கமல்ஹாசன்
நடிக்கும் ரீமேக் படங்கள் மாதிரி அடுத்தடுத்து வரும் 21-Gயையும், சிலம்பரசன் படங்களைப்
போல எப்போதாவது வரும் 21-Lஐயும், ஷங்கர் படத்தைப் போன்ற பிரம்மாண்டமான குளிர்சாதன வசதி
கொண்ட 19-Bஐயும் சந்திக்கும் காந்தி மண்டபம் பேருந்து நிறுத்தத்தில் நின்று, சென்னை
மாநகரப் பேருந்துகளில் தவ்விக் கொண்டும், தொற்றிக் கொண்டும் பயணிக்கும் ஒரு இளைஞனின்
பயண அனுபவமே இது.
பேருந்துகள்தாம்
தமிழ்த் திரைப்படங்கள் போலென்றால், ஓட்டுநர்கள் அத்திரைப்படங்களின் இயக்குநர்கள் அல்லவா?
ஒரு சிலர் ஹரி படங்களைப் போலச் சீறிப் பாய்வர்; மற்றவர் மணிரத்னம் படங்களைப் போலப்
பொறுமையாகச் செலுத்துவர். ஆனால் இத்தகைய அனைத்து
வேறுபாடுகளுக்கிடையிலும் மாறாத ஒரே விஷயம், “தம்பி… லேடீஸ் நிக்குறோம்ல? கொஞ்சம்
எந்திரிச்சு வழி விடுப்பா” என்று எங்களைப் போன்ற கல்லூரி மாணவர்களை, ஏதோ கொலை செய்துவிட்டதைப்
போல் குற்றவுணர்ச்சி கொள்ள வைக்கும் பெண்களின் குரல்தான்.
போன
பௌர்ணமியின்போது, “இந்த மாநிலத்தின் முதுகெலும்பே இளைஞர்கள்தாம். மழை நிவாரணத்துக்கு
என்னம்மா வேல செய்றாங்க? பின்னிட்டம்மா, அட்றா அட்றா” என்று கலா மாஸ்டரையும், ஈரோடு
மகேஷையும் இமிடேட் செய்து, எங்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய அதே பெரியவர்கள்,
இன்று நாங்கள் கும்பலாகப் பேருந்தில் ஏறினால், “வந்துட்டானுங்க கூட்டம் கூடிக்கிட்டு.
இவனுங்க அட்ராசிட்டி தாங்க முடியல சார். சனி, ஞாயிறு வந்துடக்கூடாது. கேங்கா எங்கேயாச்சும்
ஊர் சுத்தக் கெளம்பிடுறாங்க” என்று ஒப்பாரி வைக்கிறார்கள். சரி, இது பெரியவர்கள் –
ஆண்களும், பெண்களும் – பொதுவாக வைக்கும் குற்றச்சாட்டு. இதுகூடப் பழகிவிட்டது என்று
ஊதிவிட்டுப் போகலாம்.
அடையாறில் தொடங்கி, அயனாவரம்
வரை செல்லும் 23-C போன்ற பேருந்துகளில் சாதாரண நாட்களிலேயே செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து
வெளியேற்றப்பட்ட நீர் போலக் கூட்டம் திமுதிமுவென்று ஏறும். வார விடுமுறை நாட்கள் என்றால்
கேட்கவே வேண்டாம். சத்யம் தியேட்டர் தொடங்கி, சாந்தி தியேட்டர் வரை செல்லும் அனைத்து
கோஷ்டிகளும் இடித்துப் பிடித்து இடம் பிடிக்கும். அப்போதுகூட ஈவிரக்கமே இல்லாமல்,
“தம்பி.. கொஞ்சம் இடிக்காம நில்லேம்பா” என்று சொல்லும் திருமதிகளை என்ன சொல்வதென்று
தெரியவில்லை. எங்களுக்கு மட்டும் பேருந்துக்குள் அரசாங்கம் என்ன பட்டா போட்டு, நிலமா
ஒதுக்கியுள்ளது? இதையே நாங்களும் திரும்பக் கேட்கலாமல்லவா, “மேடம்… வயசுப் பசங்கள கொஞ்சம்
இடிக்காம நில்லுங்க” என்று.
ஆண் இருக்கை, பெண் இருக்கை
என்று தனித்தனி வரிசை ஒதுக்கியாயிற்று. இவற்றைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், பெண்கள்
இருக்கைகள் காலியாக இருந்தாலும்கூடஆண்கள் வரிசையிலேயே உட்காரும் தம்பதியரை என்ன சொல்வது?
“மேடம்… கொஞ்சம் அந்தப் பக்கம் போய் உக்கார்றீங்களா? ஜென்ட்ஸ் சீட் காலியா இல்ல. ஆனா,
உங்களுக்குத்தான் அந்தப் பக்கம் நெறைய சீட் காலியா இருக்கே?” என்று கேட்டால், கணவன்
– மனைவி இருவரும் சேர்ந்தே சண்டைக்கு வருவார்கள். “எளவட்டம்தானே நீ? கொஞ்ச நேரம் நின்னுட்டு
வாயேன்” என்று முடியும் அப்பிரசங்கம், கல்யாண வீட்டிற்குச் சென்று கருமாதி விசாரித்து
அடி வாங்கிய நினைப்பைத் தரும். ‘யப்பா… நிக்கிறதுக்கு யங் பீஸென்ன, ஒல்டு பீஸென்ன?
நின்னு, நின்னு என் லெக் பீஸ் போயிடும் போலிருக்கேய்யா…’ என்று வடிவேலு மாடுலேஷனை மைண்ட்வாய்ஸில்
ஓடவிட்டபடியே பயணத்தைத் தொடர வேண்டியதுதான்.
இது எல்லாவற்றுக்கும் உச்சக்கட்டமாக
அமைவது கடைசி சீட் கலவரங்கள். கடைசி வரிசையில் மட்டும் பிரிவினைகள் நீங்கி, ஆறு இருக்கைகள்
அடுத்தடுத்து அமைக்கப் பட்டிருக்கும். அதைச் சரிபாதியாகப் பிரித்துக் கொள்ளக் கூட ஆண்களுக்கு
அனுமதி கிடையாது. ஆண்களுக்கான மூன்று இருக்கைகள் ‘டெம்ப்ரவரி ஸ்டாஃப்’ போல; எப்போதும்
நிச்சயம் அற்றது. கூட்டம் அதிகமாகி அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டால், நிற்கிற
பெண்களுக்கு நாமாகவே எழுந்து வழி விட வேண்டும். நாம் பாட்டுக்கு கண்டுகொள்ளாமல் உட்கார்ந்திருந்தால்,
நேரடியாகக் கேட்க மாட்டார்கள். “பொம்பளைங்க இங்க நின்னுட்டிருக்கோமேன்னு கொஞ்சமாச்சு
அறிவிருக்கா, இரக்கம் இருக்கா? பிரம்மகத்தி, கட்டையில போக” என்று அந்தக் காலத்துக்
கெட்ட வார்த்தைகளை அகரவரிசைப்படிப் பட்டியலிட்டு, ‘பீப் சாங்’ எழுதிய சிம்புவுக்கே
சவால் விடுப்பார்கள். எவ்வளவு சீக்கிரம் அவ்விடத்தை விட்டு எழுகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு
நமது முன்னோர்கள் அவமானப்படுவது தடுக்கப்படும். இரண்டு, மூன்று நிமிடங்கள் சிலை போல
உட்கார்ந்திருந்தால், குலம், கோத்ரம் என நமது குடும்ப வேரையே பிடுங்கிச் சிதைத்துச்
சின்னாபின்னமாக்கி விடுவார்கள்.
சில அம்மையார்கள் வேற லெவலுக்குச்
சென்று, நடத்துனரின் இருக்கையில் அமர்ந்துகொண்டு, “ஹலோ… இது லேடீஸ் ரோ. நீங்கதான் வேற
எங்கேயாச்சும் போய் உக்காரணும்” என்று தடாலடி செய்வதும் உண்டு.
பயணச்சீட்டுப் பரிசோதகர்கள்
கூடப் பல நேரங்களில் பெண்களிடம் சீட்டைப் பற்றிக் கேட்கவே மாட்டார்கள். இது பெண்களின்
மேல் உள்ள நம்பிக்கையா, அல்லது அவர்களது திருவாயில் வெளிப்படும் கெட்ட வார்த்தைகளைப்
பற்றிய பயமா என்பது புரியாத புதிராகவே உள்ளது.
”இவ்ளோ கோவப்படுற ஆளு, பைக், கார்னு எடுத்துக்கிட்டுச் சுத்த
வேண்டியதுதானே? ரொம்பத்தான் நொட்ட சொல்ற?” என்று கேட்பவர்களே! அதற்கெல்லாம் வசதி இருந்தால்
எங்களைப் போன்ற கல்லூரி மாணவர்கள் அனைவரும் மழைக்குக் கூடப் பேருந்து நிறுத்தங்களில்
ஒதுங்க மாட்டார்கள். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே!’ என்று சொன்ன திருமூலரைப் போல,
‘என் கடன் திட்டு வாங்கிப் பயணம் செய்வதே’ என்று சொல்லித் தேற்றிக் கொள்வதைத் தவிர
வேறு வழி தெரியவில்லை. ஏனெனில், இதுவும் கடந்து போகும்!
No comments:
Post a Comment