வீட்டைச் சுற்றி இருப்பவர்களுக்கு அவன் ஒரு தொந்தரவு. ’சனியன்… கொழந்தைங்க தூங்குற நேரத்துல, தொண்டை கிழியக் கத்த ஆரம்பிச்சுடுவான்’ எனும் அவனைப் பற்றிய ஏச்சு அப்பகுதியில் மிகவும் சாதாரணம். ஆனால் பக்கத்து வீட்டிற்குப் புதிதாகக் குடிவந்திருந்தவருக்கு அவன் கத்துவதாகத் தோன்றவில்லை. பால் காய்ச்சிய தினம்கூட அவனது பாட்டுச் சத்தம் கேட்டது.
அவனைச் சந்தித்துப் பேச வேண்டும் என்ற ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. 30 வயது கடந்த, வாழ்க்கையில் சோகங்களை அனுபவித்துத் தோற்று, தாடி வைத்த மனிதனாக அவனைக் கற்பனை செய்திருந்த அவருக்கு அவனைச் சந்தித்தபோது ஆச்சரியம்.
20 வயதிருக்கும்; ‘படிக்கிற பையன்’ என்று சொல்லக்கூடிய தடிமனான மூக்குக்கண்ணாடி; சாந்தமான முகம். சிரித்தபடி வரவேற்றான். “உக்காருங்க சார். வீடெல்லாம் எப்படி இருக்கு? என் தொல்லையைத் தவிர உங்களுக்கு வேற பிரச்சினை எதுவும் இருக்கா?” என்றான் சிரித்துக்கொண்டே.
சகஜமான உரையாடலாகச் சென்றுகொண்டிருந்தபோது, “தம்பிக்கு மியூசிக்ல ரொம்ப ஆர்வமோ?” என்று கேட்டார். “’ஏண்டா இப்படிக் கத்திக் கத்தி இருக்குறவங்க உயிர வாங்குற?’ அப்படிங்கிற கேள்வியோட பாலிஷ்ட் வெர்ஷன்தானே சார் இது?” என்ற அவனது அதிரடியான பேச்சு, அவரைச் சிரிக்க வைத்தது.
”ச்ச… அப்டி இல்ல தம்பி. வாய்ஸ் நல்லாயிருக்கு. இந்த ‘சூப்பர் சிங்கர்’ மாதிரி புரோகிராமுக்கு எல்லாம் ட்ரை பண்ணலாம்ல?” என்றார். “இன்னிக்கு இது ஒரு பொதுவான எண்ணமாயிடுச்சு, பாட்டுப் பாடத் தெரிஞ்சாலே ‘சூப்பர் சிங்கர்’க்கு அப்ளை பண்ணணும்ங்கிறது” என்று கூறிவிட்டுச் சமையலறைக்குச் சென்றவன் பட்சணங்களை எடுத்து வந்தான்.
உரையாடலை எப்படித் தொடர்வது என்று புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தவரிடம், “சார், மிக்ஸர் எடுத்துக்கோங்க. உங்க எண்ண ஓட்டம் எனக்குப் புரியுது. இதப் பத்தி நெறைய பேசலாம் சார். ஆனா, ஒரு கட்டத்துக்கு மேல கேக்குறவங்களுக்குப் போர் அடிச்சிடும். நீங்க சலிச்சுக்க மாட்டீங்கனு சத்தியம் பண்ணுங்க. நம்ம பேசலாம்” – ரொம்ப அனுபவப்பட்டவன் போலப் பேசினான். சிரித்துக்கொண்டே தலையாட்டியவர், “ஐ ப்ராமிஸ்” என்றார்.
”உள்ள வாங்க சார்” என்றபடி அவரை அறைக்கு அழைத்துச் சென்றான். அங்கு அவரது கண்ணில் முதலில் பட்டது, ஒரு தாங்கியின் மீது வைக்கப் பட்டிருந்த ‘கீபோர்டு’தான். “ஓ… கீபோர்டும் வாசிப்பீங்களா?” என்று அவர் சொல்லி முடிக்கும் முன்பே, “இசையும், இயற்கையும்தான் மனுஷனுக்கு முக்கியமான கல்வின்னு நம்புறவன் சார் நான்” என்றான். அப்பதில் 20 வயது இளைஞனின் மூலம் வெளிப்பட்டதை அவரால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
” மியூசிக் ஒரு சந்தோஷமான உணர்வு சார். அது வெறும் கலை இல்ல. ஒவ்வொரு மனுஷனோட சுக,துக்கங்கள்ல பங்குபெறும் தோழன். மியூசிக் கேட்டா அப்படியே உற்சாகம் கரைபுரண்டு ஓடணும்; ஒரு மெண்டல் ஸ்ட்ரென்த் கிடைக்கணும். இல்லன்னா, ஒரு ரிலாக்சேஷன் கிடைக்கணும்; மனசு இளகிக் கரைஞ்சு, கண்ல தண்ணி கொட்டணும். அதாவது ஒரு ஆழ்ந்த தியானம் மாதிரி. இந்த ரெண்டு வகையையும் புரிஞ்சுக்க சாஸ்திரிய கர்நாடக சங்கீதமோ, உலகத்துல இருக்குற பல இசை வகைகளையோ தெரிஞ்சுக்கணும்னு அவசியம் இல்ல. சிம்பிளா சொல்லணும்னா ‘ஆலுமா டோலுமா’ பாட்டு நான் சொன்ன முதல் வகைக்கு ஒரு எக்ஸாம்பிள்; ‘பாம்பே’ படத்துல வர்ற ‘தீம் மியூசிக்’ ரெண்டாவது டைப். இது என் ஜெனரேஷனுக்கு சார். உங்க வயசுக்காரங்களுக்கு, ‘பாட்டுக் குயிலு மனசுக்குள்ள’ பாட்டு ஃபர்ஸ்ட்ட் டைப்பாவும், ‘எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா?’ செகண்ட் டைப்பாவும் வெச்சுக்கலாம்” – பேசிக்கொண்டே போன அவனது நுட்பம் அவரை மேலும் ஆச்சரியப்படுத்தியது.
”கரெக்ட்டுதான் தம்பி. இருந்தாலும் திறமைன்னு ஒண்ணு இருக்குல்ல, அத வேஸ்ட் பண்ணக்கூடாது. எக்ஸிபிட் பண்றதுக்கு ‘சூப்பர் சிங்கர்’ மாதிரியான புரோகிராம் ஒரு நல்ல ஆப்பர்சூனிட்டிதானே?” என்று கேட்டார், ஐயம் நீங்காதவராய்.
”இத என்னோட போன பதிலுக்கான ஒரு கண்டினுவேஷன்னு சொல்லலாம். மொதல்ல எல்லாத்தையும் எக்ஸிபிட் பண்ணணும்ங்கிற நினைப்பே தப்பு. இசை, காதல் மாதிரி சார். ஒரு பொண்ணுகிட்ட போய்ச் சொன்னாத்தான் முடிவத் தெரிஞ்சுக்க முடியும். ஆனா அதுக்கு முன்னாடி, அவளைப் பார்த்த உடனே நம்மையறியாம ஒரு புன்னகை வரும். நம்ம வேலையப் பார்க்க விடாம ஒரு டிஸ்டர்பன்ஸ் இருந்துகிட்டே இருக்கும் இல்லையா? அந்த அனுபவம், அந்த பொண்ணுகிட்ட போய்க் காதலைச் சொன்னப்புறம் கிடைக்கவே கிடைக்காது – அவ ஒத்துக்கிட்டாக் கூட.
மியூசிக்ல வெற்றி தோல்வியே இருக்க முடியாது சார். ஒரு ஆளுக்கு இசையோட உன்னதம் புரிஞ்சுடுச்சுன்னா, செமிஃபைனல்ல தோத்துட்டோமேன்னு அழ மாட்டான்; ஃபைனல்ல ஜெயிச்சதும் குதிக்க மாட்டான். எல்லா நேரங்கள்லயும் அவன ஒரு சந்தோஷத்துலயே வெச்சுருக்கிறதுதான் இசை. இது ஒரு வகையான போதைன்னு கூட சொல்லலாம்” என்றான்.
”ஏத்துக்குறேன் தம்பி. ஆனா, இது எல்லாத்தையும் மீறி…” என்று இழுத்தவரை நோக்கிச் சிரித்தான். “கீபோர்டு பக்கத்துல வாங்க”. சென்றார். “எனக்குப் பாட்டுப் பாடப் பிடிக்கும். அதுக்கு என் ஃபேமிலி பேக்க்ரவுண்ட் காரணம். ஆனா அதைத் தாண்டி நான் கீபோர்டு கத்துக்க ஆரம்பிச்சதுக்கு சயின்ஸ்தான் காரணம்” என்று கண் சிமிட்டினான். மிகுந்த ஆர்வத்துடன், “எப்படி?” என்றார். அவர் குரலில் இருந்த உறுதி, அவரது ஈடுபாட்டைக் காட்டியது.
”செவன்த்தோ, எய்த்தோ படிக்கும்போது ‘கெமிஸ்ட்ரி’ல ஒரு விதி வரும்; ‘நியூலேண்ட்ஸ் லா ஆஃப் ஆக்டேவ்ஸ்’னு பேரு. ‘எப்படி ஒரு ஸ்தாயில இருக்குற ‘ஸா’ ஸ்வரமும், அதுக்கப்புறம் ஏழு ஸ்வரங்கள் தாண்டி வர்ற அடுத்த ஸ்தாயிக்கான ‘ஸா’வும் ஒண்ணோ, அதே மாதிரி ‘பீரியாடிக் டேபிள்’ல ஒவ்வொரு எட்டாவது எலமண்ட்டும், முதல் எலமண்ட்ட ஒத்திருக்கும்’ அப்டிங்கறதுதான் இந்த விதி. நம்ம ‘ஸ்தாயி’னு சொல்றத, வெஸ்டர்ன் மியூசிக்ல ‘ஆக்டேவ்’னு சொல்வாங்க. நமக்கு ‘ஸரிகமபதநி’ ஒரு ஸ்தாயி; அவங்களுக்கு ‘CDEFGAB’ ஒரு ஆக்டேவ். இந்த C ஸ்கேல்தான் ஒரு கட்டை ஸ்ருதிக்கான அளவுகோல். நம்ம சங்கீதத்துல ‘ஷங்கராபரணம்’னு ஒரு ராகம் இருக்கு. அதைத்தான் அவங்க ‘மேஜர் ஸ்கேல்’னு சொல்றாங்க. ஒருவகையில கொஞ்சம் ஸ்பிரிச்சுவலா யோசிச்சா இது, ‘ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒண்ணு’னு சொல்ற அத்வைதத்தோட எக்ஸ்டென்ஷன்.”
அவரும் ஓரளவிற்கு இசையார்வம் கொண்டவர் என்பதால், கீபோர்டைச் சுட்டிக்காட்டி அவன் கூறியது அனைத்துமே ஓரளவிற்குப் புரிந்தது; ஆனால் ஆச்சரியம் அடங்கவேயில்லை.
”நம்பாளுங்க நெறைய பேருக்கு இன்னிக்கு வெஸ்டர்ன் மியூசிக் பிடிச்சிருக்கு; தப்பில்ல. எப்போ இந்த ‘பிடிச்சிருக்கு’ அப்டிங்கிறது, ‘இது தான் பெஸ்ட்’ அப்டினு மாறுதோ, அப்போ அது தப்பாயிடுது. நம்ம மியூசிக்ல இருக்குற நேட்டிவிட்டி வேற எதுலயும் கிடைக்காதுங்கிறது என் கருத்து” – தீர்க்கமாக வந்து விழுந்தன வார்த்தைகள்.
”இப்போ நீங்க ரூம்குள்ள இருந்து பாடுறதுகூட, பக்கத்து வீட்டுக்குக் கேக்குது. இதுவும் எக்ஸிபிட் பண்றதுக்கான ஒரு வகைதானே? அதையே டி.வி.யில போய்ச் செய்ங்களேன்” என்று சொன்ன அவரது தொனியில், ‘பெரிய மேதாவி இவரு. 20 வயசுப் பையன், பெரிய புடுங்கி மாதிரி பேசுறான்’ எனும் கோபம் அடங்கியிருந்தது.
”பாத்தீங்களா, உங்களுக்குக் கோபம் வருது? இதைத்தான் நான் மொதல்லயே சொன்னேன். திஸ் வில் பீ மை லாஸ்ட் எக்ஸ்ப்ளனேஷன். யூ கேன் கெட் அவுட் ஆஃப்டர் தட். நோ அஃபென்ஸ் ப்ளீஸ், சார்” என்று கூறிவிட்டுத் தொடர்ந்தான்.
”மியூசிக் டீச்சர், வாய்ஸ் ட்ரெய்னர் இந்த ரெண்டு பேருக்குமான வித்தியாசத்தை நாம தெளிவாப் புரிஞ்சுக்கணும். இது ‘லேர்னிங்’, ‘ஸ்டடியிங்’ ரெண்டுக்கும் இருக்குற வித்தியாசம் மாதிரி. ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல், பாட்டு அடித்தொண்டையில இருந்து வரணும். இசையாசிரியர் ஃபண்டமெண்டலா சொல்லித் தர்ற விஷயம் இதுதான். இதுல வர்ற அவுட்புட் ரொம்பக் கவர்ச்சிகரமா இருக்காது; ஆனா, அதை மீறி வர்ற ஒரு ஒரிஜினாலிட்டி, பாட்டைக் காலம் கடந்து நிக்க வைக்கும். இந்த வாய்ஸ் ட்ரெய்னர்ஸ் எதுக்குத் தேவைப் படுவாங்கன்னா, நல்லாப் பாடிட்டிருக்குற ஒருத்தருக்குத் திடீர்னு தொண்டையில ஏதாச்சும் பிரச்சினை வந்தா, அவரை ‘ரீஹாபிலிட்டேட்’ பண்றதுக்குத்தான். ஆனா ‘சூப்பர் சிங்கர்’ மாதிரி இடத்துல என்ன நடக்கும்னா, சில பேர ஃபோர்ஸ் பண்ணி ஹை-பிச்ல பாட வெப்பாங்க. இது நம்ம குரலோட பேஸிக் டெக்ஸ்சர் கூட மேட்ச் ஆகாது. அதனால வேற வழியில்லாம சில பார்ட்டிஸிப்பன்ட்ஸ், மேல்தொண்டையில இருந்து பாட ஆரம்பிப்பாங்க. இதுல ஒரு செயற்கைத்தனம் தெரியும், கேக்க இனிமையா இருந்தாக்கூட. கொடுமை என்னன்னா ‘ஜட்ஜஸ்’ங்குற பேர்ல இங்கிலிஷும் தமிழும் கலந்து பேசுற சில பாடகர்களும் இதை அங்கீகரிக்குறாங்க. நீங்க நல்லா யோசிச்சுப் பாருங்க. எல்லாம் மார்க்கெட்டிங், டி.ஆர்.பி.தான்” என்றான்.
மேலும் தொடர்ந்தவன், “ அதுக்காக அதுல பாடற எல்லாரையும் நான் குறை சொல்லல. திறமையானவங்களும் இருக்காங்க. ஆனா, அதுல பாடறவங்க மட்டும்தான் திறமைசாலிங்கன்ற அளவுகோல் ரொம்பத் தப்பு. இப்போ விஜய் பிரகாஷ் மாதிரியான ஒரு சிங்கர், ஷங்கர் மஹாதேவன் மாதிரி உச்ச ஸ்தாயில பாட முடியாது; ஷக்திஸ்ரீ கோபாலனால, நித்யஸ்ரீ மஹாதேவன் மாதிரி பாட முடியாது. இதை மாத்தியும் சொல்லலாம். மொத்தத்துல இசை ஆத்ம திருப்திக்கான ஒரு மீடியம். ஏ.ஆர்.ரஹ்மான் சார் மாதிரியான ஒரு ஆள், ‘இசை ஞானி’களை விட அமைதியா இருக்குறதை வேற எப்படிப் புரிஞ்சுக்க முடியும்? இசை ஒரு ஞானம்; அதை புரிஞ்சவங்க எல்லாரும் ஞானிகள்தான். இதுக்குப் பட்டமெல்லாம் தேவையில்ல சார்.”
அவன் பேசி முடித்தபோது, “சாரி தம்பி… ஏதாச்சும் தப்பாப் பேசியிருந்தா மன்னிச்சுக்கோங்க. வீட்டுக்கு நீங்க கண்டிப்பா வரணும்” என்றார். “சாரி நான் சொல்லணும் சார். அந்த நேரத்துல கோபம் வந்துடுச்சு. கட்டுப்படுத்திப் பழகிட்டிருக்கேன். மியூசிக் இஸ் கைடிங் மீ. தேங்க்ஸ் ஃபார் கமிங் டு மை ப்ளேஸ் அண்ட் ஸ்பெண்டிங் யுவர் வேல்யுபிள் டைம். ஐ ஆம் க்ரேட்ஃபுல் பியாண்ட் வேர்ட்ஸ்” என்று சொல்லிக்கொண்டே அவரை வழியனுப்ப வாசல் வரை வந்தான்.
”வாழ்க்கை ஒரு சிக்கல் சார். வீ ஜஸ்ட் ஹாவ் டு மேக் இட் மியூசிக்கல்” – சொல்லிவிட்டுச் சிரித்தான். அவர் வீட்டுக்கு வந்தபோது மகன் ‘சூப்பர் சிங்கர்’ பார்த்துக்கொண்டிருந்தான். அரையிறுதியில் தோற்றதற்காக ஒரு பெண்ணும், அவரது பெற்றோரும் தொலைக்காட்சியில் ‘பொலபொல’வென அழுது கொண்டிருந்தார்கள். “பாவம்ப்பா அந்தப் பொண்ணு” என்று சொன்ன தன் மகனுக்கு என்ன பதில் கூறுவதென்று அவருக்குத் தெரியவில்லை.