(மூன்றாம் (எ) கடைசி பாகத்தை அடைந்துவிட்டோம், ஒருவழியாக. முதல் மற்றும் இரண்டாம் பாகங்களைப் படித்துவிட்டு இங்கே வருதல் நலம்)
வண்டி கேட் பேருந்து நிறுத்தத்தில் பாண்டிச்சேரி
செல்லும் பேருந்து வந்தது; ஏறிப் புறப்பட்டோம் ஊரை நோக்கி. திங்கட்கிழமையாதலால்
பெரிதாகக் கூட்டமில்லை. சொகுசான இடமாகப் பார்த்து அமர்ந்தோம்.
6:30 மணி தாண்டியிருந்ததால், பனிக்காற்று இதமாக
வீசியது. ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி அரைத்தூக்கத்தில் அன்றைய நிகழ்வுகளை
அசைபோட்டபடியே இருந்தேன்.
பிச்சாவரத்திற்கென்ற ஏதோ ஒரு தனித்துவம் –
ஒருமுறை வந்தால் மீண்டும் மீண்டும் வரவைக்கச் செய்யும் இனம்புரியாத மந்திர சக்தி –
வியப்படையச் செய்தது. படகில் ஏறியதிலிருந்து நடந்த அனைத்தும் இதமான ஒரு
மகிழ்ச்சியைத் தந்தது.
இரண்டடி, மூன்றடி ஆழமேயுள்ள தாழ்வான பகுதிகளிலிருந்து,
சற்றே பயமூட்டும் அளவுக்கு (ஆறடிக்கு மேலான) இடங்களனைத்தையும் பார்த்துவிட்டோம்.
அமைதியான நீரோட்டத்திற்கிடையே அவ்வப்போது தோசைக்கல்லில் எண்ணெய் விட்டால் வரும்
வட்டங்களைப் போல், மீன்களின் துள்ளலால் சுழல்களாகத் தண்ணீர் பரவி ஓடியது நினைவிற்கு
வந்தது; வானும், பூமியும் மணமக்களாக இருந்தால் அவர்களுக்கிடையே விரிந்த திரையாக
இருப்பது பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள்தாம் என்று தோன்றியது; ஒரு பெரிய
மாளிகையின் நுழைவாயிலைப் போல, வானவில்லின் வளைந்த தோற்றம் கொண்டு, அண்ணாந்து
பார்த்தால் அனைத்தையும் மறைக்கும் மாபெரும் மரங்கள் நினைவில் அசைந்தாடின.
பெயரே தெரியாத பறவைகளின் அழகும், அவை எழுப்பிய
ஓசையும் காதில் ரீங்காரமிட்டன; கச்சேரியில் கீர்த்தனைகளையும், ஆலாபனைகளையும்
கடந்து கடைசியாக வரும் ‘ஜுகல்பந்தி’யைப் போல, அப்பறவைகள் கலவையாக எழுப்பிய
ஓசைகள் அனைத்தும் ஒரே ஸ்ருதியில் இயற்றப்பட்ட சங்கீதமாய் ஒலித்துக்கொண்டே இருந்தது.
அடர்ந்த மரங்களினூடே செல்லும்போது சீழ்க்கையடிப்பது போன்ற சத்தத்தை எழுப்பிப்
பீதியடையச் செய்த பூச்சிகளின் நினைவு கடந்து சென்றது; ‘செல்ஃபி’
எடுத்துக்கொண்டிருந்தபோது தலையைக் கடந்து சென்ற மரங்கொத்திப் பறவையின் நீலவண்ணம்
கண்முன்னால் புகைப்படமாகப் பதிந்து நின்றது.
இவையனைத்தையும் தாண்டி
நீர்ப்பகுதிக்கே உரிய வாசனையுடன், சதுப்பு நில மரங்களின் மூலிகை வாசமும் சேர்ந்து
மயக்கிய நேரங்கள் பசுமரத்தாணியாய்ப் பதிந்திருந்தன. இடையில் ஒரு மரத்தின் மிக
மெல்லிய கிளை கூட வலிமை கொண்டதாக என்னையும், தீபக்கையும் தாங்கிப் பிடிக்கும் அளாவுக்கு
உறுதியானதாக இருந்ததையும், அங்குக் குரங்கு வித்தை காண்பித்துத் தாவிக் குதித்துப்
புகைப்படங்கள் எடுத்ததும் மின்னலென வெட்டியது.
கூடவே சேர்ந்து தெளிந்த நீரொடையென
ஓடியது அன்று பார்த்த மீன்பிடிக்கும் காட்சிகள். கூடையை வைத்துக்கொண்டு ‘ஓடுமீன்
ஓட உறுமீன் வருமளவும் வாடி நிற்குமாம் கொக்கு’ என்ற ரீதியில் கூடை
இறால் மீன்களால் நிறையும் வரை, சலனமற்றுத் தண்ணீரில் உட்கார்ந்து/மிதந்து
கொண்டிருந்த பெண்மணிகள் அலைமோதினர்; குடும்பத்துடன் மீன்பிடிக்கப் படகில் சென்று,
தந்தை வலைபோட, மகன் துடுப்புப் போட, பிடித்த மீன்களை எல்லாம் தாய் குவியலாக்கி அடுக்கிய காட்சி, “குடும்பமே இத
நம்பித்தான் இருக்குறோம்” என்று தொலைக்காட்சிப் பெட்டியில் கதறிய மீனவப் பெண்களின்
கூற்றை மெய்ப்பித்தது.
வலை போடுவதற்கென்று ஒரு தனித்திறமை
வேண்டியிருக்கும் போல; நான் பார்த்தவரையில் அது ஒரு கலை போலவே தோற்றமளித்தது.
முதலில் மீன் பிடிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட சிறிய பகுதியைத் தேர்வு செய்ய
வேண்டும். அதன் பிறகு அந்த இடத்திலேயே சுற்றிக்கொண்டிருக்கும் வகையில் படகை
நிலைநிறுத்த வேண்டும். பிறகு, வலையைச் சிறிது சிறிதாக இறக்கித் தண்ணீரில் விடவேண்டும்.
இப்போது படகை முன்நோக்கிச் செலுத்தி வலையின் ஒரு முனையைக் கையில்
பிடித்துக்கொண்டால், வலை மெதுவாகத் தண்ணீரில் விரிந்து பரவும். வலையின் பரப்பளவு
அதிகமாகும் அந்நேரத்தில் ‘பொளக்’ என்று நீரினூடே எழும் சலசலப்பு அலாதியானது.
முடிவாக வலையில் மீன்கள் மாட்டிய பின்பு மீண்டும் ஒன்றன்பின் ஒன்றாக அந்தத்திலிருந்து
ஆதி வரை செல்ல வேண்டும். இப்படித்தான் எல்லா இடங்களிலும் மீன் பிடிப்பார்களா எனத்
தெரியவில்லை. சைவமாகப் பிறந்ததால் அதைப் பார்க்கும் பாக்கியம் கூட எனக்குப்
பெரிதாகக் கிட்டியதில்லை.
சட்டென்று நினைவு திரும்பியவனாக,
“மீன் செம்மயா பிடிக்குறாங்கல்ல?” என்று தீபக்கிடம் வினவினேன்.
“அட நீ வேற. சண்டே காலைல தாழங்குடா
பக்கம் போய்ப்பாரு. அங்க மீன் பிடிச்சு மொத்தமாக் கரை சேப்பாங்க. நல்லா இருக்கும்” என்றான்.
‘ஞாயிற்றுக்கிழமை – தாழங்குடா’ என்று மனம் பதிவு செய்தது.
எங்களது பேச்சுவார்த்தையில்
குறுக்கிட்டு, “சார், ’ஷேர் இட்’ எப்புடி வேலை செய்யுது?” என்று கேட்டார்
மூன்று இருக்கைகள் கொண்ட எங்களது வரிசையில் மூன்றாவதாக அமர்ந்திருந்த நபர்.
ஜன்னலோர இருக்கையில் நானும், நடுவில் தீபக்கும், மறுமுனையில் அவருமாக
அமர்ந்திருந்தோம்; எனவே அவருக்குப் பதில் சொல்லும் பெரும்பேறு எனக்குக்
கிட்டவில்லை. ஏற்கனவே இருமுறை, “சார், டைம் எவ்ளோ?” என்று 6:47க்கு
ஒருமுறையும், 6:51க்கு ஒரு முறையும் கேட்டிருந்தார். நானாக இருந்திருந்தால்,
“என்னய்யா, வாட்ச் வேணுமா? இந்தா நீயே வெச்சுக்கோ” என்று
கைக்கடிகாரத்தைக் கழற்றித் தந்திருப்பேன் (பின்னர், “பேசிக்கலி ஐ ஆம் ஃப்ரம் கர்ண
பரம்பரை” என்று
பீலாவும் விட்டிருப்பேன்). ஆனால் பாவம் பிஞ்சு மனதுடைய தீபக், அவருக்குப்
பொறுமையாகப் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.
“அதாவது சார், இப்போ நீங்க உங்க
மொபைல்ல ஷேர் இட் ஆன் பண்ணிக்கிட்டிங்கன்னா பக்கத்துல ஷேர் இட் ஆன்ல இருக்குற
அத்தன மொபைலோட பேரும் உங்க ஃபோன்ல காமிக்கும். உங்களுக்கு வேண்டிய பாட்டு, படம்,
ஃபோட்டோன்னு என்ன வேணும்னாலும் அனுப்பிக்கலாம்” என்றான்
அக்கறையுடன்.
“அதுக்கு அப்போ நெட் வேணுமா?”
“நெட் எல்லாம் வேணாம் சார். வைஃபைல கனெக்ட்
ஆயிடும்.”
“நான் இப்போ வைஃபையே ஆன் பண்ணல. எப்புடிப் பண்ணணும்?”
“நீங்க ஆன் பண்ண வேணாம் சார். ஷேர் இட் உள்ள போனா,
தானா ஆன் ஆயிடும்.”
இக்கட்டத்தில் அவரால் தீபக் சொல்வதை எற்றுக்கொள்ள
முடியவில்லை. ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் ஏதோ ஆராய்ச்சிப் பாடம் எடுக்கும் விரிவுரையாளர்
போலத் தோன்றியிருக்க வேண்டும் அவருக்கு, தீபக்கைப் பார்த்தவுடன். அவரது முன்நெற்றி
சுருங்கி ஐயத்துடன் தீபக்கை நோக்கின.
“நீங்க சொல்றதப் பாத்தா என்னோட ஃபோன் இப்போ
உங்களோடத மோப்பம் பிடிக்குதுன்னு சொல்றீங்க” என்று கூறி, வெடித்துச் சிரிக்கத் தொடங்கினார்.
பேருந்தின் பின்வரிசைகளில் அரைமயக்கத்திலும், முக்கால் போதையிலும்
தூங்கிக்கொண்டிருந்த சிலர் திடுக்கிட்டு முழித்துப்பின் இருக்கையில் மீண்டும்
சாய்ந்தனர்.
“இந்த வைஃபை, உலகத்துல இருக்குற எந்த
ஷேர் இட் கூட வேணும்னாலும் கனெக்ட் ஆகுமா தம்பி?” என்றார்.
”இல்ல சார், அப்புடி இல்ல. ஒரு குறிப்பிட்ட
தூரம் வரைக்கும்தான் கனெக்ட் ஆகும்” – தீபக்.
“பாருங்களேன், இவ்ளோ வயசாயிடுச்சு
எனக்கு. ஷேர் இட் உள்ள போனா வைஃபை கனெக்ட் ஆகும்ன்ற பேசிக் விஷயம் கூட இப்போத்தான்
தெரிஞ்சுக்குறேன்” என்று
சொல்லிவிட்டுப் பரிதாபமாகப் பார்த்தார்.
இந்நேரத்தில் பக்கத்து வரிசையில்
அமர்ந்திருந்த ஒருவர், எங்களைப் பார்த்துப் பார்த்துச்
சிரித்துக்கொண்டேயிருந்தார். அவ்வப்போது எங்கள் ‘ஷேர் இட்’ ஆளை நோக்கிக்
கைகாட்டி, தலையின் அருகே கைவிரலைச் சுழற்றினார். “நீ சொல்லித்தான் தெரியணுமா இவரு மெண்டல்னு?” என்று தோன்றியது.
பொதுவாகப் பெரியவர்களைப் பார்த்து அப்படியெதுவும் தோன்றியதில்லை. இப்போதும் அவரைக்
கீழ்த்தரமாக வைத்து யோசிக்கத் தோன்றவில்லை. ஆனால், அப்போதைக்கு இருக்கையை விட்டு
எழுந்திருக்க முடியாது; அவர் தவறாக நினைக்கக் கூடும். அமைதியாக அமரவும் முடியாது;
ஏனென்றால் சிரிப்பு முட்டியது.
எனக்குப் பொழுது போகவில்லை.
குத்துமதிப்பாகப் பற்றவைத்தேன். “டேய் தீபக், அந்த ’மாஸ்டர் ஆப்’ பத்தி அவருக்குச்
சொல்லிக்குடுடா. இண்டர்நெட் ஸ்பீட் எல்லாம் அதிமாகுமே அது யூஸ் பண்ணுனா! நீதானேடா
அன்னிக்கு எனக்கு ஏத்திக் குடுத்த” என்று தூண்டிவிட்டேன்; நினைத்ததைப்போலவே
அதைப் பிடித்துக்கொண்டார் மனிதர்.
“அதென்ன தம்பி ‘மாஸ்டர் ஆப்’? எனக்கும் கொஞ்சம் சொல்லிக்
குடுங்களேன்” என்று
குழந்தையாகக் கேட்டார். “அதெல்லாம் ஒண்ணுமில்ல சார். இப்போ அது என்னோட ஃபோன்ல
இல்ல. எடமில்லன்னு டெலிட் பண்ணிட்டேன்” என்று தன் பங்கிற்கு தீபக் அடித்துவிட்டான்;
எப்படியோ அவர் சமாதானமாகிவிட்டார்.
மீண்டும் பிச்சாவர நினைவுகளில் மூழ்க
எத்தனித்தபோது, “தம்பி, இங்க நாம மூணு பேரு இருக்கோம். இதே மாதிரி நம்பள மாதிரியே
வேற உலகத்துல ஆளுங்க இருக்காங்களா?” என்று கிளப்பினார்.
“தெரியல சார். இருக்கலாம்,
இப்போதைக்கு எதுவும் யாரும் கண்டுபிடிக்கல. அதுனால நாம படத்துல காட்டுறது
எல்லாத்தயும் நம்பலாம், நம்பாமயும் இருக்கலாம்” என்று எப்படியோ
மழுப்பினான் தீபக். ‘கேம்பஸ் இண்டர்வியூ’ வந்தால் இப்படியே வாயில் வடை சுட்டு
எப்படியும் ஏதேனும் ஒரு நல்ல நிறுவனத்தில் வேலைக்குச் சென்றுவிடுவான் எனும் திடமான
நம்பிக்கை மனதில் நிலைகுத்தி நின்றது.
அவர் விடுவதாக இல்லை; ‘என்னாச்சு,
கிரிக்கெட் விளாண்டோம்’ என்று சொன்னதையே திரும்பத் திரும்பச்
சொல்லும் நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் விஜய் சேதுபதியைப் போல, அச்சு
மாறாமல் அதே கேள்வியை மீண்டும் கேட்டார். தீபக்கும் ‘நீ விடாக்கண்டன்னா, நான்
கொடாக்கண்டன் பாஸு’ என்ற அளவில்
முன் சொன்ன அதே பதிலை, அட்சரம் பிசகாமல் அவரிடம் மொழிந்தான்; ஒவ்வொரு
வார்த்தைக்கும் இடைப்பட்ட கால அவகாசம் கூட ஒன்று போலவே இருக்கும் அளவிற்கு அவனுடைய
இரு பதில்களும் ஒரே மாதிரி இருந்தன.
இப்போது மாட்டிக்கொண்டார், சைகை
காட்டி எகத்தாளம் செய்துகொண்டிருந்த பக்கத்து இருக்கைப் பயணி. அவரை நோக்கித்
திரும்பிய திருவாளார் ஷேர் இட், அதே கேள்வியைக் கேட்டார். இப்போது ஒரு சிறிய
கூடுதல் கொசுறுடன் – “இந்தப் பழைய படத்தில எல்லாம் காட்டுவாங்களே – ’அவள் எங்கே
இருக்கிறாள்? இளவரசி எங்கே என்று காட்டு மாயக்கண்ணாடியே!’ - அதே மாதிரி நம்பளயும் பாக்கலாம்ல?” என்று ’ஈ.டி.’, ’யு.எஃப்.ஓ’, ’ஏலியன்’ என ஆராய்ந்து
பதிலளிக்கக்கூடிய அளவிற்குத் தன் கேள்வியின் தரத்தை உயர்த்தியிருந்தார். எகத்தாளப்
பேர்வழி, விடைசொல்ல முடியாமல் திக்கித் திணறி நடுங்குவதைப் பார்த்து ரசித்த
நாங்களிருவரும், பேருந்து நிலையம் நெருங்கியபடியால் இறங்க ஆயத்தமானோம்.
“என்ன தீபக், இப்போவாச்சும் இந்த நாள்
முடிஞ்சுச்சா?” என்று
கேட்டபோது, சிரித்தான்; நானும் சிரித்தேன். பேருந்தை விட்டு இறங்கி வண்டியை
எடுக்கப் புறப்பட்டோம்.
(தொடர் எழுதுவது எனக்கும் புதிதான
அனுபவம்தான். இதைத் தொடர் என்றுகூட வரையறுக்க முடியுமா எனத் தெரியவில்லை. ஒரு
நாளில் நடந்த மூன்று சம்பவங்கள் ‘இந்த நாள் இனிதே நிறைவடைந்தது’ என்ற எங்களின்
நினைப்பை ஒவ்வொரு முறையும் உடைத்துச் சுக்குநூறாக்கியது.
முதலிரண்டு பாகங்கள் எழுதியபோது,
அன்றைய தினம் சந்தித்த மனிதர்களைப் பற்றியே எழுத விரும்பியதால் இயற்கையைப் பற்றியோ,
மற்ற விஷயங்கள் குறித்தோ பெரிதாக எழுத முடியவில்லை.
நண்பர்கள் இருவரிடமிருந்து வந்த இரு
முக்கியமான வாட்ஸப் பின்னூட்டங்கள் குறிப்பிடத் தகுந்தவை:
1)
”பிச்சாவரம் பற்றி எழுதும்போது, இயற்கையழகை
வர்ணித்திருக்கலாம்; மொக்கையாகப் பேசிக்கொண்டே இருந்தது போலிருந்தது.” – இதற்கான பதில் மேலே
இருக்கிறது.
2)
”சினிமா வசனங்களைத் தவிரப் பெரிதாக எதுவும்
இல்லை. தேவையில்லாத விஷயங்கள் நிறைய இருப்பதாகத் தோன்றியது. மிகவும் பெரிய பதிவு,
ஊன்றிப் படிக்கும் அளவிற்கு சுவாரசியமாக இல்லாதது துரதிருஷ்டவசமானது.” – இதற்குச் சாமி சத்தியமாக
என்னிடம் விடை இல்லை. மொக்கையாக இருந்திருந்தால் அடியேனை மன்னித்தருளவும்.
பொதுவாக எழுத்து என் சந்தோஷத்திற்கு என்று மட்டுமே
நம்புபவன் நான். எனினும், இந்த இரு பின்னூட்டங்களில் குறிப்பிடப்பட்டிருந்த
குறைகளை ஓரளவிற்கேனும் களைந்துவிட்டேன் எனும் நம்பிக்கையுடன் நிறைவு செய்கிறேன்.)