”டமால் டுமீல்” என்ற வெடிச்
சத்தங்களுக்கிடையே சிரமப்பட்டு
மிதிவண்டியை ஓட்டிக்கொண்டு வந்தான் செய்தித்தாள் போடும் பையன்; தீபாவளித் திருநாளில் கங்காஸ்நானம் செய்து, விளக்கேற்றி, பட்டாசு
வெடித்தாலும், பசியிருள் தீரவும், அறிவொளி பரவவும் பாலும், செய்தித்தாளும்
வேண்டியிருக்கிறதே!
மடிசார்
மாமி வீட்டுவாசலில் கோலம் வரைந்துகொண்டிருந்தார்; பக்கத்து வீட்டு மாமா அன்றும்
வாய்க்கு ஒளியேற்ற (புகைப்பிடிக்க என்று பொருள் கொள்க) லுங்கியுடன் சென்றார்;
நகராட்சிக் குடிநீர் பிடிப்பதற்குத் தெருமுனையில் வழக்கம்போலவே கூட்டம். “என்னைத்
தவிர கஷ்டப்படுறவங்க இவ்ளோ பேர் இருக்காங்களா?” – அந்நினைப்பு அவனுக்கு இதத்தைத் தந்தது.
வாத்தியார்
வீட்டுக்குச் சென்று பேப்பர் போடும்போது, ஏதேனும் பழைய துணி கிடைக்கும்;
அதிர்ஷ்டமிருந்தால் ஐம்பதோ, நூறோ தருவார்கள். எண்ணங்கள் முட்டிமோதத் திடீரென்று
இருவர் அவனை இடித்துத் தள்ளிவிட்டு வேகமாக ஓடினார்கள்; ஒருவனின் கையில் துப்பாக்கி
வேறு இருந்தது. இவன் சுதாரிப்பதற்குள் தெருவைத் தாண்டியிருந்தனர்.
ஓடுகிறவனைப்
பிடித்தே ஆக வேண்டும் துரத்துபவனுக்கு; ’துப்பாக்கியால் சுட்டுவிடலாமா?’ என்று கூட
யோசித்தான்; ஆனால் அவனுக்கு இடப்பட்ட கட்டளை அதுவன்று; சுடக்கூடாது என்று மட்டும்
சொன்னவன், வேறெப்படிப் பிடிப்பது என்னும் உபாயத்தைக் கூறவேயில்லை. இவனுக்கும்
தோன்றவில்லை கேட்க வேண்டும் என்று.
நேரமாக
ஆக வியர்வைத்துளிகள் முகத்தில் அரும்பி வழிந்தன; ஈரத்தால் சட்டை உடம்போடு ஒட்டியது.
எனினும் ஓட்டத்தை நிறுத்தவேயில்லை இருவரும். தெருவெங்கும் வெடித்த, வெடிக்காத
பட்டாசுகள் சிதறிக்கிடந்தன. எதிலேனும் கால்வைத்து வெடித்து விடப்போகிறது என்னும்
பயம் இப்போது தோன்றவேயில்லை.
குறுகிய
சந்தில் ஓடிக்கொண்டிருந்தனர்; கொண்டாட்டம் என்பதே அறியாததைப் போல் அங்கு அனைவரும்
‘இது மற்றொரு நாள்’ என்னும் முகபாவத்துடன் வேலைசெய்து கொண்டிருந்தனர்; சோற்றுக்கே
வழியில்லாதவர்களுக்கு கொண்டாட்டமேது, கும்மாளமேது? விரைவாக ஒடியதில் தெருவோரத்தில்
அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களை இடறிவிட்டுத் தாவினான். “அப்டி இன்னாடா
அவசரம் உங்களுக்கு? என் வூட்டுப் பாத்திரம்தான் கெடச்சுச்சா? சாவு கிராக்கிங்க,
தீபாவளியும் அதுவுமா” என்று திட்டினாள் பெண்ணொருத்தி.
பதற்றத்தில்
எந்தத் தெருவுக்குப் போகிறோம் என்றறியாமலேயே ஓடினர். திடிரென்று ஓரிடத்தில்
அதிர்ந்துபோய் நின்றான் அதுவரை உயிரைக் கையில் பிடித்து ஓடிக்கொண்டிருந்தவன்.
‘5000 வாலா’ பற்றவைத்துக் கொண்டிருந்தனர் தெருவையே மறித்தபடி. “இதைத் தாண்டிக் கண்டிப்பாக
ஓட முடியாது; என்ன செய்யலாம்?” என்று யோசிப்பதற்குள் முதுகில் துப்பாக்கியை வைத்து அழுத்தினான் பின்னவன்.
”மாட்டுனியா? என்ன பாக்குற? வா
இன்ஸ்பெக்டர் கிட்ட” என்றபடி ‘ரோல் கேப்’ சுடும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டினான்.
தனியார்
பள்ளியில் படிக்கவைப்பதே பெரிய கஷ்டமாக இருந்த தினக்கூலிகளின் மகன்களான அவர்களிருவருக்கும் தீபாவளியே அந்தத் துப்பாக்கியும்,
திருடன் – போலீஸ் விளையாட்டும்தான். கான்ஸ்டபிளாக நடித்தவன், துப்பாக்கிமுனையில்
கைதுசெய்த திருடனை உயரதிகாரியிடம் (மற்றொரு பையன்) கூட்டிச் சென்றான்.
Good ...giri..
ReplyDeleteall the best for 3rd year...
Thanks uncle :)
Delete