(மூன்று பாகங்கள் கொண்ட இத்தொடரின் இரண்டாம் பாகம் இது. நேற்று வெளியிடப்பட்ட முதல் பாகத்தை படித்தபின் இதைத் தொடருமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.)
பிச்சாவரம்
படகுத்துறையிலிருந்து வெளியே வந்து டவுன் பஸ்ஸிற்காகக் காத்திருந்த நேரத்தை
விரயமாக்க விருப்பமின்றி, எதிரிலிருந்த பூங்காவுக்குச் செல்லலாம் என்று
முடிவெடுத்துத் தீபக்கும், நானும் ஊஞ்சலில் ஆட ஆரம்பித்தோம்;
சிறுபிள்ளைத்தனம்தான், நன்றாகத் தெரியும். இருந்தாலும், ஆசை யாரை விட்டது? தீபக்
மெதுவாக ஆடினால் போதுமென்று லேசான உந்துதலோடு நிறுத்திவிட்டான். என் நேரம், வேகமாக
ஆட வேண்டும் என்று மூளை கட்டளையிட்டது. மிக உற்சாகமாக உந்தி, உந்தி
ஆடிக்கொண்டிருந்தபோது, இடையில் ஒருமுறை கால் சரியாக உந்தாததால் தரையில் பட்டு,
அந்த அதிர்வு உயிர்நாடி வரை பரவி, சப்தநாடியும் சில்லிட்டு ஒடுங்கியது ஒரு
நிமிடம்.
சட்டென்று
முகம் மாறியதைத் தீபக் கவனித்ததாகத் தெரியவில்லை. யோசித்துப் பார்த்தபோதுதான் படாத
இடத்தில் பட்டிருக்கக் கூடிய அந்த வலிக்கான காரணம் புரிந்தது; அன்று காலையில்
எழுந்தவுடன் அழகு பார்ப்பதற்காகக் கண்ணாடியில் முழித்துவிட்டேன் என்று. “யார்
மூஞ்சிலதான் முழிச்சேனோ?” என்று கெட்ட வார்த்தையில் கூடத் திட்ட முடியாதத் தர்மசங்கடமான
நிலை. இது எதுவும் தெரியாமல் ஊஞ்சலின் ‘சுகானுபவத்தை’ அனுபவித்துக்
கொண்டிருந்தான் நண்பன்.
“மச்சான், அங்க பாத்தியா?” என்று அவன்
கேட்டபோதுதான் சுற்றியிருந்த மக்களைப் பார்த்தேன். அனைவரும் ஜோடிகள். ’அது சரி, நமக்கு
வாய்த்தது அவ்வளவுதான்’ என்ற ரீதியில் நாங்களிருவரும் ஒருவரையொருவர் பார்த்துச்
சிரித்துக்கொண்டோம். சுற்றியிருந்த அனைத்துக் காதல் ஜோடிகளும் எங்களை ‘அவர்கள்’ என்று நினைத்திருக்கக்
கூடும். எங்களுக்கு வேறு விதமான சிரிப்பு: ஒருவர் உடன்வந்திருந்த ஜோடியைப் பரோட்டா
மாஸ்டரைப் போல் பிசைந்து கொண்டிருந்தார்; இன்னொரு பக்கம் இந்த உலகையே மறந்து
ஒருவர் மடியில் அவரது ‘புறா’ படுத்திருந்தது. நான் பரவாயில்லை,
இயந்திரவியல் படிக்கிறேன். எனக்கு வகுப்பறையில் கூட அந்தப் பாக்கியம் கிடையாது.
தீபக்தான் பாவம். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு படிக்கின்றவன், வகுப்பறையில்
ஆண்களைவிடப் பெண்கள் அதிகமாக இருக்கும் வாய்ப்புள்ள துறை. மனம் மிகவும் சஞ்சலப்பட்டிருக்க
வேண்டும்.
அரை மணிநேரத்திற்கு ஒரு பேருந்துதான் என்பது நன்கு தெரியுமாதலால்,
கால் மணிநேரம் வரை ஆடிவிட்டுப் ‘போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து’ என்று
எழுந்துவிட்டோம். நாங்கள் பத்தடி நகர்ந்திருக்க மாட்டோம்; இரு குழந்தைகள் வந்து இடத்தை
ஆக்கிரமித்து விட்டனர். எங்கிருந்து வந்தார்கள் எனத் தெரியவில்லை, அல்லது எங்கள் கண்கள்
ஜோடிப் புறாக்களை மட்டும்தான் நோட்டம் விட்டுக்கொண்டிருந்திருக்க வேண்டும்.
எப்படியோ, “எருமை மாட்டு ஜன்மங்க! ஏழு கழுத வயசாயிடுச்சு” என்ற வசவு நிச்சயமாக
அக்குழந்தைகளின் பெற்றோர்களிடமிருந்து எங்களைப் பற்றி வெளிப்பட்டிருக்க வேண்டும்.
எத்தனை தலைமுறைகளைத் தோண்டியெடுத்துத் திட்டினார்கள் என்று தெரியவில்லை;
யோசித்துப் பார்க்கவும் விருப்பமில்லை.
பேருந்துச் சத்தம் கேட்டதும், பர்ஸை ஒரு முறை பார்த்தேன்; 16
ரூபாய் இருந்தது. “அப்பாடா, டிக்கெட் 7+7 = 14 தான்; பொழச்சோம்டா” என்று படகுக்காரர்
கொடுத்த 10 ரூபாயுடன், நான் வைத்திருந்த சில்லறையைச் சேர்த்து எடுத்து
வைத்துக்கொண்டு, ’வாடா என்
டொமேட்டோ’ என்ற
நினைப்பில் நின்றிருந்தோம். ஒரு தனியார் பேருந்து வந்தது.
நடத்துனரிடம், “அண்ணே, வண்டி கேட் ரெண்டு டிக்கெட் எவ்ளோண்ணே?” என்றதற்கு, “வண்டி
கேட் போகாது தம்பி. அதுக்குப் பெரியார் வண்டி வரும். பஸ் ஸ்டேண்ட்ல வேணா
எறங்கிக்கோங்க. 9 ரூபா ஒரு டிக்கெட்” என்றார்.
’மாப்பு,
வெச்சுட்டான்யா ஆப்பு’ என்று பேயறைந்தாற்போல இருவரும் ஒருவர்
முகத்தை மற்றொருவர் பார்த்துக்கொண்டு திடுக்கிட்டு நின்றோம். நடத்துனருக்குப்
புரிந்திருக்க வேண்டும். “பெரியார் வண்டி இன்னும் 10 – 15 நிமிஷத்துல வந்துரும்.
அதுல டிக்கெட் கம்மிதான். வண்டி கேட்ல எறங்கிக்கோங்க” என்று
சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். அவரது எண்ணவோட்டம் அப்பட்டமாகத் தெரிந்தது; ‘இதுக்கெதுக்குடா
வெள்ளையுஞ்சொள்ளையுமா அலையுறீங்க’ என்றுதான் கூறியிருப்பார் என எந்தக் கோயிலில்
வேண்டுமானாலும் கற்பூரத்தில் அடித்துச் சத்தியம் செய்வேன்.
‘போனது போச்சு விட்டு விளையாடு; வானத்தப் பாத்துத் தொட்டு
விட போடு’ என்று
மீசையில் மண் ஒட்டாத கதையாக அரசுப் பேருந்திற்குக் காத்திருந்தோம். ஆடி, அசைந்து
ஒருவழியாக வந்தது ‘பெரியார் வண்டி’. முன்னெச்சரிக்கையாக, “அண்ணே, வண்டி
கேட் வரைக்கும் ஏழு ரூபா தானே டிக்கெட்டு?” என்று கேட்ட எங்களை வித்தியாசமாகப்
பார்த்தார் நடத்துனர். “சிதம்பரம் பஸ் ஸ்டேண்ட் வரைக்கும் ஏழு ரூபாதான் தம்பி.
எந்த ஊருக்குப் போகணும்?” என்றார்.
“கடலூர்ண்ணே.”
“மணி
இப்போ 4:50 ஆகுது. உங்களுக்கு நல்ல நேரமா இருந்தா பாசஞ்சர் ட்ரெயின் வரும் கடலூர்ப்
பக்கமாப் போறது. பஸ் ஸ்டேண்ட் கிட்டதான் ரயில்வே ஸ்டேஷனும். பஸ் ஸ்டேண்ட்லயே
எறங்கிக்கோங்க.”
“ஓ
அப்புடியா?”
“ஆனா
பாத்துக்கோங்க. ஓடிப்போயி டிக்கெட் எடுக்கணும். இல்லாட்டி டிக்கெட் இல்லாமக் கூட
போங்க. ஒரு பய செக் பண்ணமாட்டான்.”
அவர்
சொல்வது லாட்டரிச் சீட்டில் பரிசு விழுந்தது போன்ற சந்தோஷத்தைக் கொடுத்தாலும்,
கூடவே பயணச்சீட்டு எடுக்க முடியாமல் பயணம் செய்து கடைசியில் எங்கள் முகராசிக்கு
மாட்டிக்கொள்வோமோ என்ற பயமும் சேர்ந்துகொண்டது.
தீபக்
சிரத்தையாகப் பேசினான். “மச்சான், அழகா வண்டி கேட்ல எறங்கிப் பக்கத்துல இருக்குற
ஏ.டி.எம்-ல எங்கயாச்சும் காசு எடுத்துட்டு அப்டியே பஸ் ஏறிடலாம்டா.” எனக்குத்தான் ஏழரை
அன்று நாக்கில் புகுந்து விளையாடியது. “டேய், பஸ் ஸ்டேண்ட் வரைக்கும் அதே
டிக்கெட்தான்னு சொல்றாரு அண்ணன். ட்ரெயின் புடிக்கவும் சான்ஸ் இருக்கு. சப்போஸ்
ட்ரெயின விட்டாலும் பஸ் ஸ்டேண்ட்ல பஸ் ஏறினா உக்கார எடம் கெடைக்கும். வண்டி கேட்ல
ஏறுனா ஸ்டேண்டிங்தான். எல்லாத்தையும் தாண்டிப் பஸ் ஸ்டேண்ட் பக்கத்துல இல்லாத
ஏ.டி.எம் எங்கயாச்சும் பாத்துருக்கியா?” என்று பக்காவாகச் சொல்லிவிட்டு “ரெண்டு பஸ்
ஸ்டேண்ட்ண்ணே” என்று
சீட்டெடுத்துவிட்டு, ‘நாங்க இருக்கோம்’ என்று ’வாசன் ஐ கேர்’ மருத்துவரைப் போல்
பார்வையைச் செலுத்தினேன்.
போகிற வழியில் கிள்ளை ரயிலடியில் ரயில் வருவதற்காகக் கேட்
போட்டிருந்தார்கள். “தம்பி தம்பி, இந்த ட்ரெயின்தான்பா. போச்சு, நம்ப போறதுக்குள்ள
தாண்டிடும். நீங்க பஸ் புடிச்சுதான் போகணும்” என்றார் ஓட்டுனர்;
ஒரு நம்பிக்கை தகர்ந்தது. இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் ‘தோத்தாலும்
ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு’ என்று உள்ளுக்குள் சொல்லிவிட்டு, “மச்சான்,
பஸ் கண்டிப்பா கெடைச்சுடும்டா” என்றேன்; நக்கலாகச் சிரித்தான் தீபக்.
வண்டி கேட்டைக் கடந்துதான் பேருந்து நிலையத்திற்குச் செல்ல
வேண்டும். வண்டி கேட்டைக் கடந்தபோது ஒரு ஆக்ஸிஸ் வங்கி ஏ.டி.எம் இருப்பதைக்
காட்டினான் தீபக். பெருங்கூட்டம் நின்றுகொண்டிருந்தது நீ........ளமான வரிசையில்.
“டேய், எறங்கிடுவோம்டா. லைன்ல நின்னு எப்புடியும் ஒரு அர மணிநேரத்துல காசு
எடுத்துடலாம்” என்றான்.
அவனை முறைத்துவிட்டு, “என்ன மச்சான், நான்தான் சொல்றேன்ல? பஸ் ஸ்டேண்ட் கிட்ட எடுத்துக்கலாம்டா.
காசு எடுத்துட்டு நல்லா சாப்புட்டுட்டுத் திருப்தியா ஊருக்குப் போறோம்” என்றேன்; அவன்
உண்மையிலேயே என்னைப் பார்த்துச் சிரித்தானா, அல்லது எனக்குத்தான் அப்படிப்
பிரமையாகத் தோன்றியதா என்று தெரியவில்லை. ஆனால், ஏதோ ஒரு நையாண்டித்தனம் நெஞ்சில்
சுருக்கென்று தைத்தது போலிருந்தது.
ஒருவழியாகப் பேருந்து நிலையத்தை அடைந்தோம். அருகில் ’வாண்டையார் உணவகம்’ எனக் கொட்டை
எழுத்தில் எழுதியிருந்தார்கள். நல்லக் கொழுத்த உணவகமாகத் தெரிந்தது; சைவம்/அசைவம்
வேறு. அதையும் பார்த்துத் தீபக்கையும் பார்த்துச் சிரித்துக் கண்ணடித்தேன்.
“மூடிட்டு வாடா. காசு எடுத்துட்டு ஊருக்குப் போலாம்” என்று வாயை
அடைத்தான். ‘பயபுள்ள ரொம்ப அசிங்கப்படுத்துறானே’ என்று யோசித்துப்
பின்பு, அருகிலிருந்த பெட்ரோல் பங்கிற்குச் சென்றோம்; ஏ.டி.எம் திறந்திருப்பது
தூரத்திலிருந்தே தெரிந்தது; வெளியிலும் கூட்டமே இல்லை.
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ என்று எனக்கு நானே
கேட்டுக்கொண்டு, “நான்தான் சொன்னேன்ல?” என்று தீபக்கிடம் கூறினேன். அருகில் சென்று
பார்த்தபோதுதான் தெரிந்தது, வேலை செய்யாத ஏ.டிஎம் என்று. முதல்முறையாக நான்தான்
அருகில் சென்று ஏமாந்தேனா, அல்லது பலர் எனக்கு முன்னரே அப்பெரும் புண்ணியத்தை அனுபவித்தனரா
என்று தெரியவில்லை; முகத்தில் ஈயாடவில்லை எனக்கு. தீபக் முகத்தைப் பார்க்கவில்லை
அப்போதைக்கு. கண்டிப்பாகக் கிராதகன் அந்த நமட்டுச் சிரிப்புத்தான்
சிரித்திருப்பான்.
“அண்ணே, வேற எங்க இங்க ஏ.டி.எம் இருக்கு?” என்று பங்கில் வேலை
செய்யும் ஒரு நபரிடம் விசாரித்தோம். ”அந்தப் பக்கத்துல இன்னொரு பெட்ரோல் பங்க்
இருக்கு தம்பி. அங்க ஒரு ஏ.டி.எம். உண்டு. அங்க போய்ப் பாருங்க” என்றார். ஓட்டமும்,
நடையுமாகச் சென்றால் இங்கு எவ்விதக் கஷ்டமும் இல்லாமல் தூரத்தில் இருந்தே அந்த ஏ.டி.எம்.
மூடப்பட்டிருப்பது தெரிந்துவிட்டது.
’பிறர்
சொல்பேச்சைச் சிலநேரம் ஆராயாமல் அப்படியே முழுமையாகக் கேட்டுவிட வேண்டும்’ எனும் ஞானம்
அப்போதுதான் பிறந்தது. பக்கத்தில் இவன் வேறு, வாயைத் திறந்து “நான் சொல்றதக் கேட்டிருந்தா
இந்தப் பிரச்சன இல்லல்ல?” என்று வாயால் கேட்காமல் கண் ஜாடையிலேயே சம்மட்டியால் அடித்துக்கொண்டிருந்தான்.
சிறிது தூரம் நடந்த பின்பு ஒரு பெரியவரிடம், “சார், இங்க வேல செய்யுற ஏ.டி.எம்.
பக்கத்துல எங்க இருக்கு?” என்று, ‘வேல செய்யுற’ எனும் வார்த்தையை உட்புகுத்திய பெருமை
மின்னக் கேட்டோம்.
“அந்தா அந்த முக்குல தெரியுதா ஒரு ஆலமரம்? அங்க ரெண்டு மூணு
ஏ.டி.எம் இருக்கு” என்றார்.
மீண்டும் ஒருமுறை “வேலை செய்யுங்களா?” என்று கேட்டிருக்க வேண்டும்போல; தவறு
செய்துவிட்டோம். மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க அவர் சொன்ன ‘முக்கு’ வரை வந்து
பார்த்தால், இருந்தது ஒரே ஒரு ஏ.டி.எம்; அதுவும் மூடித்தான் இருந்தது. கோபத்தில்
நான் கெட்ட வார்த்தைகளில் சாபம் விடத் தொடங்கினேன் (யாருக்கு என்று கேட்க
வாசகர்களுக்கு அனுமதியில்லை; அதைச் சொன்னால் என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை).
“சரி விடு மச்சி. பஸ் வந்த வழியிலயே போய்ப் பாப்போம். வேற எந்த
ஏ.டி.எம்-மும் சிக்கலன்னா வண்டி கேட் ஆக்ஸிஸ் பாங்க்தான்” என்று தீபக்
சமாதானம் கூறினான்; மனதிற்குச் சற்று ஆறுதலாயிருந்தது. இதற்கிடையில் பிரச்சனையை
அம்மாவிடம் (என்னைப் பெற்ற பெண்மணி; ‘அவர்’ இல்லை) சொல்லியிருந்தேன். அவர் பங்கிற்கு
அவர், “டேய், என்னோட ஆஃபீஸ்ல வொர்க் பண்ற யாருகிட்டயாவது சொல்றேண்டா.
இப்போதைக்குக் காச வாங்கிக்கோ. நாளைக்கு ஆஃபீஸ் போகும்போது நானே குடுத்துடறேன்” என்று கரிசனமாகப்
பேசினார். ஒரு நிமிடம் சரி என்று சொல்லலாம் போலத்தான் இருந்தது. இருந்தாலும் “21
வயசாயிடுச்சு. இந்த அசிங்கமெல்லாம் படணுமா? என்ன ஆனாலும் சரி. பொறுமையா காசு
எடுத்துட்டுப் போலாம். எவன் கிட்டயும் கை நீட்டத் தேவயில்ல” என்று மனசாட்சிப்
பயல் குரல் கொடுத்தான். ‘நான் பாத்த்தையெல்லாம் திங்குற ஓணான் இல்ல; பசிச்சா
மட்டும் வேட்டையாடுற சிங்கம்’ என்று “அதெல்லாம் நான் பாத்துக்குறேன்மா.
நான் வரதுக்கு லேட் ஆகும். அதச் சொல்லத்தான் கால் பண்ணேன்” என்று
வைத்துவிட்டேன்.
நடக்கத் தொடங்கினோம். போகிற வழியில் ஒரு தபால் அலுவலத்தில்
ஏ.டி.எம் திறந்திருந்தது; ஆனால், ‘அவுட் ஆஃப் சர்வீஸ்’ என்று இரண்டாவது
முறையாக மூக்கை உடைத்தது. இடையில் ‘வழி மாறிவிட்டோமோ?’ என்ற சந்தேகம் வேறு
வந்தது. “மச்சான், ரொம்ப நேரமா நடக்குறோம். இன்னும் வண்டி கேட் வரல. நீ சொல்லித்தானேடா இந்த வழியா
வந்தோம்? மாத்தி விட்டுட்டன்னு நெனைக்குறேன்” என்று தீபக்கிடம்
நான் மல்லுக்கு நிற்க, அவன் நடந்து சென்ற ஒருவரிடம் வழி கேட்டான். சரியான வழியில்தான்
சென்று கொண்டிருக்கிறோம் என்று அறிந்தபோதுதான் மற்றொரு உண்மை புரிந்தது - ‘நாம் நினைத்த
ஒரு விஷயம் எதிர்பார்த்ததைப் போல் நடக்கவில்லை என்றால், எதன்மீதாவது/யார்மீதாவது காரணமேயில்லாமல்
பழியைச் சுமத்திவிட மனம் தயாராகி விடுகிறது’.
”மச்சான்,
அந்த வண்டி கேட் ஏ.டி.எம். நாம வரும்போதே செம்ம கூட்டமா இருந்துச்சு. இப்போ
திரும்பப் போகும்போது காசு காலியாகி இருந்தா என்னடா பண்றது?” என்று தீபக்கைக்
கேட்டபோது, “ஏண்டா, உனக்கெல்லாம் வாயில நல்ல வார்த்தையே வராதா?” என்று அசிங்கமாகக்
கேட்டான். உடலும், மனமும் சோர்ந்த நிலையில் வண்டி கேட்டின் அருகே சென்றபோது,
புத்துணர்ச்சி ஏற்பட்டது. ஏடி.எம். திறந்திருந்தது, கூட்டமும் நின்றிருந்தது.
வாழ்க்கையில் முதல்முறையாக வரிசையில் நிற்கப்போவது குறித்து ஆனந்தம் பிறந்தது.
“மச்சான், இப்போல்லாம் கூட்டம் இல்லாத ஏ.டி.எம்.தான் நம்ப முடியாது போல” என்று சிரித்தபடியே
வரிசையில் நின்றேன்.
“இங்க அடுத்தது என்னென்ன வில்லங்கம் வெச்சுருக்காங்களோடா?” என்று சொல்லிச்
சிரித்தபோது, முன்னால் நின்றிருந்தவர், “தம்பி, ரெண்டாயிரம் ரூபா நோட்டு
மட்டும்தான் வருது. ஒரு கார்டுக்கு ஒரு நாளைக்கு ரெண்டாயிரம் ரூபாதான், தெரியும்ல?” என்றார். அக்கணத்தில்தான்
சட்டென்று உறைத்தது, என்னுடைய அக்கவுண்டில் 2,000 ரூபாய் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளாமலேயே
வந்துவிட்டேன் என்று. இணைய வழி பேங்கிங்கையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. ‘டோல்
ஃப்ரீ’ எண்ணுக்கு
அழைத்து, மீதமுள்ள தொகையை அறிந்து கொள்ளலாம் என்று தோன்றியது; ஆனால் இரண்டு
காரணங்களுக்காகக் கேட்கவில்லை.
1) அவ்வரிசையில்
நின்றுகொண்டு அதைக் கேட்பது அவமானமாகப் பட்டது.
2) காசு
இல்லையென்று சொல்லிவிட்டால், அம்மாவுக்குத் தெரிந்த நண்பர்களிடம் பணம் வாங்கும்
எண்ணமும் இல்லை.
வரிசையில் நின்றிருந்தவர்களிடம் இருந்து விதவிதமன சம்பாஷணைகள்
வெளிப்பட்டன.
“உள்ள போயி அவ்ளோ நேரமா என்னய்யா பண்றான் அந்தாளு? பணம்
எடுக்குறானா, பங்களா கட்டுறானா?”
”அங்க
பாருங்க. திருட்டுப் பய. ஒரே ஆளு நாலு கார்டு எடுத்துட்டு வந்து எட்டாயிரம் ரூபா
எடுத்துட்டுப் போறான். ரெண்டாயிரம், ரெண்டாயிரமா ஒவ்வொரு நாளா எடுக்கலாம்ல?
அப்புடிக்கு என்ன இப்போ தல போற செலவு இருக்கப்போகுது?”
“நைட்டு
11:50க்கு வாங்க சார். 10 நிமிஷம் வெயிட் பண்ணுனா அடுத்த நாளுக்கான
ரெண்டாயிரத்தையும் எடுத்துட்டுப் போயிடலாம்.”
இன்னும்
பற்பல கருத்துக்கள், யோசனைகள், திட்டுக்கள், ஷொட்டுக்கள். இப்படியாக வரிசை
நகர்ந்துகொண்டே செல்லச்செல்ல எனக்கு இதயத்துடிப்பு அதிகரித்தது. “காசு எப்புடியாச்சும் இருக்கணும் கடவுளே” என்று வேண்டிக்கொண்டே
மனதிற்குள் விஷ்ணு சஹஸ்ரநாமம், ஹனுமான் சாலீஸா, கந்த சஷ்டிக் கவசம் என்று
அறைகுறையாகத் தெரிந்த அனைத்து சுலோகங்களையும் ‘மெட்லி’ செய்துகொண்டிருந்தேன்.
கட்டக்கடைசியாக எனக்கு முன் இருவர் இருந்த நிலையில், கைப்பேசியில் எஸ்.எம்.எஸ்.
வந்தது. எடுத்துப் பார்த்தபோது மனத்தில் இனம்புரியாத சந்தோஷம். இரண்டு நாட்களுக்கு
முன்பாக மறுத்திருந்த அமேசான் ஆர்டருக்கான ‘ரீஃபண்ட்’ தொகை,
அக்கவுண்டிற்கு மாற்றப்பட்டிருப்பதாக வந்த தகவல்தான் அது. “யுவர் அமேசான்
ஆர்டர்.... 619 ஹேஸ் பீன் ரீஃபண்டட். அவைலபிள் பேலன்ஸ் இன் யுவர் அக்கவுண்ட் இஸ் 2605.39” என்று மின்னியது.
யோசித்துப் பார்த்தபோதுதான் திடுக்கிடும் உண்மை பிடிபட்டது.
தீபக்கிடம் கைப்பேசியைக் காட்டினேன். “619 ரூபா வந்தே, அக்கவுண்ட்ல 2605 தான்
இருக்குன்னா அப்போ முன்னாடி 1986 ரூபா தான் இருந்திருக்கும். நாம இவ்ளோ நேரம்
நின்னதுக்கு யூஸே இல்லாமப் போயிருக்கும்” என்று சொல்லிச் சிரித்தேன். ’டேய் யப்பா, உன்ன
நம்பி உன் கூடப் பிச்சாவரம் வந்தேனே! என்னச் சொல்லணும்டா’ என்பதுபோலப்
பார்த்துச் சிரித்தான்.
பணத்தை எடுத்துக்கொண்டு வந்தபோது பெரிய சாதனை செய்தது
போன்ற உணர்வு இருவரிடமும் மேலோங்கியது. அம்மாவிடம் கர்வத்துடன் தகவலைச்
சொல்லியாயிற்று. “மச்சான், இப்போதான் எனக்கு இந்த நாள் முடிஞ்ச மாதிரி இருக்கு.
அடுத்த பஸ்ஸுல ஊருக்குப் போயி சேர்றோம்” என்றான் தீபக். இப்போது அவன் தப்புக்கணக்குப் போட்டிருந்தான்.
அவனைப் பொறுத்தவரையில் அந்த நாள் அத்துடன் முடியவில்லை என்பது அவனுக்கு அப்போது
தெரிந்திருக்கவில்லை.
(தொடரும்)
(தொடரும்)
No comments:
Post a Comment