அன்று
அகம் புறம் மறந்து
அக்கம்பக்கத்து வீட்டாருடன்
அரட்டையடித்த பாட்டிகளை
“வம்படிக்குது கெழம்”
என்றே பழித்தோம்
இன்று
அந்தரங்கமும் அலப்பறையும்
அனுபவங்களும் அல்லல்களும்
அகாலங்களும் அனைத்தும்
முகாந்திரமற்று ஆக்கிரமிக்கின்றன
முகநூல் எனும்
பேரண்ட வெளியின் சராசரத்தை!
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்
நொடிக்கொரு சண்டையும் மணிக்கொரு போராட்டமும்
வெடித்துக் கிளம்பிப் புகையைக் கிளப்பி – பின்
நொடித்துக் குழம்பி நகையை வரவழைக்கும்
இவையும் இன்ன பிறவும் கண்ட
இளங்கோவடிகளின் ஆவி
சொர்க்க லோகத்தில்
மாடர்ன் சிலப்பதிகாரத்தைப்
படைத்துக் கொண்டிருந்தது;
பெண்மையைப் போற்றுதும் பெண்மையைப் போற்றுதும்
எனும் அடி
ஃபேஸ்புக்கைப் போற்றுதும் ஃபேஸ்புக்கைப் போற்று தும்
என்றே மாறியது
முழுவதுமாக எழுதப் பிரயத்தனப்பட்ட
சிலம்புக் கவிஞரின் ஆவி
நான்கு நான்கு அடிகளாய்த் தொகுத்து
முகநூல் பக்கத்தில்
பதிவு செய்தது
’டைனி டெர்ரிபிள் டேல்’களாய்…
மறுபக்கம்
வள்ளுவனின் ஆவி
திருக்குறள் படிக்காத
’தமிழ் மறவர்’களுக்காக
ட்வீட்டுகளாகப் பதிவுசெய்தது
ஒண்ணேமுக்கால் அடிகளை!
Super -
ReplyDeleteபார்க்க முகநூல் நேரப்படி பார்த்தபின்
விரைக அடுத்த தகவலுக்கு
அது மட்டுமன்றி, முன்னர் பார்த்த அனைத்து தகவல்களையும், பொங்கிய எல்லா உணர்ச்சிகளையும் மறந்து விடுக...
Delete