்களுக்கும், ஆணையர் அலுவலகத்திற்குமாக ஒரு அலைச்சல் (அலைக்கழிப்பு
என்றும் வைத்துக்கொள்ளலாம்) அடியேனுக்குச் சமீபத்தில் ஏற்பட்டது. அதன்
விளைவாக இரண்டாவது வினாவிற்கான விடையை ஓரளவிற்கு யூகிக்க முடிந்தது. அந்த
அலைக்கழிப்பினூடே சந்தித்த சில மனிதருள் மாணிக்கங்களைப் பற்றிய தொகுப்பை பார்த்துவிட்டுப் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆராய்வோம்.
’மூஞ்சியே அப்புடித்தான்’ பெண்மணி:
ஆணையர்
அலுவலகத்திற்குச் செல்லும்போது வருகைப்பதிவேட்டில் பதிவுசெய்து, யாரைப் பார்க்கப் போகிறோம், எதற்கு, ஏன் என்ற லொட்டு, லொசுக்குக்
கேள்விகள் அனைத்திற்கும் பதிலளித்த பிறகே உள்ளே செல்ல முடியும் (குறையாகச்
சொல்லவில்லை). வரவேற்பறை என்று கூறப்பட்ட அந்த இடத்தில் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். ‘முனி -1’ திரைப்பட வில்லனைப் போல் முகத்தில் புள்ளிப்புள்ளியாய்த் தோற்றமளித்த அவரைப் பார்த்த மாத்திரத்தில், தவறே செய்யாத ‘ரூல்ஸ்’ ராமானுஜத்திற்குக் கூட, கங்காஜலம்
கவட்டை வழியாக வெளியேறிவிடும் என்பது திண்ணம்.
பத்து
ரூபாயைக் கையில் கொடுத்துக் கொஞ்சம் சிரிக்கச் சொன்னால் கூட, முன்னால்
இருக்கும் நான்கு பற்களை மட்டும் காண்பித்துவிட்டு, “பத்து ரூபாய்க்கெல்லாம் அவ்ளோதான் சிரிக்க முடியும்!” என்று
சொல்லிவிடுவாரோ எனுமளவிற்குப் பீதியாக இருந்தது. காஜல்
அகர்வால் வந்து, “டூத்பேஸ்ட்ல
உப்பிருக்கா?” என்று டப்பிங்கில் கேட்டால் வேண்டுமானால் இப்பெண்மணி 32 செல்வங்களும் தோன்றச் சிரிக்கக் கூடும்.
”ரெஜிஸ்டர்ல எண்ட்ரி போடுங்க” என்றார். பதிவேட்டைத் திறந்தேன். பொதுவான
உலக நியதியான ‘குறிப்பிட்ட
பக்கத்தில் பேனாவை வைத்துப் புத்தகத்தை மூடுவது’ எனும்
தர்மம் அங்குக் கடைப்பிடிக்கப் படவில்லை. ஒவ்வொரு
பக்கமாகப் புரட்டினேன்; எரிச்சல் அடைந்துவிட்டார். “இப்புடிக் குடுங்க. ஒண்ணொண்ணாத்
திருப்புனா என்னிக்குக் கண்டுபிடிப்பீங்க?” என்று முறைத்தார். பிறகு அவரே ஒரு பக்கத்தை எடுத்துக்கொடுத்தார்.
“பேனா இருக்கா?” என்றார். ‘இதென்னடா வம்பாப்போச்சு?’ என்று தோன்றினாலும், நல்லவேளையாக முதுகுப்பையில் பேனாவொன்று இருந்தது. எடுத்துப்
பதிவு செய்தேன். அவரிடம்
பதிவேட்டைக் கொடுத்தபோது, “பேனாவைக் கொடுங்க” என்றார். ‘ஆகா, இங்கேயே
கறக்க ஆரமிச்சுட்டாய்ங்களா?’ என்று தோன்றாமலில்லை. அவரும் ஒப்பமிட்டுவிட்டு ஒரு அட்டையைக்கொடுத்தார். “இங்கயிருந்து கிளம்புற வரைக்கும் இதைக் கழுத்துல போட்டுக்கணும்” என்றார். “சரி
மேடம்” என்றேன்.
வழியும், மொழியும் தெரியாமல் நான்கு சாலைகள் பிரியும் இடத்தில் குழம்பி நிற்கும் கார் ஓட்டுநரைப் போல் கையைப் பிசைந்துகொண்டு நின்றேன். “என்ன?” என்றார் ஒரு பெருமூச்சுடன். அவரது மூச்சுக்காற்றின் கோப வெப்பமா, அல்லது
காக்கியின் மேல் எனக்கிருந்த பயமா எனத் தெரியவில்லை; முகம் வியர்த்திருந்தது ஒரு நொடியில். “மேடம், பென்…” என்று
எச்சில் விழுங்கினேன். “என்ன இப்போ? உங்களுதுதான். நான் இல்லைன்னா சொன்னேன்? திரும்ப
வரும்போது வாங்கிக்குறது?” என்று கரித்துக் கொட்டினார். “சரிங்க மேடம்” என்றபடி
நடையைக் கட்டியபோது, “ஹலோ, இருங்க. அதான் வாய்விட்டுக் கேட்டுட்டீங்கல்ல? அப்புறம் என்ன, பம்முறீங்க?” என்றபடி பேனாவைக் கொடுத்தார்.
’நீங்க நல்லவரா, கெட்டவரா?’ என்ற கேள்வியுடன் அடுத்த இடத்திற்கு நகர்ந்தேன்.
‘நான் இங்க ஒரே பிஸி’ காவலர்:
பையைச்
சோதனை செய்யுமிடத்தில், ‘லேடன்ட்ட பேசுறியா?’ எனும்
நகைச்சுவைக் காட்சியில் வரும் வாட்டசாட்டமான அதிகாரியைப் போல் ஒருவர் நின்றிருந்தார். “அவுத்துக் காமிங்க” என்று
மொட்டையாகச் சொன்னபோது சற்றே முகம் கோணினாலும், பையைத்தான் சொல்கிறார் என்பது சட்டென்று புரிந்தது. நான்
பையைத் திறப்பதற்கும், அவருக்கு ‘வாக்கி
டாக்கி’யில்
ஏதோ தகவல் வருவதற்கும் சரியாக இருந்தது. ‘இண்டர்போல்’ ஆபீசர் அளவிற்கு விறைப்பாகக் கருவியைக் கவனித்துக் கொண்டிருந்தார். எனக்கு ஒவ்வொரு நொடியும், யுகமெனக்
கடந்துகொண்டிருந்தது.
ஒருவழியாக ’முக்கியமான’ தகவல்களையெல்லாம் அறிந்த பின்னர், என்னிடம்
வந்தார். அந்நேரம்
பார்த்துச் சிவ பூஜையில் கரடி புகுந்தது போலத் ‘தணணணதணாணாணணா’ என்று ஒரு வண்டி பிடிக்கும் வண்டி வந்தது; அதைக்
கவனிக்கச் சென்றுவிட்டார். நல்லவேளையாக யாரோ ஒரு உயரதிகாரி அந்நேரத்திற்குச் சரியாக வந்தார். “நீ
எதுக்குய்யா இங்க நிக்குற?” என்று
திருவாளர். பிசிமேன்
அவர்களைப் பார்த்துக் கேட்டார். “அது
ஒண்ணுமில்ல சார்…” என்று
மென்று விழுங்கியபடியே, ஒருவழியாக என் பையைச் சோதனை செய்து உள்ளே அனுப்பி வைத்தார் இவர்.
உள்ளே
செல்லும்போது, ‘ஒரு மணிநேரத்திற்கு நான்கு பைகளைச் சோதனை செய்தால் பெரிய சாதனை’ என்று
மனம் கணக்குப் போட்டது. எனக்குப்
பின்னால் நின்றுகொண்டிருந்த வரிசையைப் பார்த்தபோது, நிச்சயமாக அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் திருப்பி அனுப்பப்பட்டு மீண்டும் மறுநாள் வரும்படி பணிக்கப்படுவார்கள் என்று புலப்பட்டது.
’கொம்பேன் சுறா வேட்டையாடும் நடராசா நான், நடராசா நான்’ அலுவலர்:
நான்
செல்ல வேண்டிய இடத்தை அடைந்தபோது, எதிர்பார்த்ததைப் போலவே நான் பார்க்கவேண்டிய ஆள் அங்கு இல்லை. ஒரு
முதுகுடைந்த, கையுடைந்த நாற்காலி, ‘இன்றோ, நாளையோ’ என்று
போராடிக்கொண்டிருந்த்து. ஈவிரக்கமே இல்லாமல் அதன் மீது ‘தொப்’பென்று அமர்ந்தேன்; சத்தியமாக வாயிருந்தால் வடசென்னைத் தமிழில் வசவு பாடியிருக்கும்.
உட்கார்ந்திருந்த
நேரத்தில் எப்படியோ கஷ்டப்பட்டு வாயை அடக்கிவிட்டேன். ஆனால், கண்
அலைபாய்ந்துகொண்டே இருந்தது. அங்குமிங்குமாக
யாரேனும் ஓடிக்கொண்டேயிருந்தனர். “ஐயா கேட்டாரு, ஐயா
சொன்னாரு” என்று
ஒரு படையே பரபரத்துக் கொண்டிருந்தது. அச்சுறுசுறுப்பு வியப்பை அளித்தாலும், ‘அட ஆபீசருங்களா… மேல போற தலைவருக்குக் கீழ ட்ராஃபிக்க ப்ளாக் பண்றீங்களே! உங்கக் கடமை உணர்ச்சி கண்கலங்க வைக்குதுப்பா’ என்ற விவேக் நகைச்சுவையும் நினைவில் நிழலாடாமல் இல்லை.
அங்குதான்
அவரைக் கண்டேன் (காதல்
கடிதம் போலத் தொடங்குகிறேன் என்றெண்ணி ‘அவனா
நீ?’ என்று
கேட்காமல் இருக்குமாறு வாசக நண்பர்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்). 10 நிமிடமாகக் கவனித்துக்கொண்டிருந்தேன் (மீண்டும் சொல்கிறேன், சத்தியமாக நான் அவன் இல்லை), படியேறுகிறார்; நான்கைந்து படிகள் ஏறியபின், ஏதோ
யோசித்தவாறே மீண்டும் இறங்குகிறார். வெளியே செல்கிறார்; தயக்கத்துடன் உள்ளே வருகிறார்; ‘லிஃப்ட்’ ஏறலாம் என முடிவுசெய்து, பொத்தானை அழுத்துகிறார், ஆனால், கதவு
திறந்த பின், “இல்ல
இல்ல சார், நீங்க
போங்க” என்றபடியே
மற்றவர்களை வழியனுப்பி வைக்கிறார்.
இப்படியே
மேலும் ஒரு ஐந்து நிமிடங்கள் கடந்தன. இப்போது
அவர் மழையில் நனைந்த அளவிற்கு வியர்த்திருந்தார். அந்நேரம் பார்த்து யாரோ ஒருவர் படியிறங்கி வந்து, “என்னப்பா
இப்புடி வேர்த்து ஊத்திருக்குது? வா, போய்ட்டு
கேண்டீன்ல ஒரு காஃபி குடிப்போம்” என்றார். ‘இதற்குத்தானே
ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ எனும்
ரீதியில், பலகாரத்தைப்
பார்த்த பூனையைப் போல் வளைந்து, நெளிந்து, குழைந்து சென்றார். இடையிடையே, ‘யாரேனும் பார்த்துவிட்டார்களா?’ என்று ஒரு நோட்டம் விட்டார். என்னை
ஒரு பொருட்டாகவே மதித்திருக்க வாய்ப்பில்லை. நான் போய், “திருவாளர்.
_____ ஓ.பி. அடித்தார்” என்று சொன்னால் மட்டும் அவரைப் பணியிடைநீக்கமா செய்துவிடப் போகிறார்கள்?
’தஞ்சாவூர் பொம்மை’ அல்லக்கை:
”ஏன் தம்பி இங்க உக்காந்திருக்கீங்க?” என்ற கரிசனக் குரல் கேட்டவுடன் ‘தகதகா’ என்று
திரும்பினேன்; வந்த விஷயத்தைச் சொன்னேன் (எதற்காக
அலைந்தேன், ஏன்
சென்றேன் போன்ற விவரங்களைப் பின்னர் வேறொரு பதிவில் விரிவாக எழுதுகிறேன்; ஏனென்றால் அது சம்பவம் அல்ல, சரித்திரம்). சிரிப்பே உருவான அந்த அலுவலர், “உள்ளே
வாங்க” என்றார். “பரவாயில்ல சார்” என்றபோதும்
விடாப்பிடியாக அழைத்துச் சென்று அவரது அறையில் உட்கார வைத்தார். “நீங்க
ஒண்ணும் கவலைப்படாதீங்க. ஐயாவுக்கு என்னைய நல்லாத் தெரியும். நான்
பாத்துக்குறேன்” என்றபோது, மனத்திற்கு
ஆறுதலாக இருந்தாலும், “ஐயையோ, இந்தாளுக்குத்
தனியா பிரசாதம் கொடுக்கணுமா?” என்ற பீதியும் அடிவயிற்றில் கிளம்பியது.
காவல்
நிலையம் என்பது ஆர்.டி.ஓ. அலுவலகம்
மாதிரியல்ல; ஓட்டுநர் உரிமம் வாங்குவதற்கு வெளிப்படையாகவே வாங்கிக்கொள்வார்கள் குடிசை குடிசையாக அமைத்து (’இந்தியன்’ திரைப்படத்தில் காண்பித்த அனைத்துக் காட்சிகளும் அட்சரம் பிசகாத உண்மைகள்). ஆனால்
இங்கு அப்படியல்ல, பிரசாதம் கொடுப்பதற்கான சர்வ புருஷ லட்சணங்களும் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால்
வேலையும் ஆகாது, கொடுத்ததற்காக
நாம் இ.பி.கோ.-வின்படி
தண்டனை வேறு அனுபவிக்க வேண்டும்.
இவ்வாறாக
யோசித்துக் குழம்பிக்கொண்டிருந்த வேளையில், ‘ஐயா’ வந்தார். “இருங்க, அஞ்சு நிமிஷத்துல வந்துடுறேன்” என்றபடி உள்ளே சென்றார். ஒட்டுக்கேட்டேன்
என்று சொல்லமுடியாது, அவர்கள் பேசுவது தெளிவாகவே கேட்டது.
“யோவ், அந்த
சேங்ஷன் பேப்பர் வந்துச்சா?”
“யெஸ் சார்.”
“நான் சைன் பண்ணிட்டேன்ல?”
“பண்ணிட்டீங்க சார்.”
“அந்தாள நாளைக்குப் பார்த்து முடிச்சி வுட்டுடு.”
“யெஸ் சார்.”
“பூஜை போடணும் ஆஃபீஸ்ல, பூ
வாங்கிட்டு வந்தியா?”
“வாங்கிட்டேன் சார்.”
“சரி, போ. ஒரு டீ மட்டும் சொல்லு.”
“தாங்க் யூ, சார்.”
“தம்பி, ஐயா
கிட்ட சொல்லிட்டேன். கொஞ்சம் பிஸியா இருக்காரு. நீங்க
ஒண்ணும் கவலப்படாதீங்க. நான் சொல்லிட்டேன்ல? முடிஞ்சிடும் இன்னிக்கு” என்று
சொல்லிவிட்டுத் தேநீர் வாங்கச் சென்றார் அந்தப் பிரகஸ்பதி.
இப்படியான
பல்வேறு தெய்வங்களைச் சந்திக்க நேர்ந்தது. ஆங்… சொல்ல வந்த விஷயத்தை விட்டுவிட்டேனே! ஹரி ஏன் ‘சிங்கம்’ நாடகத்தை – தப்புத்தப்பு, திரைப்படத்தை – மீண்டும் மீண்டும் படமாக்குகிறார் எனும் கேள்விக்கான விடை பூடகமாகப் புரியவே செய்தது.
1)
’நேரில்தான்
இப்படியெல்லாம் இல்லை, திரையிலாவது
காண்பித்து பார்வையாளர்களை ஆறுதல்படுத்துவோம்’ எனும் எண்ணமாக இருக்கலாம்.
2)
‘படம்
பாக்குறவன் எல்லாம் கேனப் பயலுக. எதைக்
காட்டினாலும் நம்பிடுவாங்க. நாம பாட்டுக்கு அடிச்சு விடுவோம்’ எனும்
அதீத நம்பிக்கையாகவும் இருக்கலாம்.
ஆறுச்சாமிகள்
வாழ்க! அன்புச்செல்வன்கள்
புகழ் ஓங்குக! துரைசிங்கங்கள்
வளர்க!