’வாழ்த்த வயதில்லை; வணங்குகிறேன்’ என்று பிறர்
சொல்லுமளவுக்கு வயதாகவில்லையென்றாலும், கல்லூரிப் படிப்பிற்காக நரக...
மன்னிக்கவும், நகர வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துவிட்டதால், விடுதியில் வெட்டியாக
விட்டத்தைப் பார்த்துப் படுத்திருக்கும் நேரமெல்லாம் கடலூரில் படித்த பள்ளிக்காலங்களை
அசைபோடத் தோன்றும்.
அமாவாசைக்கும்
அப்துல் காதருக்கும் எப்படி எவ்விதத் தொடர்பும் இல்லையோ, அதேபோல பக்ரீத்துக்கும்
பன்னீர்செல்வத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லைதான். ஆனால், அப்பண்டிகையைச்
சாக்காக வைத்துத்தான் வீட்டுக்கு வந்திருக்கிறேன். ஈத் முபாரக்!
வீட்டுக்கு
வருவது துணிதுவைக்கும் வேலை மிச்சமாகும் என்பதற்காகவும், தாயின் சுவையான
சமையலுக்காகவும்தான் என நண்பர்களிடமும், “உங்களைப் பார்ப்பதற்காகத்தான் வருகிறேன்” என்று அம்மா
அப்பாவிடமும் சொன்னாலும், இவையனைத்தையும் தாண்டிய ஒரு காரணத்துக்காகவே ஊருக்கு
அடிக்கடி வந்துபோக வேண்டும் என்ற எண்ணம் எழும். அது, நினைவு. நான் பிறந்த
ஊருக்குள் காலடி எடுத்து வைக்கிறேன் எனும் பெருமிதம்; நான் பார்த்து வளர்ந்த
சாலைகளில் வானளாவிய கட்டடங்கள் உயர்ந்து நிற்பதைப் பார்க்கும்போது வரும்
ஆச்சரியம்; மரங்களும் காடுகளுமாக இருந்த இடங்களில் மனை விற்பனைக்கு என்ற அறிவிப்புகள்
தென்படும்போது நெஞ்சைக் கவ்வும் சோகம்; ‘நாதன் நாயகி நக’ருக்குள் கிரிக்கெட் ஆடிய மைதானத்தைப்
பார்க்கச் செல்லும்போது, அங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை வீடுகளாக
உருமாறியிருக்கும்போது மாறியது கிரிக்கெட்டின் தன்மை மட்டுமல்ல, காலத்தின்
காட்சியும்தான் என்று அலையடிக்கும் ஞாபகங்கள்.
துணி
காயவைப்பதற்காக மாடிப்படி ஏறிச்செல்லும்போதெல்லாம் தவிர்க்க முடியாமல் வந்துபோகும்
ராஜா மாமா – மீரா மாமி தம்பதியர்; மாடி வீட்டில் முதல்முதலாக வாடகைக்கு
வந்தவர்கள். இப்போது வீட்டில் சாமான்கள் சேர்ந்துகொண்டே போனதால் மாடி வீட்டில்
தட்டுமுட்டுப் பொருட்களைப் போட்டு வைத்தாயிற்று. எனினும் அங்கு செல்லும்போதெல்லாம்
குடியிருந்தவர்களின் முகங்கள் மின்னலென வெட்டும். எனக்கு இந்திய ஜனாதிபதிகளின்
பெயர்கள் வரிசைப்பிரகாரம் தெரியாது; ஆனால், எங்கள் வீட்டில் குடியிருந்தவர்களின்
பெயர்கள் வரிசையாக வாய்ப்பாடு போலக் கொட்டும்.
தண்ணீர்
அளவைச் சரிபார்ப்பதற்காக மொட்டை மாடிக்குப் போகும் ஒவ்வொரு முறையும், எனக்குப்
பதினைந்து வருடங்கள் குறைவதை உணர்ந்திருக்கிறேன். எல்.கே.ஜி படிக்கும்போது
பள்ளிவிட்டு வந்ததும் மாடிப்படிகளில் ஏறி நின்று, ’நந்தினி’ என்று எழுதப்பட்ட
ஆட்டோ வரும்வரை காத்திருப்பது வழக்கம் (ஏன் அந்த ஆட்டோவை அப்ப்டிக் கவனித்தேன்
என்று இன்றுவரை எனக்குத் தெரியவில்லை; தயவுசெய்து இதை மேற்கொண்டு ஆராயாமல்
படிக்கவும்). ஒருநாள் அவசரத்தில் படிகளைக் கவனிக்காமல் எக்குத்தப்பாகக் கால்வைத்ததில்
தடுக்கி, உருண்டு விழுந்தேன். அன்று என்னைத் தூக்கிக்கொண்டு சட்டையில்
ரத்தக்கறையுடன் ஓடிய அண்ணன் நினைவுக்கு வருகிறான்; முதலுதவி செய்த ராஜா மாமா
நினைவுக்கு வருகிறார்.
வீட்டில்
மழை பெய்யும் நேரங்களில் எட்டாம் வகுப்பு கண்ணுக்குள் நிற்கிறது. அந்த வருடம்
பேய்மழை அடித்ததால், சுமார் இரண்டு வாரங்கள் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
மாடியில் குடியிருந்த மணி சித்தப்பா (உரிமையுடன் அவர் அப்பாவை அண்ணா என்றும்,
அம்மாவை மன்னி என்றும் அழைப்பார்; ஆதலால், நான் அவரைச் சித்தப்பா என்றே கூப்பிட
ஆரம்பித்தேன்) அவரது நண்பர் விஜயகுமார், அப்பா, நான் நால்வரும் ஆடிய ‘ரவுண்ட்
ராபின்’ சதுரங்க ஆட்டங்களை மறக்கவே முடியாது. இத்ற்காகவே மாடிக்குப் பல பிஸ்கெட்
பாக்கெட்டுகளும், தண்ணீர்க் குவளைகளும், அவ்வப்போது தேனீரும் வரும்.
காம்பவுண்டு
சுவருக்கு வலப்புறத்தில் காலியாக இருந்த இடத்தில் வீட்டைக் கட்டும்போது, அவர்களது
குடிநீர்த் தொட்டிக்கு எங்கள் வீட்டுத் தென்னைமரம் இடைஞ்சலாக இருக்குமெனக் கூறி
அதை வெட்டச் சொன்னார்கள். வீட்டில் யாருக்கும் அதை வெட்ட மனமில்லை; ‘இப்போது
செய்கிறோம்’ அப்போது செய்கிறோம்’ என்று தள்ளிப்போட்டு வந்தாலும், கடைசியில் ஒருநாள் வெட்டித்தான் ஆகவேண்டும்
என்ற நிலை வந்த்து. 35 – 40 அடி உயரம் இருக்கும் அந்த மரம் வெட்டப்பட்டபோது
சலனமின்றி உட்கார்ந்திருந்தது பசுமையாகப் பதிந்துள்ளது. சுவற்றின் மீது மரம்
விழாமலிருப்பதற்காக கயிற்றைக் கட்டித் தாங்கி ஒரு பக்கமாகச் சாய்த்தனர். என்
கண்களுக்கு எமனே பாசக்கயிற்றுடன் வந்து உயிரை எடுத்தது போலவே தோன்றியது. அது நான்
தனி ஒருவனாக வளர்த்த மரம்; எனது உப்புநீரில் காய்த்துக் குலுங்கிய மரம். இன்று
மொட்டையாக வெறும் கோழி, ஆடு வெட்டும் கல்லைப் போல முண்டமாக இருக்கும் அதைப்
பார்க்கும்போது கண்ணீர் பொங்கிப் பொங்கி வருகிறது. “இருக்குற மரத்தையெல்லாம்
வெட்டிட்டு நம்ம எல்லாம் என்ன மயிரவா புடுங்கப் போறோம்?” என்று
பல்லைக்கடித்துக் கொண்டே வாய் குழறுவதைத் தவிர்க்க முடியவில்லை.
தோட்டத்தின்
மறுமூலையில் செயல்படாத நிலையில் ஊனமாக நின்றுகொண்டிருக்கும் அடிகுழாயைப்
பார்க்கும்போதெல்லாம் ‘தானே’ புயல் என்னைக் கடந்து செல்கிறது. புயலடித்ததால் மின்சாரம் இல்லாமல் 20
நாட்களுக்கு ஊரே அல்லாடியபோது, எங்கள் தெருவுக்கே தண்ணீர் தந்த கொடை வள்ளல்
அக்குழாய். நான் பள்ளி செல்லும் காலங்களில் பாட்டியே தண்ணீர் அடிப்பார்; இப்போது
துருபிடித்துக் கிடக்கும் குழாய், ஒருவகையில் பாட்டியின் வயோதிகத்தையும்
சுட்டிக்காட்டுகிறது.
சமீபத்தில்
அடையாறிலிருந்து வந்திருந்த சித்தி கூடச் சொன்னார். “இங்க எல்லாம் எவ்ளோ
மரமிருக்கு; அங்க அபார்ட்மண்டுல மாத்தி மாத்தி ஹால், கிச்சன்னு சுத்தி சுத்தி
வரவேண்டியிருக்கு” என்று புலம்பியபோது நகரத்தில் வாழ்வதில் பெருமையடையும் மக்களை நினைத்து
சிரிப்பு வந்த்து.
’ஜி.ஆர்.ஈ பரீட்சை எழுதிவிட்டு
மேல்படிப்புக்கு வெளிநாடு சென்றுவிடு’ என்ற வாசகம் தினம்தினம் யாரேனும் ஒருவரால் என் காதில் ஓதப்படுகிறது. அதற்கு
நான் தயங்கக் காரணம் ஒருவேளை நான் திரும்பி வர முடியாமல் போய்விடுமோ என்ற பயமே.
“இப்போ என்ன? அதுக்காக வாழ்க்கை முழுக்க இங்கயே இருக்கப் போறியா என்ன? நாலு எடம்
பார்க்க வேணாம்? நல்ல சம்பாதிக்கலாம். சீக்கிரம் செட்டில் ஆயிடலாம். மொதல்ல
ஃபாரின்ல ஒரு மாதிரியாத்தான் இருக்கும். போகப்போகப் பழகிடும்” என்று சொன்ன ஒரு
உறவினரிடம் கோபப்படுவதா, அவரைப்பார்த்துப் பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை.
ஐந்து
நட்சத்திர உணவகங்களில் தின்றாலும், அம்மா சமையலைப் போல் வராது; சொகுசு மெத்தையில்
படுத்தாலும் தாயின் மடி போல் வராது; உலகத்தின் ஏதோ ஒரு கோடியில் இருந்துகொண்டு
கோடி கோடி டாலராகவும், யூரோவாகவும் சம்பாதித்தாலும், நம் ரூபாயைப் போல் இருக்காது.
“ஆமாம். எனக்கு நாலு எடம் பாக்கணும்தான். ஆனா இங்க இருக்கற பிச்சாவரத்தைப்
பாக்கணும், எங்கேயோ இருக்குற பிரிஸ்பேன் இல்ல. இங்க இருக்குற கன்னியாகுமரியப்
பாக்கணும்; எங்கேயோ இருக்குற கலிஃபோர்னியாவ இல்ல” என்று உள்மனது
எனக்குள் கத்தினாலும், அந்த உறவினரைப் பார்த்து மௌனமான புன்னகையை மட்டுமே
உதிர்த்தேன்.
Yes Giri. Recollecting old memories are always a pleasure and teach us what life is. Another surprising fact is the transformation of a shy boy is now blasting away in his writings is indeed makes us happy and proud.
ReplyDeleteThe above comment is by Kanagavelrajan Sankarasubramanian. As I have not signed in blogger, the name has not appeared I think.
ReplyDeleteOh fine. Thanks for reading Uncle. Blessed to have people like you reading my posts. "Blasting Away" is too much a phrase for a toddler like me in the world of writing. Anyways, keep following :)
DeleteHappy that you aren't gonna become a victim of the societal pressures.
ReplyDeleteHope so akka. Thanks for reading. :) Keep following!!
Deletegreat da ! my first such comment "Enjoyed reading and felt different !"
ReplyDeleteand “ஆமாம். எனக்கு நாலு எடம் பாக்கணும்தான். ஆனா இங்க இருக்கற பிச்சாவரத்தைப் பாக்கணும், எங்கேயோ இருக்குற பிரிஸ்பேன் இல்ல. இங்க இருக்குற கன்னியாகுமரியப் பாக்கணும்; எங்கேயோ இருக்குற கலிஃபோர்னியாவ இல்ல” .. veriththanam...keep rocking da !
உனது வேகத்தைக் கண்டு வியக்கிறேன் நண்பா...! மிக்க நன்றி!
Deleteயப்பா கிரி
ReplyDeleteஉனக்கு இப்ப எழுதறப்ப ஜாலியா இருக்கு.Of course. இதப் படிக்கிறப்ப உன் அம்மாவிற்கும். ஆனந்தமா இருக்கும். ஆனால், அந்த கால கட்டத்தில் உன் அம்மா உன்னை இடுப்புல வெச்சுகிட்டு, easily one to one and half hours per session, ஊட்டிவிட பட்ட பாடு. . . . .
Always ரசம் சாதம். அதை எப்படிதான் நீ சாப்பிடக் கூடிய பதத்துக்கு. neither too pasty nor too watery, தயார் செய்து தருவாங்களோ. அதை யும் நீ முழுங்கற பாணி இருக்கே. . . . . போட்டோ எடுக்கறப்ப shutter opening, flash light எல்லாம் sync ஆகிற மாதிரி, நீ இறுக்கமா உதடை வெச்சிகிட்டு, அதே இறுக்கத்துடன் கண்ணை வேகமா மூடி திறப்ப. . . . . ஆனால் அந்த நேரத்துல நீ கொடுக்கிற pressureஐப் பாத்தா "எங்கே ரசம் சாதம் நேர பின் பக்கமா வந்துடுமோன்னு" tensionஆ இருக்கும். ஈர்குச்சி மாதிரி இருந்துகிட்டு அம்மாவை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவ. ஆனாலும் அம்மா(க்களு)க்கு ரொம்ப பொறுமை ஜாஸ்தி.
ஹஹ்ஹஹ்ஹா... அது என்னமோ உண்மைதான்!
Delete