வைக்கம்
முகம்மது பஷீர் எனும் மிகப்பெரிய ஆளுமையின் எழுத்துக்களைப் பற்றிய முதல் அறிமுகம் அவரது ‘மதில்கள்’ (மலையாளத்தில் ‘மதிலுகள்’) எனும்
மொழிபெயர்க்கப்பட்ட நாவலை வாசிக்கும்போது கிடைத்தது. மனித
மனத்தின் ஆசைகளை எளிமையான மொழியின் மூலம் அழகாக வாசகரிடம் கடத்தும் அவரது படைப்பு வியப்பை உண்டாக்கியது.
’மதில்கள்’ வாசித்து
ஓராண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில் தற்செயலாக வீட்டில் ‘காதல்
கடிதம்’ எனும்
அவரது நாவலை வாசிக்க நேர்ந்தது. சுகுமாரன்
மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வந்துள்ள இந்நூலை வாசிக்கத் தூண்டிய முதற்காரணம், புத்தகத்திலிருந்த பக்கங்களின் எண்ணிக்கை. ஒரு
முறை உட்கார்ந்து வாசித்துமுடிக்கக்கூடிய அளவேயிருந்த அப்புத்தகத்தைக் கவனம் சிதறாமல் படிக்க முடிந்தது (மாறிவரும் ‘ஃபாஸ்ட் ஃபுட்’ காலத்தினால்
பாதிக்கப்பட்டு, நூல்களும்கூட சிறிய அளவில் வரவேண்டும் எனும் பைத்தியக்காரத்தனமான எண்ணங்களை வளர்த்துக்கொண்டுள்ள சில்வண்டுத் தலைமுறையைச் சேர்ந்தவன் நான்).
இந்நூலை
நாவல் என்றோ, புதினம் என்றோ வகைப்படுத்த
முடியுமா, முடியாதா எனும் பண்டித விவாதங்களைத் தாண்டி,
நல்ல ஒரு படைப்பை அனுபவித்த உணர்வைத் தருவதுதான் இப்புத்தகத்தின் வெற்றி.
கேசவன்
நாயர் எனும் ஆணுக்கும், சாராம்மா எனும்
பெண்ணுக்குமான காதல் உரையாடல்களே புத்தகத்தின் சாராம்சம், ஆன்மா,
ஆதி, அந்தம் என அனைத்துமாய் இருக்கின்றன.
‘பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் வளர்கின்ற காதல் அதிசயம்’
எனும் வரிக்கேற்ப விடலைப் பருவத்திற்கேயுரிய சீண்டல்களும், ஏக்கங்களும் கலந்த இயல்பான காதலாய் வெளிப்படுகிறது கேசவன் நாயர் – சாராம்மா காதல். 1943-ல் வெளிவந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும்
கூற்று சற்றேனும் நம்பமுடியாத அளவுக்கு, நூலானது இன்றும் மிகவும் தொடர்புபடுத்தக்கூடியதாக
இருப்பதற்கான ஒரே காரணம், காலத்தால் மாறாத காதல் உணர்வு என்றே
எண்ணத் தோன்றுகிறது.
இயல்பாகவே
மனத்தில் பட்ட எண்ணத்தை அவசரகதியில் சொல்லும் (அல்லது கேசவன் நாயரைப் போல எழுதும்) விடலைப் பருவ ஆணின்
எண்ணங்களும், அதிகமாக யோசித்து நிதானமான, தெளிவான முடிவை எடுக்கும் பெண்ணின் எண்ணங்களும் முட்டிமோதும்போது எழுகின்ற
குமுறல்களும், சிறிய ஏமாற்றங்களும, உரையாடல்களின்போது
தானாகவே வரும் சீண்டல்களும் எனப் புத்தகம் எழுத்துக்களின் வழியாக, சொற்களின் வழியாக, வாக்கியங்களின் வழியாக வாசகனின் மனத்தில்
இனம்புரியாத ஒரு புளகாங்கிதத்தைத் தோற்றுவிக்கிறது.
கேசவன்
நாயரை மனத்தில் நினைப்பதற்கு மாதச் சம்பளம் கேட்கும் சாராம்மாவைப் பார்த்து முகஞ்சுளிக்க
முயலும் எனது ஆண்பால் மனோபாவத்தைத் தாண்டி, நாவலின் அப்பகுதி குறிப்பால் உணர்த்தும் செய்தி அபாரமானது. அன்றும், இன்றும் ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணிற்குள்ளும்
இருக்கும் மனவோட்டங்களுக்கும், குடும்ப உறுப்பினர்கள் குறித்த
முடிவிலாக் கவலைகளுக்கும், இன்னும் சொல்ல முடியாத, மடைதிறவா உணர்ச்சிகளுக்கும், இன்ன பிற உளைச்சல்களுக்கும்
ஈடுஇணையாகப் பணத்தைக் கொடுக்க முடியுமா எனும் அகக்கேள்வி நெருப்பெனச் சுடுகிறது.
கேசவன்
நாயர் வெளிப்படையாக உரைக்கும் சொற்களும், சாராம்மா பெரிதாக ஆர்ப்பாட்டங்கள் ஏதுமின்றி காதலைச் சிறிதுசிறிதாய் ஏற்பதும்
மேலோட்டமாகப் பார்க்கும்போது, நாம் காலங்காலமாய்த் திரையில் பார்த்துப்
புளித்துப்போன சமாச்சாரங்கள் நினைவலைகளாக வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால், நாவலின் முக்கியமான வெற்றி என்பது முடிவெடுக்கும்
உரிமையை அப்பெண்ணிற்கும் அளிப்பதில் புலனாகிறது. கேசவன் நாயர்
வெறுமனே தன்னைக் காதலிப்பதாகப் பசப்பு வார்த்தைகளால் சொல்வதை மட்டுமே நம்பி,
சாராம்மா ஒரு முடிவை எடுப்பதில்லை; மேலும்,
திருமணத்திற்குப் பிறகான தாம்பத்திய வாழ்க்கை பற்றிய கேள்விகளும்,
கவலைகளும் சாராம்மாவுக்கே தோன்றுகின்றன. ‘பிறக்கப்போகும்
பிள்ளைகளுக்கு என்ன பெயர் வைக்கப் போகிறோம்?’ எனும் கேள்வியில்
தொடங்கி, ‘அக்குழந்தைகள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருப்பார்கள்?’
எனும் வினா வரை அனைத்துமே சாராம்மாவிடமிருந்தே வருகின்றன. மாறாக, தனக்கு அப்பெண் கிடைத்தால் போதும்; அனைத்தையும் சாதித்து விடலாம் எனும் தட்டையான பார்வையே கேசவன் நாயரின் கதாபாத்திரத்திடமிருந்து
வெளிப்படுகிறது.
மேலே
சொல்லப்பட்ட இரு கேள்விகள், மரத்தின் கிளைகளைப்
போல் பிரிந்து பல்வேறு ரீதியிலான கேள்விகளை எழுப்புகின்றன. மேலோட்டமாகப்
பார்க்கும்போது குழந்தைகளின் பெயர் என்ற அம்சமே நமக்குத் தெரிந்தாலும், கலப்புத் திருமணம் செய்துகொண்ட ஒரு தம்பதியரின் அடுத்த தலைமுறை எதிகொள்ளும்
சமூக உளவியல் சிக்கல்களைப் போகிறபோக்கில், பொட்டிலடித்தாற்போல்
புட்டுவைக்கும் பஷீரின் எழுத்தாளுமை பிரமிப்பூட்டுவதாயிருக்கிறது. ‘பாம்பே’ திரைப்படத்தில் வரும் காட்சிகளை ஒப்பிடாமல் இருக்க
முடியவில்லை.
அதேபோல்
வாழ்க்கை மீதான அவநம்பிக்கை நம் ஆழ்மனத்தில் திரைக்காட்சிகளால் எப்படித் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன
என்று எண்ணுவதற்கான வாய்ப்பாக இந்நூல் அமைந்தது.
நாவலில் வரும் இரு காட்சிகளை வைத்து இதனை விளக்க முடியும்.
1)
கேசவன் நாயரைத்
தன் மனத்தில் நினைக்க வேண்டும் என்றால் அது ஒரு வேலை என்றும், அதற்குக் கூலி வேண்டும் என்று குறும்பாக சாராம்மா
கேட்கும்போது, பணம் தரச் சம்மதிக்கிறான் கேசவன் நாயர்.
’எங்கே அவள் அப்பணத்தை எடுத்துக்கொண்டு வேறொருவனைத் திருமணம் செய்துகொண்டு
ஓடிவிடுவாளோ?’ எனும் எதிர்மறை எண்ணம்தான் முதலில் மின்னலென வெட்டுகிறது.
ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. உலகம் உண்மையில் நல்லவர்களால் நிறைந்தது, நம் பார்வைதான்
மாற வேண்டும் என்று சம்மட்டியால் அடித்து யாரோ மூளையில் உரக்கக் கத்துவது போலிருந்தது.
2)
இருவரும்
குடும்பத்தை விட்டு விலகிச் சென்று, திருமணம் செய்துகொண்டு வாழலாம் என்று முடிவுசெய்யும்போது, ‘ஒருவேளை இருவரில் ஒருவர் வராமல் ஏமாற்றிவிடுவாரோ? அல்லது,
வீட்டிற்குத் தெரிந்து அடித்து, உதைத்துக் கொன்றுவிடுவார்களோ?’
எனும் குரூரமான கேள்விகளே எழுகின்றனவேயொழிய, ‘இவர்கள்
சேர்ந்து வாழப் போகிறார்கள்’ எனும் நற்கருத்து மனத்தில் உதித்ததாக
நினைவில்லை.
Super machi great going
ReplyDeleteThanks a lot machi ! :D
DeleteGlad you liked it.
Keep supporting !!!