Wednesday, October 23, 2019

ஜெய் ஜெய் ஷிவ்ஷங்கரும் தாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்தும்

நடனம், இசை, பாடல் குறித்த பல்வேறு கேள்விகளை எனக்குள் எழுப்பியது ‘ஜெய் ஜெய் ஷிவ்ஷங்கர்’


சமீபத்தில் வெளியான ’வார்’ எனும் பாலிவுட் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஜெய் ஜெய் ஷிவ்ஷங்கர்’ பாடலைப் பார்க்கும்போதெல்லாம் தவறாமல் ’திருமலை’ படத்தில் வரும் ‘தாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து’ பாடலை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது. முன்னதில் ஹ்ரித்திக் ரோஷனும், டைகர் ஷ்ரோஃபும் பட்டையைக் கிளப்புகிறார்கள் எனில், பின்னதில் விஜய்யும், ராகவா லாரன்ஸும் புழுதி பறக்க விடுகிறார்கள். சமூக வலைதளங்கள் இல்லாத தசாப்தத்திலேயே பட்டிதொட்டியெங்கும் ஒலி(ளி)த்த பாடல் ‘தாம் தக்க’.

தமிழில் சமீபத்தில் இரு நடனம் தெரிந்த நாயகர்கள் ஒன்றாகத் தோன்றித் தெறிக்க விட்ட பாடலைக் கேட்டதாக/பார்த்ததாக நினைவில்லை. ‘ஓப்பன் த டாஸ்மாக்’ (மான் கராத்தே) பாடலில் சிவகார்த்திகேயனும், அனிருத்தும் சேர்ந்து ஆடியதையோ, ‘சத்தியமா நீ எனக்குத் தேவையே இல்ல’ (எதிர்நீச்சல்) பாடலில் தனுஷும், சிவகார்த்திகேயனும் தோன்றுவதையோ வேண்டுமானால் ஒப்புக்குச் சேர்த்துக்கொள்ளலாம்.

கேட்டால் தாளம் போட வைக்கும் பல தமிழ்ப்பாடல்கள், பார்க்கும்போது அதே விளைவைக் கொடுப்பதில்லை. தேர்ந்த நடனக் கலைஞர் பலர் இங்கு கதாநாயகர்களாக இருப்பதில்லை என்பது ஒரு முக்கியமான காரணம். அனிருத்தின் பல பாடல்கள் கேட்பவரை நேர்மறை உந்துசக்தி கொடுத்து ஊக்குவிப்பவை. ‘கருத்தவன்லாம் கலீஜாம்’ (வேலைக்காரன்), ’ஆலுமா டோலுமா’ (வேதாளம்), ’தட்லாட்டம் தாங்க’ (பேட்ட) போன்றவை மிகச்சிறந்த உதாரணங்கள். ஆனால் ‘கருத்தவன்லாம்…’ தவிர்த்து, ஒலியில் கிடைக்கும் அதே உத்வேகம், ஒலி-ஒளியில் பார்க்கும்போது கிடைப்பதேயில்லை (ரஜினி, அஜித் ரசிகர்கள் வேண்டுமானால் எதிர்க்கலாம்).

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் வந்த ‘அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல’ (வாரணம் ஆயிரம்), ‘வேணாம் மச்சான் வேணாம்’ (ஒரு கல் ஒரு கண்ணாடி) போன்றவை வெறும் காதல் தோல்விப் பாடல்களாக அமைந்துவிட்டபடியால், தாளகதி குறைவாக இருக்கும். எனவே அவை நடனத்திற்கு ஏற்றவாறு துள்ளலான பாடல்களாய் மாற வாய்ப்பின்றி அடைபடுகின்றன.

‘ஜெய் ஜெய் ஷிவ்ஷங்க’ரின் அதே திருவிழா அமைவுடன் வந்த சமீபத்திய பாடல் என்றால், ‘அடடடடா ஆரம்பமே’ (ஆரம்பம்) பாடலைச் சொல்ல முடியும். ஷங்கர் மஹாதேவனின் அனாயசமான குரலும், யுவன் சங்கர் ராஜாவின் சரியான தாள, ஒலித் தேர்வும், ஒரு பெரிய கூட்டமுமே ஆடும் அக்காட்சியமைப்பும் பாடலைப் பிரம்மாண்டமானதாகக் காட்டினால் கூட, அஜித்தின் நடனம் பாடலைச் சற்றே தளர்த்திவிடுவதில் ஆச்சரியமில்லை (அஜித் மெனக்கெட்டு நடனமாடியதாக அவரது வெறியர்கள் இப்பாடலையும், ‘ஆலுமா…’வையும் குறிப்பிடுவார்கள்). ஷங்கர் மஹாதேவனின் குரல் கடக்கும் உச்சத்தை அலேக்காகச் சாதிக்கும் சமகாலத்திய இருவர் பென்னி தயாளும், விஷால் டத்லானியும். அவர்கள் இருவரும் இணைந்து பாடியதுதான் ‘ஜெய் ஜெய் ஷிவ்ஷங்கர்’. இதே விஷால் டத்லானியும், அனிருத்தும் இணைந்து பாடிய ‘வீர விநாயகா வெற்றி விநாயகா’ (வேதாளம்) பாடலில் துரதிருஷ்டவசமாக அனிருத்தின் குரல் மேலோங்கி ஒலிக்கும்படியான ஒலிக்கோர்வையின் காரணத்தால், அப்பாடல் ஒலி வடிவத்தில் கூட, நிறைவான துள்ளலான உணர்வைக் கொடுப்பதில்லை.

பாலிவுட்டில் ப்ரீதம், விஷால்-ஷேகர் போன்றோரின் பாடல்கள் பெரும்பாலும் ஒரே வகையான இசையமைப்பைக் கொண்டிருந்தாலும், ’பெப்பி’யான பாடல்களைத் தொடர்ச்சியாகக் கொடுக்க முடிகிறது. ‘பலம் பிச்காரி’, ‘தில்லிவாலி கேர்ள்ஃப்ரெண்ட்’ (யே ஜவானி ஹை திவானி), ‘இந்தியா வாலே’ (ஹேப்பி நியூ இயர்) போன்றவை மிகச்சிறந்த உதாரணங்கள். ‘இந்தியா வாலே’வுக்கும், ‘அடடடடா ஆரம்பமே’வுக்குமான ஒப்புமைகள் பல. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் பின்னதற்கு அஜித் செய்வதை, முன்னதற்கு ஷாருக் கான், அபிஷேக் பச்சன், போமன் இரானி என ஒரு கூட்டமே செய்யும். தமிழ்த் திரையிசையில் ‘பெப்பி’ பாடல்களைக் கொடுக்கும்படியான இசையமைப்பாளர்கள் இன்றைய தேதிக்கு அனிருத்தும், சந்தோஷ் நாராயணனுமே. ‘மெட்ராஸ்’ படத்தின் ‘சென்ன வட சென்ன/எங்க ஊரு மெட்ராஸு’, ‘காகிதக் கப்பல்’ பாடல்களைக் கேட்டால் நான் சொல்வதை உணர்வீர்கள்.

சமகாலத் தமிழ்க் கதாநாயகர்களின் ஆகச் சிறந்த நடனக் கலைஞரான விஜய்க்குக் கூடச் சரியான தீனி போடும் பாடல்கள் அமைவதில்லை என்பது பெரும்குறை. ஏ.ஆர்.ரஹ்மான் – விஜய் கூட்டணியில் வந்த படங்களின் பாடல்களில் ஆங்காங்கே சேர்க்கப்படும் சில ’மெலடிக்’ விஷயங்கள் நடனத்திற்கான தேவையை வெகுவாகக் குறைக்கின்றன. ‘முன்னால் முன்னால் வா டா’ (அழகிய தமிழ்மகன்) விஜயின் நடனத்தைக் கிட்டத்தட்ட முழுதாக வெளிக்காட்டிய பாடல். எனினும் பாடலின் இடையே வரும் ‘மனது மனது வைத்தால்’ தொடங்கி ‘மாணவன் மனது வைத்தால்’ முடிய இருக்கும் காட்சிகள் நடனத்திற்கானவை அல்ல. ‘மதுரைக்குப் போகாதடி’ பாடல் தாளகதி குறைவாக வந்த, விஜய்க்கான ஒரு முகத்துதிப் பாடல். அதில் சொல்லிக்கொள்ளும் அளவிற்குப் பெரிதாய் ஒன்றுமில்லை (நடனத்தைப் பொருத்தமட்டில்). ‘ஆளப் போறான் தமிழ’னிலும் (மெர்சல்), ‘முன்னால் முன்னா’லில் இருக்கும் ஒரு எளிதான ஒற்றுமை, பாடலின் இடையில் வரும் உபகாட்சிகளும், உபகதைகளும்.’சர்க்கார்’ படத்தின் ‘டாப்பு டக்கரு’ பாடலின் மீது இசை வெளியீட்டு விழாவிற்குப் பின் பெரிய ஆர்வம் இருந்தது எனக்கு. எவ்விதமான குழைவும், இழைவுமின்றித் துரித தாளத்தில் ‘ஃபுட் டேப்பிங்’காகச் செல்லக் கூடிய பாடல் அது. மோஹித் சவுஹானின் குரலும், தமிழ் உச்சரிப்பும் (தமிழ் உணர்வாளர்கள் தயவு செய்து என் மீது பாய வேண்டாம். இது வட-தென் மொழிகள் குறித்து எழுதப்படும் பதிவல்ல) சேர்ந்து பாடலின் எதிர்பார்ப்பைக் கூட்டியது. படத்தில் அப்பாடல் வரக்கூடிய காட்சி எனக்குப் பெரிய ஏமாற்றத்தைத் தந்தது. சண்டைக் காட்சியும், பாடலும் சேர்ந்து வேறு பரிணாமத்தைக் கொடுத்தன என்றாலுமே, விஜய்யின் நடனத்தைப் பயன்படுத்தவில்லையே என்ற ஆதங்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது. அதே படத்தில் இடம்பெறும் ‘சி.இ.ஓ. இன் த ஹவுஸ்’ பாடல் அவ்வகையில் இன்ப அதிர்ச்சி. அதிரடியான நடன நகர்வுகளைக் கிட்டத்தட்ட பாடல் முழுவதுமாகக் கொடுத்த பாடல்.

ஆனால் விஜய்யைப் பற்றிப் பேசும்போது, ‘போக்கிரி பொங்கல்’ (போக்கிரி) பற்றிக் குறிப்பிடாமல் கடந்துவிட முடியாது. மணிசர்மாவின் அனல் பறக்கும் இசையில் வெளிவந்து சக்கை போடு போட்ட பாடல். ஒரு கை காலரிலும், மற்றொரு கை வயிற்றுப்பகுதியிலும் இருக்கும்படி விஜய் போன்றே ஆட முயன்று, பள்ளி ஆண்டுவிழாவில் அசிங்கப்பட்ட பல மாணவர்களைப் பார்த்த ஞாபகம் பசுமையாய்ப் பதிந்திருக்கிறது. ஆனால் அப்பாடலில் கூட (ரஜினியின் சாயலிலேயே) சமூகக் கருத்தைத் திணிப்பதற்கான காட்சிகளும், விஜய் பத்துப் பேரைப் பாடலுக்கிடையிலேயே போட்டுப் புரட்டி எடுப்பதும் நடனத்திற்கான வாய்ப்புகளைச் சுருக்கிவிட்டன. பாடலின் இறுதியில் பிரபுதேவாவும், விஜய்யும் ஆடும் ஆட்டம் பாடல் முழுக்க இடம்பெற்றிருந்தால் மற்றொரு ‘தாம் தக்க தீம் தக்க’வாக அமைந்திருக்கும்.

கோலிவுட்டில் இருக்கும் மற்றொரு குறை பாடகர்கள். ஷங்கர் மஹாதேவனின் குரலிலிருக்கும் ஆற்றல் கார்த்திக், நரேஷ் ஐயர் போன்றோரிடம் இருந்தால் கூட, ஒரு ‘படிச்சுப் பார்த்தேன் ஏறவில்ல’வைக் (பொல்லாதவன்) கார்த்திக்காலோ நரேஷ் ஐயராலோ தூக்கி நிறுத்த முடியாது. கார்த்திக்கின் எனர்ஜி வெளிப்படும் பாடல்களில் ‘எனக்கொரு கேர்ள்ஃப்ஃப்ர்ண்ட் வேண்டுமடா’ (பாய்ஸ்) மட்டுமே ‘பெப்பி’ வகையில் சேரும் என்பது என் எண்ணம். ’உசுரே போகுதே’ (ராவணன்), ‘மழை வரப் போகுதே’ (என்னை அறிந்தால்) போன்றவை ஏக்கம், காதல் போன்ற உணர்வுகளின் வெளிப்பாடாக வரும் பாடல்களாதலால் அவற்றைத் தாளம் போட வைக்கும் பாடல்கள் என வகைப்படுத்த முடியாது. நரேஷ் ஐயரும், பென்னி தயாளும் இணைந்து பாடிய ‘ஏத்தி ஏத்தி ஏத்தி’யில் (வாரணம் ஆயிரம்) பென்னி தயாளின் குரல்தால் உச்சங்களில் ஓங்கி ஒலிக்கும்.

தனிப்பட்ட வகையில் அந்தோணி தாசனும், வேல்முருகனும் ஒழுங்காகப் பயன்படுத்தப்படாத இரு பாடகர்கள் என்ற வகையில் எனக்குப் பெரும் மனக்குறை உண்டு. விஜய் போன்ற ஒரு நடிகரின் ‘இண்ட்ரோ’ பாடலைப் பாடுவதற்கான அனைத்துக் குணாதிசயங்களும் இருவரது குரலிலும் உண்டு. இருவருமே எஸ்.பி.பாலசுப்ரமண்யம் போலவே தமிழ் உச்சரிப்பை அழுத்தம், திருத்தமாகப் பாடல்களில் கொண்டுவருபவர்கள். கைலாஷ் கேர், ஷங்கர் மஹாதேவனின் குரல்களில் இருக்கும் தெறிப்பு இவர்களிடமும் உண்டு. ஆனால் நாட்டுப்புறத் தொனியில் இருக்கும் பாடல்களுக்கான குரலாக வேல்முருகனும், ஹிப்ஹாப் ஆதி மற்றும் அனிருத்தின் ஆஸ்தான பாடகர் கோஷ்டியில் ஒருவராக அந்தோணி தாசனும் சுருங்கிவிட்டது சோகத்திலும் சோகம். தனியிசையில் பெரும் முத்திரை பதித்து வரும் அந்தோணி தாசனின் குரல் தமிழ்த் திரையுலகில் நிச்சயமாக பல்வேறு வகையான பாடல்களில் ஒலிக்க வேண்டிய முக்கியமான குரல். வேல்முருகனைப் பொறுத்தவரை அவரை இதுவரைச் சிறப்பாகப் பயன்படுத்திய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மட்டுமே. அதுவும் ஒரே பாடலின் வெவ்வேறு ‘ட்யூன்’களாக ஒலிக்கும் ‘ஒத்த சொல்லால’ (ஆடுகளம்), ‘அடி கருப்பு நெறத்தழகி’ (கொம்பன்), ‘சண்டாளி’ (செம) போன்ற பாடல்களில் மட்டுமே வேல்முருகனின் முத்திரையைக் காண முடியும். ‘சத்தியமா நீ எனக்குத் தேவையே இல்ல’வை வேல்முருகனின் குரலின்றி நிச்சயம் கேட்கவே முடியாது. அதேபோல ‘என்னத்தச் சொல்ல இன்னும் என்னத்தச் சொல்ல’வில் (என்றென்றும் புன்னகை; ஹாரிஸ் ஜெயராஜ் இசை) வரும் வேல்முருகனின் குரல் கார்த்திக், ஹரிசரணின் குரல்களைத் தாண்டிச் சுண்டியிழுப்பதை எளிதாக உணர முடியும்.

இசை பற்றியதான விரிவாக இப்பதிவு மாறிவிட்டதெனினும், இரு நாயகர்கள் நடிக்கும் தமிழ்ப்படங்கள் எப்படி இருக்கின்றன என்பதையும் உற்று நோக்க வேண்டும். ஒருவரை உயர்த்திப் பிடிக்கும் நோக்கில் எடுக்கப்படும், கதாநாயகப் பிம்பம் கூரையைப் பிய்க்கும் படங்களின் இரண்டாம் நாயகராகப் பெயரளவில் சேர்க்கப்படும் பாத்திரங்கள் நிறைந்த படங்களே மிகுதி. அவ்வகையில் ஆர்யாவைப் பற்றிப் பேசாமல் எப்ப்டி? ‘ஆரம்பம்’, ‘காப்பான்’ என இரண்டு படங்களிலும் கிட்டத்தட்ட ‘டம்மி’யான ரோல். மேலும் அஜித்தும், ஆர்யாவும் சேர்ந்து ஆடினால் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்வது மனித மூளைக்கு அப்பாற்பட்டது. ’நண்பன்’, ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்று பல ’மல்டிஸ்டார்ரர்’ படங்கள் எதற்கென்றே தெரியாமல்தான் பெரும்பாலும் பாத்திரங்களைச் சேர்க்கின்றன. புரமோஷனில் உதவுவதற்காக என்று வைத்துக்கொள்ளலாம். எனவே வருங்காலங்களில் இன்னொரு ‘தாம் தக்க தீம் தக்க’ கூடிய சீக்கிரம் வரப்போவதில்லை என்பது உறுதி. அதுவரை. ‘ஜெய் ஜெய் ஷிவ்ஷங்கர்’, ‘தாம் தக்க…’ ஆகிய இருவர் நடனப் பாடல்களை வாய்பிளந்து பார்க்கலாம்.

Tuesday, October 8, 2019

உணவுப் (பை)பத்தியம்

1
பாலும் பழமும் காலையுணவென்றேன்
விசித்திரமாய்ப் பார்த்தனர்
ட்ரை ஃப்ரூட்ஸ் வித் டைல்யூட்டட் யோகர்ட் என்றேன்
பெருமிதத்தில் பூரித்தனர்

2
மொழியும் செரிமானமும் ஒன்று
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம்
திணிப்புஉவமையாய் உண்மையாய் நடக்கிறது
உணவுப் பத்தியத்தில்!
மறுத்தால்
அப்பாவுக்கு வருத்தம்முகம் வாடுகிறார்
அம்மாவுக்குப் பதற்றம்ஆசை காட்டுகிறார்

பையனுக்கு வியாதியா?
ரொம்ப மெலிஞ்சிட்டியேப்பா!
கொஞ்சம் இட்லி சாப்பிடு
பக்கத்து வீட்டு மாமியின் விருந்தோம்பல்
தோசை சட்னி
வடை சாம்பார்
சாதம் குழம்பு சகிதம்
தொண்டைக்குழியில் தோட்டாவாய் இறங்குகின்றன
உணவு வன்முறையின் அப்பட்டம்

3
ஆசை ஆசையாய் இலை நோக்கும் பந்தி வீரர்
அங்குமிங்கும் அலையும் பந்தி பரிமாறுபவர்
மாப்பிள்ளை பெண் முகம் பார்க்காது
கண் துஞ்சாது
பசி மட்டும் நோக்கி
நேராகப் பந்திக்கு விரையும் சாப்பாட்டுப் பிரியர்கள்
செல்ஃபியை ஸ்டார்ட்டராக உருமாற்றும் இளைஞர் குழாம்
திருமணப் பந்தியில் அரங்கேறுகிறது ஒரு கேயாஸ் தியரி
பட்டாம்பூச்சி விளைவாய் சங்கிலித் தொடராய்
ஒரு இலையில் தொடங்கிப் பரவுகிறது
பனீர் பட்டர் மசாலா

கலத்திற்கு மேல் கரம் பாலமாய் நிற்கிறது
வேண்டாம் என்கிறேன்
முறைக்கிறார் பெண் வீட்டுக்காரர்
விலகுகிறது கை
கொட்டப்படுகிறது பனீர்பின்
பெரியப்பாவின் கிண்டலுக்கும்
மாமாவின் திட்டுக்கும்
அம்மாவின் அறிவுரைக்கும்
அப்பாவின் நினைவூட்டலுக்குமென
முறையே நிறைகின்றன வெவ்வேறு பதார்த்தங்கள்

வீணாக்க மனதில்லை
வயிற்றுக்குள்ளும் அது வீணாய்த்தான் போகும்
கையைப் பிசைந்து இலையில் கோலமிடுகிறேன்
விளையாட்டு வினையாகிறது பந்தி கலையும்போது
இலை எடுக்கும் அக்காக்கள் நோக்குகின்றனர் பரிதாபமாய்
குறிப்பறிந்து எறிகிறேன் வயிற்றுக்குள்
உணவுக் கவளம் எனும் குப்பையை

Monday, May 13, 2019

முற்று

தீவிர சிகிச்சைப் பிரிவு வாயிலில் இறந்து கிடந்தார் முருகன். அத்துவான இரவில் நோயாளிகளனைவரும் அவரவர் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தனர். உடன் வந்திருந்த உறவினரும், நண்பர்களும் காத்திருப்பு அறையில் குறுக்கும்நெடுக்குமாய்ப் பாய்விரித்து அயர்ந்திருந்தனர். வாயில் நுரை வழிய விழுந்து கிடந்த அக்காவலாளி கேட்பாரற்ற நிலையில் நிரந்தர நித்திரையில் ஆழ்ந்திருந்தார். கடிகாரம் மூன்று முறை செவிப்பறைகளின் ஆதியைத் தொட்டுவிட்டு அடங்கியது. பிரிந்த உயிரும், பிரியப் போகும், பிழைக்கப் போகும் உயிர்களும் நிசப்தத்தில் கலந்தன.

*****

சார், உங்க தங்கச்சி மருந்தக் குடிச்சிட்டாங்க. கவர்மெண்டு ஆஸ்பத்திரிக்கு ஒடனே வாங்க”. இரண்டு சுற்றுப் போதை மட்டுமே உட்சென்றிருந்ததால் சற்றே தெளிவாக இருந்தான் சின்னமுத்து. சிதறிக்கிடந்த வறுவல்களும், மங்கலாய்த் தெரிந்த காலணிகளும், பச்சை வர்ண ஒளிவிளக்குகளுமாய் இருந்த மதுபானக் கடையின் முப்பதுக்கும் மேற்பட்ட மனிதர்களில், ஒரு மூளை மட்டும் சுதாரித்துக்கொண்டிருந்தது.

*****

யோவ், என்னையவா உள்ள விட மாட்டேன்னு சொல்ற? நான் யாருன்னு தெரியுமா? உன்னக் கொன்னுடுறேன் இருய்யா.” முழு வேகத்துடனும், அரைபோதையுடனும், அதிகபட்ச நடுக்கத்துடனும் ஓடிவந்த சின்னமுத்து, நொடிப்பொழுதில் முருகனைத் தள்ளிவிட்டான்.

சுவரில் இடித்து விழுந்த முருகன் தம்பி இரு தம்பி. அப்டிலாம் போய் இப்போ பாக்க முடியாது. பெட்ல சேத்து அர அவரு கூட ஆவல இன்னும்என்றபடி எழுந்தார். சின்னமுத்துவின் முட்டல்களும், மோதல்களும் அவர் முன் எடுபடவேயில்லை. நெற்றிப்பொட்டு சற்றேனும் சுருங்காமல், புருவம் உயராமல், வார்த்தை உச்சத்தை எட்டாமல், சலனமின்றி சின்னமுத்துவைக் காத்திருப்போர் இடத்தில் அமர வைத்தார்.

ஹேமா சொந்தக்காரங்க யாராச்சும் இருக்கீங்களா?”
”…..”
போங்கம்மா டாக்டர் கூப்பிடுறார்.”

உள்ளே சென்ற முப்பத்தாறாவது நொடியில் அதரங்களை உலுக்கும் கேவலும், கூச்சலுமாக வெளியே ஓடி வந்தாள் வசந்தி. “யோவ் வாட்ச்மேன், இதுக்கு என்னக் கூப்புடாமயே இருந்திருக்கலாமேய்யா. செத்த சேதியச் சொல்ல எதுக்குய்யா என்ன உள்ள போச்சொன்ன? செத்துப்போ. உன் குடும்பமே நாசமாப் போக. போய்ச் சேந்துட்டாளே மகராசி, நான் பெத்த சொத்துஎன்றபடி முருகனின் நெஞ்சில் குத்தினாள். சாளரங்களின் வழியே உள்ளே வந்திருந்த ஓரிரு பறவைகள் விக்கித்துப் பார்த்துக்கொண்டிருந்தன. அரற்றியபடியே விழுந்த வசந்தியைக் கைத்தாங்கலாய்ப் பிடித்து ஓரமாய் அமர வைத்தார்.
அரை மயக்கத்தில் இருந்த வசந்தி, கண்கள் இருள, சாய்ந்து விழுந்தாள். பின்னல் அவிழ்ந்து தலைவிரிகோலமாயிற்று.

*****

பின்மண்டையில் யாரோ கோடரியால் ஓங்கி அடிப்பதைப் போல வலி பிளந்துகொண்டிருந்தது. சின்னமுத்து தள்ளிவிட்ட வேகத்தில் சுவரில் மோதியிருக்க வேண்டும். இடித்தது போல நினைவில்லை முருகனுக்கு. அதைப் பற்றிச் சிந்திக்கவும் நேரமில்லை. தன் நாற்காலியில் உட்கார்ந்தார். தலையை நிமிர்த்திக் குனிந்தால் இருட்டிக்கொண்டு வந்தது. தடுமாறியபடியே படியில் நடந்துசென்று இரண்டு பரோட்டா தின்றுவிட்டு வந்தார்.

தரையை மெழுகித் துடைக்கும் செங்கேணியம்மா, “என்ன முருகா, அதுக்குள்ள தின்னுட்டியா என்ன?” என்றாள் துடைப்பத்தைத் தரையில் அழுத்தித் தேய்த்தபடியே. மையமாய்த் தலையசைத்த முருகனால் பெரிதாகப் பேச முடியவில்லை. தொண்டை அடைப்பதைப் போலிருந்தது.

*****

கண்விழித்துப் பார்த்தபோது நேரம் 12:30யைத் தாண்டியிருந்தது. தலையில் கீரைக்கூடையை வைத்தது போல் பாரம் அழுத்தியது. முருகன் எழுந்தார். “சாமி, இனிமே முடியாதுப்பா. தெனம் பத்துச் சாவு, தெனம் நூறு ஏச்சு வாங்க இனிமே முடியாதுஎன்று முனகியபடியே மருத்துவமனையின் கிழக்கு வாயில் வழியே வெளியே வந்தார். ஏற்கனவே இரண்டாய்ப் பிரிந்திருந்த சாலை, தலைசுற்றலில் நான்கைந்து பிரிவுகளாய்த் தெரிந்தது. மின்விசிறியைப் போல் சுழன்றது சாலை. சற்றுத்தொலைவில் இருந்த மளிகைக் கடையில், “தென்ன மரத்துல பூச்சி புடிக்குது தம்பி. இந்தத் தோட்டத்துல எல்லாம் போடுவாங்களே பூச்சிக் கொல்லி ஒரம். அது கொஞ்சம் ஒரு மூணு பாக்கெட்டு குடுப்பாஎன்றார்.