Saturday, May 25, 2024

ஒரு நாளில் வாழ்க்கை இங்கே...

கத்திரி வெயில் சுட்டெரிக்கும் ஒரு சனிக்கிழமை. மதியச்சாப்பாடு முடிந்த களைப்போடு கட்டிலில் படுத்து மின்விசிறியை இயக்கினால் என்ன ஆகும்? நியாயமாகத் தூக்கம் வரும்; வர வேண்டும். திரைச்சீலைகள் மூடிய அறையில், வெயிலின் தாக்கம் சற்றே குறைவாகத் தோன்றும் இடத்தில் சொகுசாக மின்விசிறியின் கீழே உறங்க வேண்டும் என்பது ஒரு மனிதப்பதரின் ஆசைதானே? ஆனால் சற்றே சுயகுரூரம் இருக்கும் மூளை கொஞ்சம் தகிடுதத்தம் செய்தால்?

"அந்த ஃபேன் ஃபுல்ஸ்பீடுல ஓடும்போது டப்புனு உள்ள கைய வெச்சுப் பார்த்தா என்னாகும்?" என்ற விந்தையான, விஞ்ஞானப்பூர்வமான வினா தோன்றுமாயின் ஒரு மானிடப்பதரால் என்ன செய்ய இயலும்? இப்போது கண்ணை மூடினாலும் அக்காட்சிதான் கண்ணுக்குள் ஓடிக்கொண்டிருக்கும். இத்துடன் நிறுத்தினால் பரவாயில்லை. ஐ.பி.எல். ரீபிளே போலவும், ரஜினிகாந்தின் ஓப்பனிங் காட்சி போலவும், தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்கள் போலவும் ஸ்லோ-மோஷனில் அக்காட்சியைத் திரும்பத்திரும்ப மனக்கண்ணிற்குள் கொண்டுவந்து நிறுத்தும். இதுபோதாதென்று அப்போதுதான் 'அயலான்' தொழில்நுட்பக்க குழுவினரை மிஞ்சும் வகையில் கிராபிக்ஸ் காட்சிகளெல்லாம் வேறு சேர்ந்துகொள்ளும்.

சரி, இது தூக்கமின்மையால் ஒருவேளை வரும் பிசகாக இருக்கலாம் என்றால் அப்படியும் சொல்லத்தோன்றவில்லை. வேலைக்குச் செல்வதற்குத் தயாராகும்போது கையுயர்த்தி டீ-ஷர்ட்டோ, பனியனோ அணியும்போது "அப்புடியே லேசா இன்னும் கொஞ்சம் கையைத் தூக்கி ஃபேன்ல வெச்சுப்பாக்கலாமா ஒரே ஒரு தடவ?" என்ற அவா எழுந்து, "வை", "வைக்காத" என்று இரு குழுக்களாக எண்ணங்கள் பிரிந்து நடுவில் ஒரு கோபிநாத் உட்கார்ந்து பஞ்சாயத்து நடத்த வேண்டிய நிலை வந்துவிடுகிறது. இதுவரை கிறுக்குத்தனமாக கோபிநாத் தீர்ப்பு சொன்னதில்லை; என்றேனும் ஒருநாள் சொதப்பிவிடுவாரோ என்ற பயம் இருந்துகொண்டேதான் இருக்கிறது.

மின்விசிறி மட்டும் அல்ல. அடிவாங்க வேண்டும் என்ற துணிவும், தினவும் இன்ன பிற இதர சூழ்நிலைகளிலும் அவ்வப்போது கம்பெனி ஆர்ட்டிஸ்ட் கேமியோ கதாபாத்திரங்களில் வருவது போல தோன்றிக்கொண்டே இருக்கும். ஜன்னலையோ, கதவையே திறந்து மூடும்போது "சுண்டுவிரலை மட்டும் நடுவுல வெச்சு வேகமா சாத்திட்டா எப்புடி இருக்கும்?" என்பது ஒரு தினசரி மனப்போர்.

'சரி, ஏதோ வேலைப்பளுவின் காரணமாகச் சிலபல நியூரான்கள் கோளாறாகப் பணி செய்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதானே?' என்று சமாளிக்கலாம் என்றால், 'அதையும் தாண்டிப் புனிதமானது' என்கிற ரீதியில் இன்னும் விஷமத்தனமான சிந்தனைகள் வந்து போவதையும் தவிர்க்க இயலுவதில்லை. கைப்பேசியின் சார்ஜரையோ மடிக்கணினியில் சார்ஜரையோ ஆன் செய்யும் நேரத்தில் "குறுக்க இந்த கவுசிக் வந்தா...?" என்று கொமாரு கோமாளித்தனம் செய்வார். மின்சாரம் பாயும் கேபிள் நுனியை ஊறுகாய் போல் நாக்கில் வைத்துப் பார்ப்பதற்கான உள்விசை எங்கிருந்தோ ஊற்றாக உருவாகி ஆறாகப் பெருகிப் பிரளயமாகப் பாய்ந்து வரும் நேரத்தில் நல்லவேளையாக மின்வெட்டு ஆகிவிட்டது ஒருமுறை.

இவையெல்லாம் கூடப் பரவாயில்லை என்று தோன்றுமெனின் மேலும் சில விபரீத வினைச்சிந்தனைகளும் அவ்வப்போது எட்டிப்பார்ப்பதுண்டு. மிக்சியில் சட்னி அரைப்பதென்பது அவ்வாறான ஒரு நேரம். என்ன சிந்தனை ஓடும் என்பது புரிந்திருக்க வேண்டும்! "மூடி போடாமல் அரைக்கலாமா? கைக்கு ஏதாச்சும் ஆகுதா பாப்போமே?" என்பது ஆர்.சி.பி. ஐ.பி.எல். கோப்பைக்கு அருகில் செல்வது போல ஒவ்வொரு முறையும் கிளுகிளுப்பாகத் தோன்றி, பின் ஆர்.சி.பி. ஒவ்வொரு முறையும் இயலாமையுடன் திரும்புவது போல் சோகத்துடன் மூடியைப் போட்டே அரைத்துவிடவேண்டிய கட்டாயம்.

சரி, சட்னி அரைத்தாயிற்று! சிரைத்து, குளித்து, புத்துணர்ச்சியுடன் இட்லி சட்னி சாப்பிடலாம் என்று ட்ரிம்மரை எடுத்தால், "தல! சங்கு கிட்ட வரைக்கும் போற... அப்புடியே லைட்டா சங்குல ட்ரிம்மர் ப்ளேடை வெச்சு கீறிப் பார்க்கலாம்ல?" என்று '3' பட தனுஷிற்கு அருகில் தோன்றும் பச்சை வண்ணக் கோமாளிகள் என்னிடமும் கேட்கத்தொடங்குவர். அவர்களை வேறு சமாளிக்க வேண்டும். இட்லி மாவை ஃபிரிட்ஜிலிருந்து எடுக்கப் போனால் "தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்" என்பது போல எர்த் கனெக்ஷன் சரியாக இல்லாத நேரத்தில் ஃபிரிட்ஜின் வயரையோ, கதவு திறப்பதற்கு ஏதுவாக இருக்கும் இரும்பு ப்ளேட்டையோ ஒரு இரண்டு, மூன்று வினாடிகள் தொட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணம் தலைதூக்கும். சற்றே சுதாரிக்கும் மனம் உடனே, "தம்பி, அதான் தக்காளி சட்னி அரைச்சு வெச்சுட்டியே! எதுக்கு இன்னொரு தக்காளி சட்னி உனக்கு?" என்று வடிவேலு உவமைகளுடன் வழிகாட்டும்.

இப்பட்டியல் இத்துடன் முடிவதும் இல்லை. மேலும் சில உதாரணங்கள் கீழே:

1 - மதியம் வேலைக்குச் செல்லும்போது : "கண்கூசிக் குருடாகும்வரை சூரியனைப் பார்த்துக்கொண்டே செல்லலாமே!"

2 - நடைபாதையில் போகும்போது : "எதிர்ல வேகமா ஒரு கார் வருதுல? அது கிட்டத்துல வரும்போது முன்னாடி போய் நின்னுட்டு அடிச்சுத் தூக்குறானா இல்லையான்னு டெஸ்ட் பண்ணிப் பாப்போமா?"

3 - பதின்மூன்றாம் மாடியில் ஸ்மோக்கிங் கார்னரில் நண்பன் புகைக்கும்போது : "இங்க ஓப்பனாத்தானே இருக்கு? எகிறி குதிச்சா என்னாகும்? எலும்புல்லாம்தான் ஒடையுமா? இல்ல ஆளே காலியாயிடுவோமா? ட்ரை பண்ணிப் பாக்கலாமே ப்ளீஸ்"

4 - லைவ் கடாய் சாட் கார்னரில் நிற்கும்போது : "அந்த சன்னா மசாலாவைச் சூடு பண்ணுறப்ப அடுப்புல கைய உட்டுறலாம்; என்ன ஆயிடும் பெருசா?"

5 - காய்கறி வெட்டும்போது : "கத்தியை லேசா ஆள்காட்டி வெரல்ல வெச்சு அத்துவுட்டா என்னாவும்?"

மேலும் பல கிறுக்குத்தனங்களும் உண்டு. சாணை பிடிக்கும் இயந்திரத்தைப் பார்க்கும்போது உதிக்கும் யுரேகா யோசனை, பேருந்தின் படியில் தொங்கும்போது ஓட்டமெடுக்கும் பல்வேறு சாத்தியங்கள், ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து பயணிக்கும்போது எதிரில் பேருந்து வரும் நேரத்தில் கையை நீட்டத் துடிக்கும் எத்தனிப்புகள், ஓடும் ரயிலில் கதவோரத்தில் நின்று வெளியே பார்க்கும்போது கடந்துசெல்லும் மின்கம்பங்கள் ஆசைகாட்டிக் கூப்பிடுவதாக நினைக்கும் நினைப்புகள், உழவர் சந்தையில் கடையண்ணன் பலாப்பழத்தை வெட்டும்போது "போதும்ண்ணே" என்று சொல்லும் சாக்கில் கையைக் குறுக்கே விட்டே ஆக வேண்டும் என்ற அவசரம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

இது ஒரு விசித்திர வியாதியும் இல்லை, அரிதான அற்புதமும் இல்லை என்று சமீபத்தில்தான் தெரிந்தது. மனித இனத்தின் பரிணாம வளர்ச்சிக்கான முழுமுதற்காரணம் உயிரைப் பாதுகாத்தல் என்பதையும், தற்காப்பிற்கான வழிமுறைகளைக் கண்டுபிடிப்பதற்கு 'இப்படி நடந்துவிட்டால்...?' என்ற எண்ணங்களே தூண்டுகோலாய் இருந்திருக்கின்றன என்பதையும் படித்துத் தெரிந்துகொண்டேன். இவ்வெண்ணங்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் பல்வேறு புதிய பரிமாணங்களை அடைகின்றன என்றும் யார்யாரோ எழுதியிருக்கிறார்கள். எனக்கு என் எட்டாம் வகுப்பு ஆசிரியை சொன்னதே நினைவுக்கு வருகிறது - "மூளை வளந்துருச்சுன்னு இப்போதான் தோணுச்சு. அதைத் தப்பாக்குற மாதிரி பிரிமிட்டிவ் மேன் கணக்கா உனக்கு மட்டும் ஏண்டா இப்புடி கோக்குமாக்காவே யோசிக்கத் தோணுது?"

Sunday, May 19, 2024

வெள்ளி

ஒவ்வொரு வாரத்தொடக்கத்திலும் "இன்னைக்கு வாரத்தோட மொதல் நாள்; இந்த வாரம் இந்த உலகத்தையே புரட்டிப் போடுற அளவுக்கு வேலை செய்யுறேன் பாரு" என்று சபதம் செய்வதும், "நீ ஒன்னும் கவலைப்படாத மாப்ள. என்ன எப்படியாச்சும் காப்பாத்திட்றா" என்று அழாத குறையாக வியாழக்கிழமை வரை தாக்குப்பிடிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. ஒன்றிலிருந்து ஐந்து வரை முன்னோக்கி எண்ணும் வழக்கத்துடனே திங்கட்கிழமை ஆரம்பமாகுமெனினும், செவ்வாயிலிருந்து "இன்னும் நாலு நாளு, இன்னும் மூணு நாளு" என்று பின்னோக்கி இயங்குதலே வழக்கம்.

எனினும் வெள்ளிக்கிழமைக்கென்று ஒரு தெனாவட்டு நாடிநரம்பெங்கும் சென்று முருக்கேறுவதைத் தவிர்க்க முடிவதில்லை. "இந்த வீக்கெண்டுக்கு என்ன பிளான்?" என்று தொடங்கும் ச(வ)ம்பிரதாய உரையாடல்களும், "ஃப்ரைடேவும் அதுவுமா ஏன் பா இப்புடி இந்தியாவுல க்ளையண்டுக்காகன்னு இப்புடி ஒழைக்கிறீங்க?" என்று மிகுந்த கரிசனத்துடன் வினவி பின் இரவு ஒன்பது மணிக்கும், பத்து மணிக்கும் மீட்டிங் வைக்கும் அமெரிக்கவாழ் இந்தியர்களும் வெள்ளையர்களும், "மச்சி, அடுத்த வாரம் வரும்போது கண்டிப்பா பேப்பர் போட்றப் போறேன்" என்ற வெட்டி வீராப்புகளும், "இந்த வாரம் யாரு வீட்டுல ஹவுஸ்பார்ட்டி தல?" என்ற கேள்விகளும் இன்ன பிற இதர வெண்டைக்காய் வெங்காயங்களும் தாண்டி, அதிகபட்சம் இரவு பதினொரு மணி ஆனவுடன் வரும் உத்வேகத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. மாலை ஐந்து மணிக்கும், ஆறு மணிக்கும் வேலை முடிந்து வீடு திரும்புபவர்களை திங்கள் தொடங்கி வியாழன் வரை பார்த்தால் வரும் எரிச்சல் வெள்ளிக்கிழமைகளில் வராது.

வெள்ளி பதினொரு மணி என்பது ஒரு அறிவிப்பு. "நான் வந்துட்டேன்னு சொல்லு" என உலகிற்கு அறிவிக்கும் நேரம் அது. "ஓட ஓட ஓட தூரம் புரியல" என்றும், "வாழ்க்கையைத் தேடி நானும் போறேன், காண்டுல பாடும் பாட்டுக்காரன்" என்றும் வியாழன் வரை ஒலிக்கும் ப்ளேலிஸ்டுகள் வெள்ளி இரவுகளில் "You could kill me you thought you could get away but you never never ever gonna get away" என்றும் "B to the A to the B to the A; Baba - that's what we say" என்றும் முழங்கும். நீண்ட நெடிய பரப்பளவில் அமைந்திருக்கும் ஒரு தொழில்நுட்பப் பூங்காவின் ஒரு கட்டடத்தின் பதின்மூன்றாவது மாடியிலிருந்து மின்தூக்கியில் இறங்கி தரைத்தளத்திற்கு வருவதற்கான ஆயத்தப்பணியின் முதற்கட்டம் "சிவாஜி த பாஸ்" திரைப்படத்தின் மொட்டை ரஜினிக்கான இசையை அலறவிடுவதுதான். வரவேற்புக்கூடத்தில் இரவுநேரப் பணிக்காக அமர்ந்திருக்கும் செக்யூரிட்டி அண்ணன் முதல் ஓரிரு தவணைகள் இசை அலறலால் அதிர்ச்சியுற்றதும், பின்னர் இவ்வெள்ளிக்கிழமை வழக்கத்தை ரசிக்கத் தொடங்கியதும் தனிக்கதை. முக்கியமாக கிட்டத்தட்ட ஒரு நிமிடமே ஓடக் கூடிய அப்பாடலைச் சரியான நேரத்தில் இயக்குவது ஒரு கலை. அலுவலகத்திற்குள் இருக்கும்போது தொடங்கிவிடக் கூடாது; ஆனால் தாமதமும் ஆகிவிடக் கூடாது. சரியாக அலுவலகத்தையும், வரவேற்புக்கூடத்தையும் பிரிக்கும் கண்ணாடிக் கதவைத் திறந்து, அக்கதவு மூடும் நேரத்தில் முதலாம் முறை பாடல் ஒலிக்கத் தொடங்க வேண்டும். அங்கிருந்து மின்தூக்கியில் ஏறும் இடம் வரை சரியாக ஒரு முப்பதிலிருந்து, நாற்பத்தைந்து நொடிகள் ஆகும். பின்னர் மின்தூக்கிப் பொத்தானை அழுத்திவிட்டு சரியான கதவு திறப்பதற்குக் காத்திருக்க வேண்டும்.

கதவு திறப்பதும் இரண்டாம் முறை பிளாஸே கர்ஜிக்கத் தொடங்குவதும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். கீழே செல்லும் மின்தூக்கி தரைத்தளத்தை அடைந்து கதவு மீண்டும் திறப்பதற்கும், மூன்றாம் முறை பாடல் ஒலிக்கத் தொடங்குவதற்குமான நேரம் கச்சிதமாக ஒருங்கிணைய வேண்டும். கதவு திறக்கும்வரை தரையையே பார்த்துக்கொண்டிருப்பதும் கதவு திறக்கும்போது தலைதூக்கிப் பார்ப்பதும் ஒரு தனி ரசனைதான். வெளியே நடந்து செல்லும்போது கார் பார்க்கிங்கில் ஏதேனும் ஒரு கார் நின்றுகொண்டிருந்தால், அதைக்கடக்கும் நேரத்தில் பின்விளக்குகள் மின்னுவதும் - அல்லது மின்னுவதாகக் கற்பனை செய்வதும் - "த பாஸ்" என்ற சொல்லாடலும் சரியாக இம்மி பிசகாமல் அமைய வேண்டும்.

நான்காம் முறை பாடல் தொடங்கும்போது பொதுவான வேகத்தில் நடந்தாலும் ஸ்லோ-மோஷனில் நடப்பது போல் கற்பனை செய்துகொண்டு கண்ணாடி வளாகத்தை விட்டு வெளிவானம் தெரியும் உலகிற்கு வந்த வெற்றிப்பெருமிதத்துடன், காலுக்கு கீழே இலைச்சருகுகள் மணல்காற்றில் பறப்பதாக நினைத்துக்கொண்டு, வான் நோக்கிப் பார்த்து ஒரு சிரிப்பை உதிர்க்க வேண்டும்.

இது முதல்கட்டம். இத்துடன் பாடலுக்கான தேவை முடிந்துவிடும். தேவைப்பட்டால் அன்றைய நாளின் நிகழ்வுகளுக்கேற்ப வேறு சில பாடல்களை இசைக்க விடலாம். ஆனால் அதற்கான அவசியம் பொதுவாக தேவைப்படுவதில்லை. பூங்காவைக் கடந்து வெளியே செல்லும்போது யாருமே கவனிக்கவில்லை என்றாலும் இரு மருங்கிலும் மக்கள் நின்று அவ்வாரம் முழுவதும் வியர்வை வாராது உழைத்த தியாகியைப் பார்த்து கரவொலிகளை எழுப்புவதுபோல் கற்பனை செய்வது நன்று. தேவைப்பட்டால் "வெளிய போடா சனியனே" என்பது போல் முறைக்கும் நுழைவாயில் வாட்ச்மேன் அண்ணன்கள் அண்ணாந்து பார்த்து வியப்பது போல் கூட எண்ணிக்கொள்ளலாம். "என் மூளை, என் நெனப்பு; எவன் கேப்பான்?" என்று அதற்கொரு சப்பைக்கட்டும் கட்டிக்கொள்ளலாம்.

வெளியே காலடி எடுத்து வைத்ததும் ஆட்டோ டிரைவர் அண்ணன்கள் "ஐரோலி... திகா... தானே... வாஷி..." என்று நம்மிடம் வந்து விசாரிப்பதை ஒரு ஆண்டை மனநிலையுடன் "கெஞ்சுங்கடா கெஞ்சுங்க" என்று அணுகிக்கொண்டு "நஹி நஹி" என்று பதில் கூறிக் கடப்பதில் தனிப்பெருமை உண்டு. இருபுறமும் நடைபாதைக்கருகே இருக்கும் மரங்கள் அசைந்தாடும் மெல்லிய காற்றுடன் நடப்பதில் ஒரு சுகம் இருக்கிறது. சாலையின் மறுபுறம் இருக்கும் வெஸ்ட்சைடு கடையும், கல்ப் எனும் சரக்கு உணவகமும் பளிச்சிடும் விளக்குகளுடன் காட்சியளிப்பது வாடிக்கை என்றாலும், "ஓ என்னை எதிர்பார்த்துத் தொறந்து வெச்சுருக்கீங்களா? இல்ல இல்ல, மூடிரலாம்" எனும் தொனியில் யாருமற்ற திசையில் கண்ணசைவும், கையசைவும் கொண்டு கட்டளைகள் இடலாம். அது ஒரு அலாதியான அனுபவம்.

அங்கிருந்து ஒரு நூறு மீட்டர் நடந்தால் தீப்பொறிகளுடனும் "கிர்ர்ர்ர்" எனும் மெல்லிய ஓசையுடனும் இயங்கிக்கொண்டிருக்கும் பவர் ஸ்டேஷன் வரும். கிட்டத்தட்ட ஒரு கில்லி வேலுவாகவே உருவகப்படுத்திக்கொண்டு ஷூக்கால்களை சற்றே அழுத்தி வைத்து நடக்கலாம். தீப்பொறிகளும், கால் சத்தமும் இணைந்து 'ஒரு அவெஞ்சர் அவதரித்து விட்டான்' எனும் உணர்வை உள்ளே செலுத்தும். நடைபாதையில் தொடர்ந்து அதையும் தாண்டி நடக்கும்போது வெகுவேகமாகக் கடந்து செல்லும் வண்டிகளையும், கார்களையும் பார்த்து "வீணாய்ப் போனவனுக. அவசரத்துல அலையுறானுக பாரு. நமக்குக் குடுத்து வெச்ச மாதிரி நடந்தே வீட்டுக்குப் போற வாய்ப்பு எல்லாவனுக்கும் கிடைக்குமா என்ன? நாம யாரு!" என்று மீண்டும் ஒரு பெருமிதம், ஒரு கெக்கலிப்பு.

போகும் வழியில் இருக்கும் பதினைந்து மாடிக் கட்டடங்களும், இருபது மாடி கம்யூனிட்டிகளும் ஏதோ சாய்ந்து ஒரு கதாநாயகனின் வருகைக்காக அடங்கி ஒடுங்கி மடங்கி குனிந்து வணங்குவது போலவே தோன்றும். சாலை விளக்கு வரிசையில் ஒன்றோ இரண்டோ ஒழுங்காக எரியாமல் மின்னிக்கொண்டிருந்தால் அது கூட வெற்றி வாகை சூடி இவ்வாரத்தைக் கடந்து வந்த ஆண்மகனின் பாராட்டுக்காகவே அவ்வாறு எரிகிறதென்ற எண்ணங்கள் தோன்றுவதும் வழக்கம்தான். ஆள் யாருமற்ற அச்சாலையின் எல்லைகளற்ற பரப்பிற்கு நடுவில் நடக்கும் ஒரு சிறு மனிதன் அச்சாலைகளின் அதிபதியென உணரும் நேரம் வெள்ளிக்கிழமை இரவு மட்டுமே. இடையில் வரும் சேரியைக் கண்டுகொள்வதும், கண்டுகொள்ளாமல் விடுவதும் ஆண்டை மனநிலையின் அளவைப் பொறுத்து வேறுபடும். "இந்த ரெண்டு நாளுல இப்டி இருக்குற உங்க கிராமம் இப்டி ஆயிடும்" என்று சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் அச்சேரியையே மாற்றிவிடும் கட்டுக்கதைகளின் கதாநாயகனாக மாறிவிடும் ஆண்டைத் தருணம் அது.

அதைத்தாண்டி நடந்து வீடடையும்போது அடுத்த இரு தினங்களுக்கான அட்டவணை மனதளவில் பதிவாகிவிடும். இரண்டு புத்தகங்கள் படித்தல், ஒரு திரைப்படம் பார்த்தல், ஆறு வேளையும் சமைத்துச் சாப்பிடுதல், கிராமத்தை நகரமாக மாற்றுதல் என்று ஒரு முப்பத்தியேழு செயல்களை மனது பட்டியலிட்டுக் கொள்ளும். அப்பெருமிதத்திலேயே அன்றைய இரவு படம் பார்த்துவிட்டு அதிகாலை உறங்கி நண்பகல் எழுந்து வீடு பெருக்கி, துணி துவைத்து, குளித்துக் காய்கறி வாங்கி ஒரு வேளை சமைத்து மீதம் வைத்து மறுவேளை உண்டு, இடையில் மீண்டும் ஒரு உறக்கம் உறங்கி எழுந்து பார்த்தால் சனிக்கிழமை காலி. சேரி சேரியாகவே இருக்கும். இரு புத்தகங்களும் அப்படியே இருக்கும். ஒரு வேளை பட்டினி என்பதும் மாறியிருக்காது.

ஆனால் ஞாயிறு துவங்கும்போதே அடுத்த வெள்ளிக்கிழமை இறவைப் பற்றிய கனவென்னவோ தொடங்கிவிடத்தான் செய்கிறது. மீண்டும் சிவாஜி மொட்டை பாஸ் ரஜினி, மீண்டும் பதினொரு மணி சம்பிரதாயங்கள், மீண்டும் கதாநாயகன், மீண்டும் உறங்கிக் கழியும் நாட்களென அது ஒரு தனி உலகம். அதைப்பற்றியெல்லாம் உங்களுக்கென்ன தெரியும்! எனக்கு வாய்த்தது அனைவருக்கும் வாய்க்குமா?