”மச்சான், சாரி டா. ஒரு ட்வெண்ட்டி
மினிட்ஸ்ல வந்துடுறேன். கொஞ்சம் லேட்டாயிடுச்சு” என்ற நண்பனிடம், “ஒண்ணும் பிரச்சனையில்லடா,
பொறுமையா வா” என்றபடி இணைப்பைத் துண்டித்தேன். மாதா கோயில் தொடங்கி முருகன் இட்லிக்கடை
வழியாக தொடங்கிய நடை, டோசையில் ஒரு முறை நின்றிருந்தது. கோலி வடாபாவில் ஒரு முறை நின்றிருந்தது.
முருகன் இட்லிக்கடையில் சிற்றுண்டி என்பது ஏற்கனவே முடிவுசெய்யப்பட்டுவிட்டதால் முன்பசியை
மட்டும் ஒரு பனீர் டிக்கா தோசையிலும், சீஸ் வடாபாவிலும் தணித்திருந்தேன்.
வழக்கமான எலியாட்ஸ் கடற்கரைக் கூட்டம்.
பணக்காரப் பயபுள்ளைகள் பீட்சாவிலும், பர்கரிலும், விலை மிகுந்த சிகரெட்டுகளிலும் திளைத்திருக்க,
நான் அன்று செலவான/செலவாகப் போகும் தொகையைக் கணக்குப் போட்டுக்கொண்டிருந்தேன். கால்
தன்போக்கில் மீன் விற்பவர்களையும், ”அண்ணே இந்த ஒரு ஸ்டிக்கர் அட்டை மட்டும் வாங்கிக்கோங்கண்ணே”
என்று கெஞ்சிய சிறுவர்களையும், புல்லாங்குழல் வாசித்து விற்பவரையும் கடந்து சாலையில்
ஊர்ந்தது.
ப்யூப்பிலின் அருகே இருந்த வறுவல்
கடை சுண்டியிழுத்தது. முருகன் இட்லிக்கடையின் பொங்கலும், தோசையும், பொடி இட்லியும்
கண்முன் வந்து போனதால் சாலையைக் கடந்து நடைபாதையினூடே கடல் நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
மணி இரவு ஒன்பதரையைத் தொட்டுவிட்டபடியால் கடற்கரையில் பெரிதாய்க் கூட்டமில்லை. பஜ்ஜிக்
கடைகளின் தகடுகளில் அமர்ந்து ஏகாந்தமாய்க் கொஞ்சிக்கொண்டிருந்தனர் காதலர். மணலில் செருப்புக்கால்
பட்டு அழுந்தி அடுத்த அடி வைக்கையில் முன்வைத்த சுவடு வேகத்தடையைப் போன்ற வடிவம் பெற்று
வந்தது வசீகரமாய் இருந்தது. தீப்பொறி பறக்க சோளத்தை வேகவைத்துக்கொண்டிருந்தனர் ஓரிருவர்.
தலப்பாக்கட்டி இருக்கும் பகுதியை நோக்கி வந்துவிட்டதை உணர்த்தியது சமீபமாய் அதிகரித்திருந்த
இரைச்சல். அப்பகுதியை விட்டகன்று கடலுக்கு
மிக அருகில் கரையில் அமர்ந்தேன். சாலையை விட்டு இருநூறு மீட்டர் உள்ளிருக்கும் கடலுக்கருகில்
செல்லச்செல்ல பிற ஓசைகள் அனைத்தும் மட்டுப்பட்டுக் கடலின் ஆர்ப்பரிப்பு மட்டுமே செவிகளில்
ஒலிக்கத் தொடங்கியது.
மணலில் அமர்வது இதமாயிருந்தது.
வேறொரு நாளாயிருப்பின் அலுவல் உடையில் மண் ஒட்டுவது குறித்து ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்திருப்பேன்.
அன்று அதைப் பற்றிய பிரக்ஞை இருக்கவில்லை. சத்தமாய் அலறாமல், மெலிதான ஓசையுடன் காதடைக்கும்
காற்று வீசிக்கொண்டிருந்தது. முப்பது வயதையொத்த இரு ஆண்கள் கரையில் அமர்ந்து முதலீடுகள்,
பங்குச்சந்தை பற்றி விவாதித்துக்கொண்டிருக்க, பெண்கள் இருவர் கடலில் விளையாடிக்கொண்டிருந்தனர்.
கடலில் குழந்தைகள் விளையாடுவதற்கும், பெரியவர்கள் விளையாடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள்
இருக்கவே செய்கின்றன. குழந்தைகள் கடலில் இருக்கும்போது, கடல் போல எல்லையற்றிருக்கவே
விரும்புகின்றனர். உப்புத் தண்ணீர் வாய்க்குள் சென்றுவிடுவது பற்றியோ, கால்சட்டை முழுவதுமாய்
நனைவதைப் பற்றியோ இம்மியளவும் கவலைப்படுவதில்லை. கடலில் கால் நனைக்கும் நேரம் அதிகமாக
அதிகமாக உன்மத்தம் பெருகி, கால்களால் தண்ணீரை உதைத்து எதிரிலும், அருகிலும் இருப்பவர்களின்
மீது தெளிக்கின்றனர். நேரம் செல்லச் செல்ல தாளகதி அதிகரிக்கிறது. கரையில் அமர்ந்து
குழந்தைகளின் கால்கள் குதியாட்டம் போடுவதைப் பார்த்தால் கண் தானாகவே சொக்கிவிடும்.
பெரியவர்களிடம் அதையெல்லாம் காண முடிவதில்லை அவர்களுக்குக் கடலும், பங்குச்சந்தையும்
ஒன்றுதான். ஆழம் பார்த்துப் பாதுகாப்பாக கால்களை மட்டும் மேலோட்டமாய் நனைத்துவிட்டு
ஓடிவந்து விட வேண்டும். ஐந்திலிருந்து பத்து நிமிடம் வரை நின்றுவிட்டால் எப்படியோ அவர்களுக்கு
மட்டும் திருப்தி வந்துவிடுகிறது. “சமையல் செஞ்சாச்சு”, “பசங்களுக்குக் கல்யாணம் பண்ணி
வெச்சாச்சு” என்பது போல “கடலில் கால் நனைச்சாச்சு” என்பதும் மற்றுமொரு கடமையே அன்றி
வேறில்லை.
கடலுக்கு மிக அருகில், ஆனால் நீர்
நனைக்காத ஓரிடத்தில் அமர்ந்து ஈரப்பதத்தையும், அவ்வப்போது தெறிக்கும் நீர்த்திவலைகளையும்
அனுபவிப்பதும் அலாதியாகத்தான் இருந்தது. காற்றின் வேகத்தில் முடி கலைந்து அங்குமிங்குமாய்
ஊஞ்சலாடிக்கொண்டிருந்தது. ஆட்டத்தை நிறுத்துவதற்காகத் தலையை மேலே தூக்கி, வானத்தைப்
பார்த்தேன். வீடுகளின் சுற்றுப்புறச் சுவர்களில் பதிக்கப்பட்ட கண்ணாடித் துண்டுகளைப்
போல் கேசம் குத்திட்டு நின்றது. பிரகாசமாய் இல்லாவிட்டாலும், நிலவு தன் இருப்பை மங்கலாய்
உணர்த்தியது. மண்டையை அங்குமிங்குமாய்ச் சிலுப்பி, மேலும் கீழுமாய் அசைத்து தலைமுடியுடன்
விளையாடிக்கொண்டிருந்தேன்.
கைப்பேசி அழைப்பு வருவதைப் போல்
தோன்றியதால் திரையை ஒளிர்வித்தபோது ஏற்கனவே திறந்திருந்த ‘கானா’ செயலி மட்டுமே தோன்றியது.
அழைப்பு எதுவும் வந்திருக்கவில்லை. கடைசியாகக் கேட்டிருந்த பாடல், ‘லைஃப் ஆஃப் ரா’மின்
தெலுங்கு வடிவம். முதன்முறை கேட்டதிலிருந்து அக்கணம் வரை வியப்பொன்றையே விடையாய்த்
தந்துகொண்டிருந்த பாடல். சில நாட்களுக்கு முன்பு தெலுங்கு வடிவத்தின் காணொலியை நண்பன்
அனுப்பியிருந்ததையும், “அதே பாட்டுதானே?” என்ற மிதப்பில் கேட்கத் தொடங்கி, அப்பாடல்
மீளுருவாக்கம் செய்யப்பட்டிருப்பதையறிந்து சிலிர்த்ததையும், ஒரே சூழலுக்கான ஒரே அர்த்தமுள்ள
பாடல் அதே இசையமைப்பாளரால் வேறொரு பாணியில் இசையமைக்கப்பட முடியும் என்பதை அறிந்ததையும்,
தமிழில் பாடிய அதே பாடகர் தெலுங்கில் இன்னமும் அட்டகாசமாய்ப் பாடியிருப்பதை உணர்ந்ததையும்
நினைத்துப் பார்த்தேன். அப்பாடல் குறித்த மனவெழுச்சி குறைவதற்கான எந்த்த் தடயமும் தென்படவேயில்லை.
வெறும் தாள வாத்தியத்துடன் தொடங்கிய
பாடல், தூரத்திலிருந்த ஒரு அலையின் முன்னகர்வைத் துவக்கி வைத்தது. படிப்படியாய் முன்னேறி
வந்த அலையைப் போலவே தாளத்துடன் கிடாரும் சேர்ந்து இசைக்கத் தொடங்கியிருந்தது. வயலினும்
இசைக்கோர்ப்பில் கலந்த நேரத்தில் பல்வேறு சிறிய அலைகள் பல திசைகளிலிருந்து ஒன்றுபட்டு
முன்னேறத் துவங்கின. வயலின் தன் பங்கை முடித்துக்கொண்டு பிரதீப் குமாரின் குரலுக்கு
வழிவிடும் நேரத்தில், ஆரவாரமாய் ஆடி வந்த பெரிய அலை அப்பெண்களின் காலை நனைத்துத் திரும்பியது.
‘ஏதாரதுரயினா’ என்று பிரதீப் அடுத்த அலையைத் தூரத்திலிருந்து சுண்டியிழுக்கத் தொடங்கியிருந்தார்.
பல்லவி முடிந்து ராம் (சர்வானந்த்) ஆப்பிரிக்கப் பழங்குடியினருடன் எம்பிக்குதிக்கத்
தொடங்கும் வேளையில், அலையும் இசைக்குப் பழகிவிட்டது. எம்பிக் குதித்து உற்சாகமாய் கரை
நோக்கி மிதந்து வந்தது. நளின அசைவுகளுடன் வந்து காலைத் தொட்டு ஸ்பரிசிக்காமல், சற்றே
கூடுதலான வாஞ்சையுடன் முட்டிவிட்டுச் சென்றது. பழங்குடியினருடன் ராம் புகைப்படம் எடுத்துக்கொள்ளும்
நேரத்தில் அமைதியாயிருந்த இசையும், அலையும் பின் ஒன்றிணைந்து செயலாற்றத் தொடங்கின.
‘உதயம் காகானி’ என்று தொடங்கிய பல்லவிக்கேற்ப அடுத்த அலை ஓடத் தொடங்கியது. நிதானமாய்
உணர்வடங்கிய நிலையில் மெதுமெதுவாய் அடியெடுத்துவைத்த அலை, ‘காலிவாட்டம்லாகா’ என்று
பிரதீப் உச்சம் தொடும் வேளையில் மறுபக்கத்திலிருந்து வந்த பிறிதொரு அலையில் மோதிச்
சிதறியது. கண்கள் சற்றே குழம்பத் தொடங்கியிருந்தன. இசைக்கேற்றவாறு அலை ஆடியதா, அலைக்கேற்றவாறு
இசையின் தாளம் மாறியதா என்று தெரியவில்லை. ‘நாவெண்டபடி நுவ்வெந்த’ என்று ராமின் அமைதி
மகிழ்ச்சியாய்ப் பீறிட்டு எழும்போது அலைகள் முழுவதுமான நடன அரங்கேற்றத்தில் இறங்கியிருந்தன.
வந்து பின்வாங்கிய அலையா, கால் நனைக்கப் போகும் அலையா, ஒரே திசையிலிருந்து வரும் பல
அலைகளா, பல்வேறு திசைகளிலிருந்து வந்து இணைந்தவையா என வகைப்படுத்திக் கூற முடியாதபடி
ஓராயிரம் நடன மாந்தர் சேர்ந்தாடுவதைப் போல் பிரம்மாண்டமாய் ஆடின அலைகள்.
உணர்ச்சி வேகத்தில் இரண்டு பல்லவிகளுக்கு
ஆடி முடித்திருந்த அலைகள் ’தானேதானேனானினே’ எனும் தாலாட்டில் அமைதி கொள்ள ஆரம்பித்திருந்தன.
கோவிந்த் வசந்தாவின் வயலின் களைத்திருந்த அலைகளை உறக்கத்தில் தள்ளின. பாடல் முடிந்தபோது
அங்கு நடந்தேறிய நிகழ்வுகளுக்கான எவ்விதச் சுவடுகளுமின்றி, கள்ளத்தனமாய்க் கண்சிமிட்டின
விண்மீன்கள்.
தொடர்ந்து வந்த ‘லைஃப் ஆஃப் ரா’மின்
தமிழ் வடிவத்தின்போது உறங்கிவிட்டிருந்த அலைகளுக்குச் சற்றே ஓய்வு கொடுக்கலாம் என்றெண்ணிச்
சுற்றிலும் கவனிக்கத் தொடங்கினேன். ‘கரை வந்த பிறகே’ என்ற கார்த்திக் நேத்தாவின் வரிகள்
ஒலிக்கத் தொடங்கிய நேரத்தில் சோளக்கடையின் தீப்பொறிகளும் அகிம்சைக்குக் கட்டுப்பட்டவை
போல ஒன்றன்பின் ஒன்றாக வரிசைகட்டிச்சென்றன. கடைசி ஓரிருவர் சோளம் வாங்கிக்கொண்டிருந்தனர்.
அத்துடன் வியாபாரம் முடிவடைவதைப் போல் தெரிந்ததால், நெருப்பை அணைத்தார் கடைக்கார அம்மா.
‘நாளை ஒர் அர்த்தம் காட்டுமே’ என்று பிரதீப்பும் கீழ் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தார்.
சட்டென “அக்கா இன்னும் ரெண்டு குடுங்க” என்று கடைசி வாடிக்கையாளர்கள் கேட்கவே மீண்டும்
இயங்கத் தொடங்கியது அடுப்பு. பிரதீப்பும்தான். ‘வாழா என் வாழ்வை வாழவே’ என்று அவரது
குரல் பயணிக்க, புதிதாகப் பற்ற வைத்ததால் கட்டுக்கடங்காமல் கிளம்பிய தீப்பொறிகளும்
காற்றில் அடவு செய்துகொண்டிருந்தன. எனினும் அவற்றின் ஆட்டம் நிலைக்கவில்லை. பல்லவியின்
முடிவில் இசையில் கலக்கும் பிரதீப்பின் குரல் போல இலக்கின்றி காற்றுடன் பயணிக்கத் தொடங்கின.
அவ்விரண்டுடன் நிச்சயம் அன்றைய வியாபாரம் முடிவுக்கு வந்துவிட்டதென உணர்ந்தவராகக் கடைக்கார
அம்மா நடையைக் கட்டினார்.
இப்போது எனக்கு வேறு வழி தெரிந்திருக்கவில்லை.
‘போதும் உறக்கம், எழுந்திருங்கள்’ என்று அலைகளை நோக்கியபோது அவை ஏற்கனவே எழுந்து மெதுவாய்
நடனமாடத் தொடங்கியிருந்தது புலப்பட்டது. இரண்டாவது சரணத்தை அலைகளுடன் கழிக்கலாம் என்று
முடிவு செய்தேன். எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. ‘திமிலேறிக் காளைமேல் தூங்கும் காகமாய்ப்
பூமி மீது இருப்பேன்’ எனும் வரியில் பீறிட்டெழுந்த அலை, ‘புவி போகும் போக்கில் கை கோர்த்து
நானும் நடப்பேன்’ என்ற வரியில் பிற அலைகளுடன் கைகோர்த்துத் தன் அகலத்தைக் கூட்டியிருந்தது.
‘ஏதோ ஏகம் எழுதே’வில் தன் அகலம் அனைத்திற்கான வலிமையையும் ஒன்றாய்த் திரட்டி மேலெழும்பி
வேகமெடுத்த அலை, நூற்றுநாற்பதில் சீறிப்பாயும் வண்டி சிவப்பு விளக்கைக் கண்டவுடன் பம்முவதைப்
போல ‘ஆரோ ஆரிராரிரோ’வில் அடங்கியது.
தொடர்ந்து வந்த ‘விழிகளின் அருகினில்
வானம்’ பாடலுக்கும் இயைந்தாடியது அலை. ‘அலைகடலாய் இருந்த மனம் துளித்துளியாய் சிதறியதே’
என்று ரமேஷ் வினாயகம் தன் குழந்தை குரலில் லயிக்கும்போது மீண்டும் ஒருமுறை இரு அலைகள்
மோதிச் சிதறின, கோலியும் ஜடேஜாவும் தவ்விக்குதித்து ‘செஸ்ட்பம்ப்’ (chest bump) செய்வதைப்போல.
இப்போது பாடல் முழுவதையும் கேட்கப் பொறுமையின்றி அலைகளை ஆடவைப்பதற்கான அல்லது அமைதிப்படுத்துவதற்கான
தாளங்களையும், வரிகளையும் தேடத் தொடங்கியிருந்தேன். ’இசையலையில் மிதந்தபடி இதயங்கள்
நனையட்டும்’ என்று யுவன் பாடுகின்ற வேளையில் ஏரோபிக்ஸ் செய்யத் தொடங்கியிருந்தது ஆழி.
அலைகள் ஒன்றின் மீது இன்னொன்று ஏறிச் மதில்சுவராய் நிமிர, அச்சுவர் தாண்டிக் கரணமடித்தது
புதியதொரு அலை. ‘சிரிக்கின்ற போதிலும் நீ அழுகின்ற போதிலும்’ என்ற யுவனை மறித்து நண்பன்
கைப்பேசியில் அழைத்தான். “வந்துட்டேண்டா” என்றபடி எழுந்தேன்.
மாலையில் தண்டையார்பேட்டையிலிருந்து
கிளம்பியபோது இருந்த அழுத்தம் ஏதும் இருக்கவில்லை. சாப்பிட்ட தோசையும், வடாபாவும் கொடுத்திருக்க
வேண்டிய நிறைவைக் காணவில்லை. உள்ளுடல் காலியாய் இருப்பதாகத் தோன்றியது. நன்றி சொல்லத்
திரும்பியபோது கடல் ஆரவாரத்துடன் மூன்றாம் முறையாக ‘செஸ்ட்பம்ப்’ செய்து வழியனுப்பின.
மேலே பார்த்தேன். ‘ஹோப் யூ ஹேட் ய நைஸ் டே’ என்று கண்சிமிட்டியது விண்மீன்.
After a long gap.....வந்துட்டாண்டா.....தரன்...கிரி.....தரன்...
ReplyDelete