Sunday, September 27, 2015

மடை திறக்கும் நினைவுகள் – 2

           எழுத்து தரும் உன்மத்த நிலை எழுத்தாலேயே வர்ணிக்க இயலாதது. முந்தைய பதிவுகளைப் படித்துவிட்டு டமிலைப் பேசுமொழியாக மட்டுமே உபயோகித்தவர்கள், முறையான ‘தமிழ்கற்க ஆசையாக இருக்கிறது என்று முகநூலில் பதில் போடும்போது கிடைக்கும் ஆனந்தம் அளவிட முடியாதது. மேலும் நான் மனதிற்குள் வைத்துப் பூட்டிய பல்வேறு எண்ணங்களின் தொகுப்பாக உனது எழுத்துகள் தோன்றுகின்றனஎனும் விமர்சனம் கிடைக்க முந்தைய ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். “எழுதி என்னத்தடா பெருசா சாதிக்கப் போற?என்ற வைதலுக்கும், “எலக்கியம்னா என்னன்னு தெரியுமாவே உனக்கு?என்ற கடினமான கேள்விக்கும் ஒரு பதில் கிடைத்துவிட்டதாகவே உணர்கிறேன்.

     மூன்று மாதங்களில் இருபதைக் கடக்க இருக்கும் இந்த ஆறடி மனிதனின் ஒவ்வொரு நொடியையும் ஏதேனும் ஒரு வகையில் ‘நினைவுகள்ஆக்கிரமித்துக்கொண்டுதான் இருக்கின்றன. அவற்றைச் சொல்லியும், எழுதியும் மாளாது என்றாலும், இந்த இயலாக் காரியத்தைச் செயல்படுத்துவதே எனது தற்போதைய நோக்கமாகத் தோன்றுகிறது.

                            **********

     ஸ்கூல் போக ஆரம்பிச்சுட்ட. நீயா சாப்பிடமாட்ட? இன்னும் என்ன ஊட்டிவிடணும்னு அழுகை?என்று குழந்தையை அடிக்கும் தாய்மார்கள் வேற்றுலகவாசிகளாகவே என் கண்களுக்குத் தெரிகிறார்கள். இன்றும் நான் கல்லூரி விடுமுறையில் வரும்போதெல்லாம் எனக்கு என் அம்மா உணவு ஊட்டிவிடுகிறார். இதைச் சொல்வதில் எனக்கு எவ்வித வெட்கமும் இல்லை. ஆனால் சொல்ல வந்த விஷயம் இதுவல்ல.

     நான் எல்.கே.ஜியிலிருந்து ஐந்தாவது வரை படித்த பள்ளியில் தினம்தினம் கொடுக்கும் வீட்டுப்பாடங்கள் பற்றிய குறிப்புகளை ‘டைரியில் எழுதி, பெற்றோரிடம் கையொப்பம் வாங்கிவரச் சொல்வார் அந்தந்த வகுப்பாசிரியர்/ஆசிரியை. ஒன்றாம் வகுப்பில் ஒருநாள் அம்மாவிடம் கையெழுத்து வாங்க மறந்து விட்டேன். “அதுசரி! புள்ளயத் தூக்கி வெச்சுக் கொஞ்சிச் சோறூட்டத் தெரியுது. கையெழுத்துப் போடணும்னு நெனப்பில்லையா உங்கம்மாவுக்கு?என்று நக்கலாக அதட்டினார் ஆசிரியை. இவருக்கு எப்படித் தெரியும் என்ற நினைப்பு குடைந்துகொண்டேயிருந்தது. பின்பு அம்மாவே சொன்ன பிறகுதான் தெரிந்த்து, பையனுக்கு இரண்டு வயதாக இருக்கும்போதே, தான் ‘கத்துக்கிட்ட மொத்த வித்தையயும் இறக்கிஅவனைச் சுயச்செயல்பாட்டில் சிறக்க வைத்த பக்கத்து வீட்டு ‘ஆன்ட்டிதான் அந்த ‘அண்டர்கவர் உளவாளிஎன்று.

                            **********

     ரேங்க் கார்டு டேஎன்று ஒரு திருவிழா வைப்பார்கள் வருடத்திற்கு இருமுறை (காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளின் முடிவில்). மாணவர்களைப் பொறுத்தவரை அது ‘வத்தி வைக்கும் நாள்’ (’போட்டுக் கொடுக்கும் நாள்என்றொரு திருநாமமும் உண்டு). பள்ளி மாணவர்கள் அனைவரும் காலை எட்டரை மணிக்கு வழக்கம்போல வகுப்புக்கு வந்துவிட வேண்டும். பெற்றோர் (அம்மா, அப்பா, தாத்தா யாரேனும் ஒருவர்) 9 மணிக்குமேல் அனுமதிக்கப் படுவார்கள். அவர்கள் வந்த்தும் பிள்ளைகளின் நடத்தை மற்றும் படிப்பைப் பற்றிப் பாரபட்சமே பார்க்காமல் கழுவிக்கழுவி ஊற்றுவார் ஆசிரியர். பெரும்பாலான பெற்றோர், “தயங்காம அடிங்க. நாங்க ஒண்ணும் சொல்லமாட்டோம். கழுத, படிக்கத் துப்பில்ல; திமிரப் பாருங்கஎன்று கர்ஜிப்பர்; ஒரு சிலர் சற்றும் யோசிக்காமல் அந்த இட்த்திலேயே தம் சொந்தப் பிள்ளைகளைக் கதறக்கதற அடிப்பர்; சச்சிதானந்த குணம் கொண்ட வெகுசிலர் மட்டும் சிரித்துக்கொண்டே “நான் பாத்துக்கிறேன் மேடம்என்று முற்றுப்புள்ளியிடுவர் (எனது அம்மா கடைசி வகையறாவுக்குள் அடங்குவார்). அன்று வகுப்புகள் நடைபெறாது. மதிப்பெண் அட்டைவாங்கியபின் வீட்டுக்குச் செல்லலாம். இந்தச் சடங்கானது சனிக்கிழமைகளில் நடைபெறும். படிப்புரீதியாக என்னிடம் எந்தக் குறைகளும் இருந்ததில்லை என்றபோதிலும், ‘காது வரைக்கும் நீளுது வாய்என்ற ஆசிரியர்களின் கருத்து, வகுப்பு வேறுபாடின்றி பள்ளியைவிட்டுச் செல்லும்வரை என்னைப் பின்தொடர்ந்து வந்தது.

     நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, என் அண்ணன் வேறு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பிலிருந்தான். காலாண்டு முடிந்த ஒரு சனிக்கிழமையில் ‘ரேங்க் கார்டு டேவந்தபோது அவனுக்குப் பள்ளி விடுமுறை நாளாயிருந்தது. அன்று மதியம் இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையேயான பகலிரவு ஒருநாள் ஆட்டம் நடைபெறவிருந்தது. கைப்பேசி புழக்கத்தில் வராத காலமாதலால், ஒரு ரூபாய்த் தொலைபேசியில் அம்மாவின் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, அவரிடம் விரைந்து வருமாறு கூறினேன். சொல்லி வெகுநேரமாகியும் அவர் வராததால், வீட்டிற்குத் தொலைபேசி, அண்ணனை வரச்சொன்னேன். எல்லாம் கிரிக்கெட் படுத்திய பாடு!

     அம்மா அப்பா வெளியூருக்குப் போயிருக்காங்க. திங்கள்கிழமை வந்து பார்க்கச் சொல்றேன்என்ற அவனை நம்பி என்னை அனுப்பி வைத்தார் கரோலின் மேடம் (அவன் அப்பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை படித்திருந்ததால் அப்படியொரு செல்வாக்கு). வீட்டிற்கு வரும் வழியில்தான் உறைத்தது பிரச்சினையின் வீரியம். அம்மா அங்கு போகாமல் தடுத்தாக வேண்டும். வீட்டிற்குள் சென்றவுடன் முதல்வேலையாக அம்மாவின் அலுவலகத்துக்குத் தொடர்புகொண்டால் “அவங்க கெளம்பிட்டாங்களேஎன்று பதில் வந்தது. அடித்துப் பிடித்து மீண்டும் பள்ளிக்கு ஓடலாம் என்று எத்தனித்தபோது, அம்மாவே வீட்டிற்கு வந்துவிட்டார். ஸ்கூலுக்குப் போயிட்டுதான் வரேன். அப்படி என்னடா அவசரம்?என்றவரிடம் விஷயத்தை விளக்கியபோது சிரித்துவிட்டார். ஆனால் அந்நிகழ்வின் உண்மையான விளைவு என்னைத் திங்களன்று தாக்கியது. “மொளச்சு மூணு எல விடல. அதுக்குள்ள வாயத் தெறந்தா பொய். நீதான் இப்புடி இருக்கேன்னா உங்க அண்ணன்காரனும் அதே மாதிரிதான் இருக்கான். அன்னிக்கே நீ தொலைஞ்சு போயிருந்தேன்னா நான் யாருக்குப் பதில் சொல்றது?என்ற கரோலின் மேடத்தின் வார்த்தைகளுக்குள் இருந்த அக்கறை அப்போது புரியவில்லை.

                            **********

     இன்று ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன்களில் உலா வரும் ‘டிக் டாக் டோஎன்ற விளையாட்டைப் பார்க்கும்போதெல்லாம் ஆரம்ப வகுப்புகளில் படித்தபோது தினமும் காலையில் இறைவழிபாட்டிற்கு முன்னதாக மரத்தடி நிழலில் மண்ணில் ஆடிய ‘நேர்பழம்தான் ஞாபகத்திற்கு வருகிறது. ‘டிக்டாக்டோவிற்கான அதிகாரப்பூர்வத் தமிழ்ப்பெயர் தெரியவில்லை; ஆனால் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் இப்பெயரைத்தான் சூட்டுவேன். காகிதங்களிலும் விளையாடப்படும் இதில் x குறியீட்டுக்கு வேப்ப்ம்பழமும், o குறியீட்டுக்கு ‘சூட்டுக்கொட்டைஎன்று சொல்லப்படும் ஒருவகை கொட்டையையும் உபயோகித்தால் அதுதான் ‘நேர்பழம்’. மரத்தின் பின்னால் மறைந்துகொண்டு இறைவழிபாட்டின்போது விளையாடி நானும், நண்பன் சரவணசெல்வனும் மாட்டியதை நினைத்தால் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டுமெனத் தோன்றுகிறது.

                            **********

     இன்று பாட்டியின் கைவண்ணத்தில் தயாரான ரவா உப்புமாவைச் சாப்பிடும்போது சிரித்துக்கொண்டே சொன்னார். “நான் ஸ்கூலுக்குச் சாப்பாடு எடுத்துண்டு வரும்போது என்னப் பாடு படுத்துவ?இன்றைய நிலையில் பெற்றோர் குழந்தைகளுக்குச் சோறூட்டப் பள்ளியினுள் அனுமதிக்கப் படுகிறார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. நான் எல்.கே.ஜி படிக்கும்போது மதியச் சாப்பாட்டைப் பாட்டிதான் எடுத்துவந்து ஊட்டிவிடுவார். அவர் எடுத்துவரும் பொருட்களின் பட்டியல்:

    1)      சாப்பாட்டு டப்பா, தண்ணீர் பாட்டில் போன்ற சாமான்கள்
    2)      கால்சராய் (தவறாமல் நான் போட்டிருக்கும் கால்சராய் நனைந்திருக்கும். மாற்றியே ஆக வேண்டும்)
    3)      ஃப்ளாஸ்கில் பால் அல்லது காம்பிளான்

   முக்கால்வாசி நாட்களில் நான் சோற்றை லேசில் சாப்பிட்டுவிட மாட்டேன். சிலபல கொஞ்சல்கள், இரண்டு மூன்று ‘மடக்காம்பிளான், ஐந்திலிருந்து பத்து நிமிடத்திற்குச் சித்திரக்குள்ளன் கதை போன்ற அத்தியாயங்கள் இன்றி, சாப்பாடு தொண்டைக்குள் இறங்காது. இங்குதான் பாட்டிக்குள் மறைந்திருக்கும் கதாசிரியர் வெளிப்படுவார். ஒரே கதையைச் சிற்சில மாற்றங்களோடு வெவ்வேறு முடிவுகளுக்கு இட்டுச் செல்வதில் அவர் வல்லவர். என்னைக் கேட்டால் நான் ரசித்துப் படித்த ‘வாண்டுமாமா சிறுகதைகளைவிட பாட்டியின் கதைகள் நயம்பொருந்தியவை. எனினும் இந்த சொகுசு வாழ்க்கை வெகுநாள் நிலைக்கவில்லை. நான் யூ.கே.ஜி படிக்கும்போது, பள்ளியின் சுத்தம் கெடுகிறதுஎன்று சொல்லி இவ்வழக்கத்தை தடை செய்தனர். அனைவரும் வகுப்பறைக்குள் அமர்ந்து உண்ணுமாறு கட்டளையிடப்பட்டோம். பெற்றோர் வருவதாயிருந்தால் வாயிற்கதவின் பக்கத்தில் நின்று சாப்பாட்டுக்கூடையைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட வேண்டும். இப்படி ஒரு விசித்திரச் சட்டம் பள்ளியில் அமலுக்கு வந்திராவிட்டால் பாட்டிக்குள் இருந்த மொத்த வித்தையும் என்மூலமாக இவ்வுலகுக்குத் தெரியவந்திருக்கும்.

                         **********

   பள்ளி இடைவேளையின்போதும், விளையாட்டு நேரத்தின்போதும் ஆடிய ‘திருடன் போலீஸ்’, ‘கல்லா மண்ணா’, ‘லாக் அண்ட் கீ’, ‘நேர்பழம்போன்ற ஆட்டங்கள் இன்று ஆடப்படுகிறதா என்பது சந்தேகமே. அதற்கு முன்பாக, விளையாடுவதற்கென்று பிரத்யேகமான நேரம் எத்தனை பள்ளிகளில் இன்றும் ஒதுக்கப்படுகிறது? அப்படியே ஒதுக்கப்பட்டாலும், ‘போர்ஷன் முடிக்கல; நான் எடுத்துக்கிறேன்என்ற அறிவியல் ஆசிரியரின் சர்வாதிகாரம் இல்லாத பள்ளிகள் இருக்கின்றனவா? இவை எல்லாவற்றையும் மீறிய கேள்வி, குழந்தைகளுக்கு இன்னும் இத்தகைய விளையாட்டுகளின் மீது ஆர்வம் இருக்கின்றதா? ஏனெனில் இப்போதைய குழந்தைகள் ‘சப்வே சர்ஃபர்ஸில் ஓடி, ‘ஃப்ளாப்பி பேர்டில் இறக்கை கட்டிப் பறந்து, ‘ஆங்ரி பேர்டுகளாக வலம்வருகிறவர்கள்.


காலம் மாறுகிறது. என்னமோ போங்க!

4 comments:

  1. 1990-1997ல் பிறந்தவர்களின் சிறு வயது நினைவுகளை அள்ளித் தெளிக்கிறது இப்பதிவு. எனக்கு முக்கியமாக "LOCK AND KEY" .. மேலும் இப்பதிவில் கூற வரும் செய்தி இவ்வுலகம் அறிந்தது தான். ஆனால் இதனை மாற்றத் துடிக்கும் உயிர்கள் மிகக் குறைவு. காரணம்-"நேரமின்மை"!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா... என்ன செய்ய, எல்லாம் காலத்தின் கோலம்?

      Delete
  2. வெளிப்படையான , நிதர்சனமான கருத்துகள்

    ReplyDelete