“ஆச்சு, ஆச்சு டா.”
“பூனைக்குட்டி ஃபோட்டோ மாட்டி வெக்க சொல்லியிருந்தேனே! அதென்னாச்சு?”
“ரெண்டு மெகா ஃப்ரேமும், ஒரு மீடியம் சைஸ் ஃப்ரேமும் இருக்கேடா. ஹால் செவுத்துல கட்டி உடணும் அந்த வால்பேப்பர் ஹாங்கர் போட்டு. பண்ணிடலாம். பத்தே நிமிஷம் குடு.”
“டேய், அப்புறம் அந்த...”
பின்னாலிருந்து தோளைத் தொடும் உணர்வு தோன்றியதும் திரும்பினான். செந்திலை வைத்து வேலை வாங்குவது குற்றவுணர்ச்சியை அதிகப்படுத்தியதென்னவோ உண்மைதான். ஆயினும் வேறு வழியெதுவும் இருந்திருக்கவில்லை.
”தல, நான் தான் பாத்துக்குறேன்னு சொல்றேன்ல. அவங்க எப்போ வராங்க?”
”அவங்கன்னா? டேய், ரெண்டே பேர் தான். அவளும், அவ ஃப்ரெண்டும்.”
“செரிடா. டென்ஷன் ஆவாத. நான் பாத்துக்குறேன் எல்லா டெக்கரேஷனும். நீ போயிட்டு ரெடி ஆவு.”
-----
புத்தாடை உடுத்தி தயாராகும்போது காட்சிகள் நினைவுகளில் நிழலாடின. ஆறு மாதங்கள் உருண்டோடியது தெரியவேயில்லை. முதன்முதலாக நடைபயிற்சியின்போது பூங்காவில் அவளைச் சந்தித்தது, பின்பு தினமும் அங்கேயே சந்தித்துக்கொள்வதுமாக நாட்கள் கடந்து விட்டிருந்தன. இருவருக்குள்ளும் இருந்த திரையிசை ஆர்வமும், பாடல் வரிகளைப் பகிர்ந்துகொள்ளும் ஆனந்தமும் காதலாகிக் கனிந்திருந்தது.
“உங்க வீட்டுல பூனை இருக்குன்னு சொன்னியே? நான் பாக்க வரலாமா?”
“அடேங்கப்பா. அதுக்கென்ன! தாராளமா வாயேன். பூனையக் காரணமா வெச்சாச்சு வீட்டுக்கு வரணும்னு தோணுச்சே.”
“ஓகே. அப்போ இந்த சண்டே வரேன். வழி கொஞ்சம் கொழப்பமாவே இருக்கும் எனக்கு. பார்க் டெய்லி வர்றதுனால பிரச்சனை இல்ல. ஸோ மீனாவும் கூட வருவா. நான் தொலைஞ்சுடக் கூடாதுல்ல?”
“யப்பா சாமி! நீ தொலைஞ்சு போவியா? வாய் பேசி ஊரையே விக்கிற ஆளு! செரி, அதுக்கென்ன? கூட்டிட்டு வா.”
-----
“மச்சி, வாசல் பக்கம் சத்தம் கேக்குது. அவங்க வந்துட்டாங்கன்னு நினைக்குறேன். ரெடியாடா நீ?”
“ரெடிடா. ஆனா நம்ம அஸிஸ்டெண்ட் எங்கன்னுதான் தெரியல. நீ பாத்தியா?”
“டேய், அதுக்கெல்லாம் இப்போ நேரம் இல்ல. இரு, நான் ஹெல்ப் பண்றேன்.”
-----
“பாத்துடீ. வாசக்காலும், படியும் இருக்கு. தலை குனிஞ்சு, காலை லேசா தூக்கி வெச்சு படியைத் தாண்டு.”
இருவரும் ஹாலை அடைந்து நாற்காலிகளில் அமர்ந்தனர். நிரந்தரமாய் மூடியே இருந்த இருவரது கண்களும் பூனை ஓவியங்களையும், பிற அலங்காரங்களையும் உணரத் தொடங்கின. தூரத்தில் “மியாவ்” என்ற ஓசை கேட்டது.
-----------
(எனக்குப் பிடித்த சில தமிழ்த் திரைப்பாடல் வரிகளைக் கதை வடிவத்தில் மறு உருவாக்கம் செய்யும் ஒரு சிறிய முயற்சி.
பாடல் வரி: என்னோடு வா வீடு வரைக்கும்; என் வீட்டைப் பார், என்னைப் பிடிக்கும்
பாடல்: நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
பாடலாசிரியர்: கவிஞர் தாமரை
திரைப்படம்: வாரணம் ஆயிரம்)
Super
ReplyDelete