Wednesday, May 17, 2017

கானல்

கோடையில் ஒரு நாளில்
பாண்டிய நாட்டின் பெயர் சொல்லும் ஊரில்
சுட்டெரிக்கும் வெயிலில்
தெருமுனைக் குழாயில்
யாரோ அசிரத்தையாய் மூட மறந்த நிலையில்
சொட்டுச்சொட்டாய் நீர்த்துளிகள்
தாகத்தால் தவித்த பூமித்தாயின்
தொண்டையை நனைத்தன

கருப்பு வெள்ளை நாயொன்று
வறண்ட நாவுடன்
அங்குமிங்குமாய்ப் பார்த்தபடி
சுருண்ட வாலை ஆட்டியபடி
உரத்து ஊளையிட்டபடி
கல்லடிபட்ட ஒற்றைக் கால் நொண்டி
குழாய் நோக்கிச் சென்றது

தாகத்திற்கும் தீர்விற்குமான இடைவெளியாய்
தகிக்கும் வெயிலில் தார்ச்சாலை
பாளங்கள் வெடித்துப் பிளந்தது
தண்ணீருக்கு ஏங்கியவாறு

சாலையைக் கடக்க எத்தனித்த ஜீவன்
ஐந்தறிவுப் பிராணி
நான்கு சக்கர வாகனத்தின் வேகத்தில்
விக்கித்து நின்றது

கண்ணை மறைக்கும் புழுதியில்
கடந்து சென்றது குடிநீர் வண்டி
நீரற்று வெறுத்த வைகைக்கரையில்
கள்ளழகர் ஆற்றில் இறங்க வசதியாய்த்
தெப்பத்தில் நீரூற்ற

ஆற்றில் இறங்கிய பின்னரும்
ஆற்றாமையால் தவித்த அழகரின்
 கண்ணீரை மறைத்தது
தெப்ப நீர்

(மாநிலத்தையே வாட்டியெடுக்கும் தண்ணீர்த் தட்டுப்பாட்டிற்கு மதுரையும் விதிவிலக்கல்ல. இந்நிலையில்கூட, காலங்காலமாய் நடக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக இப்படி தெப்பம் கட்டி தண்ணீர் கொட்டி இத்திருவிழாவை நடத்த வேண்டுமா என்றெழுந்த வினாவின் விளைவே இப்படைப்பு).

No comments:

Post a Comment