Wednesday, October 24, 2018

சருகு

16 வயது. இல்லை, 16 வயதுதான். நாளை அடக்கம் செய்யவிருக்கிறார்கள். என் வகுப்பில் படிக்கும் மாணவனின் அண்ணன். அண்ணன் என்றால் உடன்பிறந்தவனில்லை. அத்தை பையன். பணமிருந்து, மனமில்லாது வாழும் மனிதருக்குத்தாம் “அவன் சொந்தக்காரப் பையன்”, “கஸின்” என்றெல்லாம் சொல்லத் தோன்றும். இறந்தவன் யாரென்று கேட்டால், “சார், ___ அண்ணன் சார்” என்றுதான் அனைவரும் சொன்னார்கள்.

பள்ளி முடிந்து, மாலை வகுப்புகள் முடியும் நேரத்தில் துக்கம் விசாரிக்கச் சென்றேன். துக்கம் விசாரிக்க என்றுகூடச் சொல்ல முடியாது. தம்பியாகிய வகுப்பு மாணவனின் மனநிலை எவ்வாறு இருக்கிறது என்று அறியும் ஒரு சுயநலத்துடன்தான் போனேன். அவன் என்னிடம் வகுப்பில் பலமுறை வசவுகள் வாங்கியவன். ரொம்பச் செல்லப் பிள்ளையெல்லாம் கிடையாது.

தெரு என்று சொல்ல முடியாத அளவிற்கு ஒரு குறுகலான சந்து. அச்சந்தில் உடலை வைக்க முடியாதென்பதால் தெருவிலேயெ குளிர்பதனப் பெட்டியில் கிடத்தியிருந்தார்கள். யாரும் அழவில்லை. நான்கைந்து பேர் வெறித்துப் பார்த்தபடியே இருந்தார்கள். உடல் முழுவதும் வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருந்தது. முகம் மட்டுமே தெரிந்தது. பார்க்கும்படியாக இல்லை.

ஆயுத பூஜையன்று ஐ.எஸ்.எல் கால்பந்தாட்டத்திற்காக அரங்கிற்குச் சென்றுவிட்டு ரயிலில் திரும்ப வந்துகொண்டிருந்திருக்கிறார்கள் ஏழு பேர். மூவர் இவன் படித்த பள்ளியில் படித்தவர்கள், மூவர் இவன் படிக்கும் பள்ளியில் படிப்பவர்கள். இவனுடன் சேர்த்து ஏழு. ரயிலில் வரும்போது எச்சில் துப்புவதற்காக வெளியே தலையை நீட்டியதாகச் சொல்கிறார்கள், கம்பத்தில் தலை மோதி ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டிருக்கிறான். இரவு ஏழு மணியிலிருந்து எட்டரை மணி வரையிலான போட்டி என்பதால் இது ஒன்பது மணியிலிருந்து, பத்து மணிக்குட்பட்ட நேரத்தில் நடந்திருக்க வேண்டும். அதிக அளவிலான இரத்தம் வெளியேறிய ஆபத்தான நிலையில் ஸ்டான்லியில் சேர்த்திருக்கிறார்கள்.

மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறது. நினைவிழந்த நிலையில், கோமாவுக்குத் தள்ளப்பட்டுப் பின்னர் மூளைச்சாவு ஏற்பட்டுக் கடைசி உயிர்நாடியான செயற்கைச் சுவாசமும் பிடுங்கப்பட்டு இன்று கடுங்குளிர் தெரியாதவாறு துணியால் மூடப்பட்டுக் கதகதப்பாக உறங்கிக்கொண்டிருந்தான். முகம் வெளிர்நீலமாய் மாறியிருந்தது. கண்கள் வீங்கிக் கன்னம் அடையாளம் தெரியாமல் ஆறடிப் பெட்டிக்குள் அடங்கியிருந்தான். வெளியில் கேட்கும் விசாரிப்புகள் அவன் காதில் விழ வாய்ப்பில்லை. கண்ணாடிதான் தடுத்துவிடுமே!

”தம்பி” என்ற சத்தம் கேட்டுச் சட்டென விலகினேன். இரண்டு நிமிடங்களுக்கும் மேலாக அவனையே பார்த்துக்கொண்டிருந்து விட்டேன் எனும் உண்மை அப்போதுதான் உறைத்தது. மாலையுடன் ஒருவர் வந்து, பெட்டிக்கு அதை அணிவித்துப் போனார். அதன் பிறகு, சந்திற்குள் சென்றேன். வகுப்பு மாணவனின் அம்மாவிடம், “_____ இருக்கானாம்மா?” என்று கேட்டு முடித்திருக்கவில்லை. “சாஆஆஆஆஆர்” என்று கதறிக்கொண்டே வந்து என் மேல் சாய்ந்தான். “அண்ணன் சாஆஆர்… ஃபுட்பா…ஃபுட்பால் மேச்சு… ட்ரெயின்ல வரும்போது…” என்றபடி பெருங்குரலெடுத்து ஓலமிட்டான். அவனது தோளை ஒரு கையால் இறுகப் பற்றியபடி, முதுகில் இன்னொரு கையால் தட்டிக்கொடுத்தபடியே இருந்தேன்.

அவனது விசும்பல் ஒவ்வொன்றும் சுற்றிலும் கேட்ட மற்ற அனைத்து இரைச்சல்களையும், ஓசைகளையும் விடப் பல மடங்கு அதிர்வு கொண்டதாக இருந்தது. கண்கள் நீர்த்திரையால் மறைக்கப்படுவதை உணர்ந்தேன். சற்றே தலையில் எடை கூடியது போல் இருந்தது. கண்கள் இருட்டிக்கொண்டு வருவது புரிந்தது. உணர்வுகளும், தசைகளும் ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டு செயலிழந்துகொண்டிருந்தன. கால்களில் வலு படிப்படியாகக் குறைந்து முருங்கைக்காயைப் போல் வளைவதைத் தெளிவாக உணர்ந்தேன். இதயத் துடிப்பு இரு மடங்காக பெருகிக்கொண்டே போவது போல் தெரிந்தது. மலையுச்சியை அடைந்த மனிதனின் செவிப்பறையைப் போல் என் காதுகளும் அடைத்துவிட்டிருந்தன.

எதுவுமே சொல்லத் தோன்றவில்லை. தட்டிக்கொடுத்துக்கொண்டேயிருந்தேன். அனிச்சைச் செயலாய்த் தொடங்கிய அதுவுமே கூட இயந்திரத்தனமாக மாறியிருந்ததைக் கவனிக்கவில்லை. சில நிமிடங்களுக்கு மேல் என் பிடியிலிருந்து அவன் தன்னை விடுவித்துக்கொண்டான். கண்ணைத் துடைத்தவாறு, “டீ குடிங்க சார்” என்றான். குடிப்பதில்லை என்றேன். வெறுமையாகப் பார்த்தான். கழுத்தின் முன்புறம் வழியாக முதுகெலும்பை ஊடுருவிச் சென்றது அவனது வெளிறிய பார்வை. உடம்பு சில்லிட்டது போலிருந்தது.

அவனது அம்மாவிடம், “பையனைக் கொஞ்சம் ஊருக்கு, சொந்தக்காரங்க வீட்டுக்கு அனுப்பிடுங்க. இல்லைன்னா ஸ்கூலுக்கே வரட்டும். வீட்டுல இருந்தாத் திரும்ப திரும்ப அதே ஞாபகமாவே இருக்கும். பாத்துக்கோங்கம்மா” என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடந்தேன். தெருமுனைக்கு வந்தபோது நீல முகம் என்னைக் கட்டாயப்படுத்தித் திரும்பிப் பார்க்க வைத்தது.

உடம்பு உலை போலக் கொதித்தது. காதில் யாரோ சீழ்க்கை அடிப்பதைப் போன்ற ஒரு இரைச்சல். வலிந்து காதை மூடிக்கொண்டு நிமிர்ந்து பார்க்காமல் குனிந்தபடியே நடந்தேன். சாலையில் இருந்த தார்க்கற்கள் அனைத்தும் திடீரெனப் பிளந்து விழுங்க வருவதைப் போல் தோற்றமளித்தன. கண்களை இறுக மூடியபடியே நடந்தேன். நீல வட்டங்கள் மூடிய கண்களுக்குள் வட்டமடித்தன. அவ்வட்டங்களுள் அவ்வெளிர்நீல முகமும் ஒன்று.

Thursday, October 11, 2018

ஏதிலி

அடையாளங்களால் நிறைந்து வழியும் குப்பைக் கிடங்கில்
அடியெடுத்து வைத்தே நடக்கிறான்
அடையும் இடம் தெரியா மானுட வேட்கை கொண்ட மிருகம்

சிற்சில குப்பை மலைகளாய்க் குவிந்து
சிதறியே ஓடுகின்றன
கவைக்குதவா அடையாளக் குப்பைகள்

காலவெளியெனும் மணல்பரப்பில் குப்பைக்கிடங்கில்
கால்வைத்தே நடக்கையில்
காணும் அனைத்தையும் மிதிக்கிறான்

மிதிபடும் அடையாளங்களில்தாம் எத்துணை எத்துணை வகை?
"நீங்க என்ன ஆளுங்கப்பா?"வில் தொடங்கி
"வாட்ச்மேன்" என்றதட்டும் குரலில் எழும்பி
"ஹலோ, ஒலாவாண்ணா?" எனும் வினாவில் தொக்கி
"நான் மதுரக்காரன்டா"வில் தொடர்ந்து
"ஐ அம் ஆன் ஐ.ஐ.டி. அலும்ன"ஸில் படர்ந்து
"ஐ வாண்ட் டு பிகம் ய கலெக்ட"ரில் ஊர்ந்து
இடறிச் சிதறி ஓடுகின்றன
அனாதையான அடையாளங்கள்
பின்னர் மிதிபடுகின்றன.

மலையே மலைக்கும் குப்பை மலையாய்
எண்ணிக்கையினாலான அடையாளங்கள்
"இருபத்தஞ்சு வயசுதான் ஆகுது" என்ற கல்யாணப் பொய்;
"வருஷத்துக்கு அஞ்சு லட்சம் சம்பளம்" எனும் எலும்புத் துண்டு;
இவ்வாறாகத் தொடங்கி
நால்வருணம்
ஐந்திணை
அவை சார்ந்த மக்கள்
அவர்தம் தொழில், சமூகம்
இத்யாதி இத்யாதி!

கிடங்கின் நடுவில்
குட்டைத் தண்ணீராய்த் தேங்கி
நெடி வீசுகின்றன
பெயர் அடையாளங்கள்;
"மஹாதேவன் ஐயர்" எனவும்,
"முத்தையாத் தேவர்" எனவும்,
"மாரிமுத்துப் படையாச்சி" எனவும்,
"சரவணக் கவுண்டர்" எனவும்
குட்டையில் மிதக்கின்றன
மக்கி அழியாத சாதி ஞெகிழிகள்;
மொய்க்கின்றன
குடலைப் புரட்டி வயிற்றைக் குமட்டும் கிருமிகள்.

கொளுத்தப்படும் குப்பைகள் கருகிச்
சாம்பலாய்ப் போகும் நேரத்திலே
திசைகளற்ற கரும்புகையாய் ஏதிலியாய்ப்
பரபரப்பாய்ப் பறக்கிறது
"நான் யார்?" எனும் கேள்வி

பதிலில்லையோ வானின் எல்லையே?
அண்ட சராசரமே!
பராபரமே!

Wednesday, August 22, 2018

டீச்சர்

”டேய் மச்சான், அந்த சார் ஒரு தூங்குமூஞ்சிடா. கண்டுக்கவே மாட்டான். ஒன் மார்க்ஸ் மட்டும் ஃபர்ஸ்ட் பத்து நிமிஷத்துல க்ராஸ்செக் பண்ணிக்கலாம்.”
“ஓகே டா. ஏ ஆப்ஷனுக்கு நெத்தி, பி-க்கு கண்ணு, சி-க்கு மூக்கு, டீ-க்கு வாய். சேம் சிக்னல்ஸ்தான். ரெடியா இரு. ஃபர்ஸ்ட் டென் மினிட்ஸ்ல முடிச்சிட்டு டூ மார்க்ஸ் போயிடலாம்.”

*****

”மாப்ள, இந்த மிஸ்ஸு ரவுண்ட்ஸ் வரும்டா. எல்லாம் மொதல் ஹாஃப் அவருக்குத்தான். அப்புறம் சமோசாவும், டீயும் வந்தாக் குத்துக்கல்லு மாதிரி உக்காந்துடும். அந்த ட்ரிக்னாமெட்ரி ஃபார்முலா எல்லாத்தையும் எழுதி வெச்சுருக்கல்ல? காப்பி பண்ணிட்டு பிட்டப் பாஸ் பண்ணு.”

*****

”செம்ம ஜாலிடா இன்னிக்கு எக்ஸாம் ஹால்ல. மொக்க சூப்பர்வைசரு ஒருத்தன். அவனுக்கு நம்ம டெக்னிக் எல்லாம் தெரியாது போல. அசால்ட்டா எல்லா ஆன்ஸரும் வெரிஃபை பண்ணியாச்சு.”

*****

இவையும், இன்ன பிற உரையாடல்களும் தேர்வறைக்குச் செல்லுமுன்பும், தேர்வு முடிந்தபின்னரும் தவறாமல் இடம்பெறும். பள்ளி, கல்லூரி என்று பெரிய வித்தியாசம் எல்லாம் இருந்ததில்லை. அம்மூன்றில் குறைந்தபட்சம் இரண்டிலேனும் நானும் இடம்பெற்றிருக்கிறேன் என்பதைச் சொல்லவேண்டியது தலையாய கடமையாகிறது.

மாணவப் பருவத்தின் ஹீரோயிஸக் கற்பிதங்களுள் முக்கியமானது, ‘டிப்பி’ அடித்துப் பிடிபடாமல் வெளிவருதல். அங்கப்பிரதட்சணம் செய்பவர்களையும், அஷ்டாவதானிகளையும் விடப் பெரிய சாகசம் செய்துவிட்டதான ஒரு அதுப்பு தலைதூக்கும் பருவம் அது. என்னதான் தேய்ந்துபோன ஹைதர் காலத்து வானொலிப்பெட்டியைப் போல நொடிக்கு நூறு முறை, “டேய், நானும் உன் வயசைத் தாண்டி வந்தவன் தாண்டா” என்று ஆசிரியர்/ஆசிரியை வாய்வலிக்கக் கத்திக் கதறினாலும் அது மாணவரின் கபாலத்தில் குட்டுவைத்து எட்டிப்பார்த்ததாய்ச் சரித்திரம் இல்லை. தலைமையாசிரியரிடம் மாட்டினால் கூட, “தில்லிருந்தா மொத்தமா வாங்கலே” என்ற ரீதியில், அதையே கதாநாயகத்தனமான பிம்பங்களைக் கட்டமைக்கப் பயன்படுத்தும் மாணவ மார்க்கெட்டிங் உபாயங்களுக்கும் குறைவிருந்ததாய் நினைவில்லை.

இப்படிக் காலரைத் தூக்கிவிட்டுச் சுற்றிக்கொண்டே, கோக்குமாக்கு வேலைகளைப் பார்த்த நானும் கூட ஒருநாள் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் ஆவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. கொடிக்கம்பத்தில் நெட்டுக்குத்தாய் நிற்கவைத்த துடைப்பக்குச்சியைப் போன்ற உயரத்தில், ‘ஆறடிக் காத்தே’ என்ற ரீதியில் இருக்கும் எனக்கு, அமர்ந்த இடத்திலிருந்தே மொத்த வகுப்பறையையும் கண்கொத்திப் பாம்பென நோட்டம் விடும் அரிய வாய்ப்பு ஒவ்வொரு தேர்வின்போதும் கிட்டுகிறது.

1990-2000-2010-2020 என்று பல மாமாங்கமாய் மாறாமல் இருப்பது மாற்றம் மட்டுமல்ல; சரியான விடைகளுக்குக் நெற்றி-கண்-மூக்கு-வாய் என வரிசைப்படுத்தி விடை சொல்லும் நுணுக்கமும்தான் போல. கண்ணைச் சொறிந்துகொண்டே சாவதானமாக ஓரக்கண்ணால் இரண்டு மதிப்பெண் விடைகளை நோக்குவதும், ‘தெரியாமல்’ கீழே விழும் பேனாவையோ, பென்சிலையோ, ரப்பரையோ எடுக்கும்பொருட்டு குனிந்து, விழுந்த பொருளுடன் ‘பிட்டு’க் காகிதத்தையும் சேர்த்து எடுப்பதும், எழுதி முடித்த விடைகளைச் சரிபார்க்கும் சந்தடி சாக்கில் அருகில் இருக்கும் தோழனுக்கோ, தோழிக்கோ தாளை விரித்து வைத்து ஒரு பக்க விடைகளைக் காண்பிப்பதும், வாயில் ஒரு கையோ, இரு கைகளோ வைத்து மூடிக்கொண்டு கிசுகிசுப்பதும், சன்னமாய்த் தொடங்கிப் பின்னர் சற்றே சத்தமாகி ஒருவழியாய் நாராசமாய் மாறும் இருமலை ஆயுதமாய்ப் பயன்படுத்தி வகுப்பறையின் மேதாவியைத் திரும்பவைத்து விடைகேட்பதும், இன்ன பிற இதர மிஸ்ஸலேனியஸ் தந்திரங்களும் மாறவேயில்லை. நீலாம்பரியின் “வயசானாலும்…” என்று தொடங்கும் ‘படையப்பா’ வசனத்தை இவ்விடத்தில் பொருத்திப் பார்த்துச் சிரித்தல் நலம்.

’வாத்தியாராகிய நான்’ என்ற கம்பீரத்துடன் நான் உற்று நோக்கினால் நான் பத்தாவதிலும், பன்னிரண்டாவதிலும் செய்த அதே கொணஷ்டைகளை மாணவமணிகள் செய்கின்றனர். அது சரி! அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழியே அன்றோ? ஆசிரியர் கவனிப்பது தெரிந்தால் காற்றில் கணக்குப் போடுவது போலவும், கண்ணை விட்டத்தை நோக்கிச் செலுத்தி ‘ஆழ்ந்த சிந்தனை’யில் வலிந்து ஈடுபட்டு வெண்பா எழுதும் சங்கத்தமிழ்ப் புலவர் பெருமக்களின் சிந்தனைக்கே சவால் விடுவது போலும், மூக்கைச் சொறிவது போலும் பலவிதமான நாடகங்கள் அரங்கேறும். உச்சக்கட்டமாய் நடக்கும் இரு நிகழ்வுகள்தாம் முத்தாய்ப்பே. கவனிப்பது தெரிந்தவுடன், “சார், மே ஐ ட்ரிங்க் வாட்டர்?” என்று என்னையே அசரடிக்கும் திறமைசாலித் திருடர்களையும், “சார், டவுட் சார்” என்று வினாத்தாளுடன் வந்து கேவலமான ஒரு சந்தேகத்தைக் கேட்டுவிட்டு அப்பாவியாய் இடத்திலமரும் லகுடபாண்டியர்களையும் என்ன செய்வதென்றே தெரிவதில்லை. ‘கர்மா இஸ் ய பூமராங்’ என்று நானும் மீசையில் மண் ஒட்டாத கதையாய்க் கண்டுகொள்வதில்லை.

சற்றேறக்குறைய மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், “அந்தாளு சும்மா சீனுதாண்டா, மொறைப்பான்… ஆனா பத்து பைசாக்குப் ப்ரோஜனம் இல்ல”, “அவன் கெடக்காண்டா, உக்காந்தேதான் இருப்பான். எதுவும் கண்டுக்க மாட்டான்” போன்ற ஏச்சுப் பேச்சுக்கள் என்னைப் பற்றி வலம்வந்துகொண்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகள், ‘ஸ்வச் பாரத்’தை விடப் பிரகாசமாய் இருக்கின்றன.

”அடிச்சாலும் பிடிச்சாலும் நீதானே என் ஆம்படையான்?” எனும் விஸ்வரூபம் – 1 வசனம்தான் நினைவுக்கு வருகிறது. எவ்வளவுதான் மாணவர்கள் என்னைக் கலாய்த்தாலும், நான் அவர்களைச் சதாய்த்தாலும் ‘நமக்கு நாமே’ என்று தலைவிதி. சுழி. மாற்ற ஏலாது. “எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்! இவன் ரொம்ப நல்லவன்” என்று மாணவச் செல்வங்கள் என் தலைமேல் ஏறி ஆடாத வரையில் அனைத்தும் சுபமே.

ஆனால், இவ்வளவும் நடந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் தெய்வப் பிறவிகளான என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களை நினைவில் நிறுத்துகிறேன். உண்மையிலேயே நான் செய்த லோலாலயங்களும், அட்டூழியங்களும் அவர்களுக்குத் தெரியாமல்தான் போயிற்றா? (இல்லை. பெற்றோர் – ஆசிரியர் சந்திப்பின்போது வட்டியும், முதலுமாய் வஞ்சம் தீர்த்த ஆசிரியர்கள் பலர்.) வகுப்பறையில் நான் ஒரு கும்பீபாகமாய் இருந்தும், என்னை ஏன் கண்டிக்காமல் விட்டனர்? கருட புராணத்தின் மீது நம்பிக்கைதான் இல்லையோ? (அப்படியும் சொல்ல முடியாது. இரும்பு அளவுகோல்களை வைத்து அடிப்பதை ஓரளவிற்கு வஜ்ரகண்டகத்துடன் ஒப்பிடலாம்.)

தெளிந்த நீரோடையெனப் புலப்படுவது, பொட்டிலடித்தாற்போன்ற ஒற்றை உண்மை மட்டுமே. உலகில் இருக்கும் ஒரு ஆசிரியரும் இளிச்சவாய் அன்று. நாம் செய்யும் அனைத்தையும் பிக் பாஸை விட உன்னிப்பாகக் கவனிக்கும் ஆற்றல் உடையவர்கள் அவர்கள். முதல் பார்வையிலேயே முக்கால்வாசி குணாதிசயங்களை அளந்து எடைபோட்டுவிடும் அற்புத மனிதர்கள் ஆசிரியர்கள். தேர்வறையில் மாட்டாமல் தப்பிவிட்டாலோ, ஒழுக்கச் சீலர்களான தனுஷும், சிவகார்த்திகேயனும் கற்றுத்தரும் ’நற்பண்புக’ளை வெளிப்படுத்திய பின்னரும் கண்டுகொள்ளப்படாமல் தப்பித்தாலோ அது தப்பித்தலே அல்ல. அம்மாணவர் தண்ணீர் தெளித்து விடப்பட்டு விட்டார் என்றே பொருள் கொள்க. ஏனெனில், மேய்ப்பவர் ஆயர், ஆசிரியர் அல்லர்.

ஆசிரியர் தினத்தன்று பதிவிட்டு ’ஹேஷ்டேக்’களால் இப்பதிவை அலங்கரித்திருக்கலாம்தான். ஆனால், ஆசிரியர் தினம் ஒரு நாள்தான் கொண்டாடப்பட வேண்டுமா என்ன? கற்றல் தொடரும் வரை, கற்போர் உள்ள வரை, கல்வி இருக்கும் வரை, ஆசிரியருக்கான நாள், சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்டம்பர் 5 மட்டுமேயல்ல. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும்தான் (’எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ பாடல் ஒலிக்கட்டும்).

Tuesday, July 24, 2018

மறுபக்கம்

நார்த் சென்னை மச்சான்.”
அட ஆமா மாப்ள, அந்த வியாசர்பாடி எல்லாம் இருக்கும்ல்ல, அந்த ஏரியா!”

காசிமேடும், வியாசர்பாடியும் இடம்பெறும் வடசென்னை குறித்தான உரையாடல்களைக் கேட்டே வளர்ந்தவர் நாம். பொதுமைப்படுத்தும் கலை நமக்கு இயல்பிலேயே வாய்த்த ஒன்று; பிறப்பிலேயே ஊட்டி வளர்க்கப்படும் ஒன்று. தென்னிந்தியர்களைசாலா மதராஸிஎன்றும், வட இந்தியர்களைசர்தார்என்றும், ‘வடக்கூஸ்என்றும், தெலுங்கு மக்களைகொல்ட்டீஸ்என்றும் அழைப்பது இயல்பாகக் குருதியில் ஊறிய செயலாகிவிட்டது எனும் முன்னறிவிப்புடனேயே இந்த வடசென்னை-வியாசர்பாடி பொதுமையை அணுக வேண்டியுள்ளது.

ஒரு காலத்தில் ஆவடியும், அம்பத்தூரும், கொளத்தூரும், பெரம்பூரும் வடசென்னைப் பகுதிகள் என்றும், அவை தவிர்த்து வேறு பகுதிகள் வடசென்னையில் கிடையாது என்றும் திடமாக நம்பியவன் நான். எனக்கு வாய்த்த இடங்கள்கல்லூரி கிண்டிக்கும், அடையாருக்கும் இடையிலும், அதற்குப் பின்னர் தங்கியிருந்த வீடு திருவான்மியூரிலும் விதியா, சதியா, இயல்பா எனத் தெரியவில்லைஅனைத்தும் கோயம்பேடுக்குச் செல்லவே பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டிய இடங்களாதலால், எனது சிற்றறிவிற்கெட்டிய வடசென்னை குறித்தான புரிதல் மிகவும் குறுகிய கண்ணோட்டங்கள் கொண்டது.

பா. ரஞ்சித் திரைப்படங்களும், ‘கருத்தவன்லாம் லீஜாம்போன்ற பாடல்களும் திரையில் தெளிவான பார்வையைத் தந்தாலும், சுயமாக வடசென்னைக்குச் சென்று அங்குள்ள இடங்களைச் சுற்றிப்பார்த்ததேயில்லை. புதிய வேலையின்பொருட்டு புதிய வண்ணாரப்பேட்டையிலுள்ள பள்ளி ஒன்றிற்கு வரவேண்டும் என்ற கட்டாயம் வந்தபோதுதான் வடசென்னையின் முகமறிந்தேன்.

முதல் பார்வையிலேயேடவுன்’, ‘கிராமம்போன்ற சொற்களுக்குக் கட்டியம் கூறியது வடசென்னை. கோடம்பாக்கத்தில் ரயிலேறி, கடற்கரைப் புகைவண்டி நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஒரு பேருந்தோ, ஷேர் ஆட்டோவோ ஏறி வண்ணாடப்பேட்டைக்குச் செல்லும் படலம் பள்ளிக்கருகில் வீடு கிடைக்கும் வரையில் நடந்து வந்தது. கோடம்பாக்கம்-நுங்கம்பாக்கம்-சேத்துப்பட்டு-எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு வெளியே தெரிந்த காட்சிகள், பூங்கா-கோட்டை-கடற்கரை ஆகிய ரயில் நிலையங்களில் மாறியதைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. ஏனைய சென்னையிலிருந்து வடசென்னை விடுபட்டுப் பின்தங்கிப் போனதற்கான கட்டியங்களாக மாசுபட்ட கடற்கரையும், குட்டைகளும், குடிசைகளும் கடந்து சென்றன. வெளுத்த மானிடர்கள் வசிக்கும் தென்சென்னை, மத்திய சென்னைப் பகுதிகளைக் கடந்து வரும் ஒவ்வொருவருக்கும் உழைப்பின் வலிமையை எடுத்துரைக்கும் திராவிட நிறம் மிகுந்த பகுதி வடசென்னை.

வந்த முதல்நாளிலேயே ரத்தத்தை உறையச் செய்தது வடசென்னை. “எங்க ஏரியா உள்ள வராதஎன்று என்னை நோக்கி வண்ணாரப்பேட்டையும், தண்டையார்பேட்டையும் கத்துவது போலவே இருந்தது. கடற்கரையில் இறங்கி, ராயபுரம் தாண்டி, காசிமேடு பகுதிக்கு வரும் வழியில் பார்த்த காட்சி அது. ஒருவர் பிரதான சாலையில் நடந்துசென்றுகொண்டிருக்கிறார். திடீரென்று கீழே விழுகிறார். துடிக்கிறார். ரத்தம் பெருக்கெடுக்கிறது. அருகிலிருந்து மூன்று, நான்கு நபர்கள் வெளிப்படுகின்றனர். ஒருவரின் கையில் கத்தி இருக்கிறது. ரத்தம் தோய்ந்த மினுமினுக்கும் கத்தி. நால்வரும் நிதானமாக நடந்து சென்றனர். சாலையின் ஒரு மருங்கில் மக்கள் கூட்டம் ஸ்தம்பித்து நின்றது. அவர்கள் அக்காட்சியை விட்டகன்றவுடன், ஒரு சிலர் குத்தப்பட்டவரைத் தூக்கி ஆட்டோவில் ஏற்றினர். மருத்துவமனைக்கு போவார்கள் போலும். யாராயிருப்பினும் பிழைக்கட்டும் என்ற எண்ணத்துடன் பள்ளிக்குச் சென்றேன்.

அன்று முழுவதும் மனத்தைப் பிசைந்துகொண்டிருந்த நிகழ்வானது, மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது குறைந்தது. தெருமுனையில் பானிபூரி விற்கும் அக்காதான் காரணம். புற்றுநோய்க் காரணியாயிருப்பினும் கவர்ந்திழுக்கும் பானிபூரியை ஆசைதீர அதக்கியபோது, “ஏரியாவுக்குப் புதுசா சார்?” என்று தொடங்கினார். கேட்கும் தொனியிலேயே கரிசனம் வழிந்தோடியது. கடந்து சென்ற வண்டிகளும், ஆட்டோக்களும் எழுப்பிய புகை கண்ணை மறைத்து, உண்மையிலேயே வழிந்த கண்ணீருக்குப் புதிய அர்த்தங்களை உருவாக்கியது. அவரிடம் நடந்ததை விவரித்தபோது, பரிதாபப்படத்தான் செய்தார். எனினும் அக்கரிசனத்தையும் மீறி, “போகப் போக பழகிடும்என்பதான அவரது பார்வை ஒரு தெளிவைத் தந்தது.

*****

சற்றே இளைப்பாறிய பின்னர் இரவுணவிற்காகவிக்கி மெஸ்ஸிற்குச் சென்றேன். அன்று காலையில் திறந்திருந்தஅக்ஷய் சாய் டிபன் சென்டர்மூடியிருந்ததால் மட்டுமே அருகிலிருந்தவிக்கிக்குச் சென்றேன். அங்கு உண்ணப்போகும் தோசைகளும், இட்லிகளும் அமிர்தமென அப்போது நான் உணர்ந்திருக்கவில்லை. நான்கு ஸ்டூல்களும், சாம்பார், சட்னி வாளிகளை வைப்பதற்குத் தோதாக ஒரு மேசையும், சிறிய நான்குக்கு நான்கு அளவில் ஒரு தோசைக்கல் வைத்துச் சுடுவதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்புதான் விக்கி மெஸ். கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தையும், அணிந்திருந்த ஆடையையும் பார்த்த மாத்திரத்திலேயே அந்த அக்காவும் கணித்துவிட்டார். “என்னப்பா பேச்சிலரா?” என்று தொடங்கி, “எங்க தங்கியிருக்கீங்க?”வில் தொடர்ந்து, “ஜாதகம் என்ன, ராசி, நட்சத்திரம் என்ன?” எனும் ரீதியில் உரையாடல் சென்றது. மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறேன் என்பதை அறிந்தவுடன், உபசரிப்பு இன்னும் கூடியது. ‘மெத்தென பரிமாறப்பட்ட கல்தோசை, முறுகலான, எண்ணெய் தூக்கலான தோசையாக உருமாறியது. பேச்சினூடேகவிச்சி சாப்புட மாட்டீங்களா?” என்று என் தினசரிப் பத்தியத்தையும் கூ ஓரளவிற்கு யூகித்து விட்டார் அக்கா. கடலைச் சட்னியும், காரச் சட்னியும் அறுசுவை நரம்புகளையும் சுண்டியிழுக்கச் சிலபல தோசைகளைக் கணக்கு, வழக்கின்றி கபளீகரம் செய்தேன்.

மறுநாளிலிருந்துவிக்கி மெஸ்எனது ஆஸ்தான நாஷ்டா கடையாக மாறியது. தினமலர் நாளேட்டில், “விக்கியில் தின்னும் பக்கி; அக்ஷய் சாய்க்குக் கல்தாஎன்ற தலைப்புச் செய்தி மட்டும்தான் வரவில்லை. மற்றபடி, நான் கடைமாறிச் சாப்பிட ஆரம்பித்தது ஒரு வம்புச்செய்தியாக மாறியது. கிட்டத்தட்ட இராஜாஜியின்சபேசன் காபிகதையைப் போல, “மாவுல சீயக்காயைக் கலந்துடுறாங்களாமே! அதுனாலதான் நெறைய பேரு இப்பொல்லாம் அங்க சாப்பிடுறதில்லஎன்ற கிளைக்கதை வலம் வரத்தொடங்கியபோது, “நீதாண்டா இதுக்கெல்லாம் காரணம்” என்று கடை உரிமையாளர் என்னை நொங்கெடுத்துவிடுவாரோ என நான் சற்றே பீதியடைந்தேன் என்பதுதான் உண்மை.

இரவுச் சாப்பாட்டிற்கு நாவில் நீரூற, மனக்கண்ணில் கடலைச் சட்னியையும், முறுகல் தோசையையும் கற்பனை செய்துகொண்டே சென்றபோது காத்திருந்தது இன்ப அதிர்ச்சி. ஒரு ஞெகிழிப் பையில் வேர்க்கடலைகளை நிரப்பித் தந்தார் அக்கா. “கவிச்சி வேற சாப்புட மாட்டீங்கோ. எளைச்சிப் போயிருக்கிங்களே. இத ஊட்டுக்கு எத்துக்கினு போய்ச் சாப்புடுங்கோ. நம்ம புள்ளைங்களுக்குப் பாடம் எடுக்குறீங்கோ. நல்லாச் சாப்புட்டுட்டுத் தெம்பாப் போங்க சார்என்றபோது, நெடுஞ்சாண்கிடையாகக் காலில் விழுந்து வணங்கிவிடலாம் என்றே தோன்றியது.

*****

வீட்டிற்கும், பள்ளிக்குமிடைப்பட்ட பகுதி ஊரறிந்த, நாடறிந்த, உலகறிந்த, அண்டசராசரமே அறிந்த ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்டது என்பது கூடுதல் கொசுறு. தேர்தல் காலங்களில் வீட்டுக்கு வீடு இருபதாயிரம் ரூபாய் வரை பட்டுவாடா செய்யப்படும் பசையான பகுதி. ஒரு கையால் கொடுத்த பணத்தையும், இன்ன பிற இதர ‘வெகுமதி’களையும் மறுகையால் ‘டாஸ்மாக்’கின் மூலம் பிடுங்கிவிடுவது அரசியல்வாதிகளின் வழக்கம் என்பது வாய்வார்த்தையாகச் சொல்லப்படும் உலுலுளாய் அல்ல என்பது இங்கு வாழும் மக்களைப் பார்த்தால் தெரிகிறது. அங்கப்பிரதட்சணம் செய்யும் கோவில் பக்தர்களைப் போல் இரவானால் செவ்வாய்க் கிரகத்திற்குச் செல்வதான அரைபோதையில் நட்டநடுசாலையில் வேகத்தடை மேடுகளாக மனிதர்கள் படுத்துவிடுகின்றனர். வேகத்தடை அமைக்கும் நலத்திட்டத்திற்கான நிதியையும் இதைக் காரணமாகச் சொல்லி அரசியல்வியாதிகள் கொள்ளையடித்துவிடுவதற்கான பிரகாசமான வாய்ப்புகளை இம்மனித வேகத்தடைகள் ஏற்படுத்திவிடுகின்றன. இரவு பத்து மணிக்கு மேல் சாலைகளில் நடப்போர் அனைவரும் ஓரிரு முறையாவது தடுக்கித் தட்டுத்தடுமாறி, நிலைகுலையும் காட்சியைப் பார்க்க நேர்வதற்கான காரணிகள் நம் குடிமகன்களே.

*****

தோராயமாக இரண்டே மாதங்களே கடந்திருக்கும் இந்நிலையில் தண்டையார்பேட்டையும், புதிய வண்ணாரப்பேட்டையும், திருவொற்றியூர் நெடுஞ்சாலையும், எண்ணூர் நெடுஞ்சாலையும், ராயபுரமும் பல வருடங்கள் பழகிய நண்பர்கள் போலவே மாறிவிட்டன. இன்னும் பேருந்தில் பயணிக்கவும், பேருந்து வழித்தடங்களை மனப்பாடம் செய்வதையும் சரிவரச் செய்யவில்லை. சென்னை வாழ்மக்களுக்கேயுரித்தான ‘வழி கேட்போரிடம் வாயில் வடை சுடும் வித்தை’யைக் கற்கும் வரை இங்கு நான் வெளியாள்தான். எனினும், எனக்கு இது அந்நியமாய்த் தெரியவில்லை. அக்கா கொடுத்த வேர்க்கடலையோ? “சார்” என்று தொட்டது தொண்ணூறுக்கும் வாய் நிறைய அழைக்கும் குழந்தைகளோ? யார்தாம் காரணமோ?