Sunday, January 15, 2017

அ(பொ)ங்கலாய்ப்புகள்

பண்டிகைக்காலங்களில் இரண்டு பிரச்சனைகள்தான் தலையாய மண்டைக் குடைச்சல்கள்.

1)    “இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக திரைக்கு வந்து சில மாதங்களே/ வாரங்களே/ நாட்களே/ மணிநேரங்களே ஆன புத்தம்புதிய திரைப்படம்என்று அடித்தொண்டையிலிருந்து, நாபிக்கமலம் வழியாகக் கத்திக் கூப்பாடு போடும் தொலைக்காட்சிச் சேனல்கள்.

2)    “எங்க உங்க பெரியவன் வரலையா? சின்னவன் வந்துட்டானா?என்று வம்புக்குத் தயாராகும் அண்டை அயலார் பெருமக்கள்.

பொங்கல் என்று வந்துவிட்டால் இவ்விரண்டு விஷயங்களும் ஒருபடி மேலே சென்று முற்றிய நிலைமையை எட்டிவிடும். வகைதொகையின்றி புதிய படங்களை மாற்றிமாற்றி ஒளிபரப்பி மார்தட்டுவது தமிழர் பண்பாடு அல்லவா? கலாச்சாரக் காவலர்களான சிவகார்த்திகேயனும், சிம்புவும்தான் நம் வீட்டில் பொங்கல் பானை கழுவிவைப்பது போல, ‘உங்களை மகிழ்விக்கும் பணியில்என்ற பின்குறிப்புடன் சில சேனல்கள் இவர்களது திரைப்படங்களை ஒளிபரப்புவார்கள்.

எனினும், நம் பேசுபொருள் இதுவல்ல. வரிசையில் இரண்டாவதாக இருக்கும் வம்படிச் செய்திகளே இங்கு பிரதான இடம் பெருகின்றது. பின்வரும் மக்கள் அனைவரும் இப்பதிவைப் படிக்கவிருக்கும்/படித்துக்கொண்டிருக்கும் அனைவராலும் எதிர்கொள்ளப்பட்டிருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன்.

1)    அநியாய ஆச்சரியம் அம்புஜம் மாமி: முந்தைய நாள் நள்ளிரவு சொந்த ஊருக்கு வந்து, அலைச்சல் அசதியில் அடுத்த நாள் மதியம் ஒரு மணிக்குக் கொட்டாவி விட்டு எழுந்து, சோம்பல் முறித்து, பல்விளக்கியோ விளக்கிக்கொண்டோ வாசலுக்குச் சென்றால், “டேய்... எப்போ வந்த? சொல்லவேயில்ல. ஒவ்வொரு தடவையும் வந்துட்டு இப்படித்தான் சொல்லிக்காமலே ஓடிப்போயிடுறஎன்று புதிதாக வந்த 2000 ரூபாய்த் தாளைக் கட்டாகப் பார்த்த ரீதியில் ஆச்சரியப்படும் மாமியைச் சமாதானப்படுத்துவது, ஏ.டி.எம். வரிசையில் நிற்பதைக் காட்டிலும் கடினமான காரியம்.

”இல்லைங்க, நான் நேத்து ராத்திரிதான்...என்று சொல்லி முடிக்கக்கூட விடாமல், தொடர்ச்சியாகப் பேசி ஆர்.ஜே.பாலாஜிக்கே சவால் விடும் இவர்களது வாய்ஜாலத்தில் கேட்பவருக்குத் தொண்டை வறண்டு, தண்ணீர் தாகம் தவிக்கும்.

ஒருவழியாகப் பேசிமுடித்து, “நீ என்னமோ சொல்ல வந்த?என்று அவர்கள் கேட்கும்போது, நமக்கு மறந்திருக்கும். மூளையைக் குடைந்து, ‘என்னாச்சு?என்று மனதிற்குள் ஒரு சிறிய நினைவலையை ஓடவிட்டு யோசித்துப் பார்த்தால் கூட ‘நேத்து ராத்திரிஎன்னும் இரண்டு வார்த்தைகள் மட்டும் நினைவுக்கு வந்து, அவ்வாக்கியத்தை முடிக்க முடியாமல் திணறும். ‘நேத்து ராத்திரி யம்மா...என்று பாடிக்கொண்டே வந்துவிட வேண்டியதுதான்.

2)    விவகாரமாய் விசாரிக்கும்வீரப்பன் மாமா:
இவர் கொஞ்சம் சிக்கலான நபர். தொலைபேசியை எடுத்தால் ‘ஹலோஎன்றும், நேரில் பார்த்தால் ‘சௌக்கியமா?என்றும் கேட்க வேண்டும் என்ற விருந்தோம்பல் தோன்றாக்காலத்தில் வாழும் விந்தையான மனிதர். ‘வந்துட்டான்யா வைப்ரேஷனுஎன்று பெரும்பாலான நேரங்களில் சுதாரித்துத் தப்பிவிட்டாலும், தப்பித்தவறி முகத்தில் முழித்தால், “என்னப்பா, அடுத்தது எம்.பி.ஏ-வா, இல்ல எம்.எஸ்.-ஆ? என் சொந்தக்காரப் பையன்கூட ‘கேட்பரிட்சை எல்லாம் எழுதினான். கெடைக்கவே இல்ல. ‘கேம்பஸ் இண்டர்வியூவை நம்பி இருக்காத தம்பிஎன்று நீட்டி முழக்குவார். வாழ்வின் அனைத்துத் துன்பங்களையும் அனுபவித்துச் சோர்ந்த விளைவுகளைச் சில நிமிடங்களில் கொடுத்துவிட்டு, முத்தாய்ப்பாக, “உனக்கு ஒண்ணும் சொல்லத் தேவையில்ல. நீ உலகம் தெரிஞ்ச பையன். பாத்துக்கோஎன்று பீடிகை போட்டுச்செல்வார்.

அவர் சென்றவுடன் நேர்மறையான அனைத்து நம்பிக்கைகளும் கரைந்து, நமக்கு நாமே ‘உதவாக்கரைப் பட்டம் கொடுத்துக்கொள்ளும் அளவிற்குச் சந்தேகப்படத் தொடங்குவோம்.யாருய்யா இவன்? அவனா வர்றான், அவனா போறான்என்று பின்னர் இவரைப் பற்றிய தெளிவு பிறக்கும்; இருந்தாலும், அவநம்பிக்கையை விதைப்பதில் இவருக்கு நிகர் இவரே.

3)    நலம் விசாரித்து நரசூஸ் காபி குடிக்கும்நடராஜன் மாமா:
கல்யாணம் – காட்சி, துக்கம் – துயரம் என எந்த நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளாமல், “இவங்க வீட்டுக்கு எப்படிப் போலாம்?என்று யோசித்துக் கொண்டிருக்கும் இவருக்கு, வகையாக வந்து சிக்கிக்கொள்வது ஊரிலிருந்து வரும் மண்ணின் மைந்தர்களான நாம்தான். சூரியன் எழுவதற்கு முன்பாகக் கல்லூரிப் பையன் எழுந்திருக்க மாட்டான் என்பது தெரிந்தும், பையன் வந்திருக்கான்னு கேள்விப்பட்டேன் (அவரே பார்த்திருந்தால் கூட, ‘கேள்விப்பட்டேன்என்றுதான் சொல்லுவார், ‘அப்படியே கேஷுவலா லுக் விடுடாஎன்று அறிவுறுத்தும் சந்தானம் போல); அதான் பாத்துட்டுப் போலாமேன்னுஎன்று அசட்டுச் சிரிப்பு சிரிக்கும் தோரணையில் அம்மாவிற்குத் தெரிந்துவிடும் அவரது எதிர்பார்ப்பு.

அம்மா: ஏதாவது சாப்பிடுறீங்களா?
அவர்: அதெல்லாம் ஒண்ணும் வேணாம்ங்க.
அம்மா: குடிக்க ஏதாவது தரவா?
அவர்: சூடாத் தண்ணி மட்டும் போதும்.
அம்மா: (உள்ளுக்குள் கறுவிக்கொண்டே) இருங்க, காபி போட்டுத்தரேன்.

காபி வரும்வரை ‘தினமணியின் ஒரே பக்கத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பார்; இத்தனைக்கும் அதில் காஜல் அகர்வால் விளம்பரம் கூட இருக்காது.

அம்மாவும் என்னதான் உள்ளுக்குள் திட்டினாலும், நல்ல காபியாகப் போட்டுவிடுவார். அதை உறிஞ்சி உறிஞ்சிக் கடலலையின் ஆரவாரத்தைப் போன்ற சத்தத்துடன் குடித்துவிட்டு, “சரிங்க. எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு. பையன் எழுந்த உடனே நான் விசாரிச்சேன்னு சொல்லுங்கஎன்று வாசலை நோக்கி நடப்பார்.

அத்துடன் போய்விட்டால் பரவாயில்லை. வாயிற்கதவருகே நின்று வாங்கிக்கட்டிக்கொள்வார்.

அவர்: ஆமாம், பையன் எங்க வேலை செய்யுறான்?
அப்பா: சார், அவன் இப்போதான் காலேஜ் படிச்சிட்டிருக்கான்.
அவர்: ஓ (திணறிச் சமாளிக்கிறார்) கரெக்ட். நான் அன்னிக்கு ரமேஷ் வீட்டுக்குப் போயிருந்தேன். அவங்க பையனையும் உங்க பையனையும் கொழப்பிக்கிட்டேன்.
அப்பா: ஓ சரி சரி.
(உள்ளுக்குள்) வழியாத, போய்த் தொலை.

4)    உண்டி கொடுத்து உயிர் எடுக்கும்ஊர்வசி மாமி:
இவர் படுத்தும்பாட்டில் பல்வேறு அம்சத்திட்டங்கள் உண்டு. முதல்நாள் உண்மையிலேயே அக்கறையாகத் தன் பையனுக்கோ, பேரனுக்கோ கொடுக்கும் அதே பாசத்துடன் சுவையான கூட்டு, அவியல் என்று அள்ளி இறைப்பார். சுவையில் மயங்கி, ‘ஆஹா, ஓஹோஎன்று புகழ்ந்துவிட்டால் போதும்; அடுத்த நாள் தெரியாத்தனமாக அதிகமாய் வடித்த அரைவேக்காட்டு அரிசியை எடுத்துவந்து, “கொழந்தைக்குப் பிடிக்குமேன்னு எடுத்துண்டு வந்தேன்என்று வெள்ளந்தியாகச் சிரிப்பார். மறுக்க முடியாமல், அரைமனதோடு வாங்கி, முழுமனதோடு சாப்பிட்ட பின்னர்தான் ‘விளைவுகள்தெரிய ஆரம்பிக்கும்.
(இப்பதிவை எழுதத் தொடங்கிய பின், மூன்று ‘இடைவேளைகள்எடுக்க வேண்டியதாயிற்று.)

‘எதுக்குடா அவங்க குடுக்குறாங்கன்னு எல்லாத்தையும் சாப்பிடுற?என்ற கேள்வி உங்கள் மனத்தில் உதிப்பது தவிர்க்க முடியாத நியதி. மூன்று காரணங்கள் உள்ளன.

1)    உருவத்திற்கும், தின்னும் சோற்றின் அளவிற்கும் சம்பந்தம் இல்லாத அபூர்வப் பிறவி நான்.
2)    எல்லாம் கார்போஹைட்ரேட் தானே?என்று என்றோ வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் அவர்கள் சொன்னதை அப்படியே பின்பற்றும் அப்பாவி ஜீவன் நான்.
3)    ஒருமுறை, பக்கத்துவீட்டில் கொடுத்த பாயசத்தை மாட்டுக்குக் கொட்டுவதைப் பார்த்து, அந்தப் பாட்டி உதிர்த்த பழங்காலத்து வசவுச்சொற்கள் இன்றும் செவிகளில் தேனாய்ப் பாய்கிறது. ‘ஆறாதே நாவினால் சுட்ட வடு’ எனும் குறளின் வாழும் உதாரணம் நான்.

இப்படி ஆயிரம் தொல்லைகள் இருந்தாலும், ஒவ்வொரு பண்டிகைக்கும், அடித்துப்பிடித்துப் பேருந்தில் பயணம் செய்து பெருமையுடன் சொந்த ஊருக்கு வரும் அனுபவமும், வீட்டில் தங்கும் நாட்களும் அலாதியானவை.

ஏனெனில்,
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
இதுதான் என் ஊரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
நீ மோதிப் பாரு

6 comments:

  1. Liked this undi koduthu uyir edukkum mami... ini inda techniquea follow panna vendiyadu daan ;p

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா. சரிதான். யாருகிட்டயும் அடிவாங்காத வரைக்கும் நல்லதுதான்!

      Delete
  2. ஏன்டா அம்பீ.....
    "தோசை தரேன்னு ஆசை காட்டின அல்பை மாமா" தான் உன் அடுத்த டாப்பிக்கா?1.......

    ReplyDelete
    Replies
    1. தலைவரே... உங்களைப் போய் கலாய்க்க முடியுமா? நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ் !

      Delete
  3. Hi nice had a hearty laugh😁😁👌

    ReplyDelete
    Replies
    1. Haha. Guess you are binge reading everything together at a time. Anyways, thanks a lot again maa. Thanks for the read and comment !

      Delete