Thursday, April 19, 2018

தம்பி


ரஜினியின் ‘படிக்காதவன்’ தொடங்கி தனுஷின் ‘வேலையில்லாப் பட்டதாரி’ வரை அண்ணன் எனும் உறவைத் தெய்வத்தினும் மிகைப்படுத்தியாயிற்று. அல்லாவை வணங்கும் அனைவரும் தீவிரவாதிகள் என்றும், பட்டை நாமம் போட்டவன் எல்லோரும் சாதி-மதம் பார்ப்பவர்கள் என்றும் பதிந்துவிட்ட எழுதப்படாத விதி போல, அண்ணன் என்றால் தியாகி, தம்பி என்றால் ஊமைக் குசும்பன் என்றும் ஒரு நியதியை நிலைநாட்டிவிட்டோம். (இது ஒருபுறமென்றால் கல்லூரியில், “அண்ணங்கடா, தம்பிங்கடா” என்றும், “தங்கச்சி, நல்லாயிருக்கியாம்மா?” என்றும் வெளியில் பேசிவிட்டு உள்ளே கூத்தடிக்கும் கும்பல்கள் மறுபுறம். அவற்றைப் பற்றிப் பேச இது நேரமல்ல.)

உண்மையில் குழந்தை வளர்ப்பும் அனுபவத்தில் மிளிரும் ஒரு கலையே. எனவே மூத்த வாரிசுக்கில்லாத சில வாய்ப்புகள் இளையவர்களுக்குக் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் சற்றே அதிகம். அவ்வளவே. அதற்காக ஒரேயடியாக மாடிக்குச் சென்று சாராயத்தைக் குடித்துவிட்டு, ‘ஊதுங்கடா சங்கு’ என்று ஆடும் அண்ணன்கள் எல்லாம் “தியாகிடா” என்று வசனம் பேச முடியாது. உளவியல் ரீதியாகப் பல்வேறு பாதிப்புகளை உருவாக்கும் ஒரு கண்ணோட்டம் இது.

பார்த்திபன் நடித்திருந்த ‘கண்ணாடிப் பூக்கள்’ என்ற திரைப்படம் இதன் உச்சக்கட்டம். கண்டுகொள்ளப்படாமல் விடப்படும் ஒரு சிறுவன் (மூத்த மகன்), இளைய வாரிசுக்குக் (கைகுழந்தை) கிட்டும் அன்பையும், அரவணைப்பையும் கண்டு வெதும்பி வன்மம் கொள்வதாகச் சித்தரிக்கும் இத்திரைப்படத்தைப் போல, உண்மையான குடும்பங்கள் இருக்குமா எனும் கேள்வியை ஆராய வேண்டியிருக்கிறது.

சரி, அப்படி என்ன இந்த அண்ணன்கள் தியாகங்கள் செய்துவிட்டனர் என்றுதான் பார்ப்போமே! ’தாமரை’க் கட்சிக்குப் பிடித்தமான புராணங்களில் (புருடாக்களில்) ஒன்றான இராமாயணத்தை எடுத்துக்கொள்வோம். இராமர் சீதையுடன் காட்டுக்குச் சென்றார் என்பதற்காக உடன் இலக்குவன் செல்கிறான் என்றால் யார் தியாகி? ‘டூயட்’டும், ‘கிளைமாக்ஸ்’ ஹீரொயிஸமும் இராமருக்குத்தான் என்றால், எதற்கு இப்படி ஒரு அல்லக்கைக் கதாபாத்திரம்? (உடனே பொங்கியெழுந்து ‘கம்பராமாயண’த்திலிருந்து “இலக்குவனும் ஹீரோதான்” என்பதற்கான சான்றுகளை முன்வைக்கும் முன்பாக மனசாட்சியைத் தொட்டுச் சிந்தியுங்கள். இலக்குவன் எனும் தம்பி ‘செகண்ட் ஃபிடில்’ தானே?)

அட, புராணங்களை விடுங்க! தினசரி சம்பவங்களையே பார்ப்போம். அப்பா, அம்மா இல்லாத நேரத்தில் வரும் விருந்தினர்கள் கூட, “அண்ணன் கிட்ட சொல்லிட்டுப் போறோம்” என்று தம்பிகளைப் பொருட்டாகவே மதித்ததாக ‘எஸ்.டி.டி.’ இல்லை. அவர்கள் கையில் வைத்திருக்கும் பழங்கள், இனிப்பு வகைகளைக் கூட்த் தப்பித்தவறித் தரமாட்டார்கள். அவ்வளவு இளக்காரம்!

ஒரே பள்ளியில் இருவரும் படித்தால் யாரும் “இவனோட அண்ணன் அவன்” என்று சொன்னதில்லை. அண்ணன் படித்தவன், படிக்காதவன் எவனாயிருந்தாலும் தம்பியாகப் பட்டவன் “அவனோட தம்பி”தான். நல்லதோ கெட்டதோ, “உங்க அண்ணன் அப்படியெல்லாம் இருந்தான், செய்தான்” என்று முதலில் சொல்லிவிட்டுத்தான் ஆசிரியர்கள் தம்பியான என் போன்றவர்கள் குறித்துப் பேசுவார்கள். பேச்சின் ஆரம்பம், முதன்மைப் பாத்திரம் அனைத்தும் அண்ணன்களாகவே இருப்பர்.

தம்பி என்பவன் ஒரு காரியத்தில் தோல்வியுற்றால், “உங்க அண்ணன் அப்படி செஞ்சான்” என்று தோற்றவனைத் தேற்றாமல், வென்றவனைப் புகழ்வார்கள். அதே தம்பி அக்காரியத்தில் வெற்றி பெற்றாலும், “உனக்கென்னப்பா? செல்லப்பிள்ளை நீ! உனக்குக் கெடைச்ச பல விஷயம் உங்க அண்ணனுக்குக் கிடைச்சதில்லை” என்று எளிதாகக் கடந்துவிடுவார்கள். உண்மையில் ‘திறமை’ எனும் சொல்லுக்கான அர்த்தம் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் அப்பாவி தம்பி மட்டும்தான். மகிழ்ச்சியான ஒரு வெற்றி கிட்டினால் கூட, “உண்மைலயே இது நம்ப தெறமையாலதான் கெடைச்சுச்சா? இல்ல, அம்மா-அப்பா நமக்குச் கொஞ்சம் அதிகமா செல்லம் குடுத்ததுனால வந்ததா இதெல்லாம்?” என்று தொடங்கி, “நமக்குத் தெறமையே இல்லையோ? உண்மைலயே நாம எதுக்கும் லாயக்கு இல்லதான் போல” என்பது வரை சிந்தித்து மைண்ட்வாய்ஸிலேயே சோகப் பாட்டுக்களை ஓடவிட்டுக் குமுறுவது தம்பி மட்டும்தான்.

குடும்பத் தலைவராகப்பட்டவர் கல்யாணம், காட்சி என்று எதற்கேனும் போகமுடியாத சமயங்களில் அண்ணன் சென்றால், “தலைச்சன் வந்துட்டான்” என்று மெச்சும் சமூகம், தம்பி சென்றால் “அண்ணன் எங்கப்பா? நீ மட்டும் வந்துருக்க?” என்றுதான் வினவும். அந்தக் கேள்வியோடு விட்டால் பரவாயில்லை. “சின்னப்புள்ளைய அனுப்பி அவமரியாத பண்ணிட்டாங்க” என்று வீறுகொண்டெழுந்து, உறவைப் பகைத்துக்கொண்ட ‘கலாச்சாரக் காவலர்க’ளைப் பார்த்த அனுபவம் எனக்குண்டு. தம்பியாகப்பட்டவன் நசையாக உணரும் தருணங்கள் இவை. “*த்தா, என்னையெல்லாம் பாத்தா மனுஷனாத் தெரியலயா?” என்று அடிவயிற்றிலிருந்து கிளம்பும் புகை வாயடைப்பினால், காது வழியே வெளியேறும்.

தம்பிக்கு முன்பாகவே படிப்பை முடிக்கும் அண்ணன், வேலைக்குச் சென்றுவிட்டால், “அய்யய்யோ… நாமளும் சாத்திட்டு ஒழுங்காப் படிச்சு வேலைக்குப் போகணும்” என்ற நடுத்தர வர்க்க அழுத்தம் தானாக உள்சென்றுவிடும். மாறாக அண்ணன் என்பவனுக்கு வேலை கிடைக்காவிட்டாலும் “அய்ய்ய்யோ… அம்மா அப்பா சீக்கிரம் ரிட்டையர் ஆயிடுவாங்க. நாம ஒழுங்கா வேலைக்குப் போயிடணும் கடவுளே” எனும் பாரமும் தம்பியுடையதுதான். இதையெல்லாம் சொல்ல எந்த வி.ஐ.பி.யும் சிகரெட் புகையை ஊதிக்கொண்டு வரமாட்டார்கள்.

அண்ணன் மேற்படிப்புப் படித்தால், “அவன் அவ்ளோ படிச்சிருக்கான்; நீயும் படி” என்றொரு பரிந்துரையையும், அவன் மேற்படிப்பு வேண்டாம் என்று முடிவெடுத்தால், “அவன் படிக்கலை, நீ படி” என்ற கிறுக்குத்தனத்தையும் பக்கத்துவீட்டு வம்பு மாமியிடமும், எதிர்வீட்டுப் பென்ஷன் தாத்தாவிடமும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் எதிர்கொள்வது தம்பிதான்.

’அடையாளம்’, ‘தனித்தன்மை’ என்றெல்லாம் பெனாத்திக்கொண்டிருக்கிறார்களே இந்தத் தன்னம்பிக்கைப் பேச்சாளர்கள் எனும் கொள்ளைக்கூட்டம்… அந்தக் கும்பலில் தம்பியாக ஒரே ஒருவர் பிறந்திருந்தால் கூட, இந்த தனித்தன்மையை ஏற்படுத்திக்கொள்வது எவ்வளவு பெரிய வேலை என்பது தெரிந்திருக்கும்.

கடமைக்குத் ‘தம்பியுடையான் படைக்கஞ்சான்’ என்று பழமொழியை மட்டும் வைத்துக்கொண்டு தம்பி எனும் உறவைப் பெருமைப்படுத்திவிட்டோம் என்று எவனாவது மார்தட்டினால், அவனது பொடனியில் அடித்து முதலில், “சீ… மூடிட்டு உக்காரு” என்று சொல்லவேண்டும். அரிதினும் அரிது மானிரடாய்ப் பிறத்தல்! அதனினும் அரிது தம்பியாய்ப் பிறத்தல்! அதனினும் அரிது சொந்தமாய் ஓர் அடையாளம் ஏற்படுத்துதல்!

3 comments:

  1. “சின்னப்புள்ளைய அனுப்பி அவமரியாத பண்ணிட்டாங்க” என்று வீறுகொண்டெழுந்து, உறவைப் பகைத்துக்கொண்ட ‘கலாச்சாரக் காவலர்க’ளைப் பார்த்த அனுபவம் எனக்கும் உண்டு��

    ReplyDelete
  2. ஒரே பள்ளியில் இருவரும் படித்தால் யாரும் “இவனோட அண்ணன் அவன்” என்று சொன்னதில்லை. அண்ணன் படித்தவன், படிக்காதவன் எவனாயிருந்தாலும் தம்பியாகப் பட்டவன் “அவனோட தம்பி”தான்....true but


    "அண்ணன் உடையான் படைக்கு அஞ்சான்" என்று பழமொழியையே திருத்தி எழுதக்கூடிய அண்ணன்மார்கள் இருக்கும் வரை இந்த அடையாளமும் சுகம் தான்

    ReplyDelete